கடவுளின் தேசத்தில் ஜனித்த குழந்தை!
அறிமுகமான முதல் படத்திலேயே கேரள மாநில விருதை தட்டித் தூக்கியவர் ரஜிஷா விஜயன். தென் இந்திய இயக்குநர்கள் அதிகம் தேடும் நடிகைகளில் இவர் முக்கியமானவர். தமிழில் இவர் நடித்த ‘கர்ணன்’, ‘ஜெய்பீம்’ இப்போதும் நெஞ்சில் நிழலாடும்.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/21.jpg) அந்த நினைவலைகளில் கார்த்தியுடன் நடித்துள்ள ‘சர்தார்’ இடம் பெறவுள்ளது. மிலிட்டரி ஆபீசர் குடும்பம் என்றால் கட்டுப்பாடு அதிகமா இருக்குமே... நீங்க எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?அது ஒரு கட்டுக்கதை. என்னுடைய அப்பா மிலிட்டரிமேனாக இருந்தாலும் கூல் மனிதர். ![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/21a.jpg) வேலை விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார். வீட்ல என்னிடமும் சரி, என் தங்கையிடமும் சரி தோழமையோடு பழகுவார். அம்மா டீச்சர் என்பதால் எப்போதும் கண்டிப்புடன் நடந்துகொள்வார். அரை மார்க் குறைந்தாலும் விடமாட்டார். 12ம் வகுப்பு வரை எங்க வீட்ல கேபிள் கனெக்ஷன் இல்ல. செல்ஃபோன், இன்டர்நெட், கம்பியூட்டர்னு எந்த வசதியும் இல்ல. அந்தளவுக்கு அம்மாவின் கண்டிப்பு இருந்தது.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/21b.jpg)
டாக்டராகணும்னு லட்சியத்துடன் படித்தேன். ஒரு நாள் யதார்த்த வாழ்க்கையை கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். எல்லோரும் என்ஜினீயர், டாக்டர் என்று படிக்கிறார்கள். நாம் ஏன் வித்தியாசமா படிக்கக்கூடாதுனு யோசித்தேன். அப்படிதான் நொய்டாவில் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிச்சேன்.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/21c.jpg) யுனிவர்சிட்டி டாப்பராவும் வந்தேன். படிப்பு முடிந்ததும் ஜர்னலிஸம் வேண்டாம்னு முடிவு பண்ணி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறி டிவி நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பித்தேன். என்னுடைய குடும்பத்தில் யாருமே சினிமாவில் இல்லை. எல்லோருமே அரசு துறை, டாக்டர், வக்கீல்னு பல துறைகளில் இருக்கிறார்கள். பொதுவா, நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை விதியோடு சம்பந்தப்படுத்தி பேசுவோம். சின்ன வயதில் நடிகையாகணும்னு மனசுக்குள்ள எங்கேயோ ஒரு ஆசை ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்னு நினைக்கிறேன். ஆனா, அதைப் பற்றி நானும் பேசவில்லை, யாருடனும் ஷேர் பண்ணவுமில்லை.
பள்ளி நாட்களில் ‘மைக்’தான் என்னுடைய ஃபேவரைட். பள்ளி விழாக்களில் பல விவாதங்கள், பேச்சுப்போட்டிகளில் என்னுடைய பங்களிப்பு இருந்தது. நடனமும் தெரியும். ஆசை, விதி எல்லாமே ஒன்று சேர்ந்து டாக்டராக வேண்டிய பெண்ணை நடிகையாக்கிவிட்டது!நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும்போதே சினிமாவில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனா, நல்ல கதையம்சமுள்ள படம் வந்தால் மட்டுமே நடிக்கணும்னு வெயிட் பண்ணினேன். அப்படி வந்த வாய்ப்புதான் ‘அனுராகத்தின் வெள்ளம்’ மலையாளப் படம்.
முதல் படத்திலேயே ஸ்டேட் அவார்டு வாங்கியபோது என்ன நினைத்தீர்கள்?
ஷாக்கிங்காக இருந்தது. அந்தப் பரவசத்தை வெளிப்படுத்தவும் முடியலை. பெரிய கிரீடம் வைத்த மாதிரி இருந்தது. முதல் படத்திலேயே பெரிய சுமை வைக்கும்போது என்னையும் அறியாமல் கீழே வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த விருது எனக்கு ஒரு சிக்னல் மாதிரி தெரிந்தது. அதனால படத் தேர்வுகளில் கவனமாக இருக்கணும்னு முடிவு செய்தேன். ‘சர்தார்’ அனுபவம்?
கார்த்தி சாருடன் நடித்தது நல்ல அனுபவம். படத்தில் அவர் பல கெட்டப்களில் வர்றார். எனக்கு சில சமயம் அவருடைய புகைப்படத்தை பார்க்கும்போது கார்த்தி சார்தானானு ஆச்சர்யமாக இருக்கும். இதில் என்னுடைய கேரக்டர் பேர் இந்திரா. முக்கியத்துவம் உள்ள ரோல். முதன் முறையா சொந்தக் குரலில் பேசியிருக்கேன். மித்ரன் சார் இயக்கத்தில் நடிச்சது எனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு. ஒர்க் டென்ஷன் இருந்தாலும் ஜாலியாக செட்டை வழிநடத்துவார்.
