எங்க 100வது தயாரிப்புல விஜய்தான் ஹீரோ!
தன் 20 வருட திரையுலக வாழ்க்கையை அசைபோடுகிறார் ஜீவா
ஜீவா; கோலிவுட் இயக்குநர்கள் அதிகம் விரும்பி பணியாற்ற நினைக்கும் நடிகர்களில் ஒருவர். இவருடைய ‘கற்றது தமிழ்’ இன்றளவும் பேசப்படுகிறது. ‘ராம்’, ‘ஈ’, ‘சிவா மனசுல சக்தி’, ‘கோ’, ‘நண்பன்’, ‘முகமூடி’, ‘ஜிப்ஸி’ போன்ற படங்கள் ஜீவாவின் சினிமா பயணத்தை அழகாக்கிய படைப்புகள். இவருடைய அப்பா ஆர்.பி.செளத்ரி புகழ் பெற்ற தயாரிப்பாளராக இருந்தாலும் தன்னுடைய உழைப்பை மூலதனமாக்கி கடந்த இருபது வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விரைவில் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துள்ள ‘காபி வித் காதல்’ வெளிவரவுள்ளது. ‘காபி வித் காதல்’ எப்படி வந்திருக்கு?
 சுந்தர்.சி சார் படம் என்றாலே பெரிய நடிகர் பட்டாளம் இருக்கும். நானும் ஜெய்யும் ஏற்கனவே ‘கலகலப்பு 2’ல இணைந்து நடிச்சிருக்கிறோம். இரண்டு, மூணு ஹீரோ சேர்ந்து நடிச்சாலே ஒருவித வைப் இருக்கும். அது இந்தப் படத்திலும் இருந்துச்சு. ஊட்டி பின்னணியில் நடக்கும் கதை. நானும்,ஸ்ரீகாந்த்தும் ‘நண்பன்’ படத்துக்குப் பிறகு சேர்ந்து நடிக்கிறோம். சக நடிகர்களுடன் ஏற்கனவே இணைந்து நடிச்சதாலே படப்பிடிப்பு இடைவெளியில் பழைய நினைவுகளை மீட்டெடுத்து பேசுவோம்.
 சாமான்ய மனிதர்கள் எல்லோரும் தங்கள் வாழ்க்கையோடு கனெக்ட் பண்ற மாதிரியான கதைக்களம். சுந்தர்.சி சார் படத்துல பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. அதை எதிர்பார்த்து இந்தப் படத்துக்கு வரலாம். உங்களுக்கு என்ன கேரக்டர்?
 எனக்கு ஐடி, ஜெய்க்கு ஹோட்டல், ஸ்ரீகாந்த்துக்கு கலைத்துறை. ஒரு குடும்பத்துல கல்யாணம் நடக்கிறது. அதுல நடக்கும் குழப்பத்தை மையமா வெச்சு கதை கலகலப்பா நகரும். மூன்று ஹீரோக்கள் கதையில் உங்களுக்கான முக்கியத்துவம் எந்தளவுக்கு இருந்தது?
படத்துல இவங்க முக்கியம், அவங்க முக்கியம் என்றில்லாமல் கதை என்ன கேட்டதோ அதற்கு ஏத்த ஹீரோவாதான் இருப்பாங்க. சினிமாவுக்கு வந்து இருபது வருடங்களாகிவிட்டது. எனக்கு என்ன மாதிரி கேரக்டர்ஸ் செட்டாகும்னு இயக்குநர்களுக்கு தெரியும். அந்த வகையில் என்னுடைய கேரக்டருக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தர முடியுமோ அந்தளவுக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டரா இருக்கும்.
 ‘வரலாறு முக்கியம்’ டைட்டில் நல்லா இருக்கே?
