அரண்மனை குடும்பம்-41



கஸ்தூரி முகம் போன போக்கை கைலாச ராஜாவும் கவனித்தார். கணேசனோ தன் செல்போன் மூலம் டாக்டரை அழைக்கத் தொடங்கியிருந்தான். ரத்தி மிக சோர்வாகத் தெரிந்தாள். கணேசன் டாக்டரை அழைத்து விட்டு அவளிடம் ஊன்றத் தொடங்கினான்.
“என்ன பண்ணுது ரத்தி... நல்லாதானே இருந்தே?”

“தெரியலீங்க ஜீ... ஒரு மாதிரி இருக்கு...”
“இரு... டாக்டர் வந்துடுவார். ஒரு ஊசி போட்டா எல்லாம் சரியாகிடும்...” என்றவன் அப்பா அம்மா என இருவர் பக்கமும் திரும்பினான்.பார்வையே நீங்கள் எதாவது சொன்னீர்களா என்று கேட்டது. அவர்களிடம் திருதிருப்பு...“என்ன... கல்யாண விஷயமா நான் இல்லாத நேரமா பாத்து இவளை எதாவது கொழப்புனீங்களா?” கச்சிதமாய் கேட்டான்.“இல்ல ராஜா... கொஞ்சம் பெரிய மனசு பண்ணுன்னு சொன்னோம்...”“இவ யார் பெரிய மனசு பண்றதுக்கு? உங்களுக்கு அறிவில்ல... முடிவெடுக்க வேண்டியவன் நான்... நான்தான் தெளிவா சொல்லிட்டேனே..?” பலத்த குரலில் அவன் கத்தியது வெளியேயும் எதிரொலித்தது.

“கத்தாத ராஜா... கண் எதிர்ல மஞ்சு பட்றபாட்டை பாத்தேதானே?”
“என்ன பெரிய பாடு? இந்த உலகத்துல நான் மட்டும்தான் ஆம்பளையா? நான் இப்ப ஆறு வயசு குழந்தைக்கு அப்பன். அதை எல்லாம் பாத்தும் என்னை விரும்ப அவளால எப்படி முடியுது?

நீங்க புத்தி சொல்ல வேண்டியது அவளுக்கு... எனக்கில்ல...” திரும்பவும் கத்தினான்.

அதை மூர்த்தி ஒருபுறம் மறைவாக இருந்து கேட்டபடியே இருந்தான். அதற்கு மேல் அங்கு இருந்தால் பேச்சு வளரும் என்றுஉணர்ந்த கைலாசராஜாவும் கஸ்தூரியும் ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து அகன்றிட சில நிமிடங்களில் லேடி டாக்டர் மீரா கிருஷ்ணகுமார் உள் நுழைந்தாள்.
அடுத்த சில நிமிடங்களிலேயே ரத்தி திரும்பவும் தாயாகி விட்ட செய்தி அந்த பங்களா முழுக்கவே பரவத் தொடங்கியது.

கணேசராஜாவிடமும் அதுவரை நிலவி வந்த வெப்பம் ஆவியாகி முகத்தில் ஒரு புன்னகை தோன்றியிருந்தது. ரத்தியிடமும் வெட்கம் கலந்த ஒரு முகபாவம்!
“அப்புறமா ஒரு க்ளீன் செக்கப்புக்கு கூட்டிகிட்டு வாங்க... இப்போதைக்கு இந்த டேப்ளட்ஸை வாங்கித் தாங்க...” என்று அந்த லேடி டாக்டர் விடை பெற்றாள்.

அவள் அகலவும் நேராக கைலாச ராஜாவிடமும் கஸ்தூரியிடமும் சென்றவன், “கேட்டீங்கதானே? நான் திரும்ப அப்பாவாகப் போறேன். இந்த தடவை நிச்சயம் எனக்கு மகன்தான் பிறப்பான்னு நான் நம்பறேன். நம்ப குடும்பத்தோட வாரிசு வரப்போகுது. நீங்களும் சந்தோஷப்படணும். ரத்திகிட்டயும் பொறுப்பா அன்பா நடந்துக்கணும்...” என்றான்.