சூர்யா, தனுஷ், கார்த்தி, ரவிதேஜா போன்ற சீனியர்களுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது..?
தமிழில் ‘கர்ணன்’, ‘ஜெய்பீம்’, ‘சர்தார்’ பண்ணியிருக்கேன். தனுஷ், சூர்யா, கார்த்தி எல்லோருமே சூப்பர் ஆக்டர்ஸ். தெலுங்கில் ரவிதேஜாவுடன் ‘ராமாராவ் ஆன் டூட்டி’ பண்ணினேன். இவங்க எல்லாரிடமும் நான் கவனித்தது பணிவு. பெரிய ஸ்டார் என்ற பந்தா இல்லாம கிரவுண்ட் லெவலில் பழகினார்கள். எல்லோருடைய உயரமும் அதிகம். ஆனாலும் அவர்கள் முதல் பட ஹீரோ மாதிரி அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவரும் அவ்வளவு கடின உழைப்பைக் கொடுக்கிறார்கள். முந்தைய படத்திலிருந்து எந்தளவுக்கு வித்தியாசமாக காண்பிக்க முடியும்னு மெனக்கெடறாங்க.
மலையாளத்தில் ‘ஜூன்’, ‘ஃபைனல்ஸ்’, ‘கோ கோ’ போன்ற வுமன் சென்ட்ரிக் படங்களில் நடித்துள்ளீர்கள். தமிழில் உங்களைத் தேடி வுமன் சென்ட்ரிக் கதைகள் வருகிறதா? ‘ஜூன்’ படம் என்னிடமிருந்து நிறைய உழைப்பை வாங்கியது. வுமன் சென்ட்ரிக் பண்ணும்போது அதில் வியாபாரத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். சாட்டிலைட், ஓடிடி என பல தளங்களில் பிசினஸ் இருக்கணும்.
சினிமா என்றாலே அதில் பெரிய முதலீடு இருக்கும். பணம் போடும் தயாரிப்பாளருக்கு ரிட்டர்ன் கிடைக்க வேண்டும். ‘ஜூன்’ படம் பண்ணிய பிறகுதான் என்னைத் தேடி பல வுமன் சென்ட்ரிக் படங்கள் வந்தன. ‘ஜூன்’ படத்துக்காக ஒரு வருடம் வேலை செய்தேன். தமிழிலும் எனக்கு அந்த மாதிரி வலுவான, அதே சமயம் ஆர்வத்தை தூண்டும் கதை வரும்போதுதான் அதைப் பற்றி யோசிக்க முடியும்.
இப்போது பெரிய பேனர் படங்கள், பெரிய நடிகர்கள் படங்கள் தொடர்ச்சியாக பண்ணுகிறீர்கள். உங்கள் சினிமா வாழ்க்கையில் எங்கு திருப்புமுனை ஏற்பட்டது? முதல் படமே திருப்புமுனைதான். முதல் படம் பண்ணும்போது என்னால் பண்ண முடியுமா, முடியாதா என்ற கேள்வி இருந்தது. ஆனாலும் முன் வைத்த காலை பின் வைக்கக்கூடாதுனு கேரக்டருக்கு நியாயம் செய்தேன். அதனாலேயே ‘ஜூன்’, ‘கர்ணன்’ போன்ற வெற்றிப் படங்களில் நடிக்க முடிந்தது. அந்த வகையில் என்னுடைய எல்லா படங்களும் திருப்புமுனை கொடுத்துள்ளது.
மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு எந்தளவுக்கு சினிமாவுக்கு உதவி இருக்கிறது?
ரொம்ப உதவியாக இருந்துள்ளது. ஒரு பேட்டியில் பேட்டியாளர், உங்களுடைய ஃபேவரைட் படம் எது என்று கேட்டார். சத்யஜித் ரேயின் ‘சாருலதா’ என்றேன். வழக்கமான பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் அந்தப் படத்தை பார்க்க வாய்ப்பு இல்லை. நான், ஜர்னலிஸம், மாஸ் கம்யூனிகேஷன் படிச்சதால் ஜெர்மானிய படங்கள், இத்தாலிய படங்கள், ஈரானிய படங்கள் என்று சர்வதேச படங்களைப் பார்க்க முடிந்தது.
ஓடிடி வந்தபிறகு பல்வேறு மொழி படங்களைப் பார்க்கும் வசதியைப் பெற்றுள்ளோம். ஃபிலிம் ஸ்டூடண்டா இருந்ததால் கிரேட் சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கும் சமயத்தில் கோவா, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் என்று எங்கு ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடந்தாலும் கலந்துகொள்வேன். சினிமாவுக்கான இலக்கணம் நிலையானதுனு சொல்ல முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிமாணங்களை அடைந்துள்ளது.