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் ராஜன் இயக்குகிறார். எனக்கு ஜோடியா காஷ்மீரா பர்தேசி நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸ். பொன்குமரன் இயக்கியுள்ள ‘கோல்மால்’ படமும் முடிந்துவிட்டது. அதுல சிவா, யோகிபாபு இருக்கிறார்கள். கம்ப்ளீட் காமெடி படமா வந்திருக்கு. அப்புறம் எஸ்.ஆர்.பிரபு கம்பெனிக்கு ஒரு படம் பண்றேன். நாயகியா ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். கே.ஜி.பாலா இயக்குகிறார். பா.விஜய் இயக்கத்தில் ஒரு படம் பண்றேன். வேல்ஸ் புரொடக்ஷன்ஸ் ஐசரி கணேசன் சார் தயாரிக்கிறார். பிரம்மாண்டமான படமா இருக்கும். இதில் எனக்கு ஜோடியா ராஷி கண்ணா பண்றார். இந்தப் படங்கள் எல்லாமே வெவ்வேறு ஜானர்.
‘கற்றது தமிழ்’ ஜீவா சிரீயஸ் படம் பண்ணிய காலம் மாறி இப்போது ஜீவா என்றாலே காமெடி படம் என்றாகிவிட்டதே?
‘கற்றது தமிழ்’ வெளிவந்த சமயத்தில் அன்றைய வாழ்வாதார பிரச்னைகளை பிரதிபலித்தது. ‘83’ படம் பண்ணிய பிறகு பான் இந்தியா படங்கள் பண்ணணும்னு முடிவு செய்தேன். ‘83’ படத்துக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்தப் படத்தின் மூலம் எனக்கு ஒரு இந்திப் பட வாய்ப்பு கிடைச்சது. ஆனந்த் எல்.ராய் தயாரிக்கிறார். ‘கற்றது தமிழ்’ பண்ணி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் அந்தப் படம் பேசப்படுகிறது. ராமும் என்னிடம் மறுபடியும் வரல. அழுத்தமான கதைகளை எப்போதும்போல் பண்ண முடியாது. சரியான நேரத்தில் பண்ணணும். அந்த மாதிரி படங்கள் பண்ணும்போது நம்முடைய மனநிலை ஒத்துப்போகணும்.
இப்போது ஐந்து படங்கள் வெளிவரவுள்ளது. அந்தப் படங்களுக்குப் பிறகு நீங்கள் சொல்ற மாதிரி அழுத்தமான படம் பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருபது வருட சினிமா வாழ்க்கை என்ன படிப்பினை கொடுத்துள்ளது?
எவ்வளவு புதுசா முயற்சி எடுக்கிறோமோ அவ்வளவு தோல்விகள் வரும். அதையெல்லாம் ஊக்கமா எடுத்துக்கொள்ளணும்னு கத்துக்கிட்டேன். அதைத் தாண்டி வெற்றி அடையும்போது சந்தோஷம் கொடுக்கிறது.
‘83’ பட அனுபவத்தை மீட்டெடுக்க முடியுமா?
எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன். ‘சிவா மனசுல சக்தி’ பண்ணும்வரை லீக் மேட்ச்களில் விளையாடி வந்தேன். செலிபிரிட்டி கிரிக்கெட்ல நான் அடிச்ச ஒரு ஷாட் பேசப்பட்டது. அதை அடையாளம் வைத்து இந்திய கிரிக்கெட் வீரர் பல்வீந்தர் சந்து என்னுடைய ஷாட் ஸ்ரீகாந்த் சார் ஷாட் மாதிரி இருந்ததுனு சொல்லி ஸ்ரீகாந்த் சார் கேரக்டரில் நடிக்க வைத்தார். ஒன்பது மாதங்கள் பயிற்சி எடுத்தேன்.
ஸ்ரீகாந்த் சார் என்னுடைய வீடு இருக்கும் ஏரியாவுல இருக்கிறார். அவருடைய கிரிக்கெட் அனுபவங்கள நிறைய பகிர்ந்துகொண்டார். சுனில் கவாஸ்கர் சார் நேரடியா மைதானத்துக்கு வந்து விஷ் பண்ணினார். சில மூத்த வீரர்கள் ஸ்ரீகாந்த் மாதிரி இருக்கிறேன் என்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள்.