தன் அறைக்குள் இருந்த மஞ்சுவுக்குள் எரிமலை ஒன்று வெடித்து விட்டது போல ஒரு வெப்பம். அதைப் பார்த்த அவள் அம்மாவான சுந்தரவல்லிக்கு அடுத்து அவள் என்ன செய்வாள் என்பது தெரிந்து விட்டது. நல்ல வேளையாக அறைக்குள் நுழைந்தபடி இருந்த குலசேகரரைப் பார்த்து சற்று சமாதானமானாள்.“என்னங்க இது... பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாகிடிச்சு...” என்று தொடங்கினாள்.

“அது எதுவேணா ஆகட்டும் சுந்தரம். நீ கலங்காதே... மஞ்சு உனக்கும்தான் சொல்றேன்...” என்றார் குலசேகரர். “இல்லப்பா... எனக்கு நம்பிக்கை இல்லை. நான் இனி உயிர் வாழ்றதுலயும் அர்த்தமில்லை...” என்று வெறுப்போடு சொன்னாள் மஞ்சு.

“லூசு மாதிரி பேசாதே... இப்பதான் நீ நம்பிக்கையோட இருக்கணும்...”
“எப்படி... எப்படிப்பா? அத்தான் பேசினதை கேட்கலையா நீ?”
“ஏன் கேட்காம? எல்லாம் மாறும் மஞ்சு...”
“என்ன உங்க வசிய மருந்தாலயா?”

“ஆமாம்... அதான் இப்ப என் ஒரே நம்பிக்கை...”
“என்ன நம்பிக்கையோ... மருந்துன்னா அது வியாதியை குணப்படுத்தும்... இது மனசு சம்பந்தப்பட்ட விஷயம்... இதை எப்படி ஒரு மருந்து செய்யும்? புரியவே இல்லை எனக்கு...” சந்தரவல்லி சடைத்துக் கொண்டாள்.“இதோ பார்... இப்படி எல்லாம் எனக்கும் கேள்வி கேட்கத் தெரியும். கேட்டவன்தான் நான். ஆனா, எனக்கு இதை கொடுத்தவன் என் கண் எதிர்ல ஒரு காட்டு யானையையே அடக்கினதை நான் பார்த்தேன்... அது மட்டுமில்ல... சர்க்கார் அடிச்ச ரூபா நோட்டோட நம்பரை அவன் பாக்காமலே சொல்றான்... மனசுல நினைக்கறத எல்லாமும் சொல்றான். அடுத்து இதுக்கு விலை 20 கோடி... சும்மா இல்லை...” குலசேகர ராஜாவும் கொந்தளித்தார்.

“எல்லாம் சரிங்க... இப்ப பாத்து அவ திரும்ப உண்டாகியிருக்காளே? அந்த முதல் வாரிசும் பூரண குணமாகி ஓடி விளையாடுதே... இதை எல்லாம் எப்படி கடக்கப் போறோம்?”
“எப்படி கடக்கப் போறோம்னா... கடந்துதான் தீரணும்! கடந்தாதான் சொத்து, உரிமை, சுகம் எல்லாம்... இல்லாட்டி இப்பவே நாம கிளம்பிப் போய் நம்ம தென்னந்தோப்புல விளையறத தின்னுகிட்டு இருக்கறவரை இருப்போம். என்ன சொல்றே..?” தீர்மானமாகவே கேட்கவும் செய்தார் குலசேகர ராஜா.

“சரிங்க... பொறுத்தது பொறுத்தோம். இதுக்கும்பொறுப்போம். ஆமா... எங்க அந்த மருந்து?”
சுந்தரவல்லி கேட்க அந்த மரக்குப்பியை எடுத்து முன்வைத்தார் குலசேகர ராஜா.
அதை சுந்தரவல்லி திறந்து பார்த்தாள். உள்ளே மிளகு வடிவில் சில உருண்டைகள்.

