ட்ரீ... ட்ரீ... மாடு வைத்து செக்கு எண்ணெய் தயாரிப்பது கோவையிலேயே இவர் மட்டும்தான்!



கோவைக்கு மேற்குக் கோடியில் அமைந்துள்ள மருதமலைக்கு சென்று திரும்புகிறவர்கள் எவரும் ஒரு கணம் இந்த இடத்தில் நின்று பார்க்காமல் செல்வதில்லை. அதில் ஒரு சிலர் தன் வாகனத்தை நிறுத்தி, ‘இன்னமும் இது இருக்கா?’ என்று கேட்டுவிட்டு, ‘இப்படி இன்னமும் காப்பாத்தி வச்சிருக்கீங்களே. இதுக்கு செலவு பிடிக்குமே?’ என்று விசாரிக்காமல் செல்வதில்லை.
அதையும் தாண்டி இன்னும் சிலர், ‘இதுபோல கண் முன்னாடி இவ்வளவு சுத்தமா ஆட்டி எடுத்து நாங்க பார்த்ததில்லை. எவ்வளவு விலையானால் என்ன... எனக்கு ஒரு லிட்டர் கொடுங்க. எனக்கு அஞ்சு லிட்டர் தாங்க!’ என பாட்டில் பாட்டிலாக வாங்காமல் செல்வதில்லை.

அப்படியென்ன அதிசயம் என்கிறீர்களா? பெரிய பெரிய இரண்டு மாடுகளை வைத்து அந்தக் கால ஸ்டைலில் மரச்செக்கு ஓட்டி கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அரைக்கிறார்கள். ‘‘ட்ரீ... ட்ரீ... ட்ரீ..!’’ அரை நிமிடத்திற்கு ஒருமுறை மாட்டை ஓட்டுபவர் சத்தமிடுகிறார். மாடுகளும் செக்கை சுத்திச் சுத்தி வருகின்றன. தன் குரலை நிறுத்திவிட்டால் போதும். மாடுகளும் நின்று விடுகின்றன. அதே ட்ரீ சத்தத்தை வேறு விதமாக சன்னமாகக் கொடுக்கிறார். இப்போது இரண்டு ஸ்டெப் வைத்து நின்று விடுகின்றன.

இதைப் பார்க்கவே இந்தத் தலைமுறைக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. பிரதான சாலையோரமே இது நடப்பதால் போகிற வருகிறவர்கள் பார்வையில் பட்டு விடுகிறது. பெரிய உலக அதிசயம் போல் பார்த்துச் செல்கிறார்கள். இதில் ஆட்டப்பட்ட எண்ணெயை வாங்கிக் கொண்டும் செல்கிறார்கள். மற்ற மாவட்டங்களில் எப்படியோ, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை இப்படி மாடு பூட்டி செக்காலை ஓட்டுவது பேரதிசயம்தான். இப்பவும் சுத்தமான மரச்செக்கால் ஆட்டிய எண்ணெய் என்று பல பக்கம் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படுகின்றன. செக்கில் ஆட்டப்பட்ட சுத்தமான எண்ணெய் என்றும் அவை விற்கப்படுகின்றன. ஆனால், உள்ளே போய்ப் பார்த்தால் மரச்செக்கு இருக்கும். ஆனால், மாடு இருக்காது. மாட்டுக்குப் பதிலாக 20 ஹெச்.பி மோட்டார் இயங்கிக் கொண்டிருக்கும்.

‘‘என்னதான் ‘டெட் ஸ்லோ ஸ்பீடு’ வைத்து ஓட்டினாலும் மின்சார மோட்டார் வைத்து செக்காலை ஓட்டி எடுக்கப்படும் எண்ணெய்க்கு சூடு அதிகம். அதனால் அது மாடு பூட்டி ஓட்டும் மரச்செக்கு எண்ணெய்க்கு ஈடாகாது. அதனால்தான் நான் இப்படி மாடு பூட்டியே செக் எண்ணெய் தயாரிக்கிறேன்!’’ என்கிறார் இந்த செக்காலையை நிர்வகித்து வரும் கெளதம். இவர் எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். மனைவி பள்ளி ஆசிரியராக உள்ளார்.

சரியாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாட்டுச் செக்காலையை ஆரம்பித்திருக்கிறார். இவ்வளவு படித்து விட்டு மனைவியும் ஆசிரியராக பணிபுரியும் நிலையில் எதற்காக இப்படி சாலையோரம் ஓர் இடத்தை வாங்கி அதில் மாடு பூட்டி செக்கு ஆலை நடத்த வேண்டும்?‘‘எனக்கு சொந்த ஊர் நாமக்கல்.
அங்கே எங்க தோட்டத்தில் 1957வது வருஷம் வரைக்கும் தாத்தா காலத்தில் மாட்டுச் செக்கு ஓட்டிக்கிட்டிருந்திருக்காங்க. பத்து வருஷம் ஓட்டிட்டு அதை விட்டுட்டாங்க. என்ன காரணம்னு தெரியலை. அந்த தோட்டத்துல ரெண்டு மூணு செக் மூலைக்கு மூலை கெடந்துட்டு இருக்கும். வர்றவங்க எல்லாம் இப்படி ஒரு கல்லு செக்கை பார்த்ததே இல்லைன்னு ஆச்சர்யப்பட்டுப் பேசுவாங்க. சில பேருக்கு அது செக்குன்னு கூடத் தெரியாம விசாரிப்பாங்க.

நான் தோட்டத்துல விவசாயம்தான் பார்த்துட்டிருந்தேன். அப்ப இந்தக் கல்லு செக் ஓட்டின ஆளுக ரெண்டு மூணு பேரு எங்க ஊருக்குள்ளே இருந்தாங்க. அவங்களை கூப்பிட்டுட்டு வந்து ஆலோசனை கேட்டேன். இதை எப்படி அமைக்கணும், எப்படி ஓட்டணும்ன்னு எல்லாம் கேட்டுக்கிட்டேன். ‘இந்தக் காலத்துல இதையெல்லாம் யார் ஓட்டுவாங்க தம்பி’ன்னாங்க. அதுலயும் இந்த உரல்ல இந்த உலக்கை மத்தை எடுத்து தூக்கிப் போடற பலமான ஆளுக கூட இந்தக் காலத்துல இல்லைன்னாங்க.

அதையும் நம்ம பார்த்துடுவோம்ன்னு அவங்ககிட்ட ஐடியா கேட்டுட்டு நானே அதை எடுத்து வச்சு ஓட்டிப் பார்த்தேன். வித்தியாசமான அனுபவம். ரொம்ப பிடிச்சிருந்தது. ஆரம்பத்துல இந்த உலக்கை கார்ப்பண்டர வச்சு செஞ்சு பார்த்தேன். ரெண்டு உலக்கை உடைஞ்சிடுச்சு. அதேபோல இந்த மாடு பூட்டி சுத்தற பெரிய மரக்கட்டையும் செட்டாகல.

இதை செஞ்சே ஆகணும்ன்னு ஆர்வம், இல்ல வெறியே வந்துடுச்சு. அதுக்குன்னு ஸ்பெஷலா மரம் தருவிச்சு செஞ்சு மாடு பூட்டினேன். கிட்டத்தட்ட மூணு, நாலு வருஷம் முயற்சி. அப்புறம்தான் சரியாச்சு...’’புன்னகைக்கும் கெளதம் ஆறு மாதம் நாமக்கல்லில் இந்த செக்ஆலையை நடத்தியிருக்கிறார். மரம் செட் ஆனாலும் மாடுகள் செட்டாகவில்லையாம். அதாவது எல்லா மாடும் இப்படி சுத்தி வராதாம்.

‘‘நேரா போகும். நேரா வரும். செக்கு மாடுன்னு இதுக்குத் தனியா பழக்கணும். அதுவும் கன்றுக்குட்டியிலிருந்தே பழக்கியிருக்கணும். அப்படி வாங்கின மாடுகள் மூன்று ஜோடி பயன்படாமலே போயிடுச்சு. ஒரு ஜோடியில ஒண்ணு ஒரு பக்கமா இழுத்தா, இன்னொண்ணு இன்னொரு பக்கம் இழுத்தது. இன்னொரு ஜோடி வாங்கினதுல ஒண்ணு சுத்தி வந்தது. இன்னொண்ணு நேராகவே போக ஆரம்பிச்சுது.