எனக்கு என்ன வருத்தம்னா நம்ம ஊர்ல யாரும் பெரிதா அந்தப் படத்தைப் பற்றி பேசல. சில ஆங்கில ஊடகங்கள் அந்தப் படத்தைப் பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். தமிழ் ஊடகங்கள் ஏன் அதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று தெரியவில்லை. உங்கள் சினிமா பயணத்தில் ரசிகர்களிடமிருந்து என்ன மாதிரியான ஆதரவு கிடைத்துள்ளது? என்னுடைய கேரியர்ல பலவிதமான ஜானர்ல படங்கள் பண்ணியிருக்கிறேன். ‘சிவா மனசுல சக்தி’, ‘ராம்’, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ மாதிரி வெவ்வேறு படங்கள் பண்ணியிருக்கிறேன். இந்த மாதிரியான படங்களில் குழந்தைகள், யூத், பெரியவர்கள் என பலரைக் கவர்ந்திருக்கிறேன்னு சொல்ல முடியும். ‘சிவா மனசுல சக்தி’க்கு யூத் ஆடியன்ஸிடமிருந்து செம ரெஸ்பான்ஸ். ‘நீ தானே என் பொன் வசந்தம்’ இளம் ரசிகைகளை இம்ப்ரஸ் பண்ணியது. ‘முகமூடி’ல குங்ஃபூ பண்ணியதால் குழந்தைகளை இம்பரஸ் பண்ணியது. ‘களத்தில் சந்திப்போம்’ கபடி கதை என்பதால் அதற்கு வரவேற்பு கிடைச்சது. ‘83’ படத்தை கிரிக்கெட் லவ்வர்ஸ் கொண்டாடினாங்க.
எப்பவுமே நான் என்னை ஸ்டாராக முன்னிறுத்த முயற்சித்ததில்லை. வெர்சடைல் ஆக்டராகத்தான் என்னை காண்பிக்க விரும்புகிறேன். பத்து, பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இந்தப் படங்கள் நான் பண்ணியிருக்கிறேன் என்று பெருமிதமா சொல்லுமளவுக்கு படங்கள் பண்ணியிருக்கிறேன்.
விஜய், அஜித் சாருக்கு எப்படி சில படங்கள் லேண்ட்மார்க் படங்களாக அமைந்ததோ அதுமாதிரி எனக்கும் அமைந்தது மகிழ்ச்சி. தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குநர்கள் ஷங்கர் சார், கெளதம் வாசுதேவ் மேனன் சார், கே.வி.ஆனந்த் சார் ஆகியோரின் படங்கள் பண்ணியிருக்கிறேன். இந்தப் பயணத்தில் ரசிகர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த இடத்தை தொட்டிருக்க முடியாது.
திருமண வாழ்க்கை நடிகர் ஜீவாவை குடும்பத் தலைவர் ஜீவாவாக எப்படி மாற்றியுள்ளது?
என்னுடைய மனைவி சுப்ரியா ஆறாம் வகுப்புலேர்ந்து எனக்கு பழக்கம். நானும் அவரும் ஒரே பெஞ்ச். ஒரே பெஞ்ச்ல படிச்ச அவங்கதான் என் வாழ்க்கைத் துணையா வந்தாங்க. எங்களுக்கு திருமணமாகி பதினைந்து வருடங்களாகிவிட்டது. என் மனைவியை முப்பத்தைந்து வருடங்களாகத் தெரியும். என்னுடைய மகனுக்கு பனிரெண்டு வயது. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் போவது, வேலை விஷயத்துல ஒருவருக்கு ஒருவர் ஊக்கம் தருபவர்களாக இருப்பது... இதுதான் எங்கள் திருமண வாழ்க்கையின் வெற்றி ரகசியம்.
உங்கள் வாழ்க்கையில் மன வருத்தங்கள் ஏதேனும் உண்டா?