“ஏங்க... இதுவா வசிய மருந்து?”“ஆமா... பழத்துல வெச்சு கொடுத்துடணும். கொடுக்கறது யாருங்கறது ரொம்ப ரொம்ப முக்கியம்...”
“யாருங்க கொடுக்கணும்?”“வேற யாரு... நம்ம மஞ்சுளாதான்... அவதானே அவனை கட்டிக்க துடிக்கறவ..?”“அது சரி... இவளைப் பாத்தாலே முகம் சுளிக்கற கணேசன் எப்படிங்க இவ கையால பழத்தை வாங்கி சாப்பிடுவான்?”“சாப்ட்டாகணும்... அதை இவளும் சாதிச்சாகணும்!

எல்லாமே மடிமேல வந்து பொத்துன்னு விழாது. நாம கொஞ்சமாவது கஷ்டப்பட்டாகணும்...”குலசேகரர் சொன்ன மறு நொடி அந்த மரக் குப்பியை சுந்தரவல்லியிடம் இருந்து பெற்ற மஞ்சுளா, “நான் இதை சாதிச்சு காட்றேன்...” என்றாள் ஆவேசமாக…“பாத்து... இந்த மருந்தும் வீணாகிடக்கூடாது. திரும்ப அவன்கிட்ட நான் இதை கேட்டு வாங்கறது சாதாரணமில்லை...” குலசேகர ராஜா எச்சரித்திட, சுந்தரவல்லியும் ஆமோதித்திட, மஞ்சு முகத்தில் பலமான தீர்க்கம்.

டாக்டர் தந்திருந்த மாத்திரையுடன் ஒரு வெள்ளி தம்ளர் நிறைய பாலையும் ரத்தி முன் நீட்டியபடி நின்றிருந்தான் கணேசன்.
“ஜீ... உங்களுக்கு எதுக்கு சிரமம்?”“சிரமமா... நீ என் வாரிசை இப்ப சுமந்துகிட்டிருக்கே. ஜூனியர் கணேஷ் வரப்
போறான்... அவன் சும்மா கொழு கொழுன்னு இருக்க வேண்டாம்...”மிக ஆசையாகப் பேசினான் கணேசன். அவளுக்கும் மிக ஆறுதலாக இருந்தது அந்தப் பேச்சு.
“ஜீ... நாம ஏற்காடு போகப்போறது உறுதிதானே?”“அதுவா... இந்த நிலைல அங்க தனியா இருக்கறது எந்த அளவுக்கு சரின்னு யோசிக்கறேன் ரத்தி...”

“இல்ல ஜீ... போயிட்லாம் ஜீ...”
“இல்ல உனக்கு கண்காணிப்பு அவசியம்...”
“அங்க பங்கஜம் இருக்கா... அவ பாத்துக்குவா ஜீ...”
“உனக்கு மட்டும் அப்பா அம்மா இருந்திருந்தா இப்ப
நல்லா இருக்கும் இல்ல?”
கணேசன் அப்படிக் கேட்டு தாய் வீட்டு நினைவை மூட்டுவான் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கச்சிதமாய் அப்போது அந்த அறைக்குள் மஞ்சு நுழைந்தபடி இருந்தாள். அவளை இருவருமே எதிர்பார்க்கவில்லை.“சாரி அத்தான்... நான் விஷ் பண்ணத்தான் வந்துருக்கேன்...” என்று அவளும் இதமாக ஆரம்பித்தாள். அப்படியே ரத்தியை நெருங்கி அவள் தலையை வருடி “ரத்தி... என் மனமார்ந்த வாழ்த்துகள்... நீ நல்ல ஆண் பிள்ளையா பெத்து என் அத்தானுக்கு கொடுக்கணும். நான் கடவுளை வேண்டிக்கறேன்...” என்றாள். ரத்தி நிர்மலமாக தலையை ஆட்டினாள்.“இதோ பார் மஞ்சு... நீ இப்படி வாழ்த்தறதவிட பெரிய விஷயம், ஒரு நல்ல மாப்ளையா பாத்து கல்யாணம் பண்ணிக்கறதுதான். நீ இப்பவே உம்முன்னு  சொல்... நான் உனக்கு எப்படிப்பட்ட மாப்ளை பாக்கறேன்னு பார்...”
“சரி அத்தான்... உங்க சந்தோஷம்தான் இனி என் சந்தோஷம்... அப்படியே செய்யுங்க...”
“நிஜமாவா சொல்றே?”

