புதுக் கதைகள் உருவாக்குங்க! சொல்கிறார் காந்தாரா இயக்குநர் & ஹீரோ ரிஷப் ஷெட்டி



நூறு கோடி வசூல், இந்திய அளவில் டிரெண்ட், அபார நடிப்பு என ‘காந்தாரா’ படம் கன்னட சினிமாவையும் தாண்டி இந்தியாவின் கடைக்கோடி சினிமா ரசிகனின் கதவையும் தட்டிக் கொண்டிருக்கிறது.  ஏகபோக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் மற்றும் படத்தின் நாயகன் ரிஷப்ஷெட்டி. ‘‘நான் பார்த்து வளர்ந்த கதைக்களம்தான் ‘காந்தாரா’ படம்...’’ தெள்ளத் தெளிவாக தமிழில் வந்து விழுகின்றன வார்த்தைகள். பொறுமையாகவும் பக்குவமாகவும் பேசத் தொடங்கினார் ரிஷப் ஷெட்டி.
‘வோம்...’ எனக் கத்தும்போது அரங்கமே அதிருது! உங்கள் குரல்வளை நலமா?

ஹாஹா! ஓரளவுக்கு பரவாயில்லை. அந்த போர்ஷன் மட்டும் எந்த மொழியிலும் எங்களால் டப்பிங் அவுட்புட் வாங்கவே முடியலை. அதனாலேயே அதன் ஒரிஜினல் வெர்ஷனை மாற்றாமல் அப்படியே விட்டுட்டோம். அதனால்தான் எல்லா மொழியிலேயும் அந்த குறிப்பிட்ட கோலா போர்ஷன் மட்டும் என் குரலிலேயே வரும். சின்ன வயதிலிருந்து இதையெல்லாம் பார்த்து வளர்ந்தவன் நான். நானே பல கட்ட பயிற்சிகள், நிறைய வாய்ஸ் டிரைனிங் எல்லாம் கடந்துதான் இந்த போர்ஷன் செய்திருக்கேன்.
‘காந்தாரா’ பெயரின் காரணம் என்ன?

மர்மங்கள் நிறைந்த காடு. மாயக்காடுனு சமஸ்கிருதத்திலும் கூட இதற்கு பொருள் வரும். அதனால்தான் ‘காந்தாரா’. உண்மைக் கதையை தழுவிய படம் என்றீர்களே..?  நாங்க விவசாய குடும்பம். சின்ன வயசுல இருந்து நான் பார்த்து வளர்ந்த கலாசாரம், சூழல் இதையெல்லாம் அடிப்படையா வெச்சுதான் இந்த கதையை உருவாக்கினேன். எங்க ஊர்ல கோலானு ஒரு எல்லைச்சாமி வழிபாடு நடக்கும். அதை பிரதானமா மாத்தி இருக்கேன். தமிழ்ல எப்படி ஐயனார், முனியாண்டினு ஏராளமான ஊர் எல்லைச்சாமிகள்... ஊரைக் காக்கும் தெய்வங்கள் இருக்கோ அப்படித்தான் கர்நாடகாவிலும் நிறைய சிறு தெய்வங்கள் வழிபாட்டு முறை இருக்கு.

அதிலே ஒண்ணுதான் இந்த பூதகோலா, தைவாரா தெய்வங்கள். இந்த தெய்வங்களை சிவனுடைய அவதாரங்களாக சொல்லுவாங்க. பல வருஷங்களுக்கு முன்னாடி எங்க ஊர்ல விவசாய மக்களுக்கும் ஒரு ஃபாரஸ்ட் அதிகாரிக்கும் நடுவுல மோதல் உண்டாச்சு. அந்த மோதலை வெறும் ஆக்கிரமிப்பு அப்படிங்கற ஒரு கட்டத்துக்குள்ள அடக்காம அதைச் சுற்றி என்ன நடந்துச்சுனு இப்ப யோசிச்சப்ப நிறைய விஷயங்கள் எனக்கு புரிஞ்சது. அதையெல்லாம் தேடி என்னுடைய புரிதலோடு இந்த கதையை உருவாக்கினேன்.

எங்கே பிடிச்சீங்க இந்த லொகேஷன்களை?