மனவருத்தங்கள் இல்லாத வாழ்க்கை ஏது? வாழ்க்கையில் வருத்தங்கள் வந்தாலும் அதையே நினைத்து வருந்தாமல் மேற்கொண்டு முன்னேறிச் செல்வதுதான் வாழ்க்கை. சினிமாவைப் பொறுத்தவரை சில படங்கள் நான் நடித்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று தோன்றும். அந்த தயாரிப்பாளருக்கு படம் பண்ணியே இருக்கக்கூடாது; அதனால்தான் படம் மைனஸா மாறிடிச்சுனு தோணும். வீடு கட்டும்போது நிதிநிலைமை கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாம்னு தோன்றும்.
இதை வருத்தங்கள்னு சொல்லமுடியாது. வாழ்க்கையில் இது சகஜம். செலிபிரிட்டி வாழ்க்கை பிரச்னை இல்லாத வாழ்க்கைனு சொல்லிட முடியாது. எல்லோருக்கும் தேவைகள் இருக்கும். எளிய மக்களுக்கு ஆயிரங்களில் தேவைகள் இருக்கும். அதுவே பிரபலங்கள் என்று வரும்போது லட்சங்களில் தேவைகள் இருக்கும். மற்றபடி சாமான்ய மக்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதுதான் எனக்கும் உணவு.
ஒரு பார்வையில் நடிகருடைய வாழ்க்கை சிறப்பான வாழ்க்கைனு சொல்லலாம். ஆனால் அதற்கு தரும் விலை அதிகம். அதிகாலையில் எழுந்திருக்கணும். மழையில் நடிக்கச் சொன்னால் நடிக்கணும். சேத்துல இறங்கச் சொன்னா இறங்கணும். நடுரோட்ல சண்டை போடச் சொன்னா போடணும். படம் எப்படி வரும்னு தெரியலைனாலும் கடுமையான உழைப்பு கொடுக்க வேண்டும். தினம் தினம் அட்வென்ச்சர் லைஃப். சாதாரண மனிதர்கள் அப்படி இருக்க முடியாது.
சூப்பர்குட் பிலிம்ஸ் நூறாவது படத்தில் விஜய் நடிக்கிறார் என்று சொல்கிறார்களே?
அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கம்பெனியில் விஜய் சார் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறார். அப்பாவும் விஜய் சாரும் நேரில் சந்தித்ததாக கேள்விப்பட்டேன். இப்போது ஃபகத் பாசில் படம் பண்றோம். அது 96வது படம். கதை, மற்ற விஷயங்கள் அமையும்போது இறைவன் அருளால் 100வது படம் விஜய் சார் படமாக அமையலாம். உங்கள் சமகால நடிகர்கள் விஷால், ஆர்யா போன்றவர்கள் சொந்தமா படங்கள் தயாரித்து நடிக்கிறார்கள். உங்களுக்கு அந்த ஐடியா இல்லையா?
அப்பாவுடைய சினிமா கம்பெனியில் நானும் ஒரு ஊழியர். நடிக்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. தயாரிப்பு என்று வரும்போது அதிலேயே கவனம் இருக்க வேண்டும். உங்க விஷ் லிஸ்ட்ல இருக்கிற இயக்குநர்கள் யார்?இளம் இயக்குநர்கள், ரைட்டர்ஸ் உருவாக வேண்டும். அநேகமாக என்னுடைய படங்களை இயக்கிய இயக்குநர்களுக்கு அது முதல் படமாக இருந்திருக்கும். இளம் இயக்குநர்கள் வித்தியாசமான படைப்புகளைக் கொடுத்தாலும் ஒரு பயிற்சி இருந்தால் இன்னும் அச்சீவ் பண்ணலாம்.
‘கோட்டா பேக்டரி’, ‘பஞ்சாயத்து’னு சில படங்கள் ஓடிடியில் கவனம் பெற்றது. அந்தப் படங்களை எடுத்தவர்கள் எல்லோருமே எம்பிஏ மாதிரியான பெரிய படிப்புகள் படித்தவர்கள். அதுல ஒரு நேர்த்தி இருந்தது. ரைட்டிங் பேசும்படியா இருந்தது.
எஸ்.ராஜா
|