இன்னொரு மாடு சுழி மாடு. அது ஆகாதுன்னாங்க. அதையும் கொடுத்துட்டேன். அதுலயே ஒன்றரை ரெண்டு லட்சம் எனக்குப் போச்சு. அதுல நொந்து போயி மூணு மாசம் இந்தத் தொழிலே வேண்டாம்ன்னு விட்டுட்டேன். அப்ப இந்த ரெண்டு மாடுகளும் ஒருத்தர் மூலமா தேடி வந்துச்சு. ஓட்டிப் பார்த்துட்டுக் காசு கொடுத்தாப் போதும்ன்னாங்க. அதேபோல ஓட்டிப் பார்த்தோம். செட்டாயிடுச்சு. ஆறு மாசம் நாமக்கல்லில் ஓட்டினேன். எண்ணெய் எல்லாம் வந்து வாங்கிட்டுப் போனாங்க. நல்லாயிருக்குன்னும் சொன்னாங்க.

என் மனைவி தொண்டாமுத்தூர் பள்ளிக்கூடத்துல டீச்சர்ங்கிறதால இங்கே இடம் பார்த்தேன். இந்த இடம் இந்தப் பக்கம் எங்கேயும் இல்லை. கோயமுத்தூர்ல இயற்கை விரும்பிகள் அதிகம்ன்னும் தெரிஞ்சுது. அதனால செக்கை இங்கேயே கொண்டு வந்து போட்டுட்டேன். செகண்ட் லாக் டவுன் வந்தப்ப இங்கே வச்சேன். ஜனங்க ஒரு தடவை வந்து இங்கே வாங்கினா வேற எங்கயும் போறதில்லைன்னு தெரிஞ்சுது. இங்கே வந்து ரெண்டு வருஷம் ஆச்சு!’’ என்ற கெளதம், மாடு பூட்டி செக் எண்ணெய் எடுப்பதற்கும், மோட்டார் வைத்து செக் எண்ணெய் எடுத்து உபயோகிப்பதற்குமான வித்தியாசத்தையும் விளக்கினார்.  

‘‘மோட்டார்ல இயங்குற செக் எண்ணெய்க்கு தண்ணி கொஞ்சம் அதிகமா ஊத்தணும். இதுல அப்படி ஊற்றக்கூடாது. அப்படி ஊற்றினா கடலை, தேங்காய் எல்லாம் மாவு மாதிரி போயிடும். அதுல எண்ணெய் சூடாகும். இதுல சூடு ஆகவே ஆகாது. ஆட்டுக் கல்லில் சட்னி ஆட்டி எடுப்பதற்கும், அம்மிக்கல்லில் அரைத்து எடுத்து சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா? அம்மிக்கல்லில் அரைக்கிற சுவை எதற்கும் வராது. அது போலத்தான் இதுவும்!

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இதுமாதிரி மாடு வைச்சு செக் எண்ணெய் தயாரிக்கறாங்க. அதேபோல் கேரளத்தில் உண்டு. அவர்கள் எல்லாம் எண்ணெயை சுத்தமாக உபயோகிப்பவர்கள். அதனால் அங்கே இதற்குத் தேவையிருக்கிறது. கோவையில் எனக்குத் தெரிந்து நாங்கள் வைத்துள்ளதுதான். அதுவும் நாங்கள் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விளைவித்த நிலக்கடலை, தேங்காய் பருப்பு வாங்கித்தான் எண்ணெய் அரைக்கிறோம். சல்ஃபர் வேக வச்ச கொப்பரை தொடறதே கிடையாது.

அதனால் இங்குள்ள மக்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது!’’ என்றவர் சாதாரண எண்ணெய்க்கும், இந்த செக் எண்ணெய்க்கும் விலையில் வித்தியாசம் ஏதும் இல்லை என்கிறார்.
‘‘அதிகபட்சம் அதற்கும் இதற்கும் லிட்டருக்கு ரூ.20 - ரூ.30தான் வித்தியாசம் வரும். ஆனா, வெளியே வாங்கினா டாக்டருக்கு கொடுத்தே முடிஞ்சிடணும்!’’
என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினார்.தொடர்ந்து செக் மாடுகள் சுற்றிக் கொண்டிருந்தன. அவரின் ட்ரீ... ட்ரீ... குரல் அரை நிமிடத்திற்கு ஒரு முறை ஒலித்தவாறு இருந்தது.

கா.சு.வேலாயுதன்