நான் பிறந்து வளர்ந்த ஊர்தான். படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எங்க ஊர் முறைப்படியே பூஜைகள் போட்டுதான் ஆரம்பிச்சோம். படம் எடுக்கும் பொழுதே கூட சுத்திலும் அந்த வைப்ரேஷன் இருக்கிறதை எங்களால் உணர முடிஞ்சது.  அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்துறது எனக்கு பிடிக்காது. எங்கள் வீட்டில் பின்புறத்தில் உள்ள இடத்தில்தான் வருஷா வருஷம் கம்பலா என்கிற எருமை மாடுகளை வைத்து விளையாடும் விளையாட்டு நடக்கும். இங்க ஜல்லிக்கட்டு மாதிரி அங்க கம்பலா.

நானும் அதிலே எல்லாம் கலந்துக்கிட்ட அனுபவம் உண்டு. ரியாலிட்டிக்காக உண்மையாகவே கம்பலா போட்டி நடக்கும்பொழுதுதான் ஷூட்டிங் எடுத்தோம்.
ஒரு கதைக்கு புவியியல் கோட்பாடுகள் முக்கியம்னு நினைக்கிறீங்களா? கமர்சியலா ஜாலியா ஒரு படம் செய்யப் போறோம்னா அதற்கு பெருசா நாம யோசிக்க வேண்டியதில்ல.
ஆனா, சமூகத்தில் நடக்கற அல்லது நடந்த பிரச்னையைப் பேசப் போறோம்னா நிச்சயமா அதுக்கு புவியியல் கோட்பாடுகளும் அதற்கான தேடல்களும் ஆராய்ச்சிகளும் தேவை.
உங்க முந்தைய படத்தில் மொழிப் பிரச்னை... இப்ப நிலப்பிரச்னை மற்றும் சாதிப் பிரச்னை... அரசியல் தலையீடுகள் வரலையா?

நிறையவே வந்துச்சு. அரசியல் தலையீடோ, விமர்சனமோ... அதிலே நியாயம் இருந்தா நிச்சயமா ஏத்துக்கிட்டு அதை நானே சரி செய்துடுவேன். அல்லது விளக்கம் கொடுப்பேன். வெட்டியா டிரெண்டிங்காக கருத்து சொல்றவங்களுக்கு ரியாக்‌ஷனே கொடுக்கறதில்ல. சாதாரணமான அறிமுகம்... கதை நகர நகர அசாதாரண கதாபாத்திர படைப்பு... இந்த கேரக்டர் ஸ்கெட்ச் பற்றி சொல்லுங்க!

ஒரு ஊருக்குள்ளே போகும் பொழுது நமக்கு யாரையுமே தெரியாது. ஒவ்வொருத்தரும் சாதாரணமான நபர்களா கடந்து போவாங்க. ஆனா, ஓரளவு ஊரைப் பற்றி தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு கேரக்டரும் நம்ம மனசில் ஆழமாக பதியும். அப்பதான் அவங்க ஊரின் மக்களாகவும் கதையின் பாத்திரங்களாகவும் மாறுவாங்க. அதைத்தான் நான் ஃபாலோ செய்துருக்கேன்.  

உதாரணத்துக்கு ஹீரோயின் கேரக்டர். அந்த பொண்ணு ஹீரோவுக்கு மட்டும்தான் அழகா தெரியணும். ஊர்ல இருக்கறவங்களுக்கு அங்க இருக்கற பொண்ணுங்கள்ல அவளும் ஒருத்தி. பார்த்தவுடனேயே பளிச் முகம், மேக்கப் போட்ட ஃபேஸ்... இப்படி இருந்தா ஹீரோயின்னு நாமளே காட்டி சினிமா கிளிஷேக்களுக்குள்ள சிக்கிடுவோம்.

அதை செய்யவே கூடாதுன்னு தெளிவா இருந்தேன். ஃபாரஸ்ட் ஆபீஸராக வரும் கிஷோரை நல்லவராக காண்பிச்சிருக்கீங்க... அரசாங்கத்தை பகைச்சிக்கக் கூடாதுன்னு நினைச்சீங்களா?கிஷோர் சார் கேரக்டரை முழுமையா காட்டல. உண்மையான ஃபாரஸ்ட் ஆபீசரா அந்த ஊருக்கு வந்தவர் முழுக்க முழுக்க அந்த ஊர் மக்களுக்கு விவசாயத்தில் உள்ள பயிற்சிகள், நவீன முறைகள்... இப்படி எல்லாத்தையும் கத்துக்கறதுக்கு நிறையவே வாய்ப்புகள் கொடுத்து அந்த மக்களை முன்னேற்றினார்.