“ஆமாம்... எனக்கு இனி உங்க விருப்பம் எதுவோ அதுவே என் விருப்பம்...”
“க்ரேஸி... அப்ப ஏன் அப்படி நடந்துகிட்டே?”
“அதான் எனக்கே தெரியல... அத விடுங்க - இனி நான் நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்... போதுமா?”
“ஓ... நீ இவ்வளவு சீக்கிரம் இப்படி மாறுவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...”
“எதிர்பாராததெல்லாம் நடக்கறதுதானே மனிதவாழ்க்கை?”

மஞ்சு பொடி வைத்துப் பேசியது கணேசராஜாவுக்கு புரிந்ததோ இல்லையோ ரத்திக்கு நன்றாகப் புரிந்தது.
அவளுக்குள் பய உணர்வுகள் பானை நண்டுகள் போல ஊரத் தொடங்கின!

(தொடரும்)

மண்ணாங்கட்டிச் சித்தரைப் பார்த்த மாத்திரத்தில் அசோகமித்திரனிடம் ஒரு விதிர்ப்பு. ஒரு விநாடி தாமதமும் இன்றி அவரை நோக்கி ஓடத் தொடங்கினார். ஆனால், வாசலில் போடப்பட்டிருந்த மிதியடிவிரிப்பு காலை இடறி விட்டதில் அப்படியே தள்ளாடி கீழே விழுந்து பின் எழுந்திருந்தார். அதன்பின் சுதாரித்து தெருவில்
இறங்கியபோது ஒருவரும் கண்ணில் படவில்லை.

அதற்குள் எப்படி மறைந்தார்... என்கிற கேள்வி அசோகமித்திரனை ஆக்ரமித்திட வைத்தியரும், கனபாடிகளும் அவரை நெருங்கி “என்ன சார்... யாரைப் பார்த்துட்டு அப்படி ஓடினீங்க?” என்றும் கேட்டனர்.“அந்த தென்னந்தோப்பு சித்தர் இல்ல... அவர் பேர் கூட... ஆங்... மண்ணாங்கட்டி சித்தர்... மண்ணாங்கட்டி சித்தர்...”
“ஓ... அவரைப் பாத்தீங்களா... நிஜமாவா..?”“பாத்ததாலதானே ஓடி கீழயும் விழுந்தேன்...”
“சரிதான்... சித்தர் விளையாட்டு காட்டத் தொடங்கிட்டார் போல இருக்கு...”
“விளையாட்டா..?”

“ஆமாம்... அவர் சமயத்துல இங்க சிலர் வீட்டுக்கும் வருவார். அவர் வந்தது தெரிஞ்சி அவரைப் பார்க்க பலரும் வருவாங்க. ஆனா, அப்ப அவர் எப்படியோ மறைஞ்சுடுவார்... இதைத்தான் நாங்க விளையாட்டுன்னு சொல்வோம்...”“எதுக்கு இப்படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை அவர் விளையாடணும்?”
“இதுக்கு பதிலை அவர்தான் சொல்லணும். ஆனா, ஒண்ணு... அவர் உங்களை விட்றதா இல்லைன்னுதான் நான் நினைக்கறேன். இல்லேன்னா, எங்க கண்ல படாம உங்க கண்ணுக்கு மட்டும் ஏன் படணும்?”