உதாரணத்துக்கு, மம்மூட்டி சார் பற்றி சொல்கிறேன். மம்மூட்டி சார் தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிக்கக் கூடியவர். எல்லா மொழி படங்கள், எல்லா மொழி ரியாலிட்டி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் என்று ஒன்று விடாமல் எல்லாவற்றையும் பார்த்து, படித்து அப்டேட்டில் வைத்துக்கொள்கிறார். மிகவும் பிஸியாக இருக்கக்கூடிய அவருக்கு எப்படி டைம் கிடைக்கிறது என்று தெரியவில்லை. தேசிய விருது வாங்கியுள்ள அவர் சினிமாவில் தொடாத உயரம் இல்லை.
எதற்கு அவர் இதையெல்லாம் செய்யணும் என்று தோன்றும். இன்றளவும் கடின உழைப்பை தொடர்கிறார். எவ்வளவு கவனிக்கிறோமோ, எவ்வளவு கற்றுக்கொள்கிறோமோ அது நமக்கு உதவும். நாலெட்ஜ் ஒருபோதும் வேஸ்ட் ஆகாது. இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு இரண்டு மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தால் நீங்கள் அடைந்த நன்மை என்ன?
சமூக வலைத்தளங்களை மிகவும் குறைவாகவே பயன்படுத்துகிறேன். எனக்கு வாட்ஸ்அப் இல்லை. ஃபேஸ்புக் இல்லை. டுவிட்டர் இல்லை. இன்ஸ்டா மட்டும் பயன்படுத்துகிறேன்.
நன்மை என்ன கிடைத்தது என்றால் என்னுடைய வேலையை ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இன்னொரு பக்கம் சமூக வலைத்தளத்திலே மூழ்கியிருப்பதை கால விரயமாகப் பார்க்கிறேன். தூக்கம், உணவு என்று எல்லாவற்றுக்கும் நேரம் நிர்ணயம் செய்து வைத்திருப்பதுபோல் சமூக வலைத்தளத்துக்கும் குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளவேண்டும்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் இன்று பான் இந்தியா சினிமாவாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மலையாள சினிமா தன்னுடைய அடையாளத்தை மாற்றிக்கொண்டதாக நினைக்கிறீர்களா?
மலையாள சினிமாவில் ரைட்டர்ஸ் மிகவும் முக்கியமானவர்கள். அதன்பிறகுதான் மற்ற கலைஞர்கள். கதைதான் ஒரு படத்தோட ஆன்மா, முதுகெலும்பு என்று சொல்லலாம். மலையாளத்தில் எல்லா டைப் படங்களும் வரும். அடூர் கோபாலகிருஷ்ணன் சார் படமும் வரும். ‘லூசிபர்’ மாதிரியான படமும் வரும். தமிழிலும் அந்த மாதிரி வந்துள்ளது. தெலுங்கில் ‘சினிமா பண்டி’ மாதிரியான சின்ன பட்ஜெட் படமும் கவனம் பெறுகிறது. ‘புஷ்பா’ மாதிரியான படமும் பெரிய வெற்றியடைகிறது. எல்லா வகை படமும் வந்தால்தான் சினிமா இண்டஸ்ட்ரி செழிப்பாக இருக்கும்.
அந்த வகையில் பான் இந்தியா படமும் வேணும். சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமும் வேணும். பான் இந்தியா என்ற கான்சப்ட் கொரோனாவுக்குப் பிறகு பெரியளவில் பேசப் படுகிறது. அதற்குமுன்பே வட்டார மொழிகளில் சிறந்த படங்கள் வெளிவந்துள்ளன. உங்கள் சினிமா வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு எது? ‘சர்தார்’ பண்ணும்போது இயக்குநர் சொல்வதை எளிதாக உள்வாங்கி நடித்ததாக கார்த்தி சார் சொன்னார். அது பெரிய சந்தோஷம் கொடுத்தது.
கடவுளின் தேசம், படித்தவர்களின் சதவீதம் அதிகம் உள்ள மாநிலம் என்று கேரளாவுக்கு நேர்மறையான முகம் இருக்கிறது. ஆனால், நரமாமிசம் விவகாரம் கேரளா வரை படத்தில் கரும்புள்ளி வீழ்ந்த மாதிரி இருக்கிறதே?
சார்... இந்த மாதிரி இருண்ட கேள்வியைக் கேட்க வேண்டாம். அந்த செய்தியை நானே பார்க்கவில்லை. கல்வித் தரம் எல்லா மாநிலத்திலும் இருக்கிறது. குற்றச் செயல் ஒரு மாநிலத்தை மட்டும் குறிவைத்து நடப்பது அல்ல. குற்றச் செயல் எல்லா இடங்களிலும் நடக்கிறது. இந்த மாதிரி நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்தது இல்லை.
இது பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்த மாதிரியான செயல்கள் வெளிப்படுத்துகின்றன. மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற மூட நம்பிக்கை விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. நிகழ்காலம் மட்டுமே நிஜம். கடவுள் நமக்கு உடல் பலம் கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்த வேண்டும். உழைப்பே உயர்வு தரும். அதைவிட்டுவிட்டு குறுக்கு வழியை யோசிக்க வேண்டாம்.
எஸ்.ராஜா
|