எந்த ஒரு அதிகாரியும் வேணும்னு யாரையும் துன்புறுத்த மாட்டாங்க. அவங்களுக்கு எப்படிப்பட்ட பிரஷர் இருக்குன்னு இங்க இருக்கற நமக்கு தெரியாது. அதிகாரம் என்ன சொல்லுதோ அதைத்தான் அவங்க கேட்டு செய்வாங்க. அதையும் சேர்த்து புரிய வைக்கதான் முயற்சி செய்திருக்கேன். இந்தக் கதையிலே இந்த ஆபீசர் நல்லவர். அவ்வளவுதான். ஒரு காலத்தில் பாலிவுட் படங்கள் இங்க ரீமேக் ஆச்சு. இப்ப நிலை மாறி இங்கிருக்கும் படங்கள் அங்க போக ஆரம்பிச்சிருச்சு... இந்த மாற்றத்தை எப்படி பார்க்கறீங்க?

அப்பவும் நம்ம படங்கள் பாலிவுட்டில் நமக்கே தெரியாம ரிமேக் ஆகிட்டுதான் இருந்துச்சு. கன்னடத்தில் இருந்தே கூட நிறைய படங்கள் இந்திக்கு போயிருக்கு. ஆனா, அப்ப எல்லாம் இப்படி சுலபமா எந்த மொழி படத்தையும் எங்க இருந்து வேணாலும் பார்க்கக்கூடிய வாய்ப்பு இல்லாததால நமக்கு தெரியாம இருந்திருக்கு. எக்காலத்திலும் தென்னிந்திய சினிமா பாலிவுட் சினிமாவுக்கு எந்த வகையிலும் குறைஞ்சதே இல்லை.

பான் இந்தியா படம்... இதை நீங்க எப்படி பார்க்கறீங்க?

இதிலே எனக்கு உடன்பாடில்ல. பல வருஷங்களுக்கு முன்னாடியே ஜாக்கிசான் நடிச்ச படங்களையே நாம இங்க பார்க்க ஆரம்பிச்சிட்டோம். அப்படி இருக்கும்போது ‘பான் இந்தியா’ என்கிற வட்டத்துக்குள்ள நம்ம படங்களை அடைக்கறது சரியா படல.  அதேநேரம் இன்னொரு விஷயம்... பான் இந்தியானு கதையிலே நிறைய காம்ப்ரமைஸ் செய்துக்கறாங்க. அதெல்லாம் தேவையே இல்ல என்பது என் கருத்து.உங்க அடுத்த படம்..?

நிச்சயமா அது இன்னொரு சமூகப் பிரச்னையாதான் இருக்கும். அதற்கான தேடலும் இருக்கு. ஆனா, இப்போதைக்கு ஒரு மூணு மாசத்துக்கு என் குடும்பத்துடன் ரிலாக்ஸ் மோடுக்கு மாறிடுவேன். அப்புறம்தான் அடுத்த கதை பத்தி யோசிப்பேன். ‘பெல்பாட்டம் 2’, ‘மகனியாரே மகிளியாரே’, ‘பேச்சிலர் பார்ட்டி’ உள்ளிட்ட படங்கள் எல்லாம் ஏற்கனவே ரிலீஸ் மற்றும் ஷூட்டிங் வேலைகள் போயிட்டு இருக்கு. கூடிய சீக்கிரம் அறிவிப்புகள் வரும்எந்த மொழி படத்தையும் எங்கே இருந்தும் பார்க்கக்கூடிய சூழல் உருவாகிடுச்சு. இனி இயக்குநர்கள் என்ன செய்யணும்?

உலக அளவுக்கு ஒரு படத்தை சமர்ப்பிக்க போறோம்ன்னா உங்க கலாசாரக் கதை, புவியியல் கோட்பாட்டுக் கதைகள சொல்லுங்க. அதை தெரிஞ்சுக்கதான் பார்வையாளன் ஆசைப்படுவான்.
ஒரு படம் உலக அளவில் பேசப்படுதுன்னா அந்தக் கதை புதுக் கதைன்னு அர்த்தம். இதைத்தான் இயக்குநர்கள் புரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன்.

ஷாலினி நியூட்டன்