“எனக்கு எல்லாமே விசித்ரமா இருக்கு. நான் தேடிப் போனப்ப அவர் இல்லை. இப்ப மட்டும் அவர் ஏன் என்னை பாக்கணும்?”
“இந்த கேள்வியை எல்லாம் அவர்கிட்டயே கேளுங்கோ அசோகமித்திரன். அதான் நாலு நாள் இங்கேயே இருக்கப் போறீங்களே?”
“ஆமாம்... நீங்க சொல்றதுதான் சரி. ஆமா... அவரை இப்ப எங்க பார்க்கலாம்?”

“இப்ப வேண்டாம்... நாம வீட்டுக்கு போய் போஜனம் பண்ணிட்டு தூங்குவோம். நாளைய பொழுது விடியட்டும்... பாத்துக்கலாம்...”
“நான் அவசியம் அந்த நாடிஜோசியரையும் பாக்கணும்...”

“அவரே கூட உங்கள பாக்க வரலாம்... நாம இப்ப கிளம்புவோமா?” கனபாடிகள் வைத்தியரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்!

வீடு வந்து இரவுச் சாப்பாடும் முடிந்து கட்டிலில் வந்து அசோகமித்திரன் அமரவும், காத்திருந்தது போல அவர் கைபேசி வழியே மணிமொழியனிடம் இருந்து அழைப்பு.
“இரவு வணக்கமய்யா...”

“என்ன அசோகமித்திரன் படுத்திட்டீங்களா... அகாலத்துல தொந்தரவு பண்ணிட்டேனா?”
“நிச்சயமா இல்லய்யா... சரியான நேரத்துலதான் கூப்பிட்டிருக்கீங்க. நீங்க அழைக்காட்டி நான் அழைச்சிருப்பேன்...”
“அப்ப பகிர்ந்துக்க நிறைய விஷயங்கள் நடந்திருக்குன்னு சொல்லுங்க...”“ஆமாங்கய்யா...” என்ற அசோகமித்திரன் நடந்தவைகளை உள்ளது உள்ளவாறு சொல்லி முடித்தார்.
மணிமொழியனாரிடம் சற்றே மௌனம்.

“என்னய்யா... இதை எல்லாம் எப்படி எடுத்துக்கறதுன்னு குழப்பமா இருக்கா?”
“அப்படி இல்லை... என்னையும் மீறி எனக்குள்ள சில வியப்புகள். அதுல மூழ்கிட்டேன்...”
“உங்களுக்கே அப்படின்னா அனுபவிக்கற எனக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க...”

“புரியுது... நல்லா அனுபவிங்க அசோகமித்திரன். பொதுவுல மிஸ்டிக்குங்கற அமானுஷ்ய அனுபவங்கள் லட்சத்துல ஒருத்தருக்குதான் வாய்க்கும்... நீங்க இப்ப லட்சத்துல ஒருத்தர்...”
“நாடி ஜோதிடரோட ஜோதிடம் பலிச்சது கூட எனக்கு பெரிய வியப்பில்ல... அந்த மண்ணாங்கட்டி சித்தர்தான் எனக்கு புரியாத புதிரா இருக்கார்... அது எப்படிய்யா பூமிக்கடில புதைஞ்சு போயிட்ட ஒருத்தர் திரும்ப வர முடியும்?”

“ரொம்ப சிம்பிள் அசோகமித்திரன்... அவர் ஒரு பிணமா புதைக்கப்படலங்கறதுதான் அதுக்கு பின்னால இருக்கற உண்மைன்னு நான் நினைக்கறேன்...”
“என்னய்யா சொல்றீங்க?”“புதைக்கப்பட்றதுக்கும், ஜீவசமாதில அடக்கப்பட்றதுக்கும் நிறைய வித்யாசமிருக்கு. அதுலயும் சித்தர்கள் விஷயம் கொஞ்சம் சிக்கலான விஷயம். நான் அவங்க நூல்களை வாசிச்சு புரிஞ்சிகிட்ட அளவுல சொல்றேன்.பொதுவா உயிர் பிரியறதுங்கறது மனிதர்கள் வரைல ஒன்பது துவாரங்கள் வழியாதான் நிகழுது. அந்த பிரிவை சுவாசம் நின்று போனத வெச்சு உறுதி செய்துக்கறோம். அப்ப சுவாசக் காற்றுதான் உயிரோன்னு நினைக்க வேண்டியிருக்கு.

அப்படியே வெச்சுகிட்டு சிந்திப்போம்... இந்த சுவாசத்தை கட்டுப்படுத்தறதுதான் ஒரு சித்தனோட முதல் வேலையா இருக்கு. ஒரு நாளைக்கு நாம 21,600 தடவை சுவாசிக்கறதா ஒரு கணக்கு இருக்கு. இது கூடினா ஒரு மனிதன் ஆயுள் குறையும். இது குறைஞ்சா ஆயுள் அதிகரிக்கும். பதட்டம், கோபம், பயம் போன்ற உணர்ச்சித் தருணங்கள்ல சுவாசம் அதிகரிக்கும். அமைதி, தியானம், தவத்தின் போது குறையும்.

மொத்தத்துல இந்த காத்துலதான் எல்லாம் இருக்கு. இதைத்தான் திருமூலர் ‘காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளருக்கு கூற்றை உதைக்கும் குறி அது ஆமே’ன்னு பாடியிருக்கார்.
இந்த உயிர்க் காற்றை சித்தர்கள் வெளிய விட்றதேயில்லை. தங்களுக்குள்ள பிடிச்சி வெச்சுக்கறாங்க. இதுக்கு உடம்பு ஒத்துழைக்கணும் - அதனால உடம்பையும் அவங்க அதற்கேற்ப காயகல்பங்களால மேம்படுத்திக்கறாங்க.

இதனால நம்ம உப்பு, புளி, கார உடம்போட ஒரு சித்தன் உடம்பை எக்காரணம் கொண்டும் ஒப்பிடக் கூடாது. ஒப்பிட்டா சரியான விடையும் கிடைக்காது.
அவங்க உடல் கல்ப உடல்! அவங்க உயிர் அவங்க கட்டுப்பாட்டுல உள்ள ஒன்று. அதனால அவங்களுக்கு பல விஷயங்கள் சாத்யப்படுதுங்கறதுதான் என் கருத்து...”
“அப்ப மண்ணாங்கட்டி சித்தர் சாகா வரம் பெற்றவரா?”

“இந்த உலகத்துல எல்லாமே இரண்டிரண்டாதான் இருக்கு அசோகமித்திரன்! சுவை ஒண்ணு; இனிப்பு - கசப்புன்னு அது இரண்டா இருக்கு. பூமி கூட ஒண்ணுதான். அது இரவு - பகல்னு இரண்டா இருக்கு. உணர்வு, வலி - இன்பம்னு இரண்டா இருக்கு. மனித இனம் ஆண் - பெண்ணுன்னு இரண்டா இருக்கு.

அதேமாதிரி சாவுங்கற விஷயமும் ஏன் உண்டு இல்லைங்கற இரண்டா இருக்கக் கூடாது?”
“அப்படின்னா சாகாம வாழ முடியும்கறீங்களா?”

“வாழ முடியாட்டி மண்ணாங்கட்டியார் எப்படி கண்ணுலபட முடியும்?”“அப்ப ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’ங்கற திருக்குறள் பொய்யா?”

“இந்தக் கேள்வியை அந்த மண்ணாங்கட்டியார்கிட்டயே கேளுங்க. அப்படியே அழியாத அவருக்கு ஒரு மழைல கரைஞ்சு போற மண்ணாங்கட்டிங்கற பேர் எதுக்குன்னும் கேளுங்க...” மணி மொழியனார் அழகாய் தூண்டி விடலானார்!

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி