எல்லா ஹீரோக்களுக்கும் தங்கச்சியா நடிக்கணும்!
சொல்கிறார் ரோஜா நாயகி பிரியங்கா நல்காரி
சின்னத்திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற தொடர் ‘ரோஜா’. இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரி பலரின் மனங்களில் சிம்மாசனமாக வீற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ‘அர்ஜுன் சார்...’ என சீரியலில் அவர் தன் கணவரை அழைக்கும் அழகைக்கூட பெண்கள் பலரும் ரசித்துக் கொண்டாடுகின்றனர்.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/20.jpg) அந்தளவுக்கு பார்வையாளர்களின் உள்ளங்களில் மணக்கிறார் இந்த ரோஜா. ‘‘இது தமிழ்ல என் முதல் சீரியல். உண்மையில் இதற்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல. சமீபத்துல திருச்சியில் நடந்த ‘சன் நட்சத்திரக் கொண்டாட்டத்துல’ நான் ஏங்கி ஏங்கி அழுதிட்டேன். தமிழ் மக்கள் பாசத்தைக் காட்டி எனக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைச்சிட்டாங்க...’’ என உற்சாகம் பொங்க பேசுகிறார் பிரியங்கா. ![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/20a.jpg) ‘‘என் முழுப்பெயர் பிரியங்கா நல்காரி. சொந்த ஊர் ஐதராபாத். பிறந்து வளர்ந்தது படிச்சதெல்லாம் அங்கதான். நான் இன்டீரியர் டிசைன் படிச்சிருக்கேன். ஸ்கூல்ல படிக்கும்போதே சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா தெலுங்கு இண்டஸ்ட்ரியில் நடிக்க வந்திட்டேன். நான் சின்ன வயசுல டிவி கூட பேசிட்டு இருப்பேன்னு அம்மா சொல்வாங்க. டிவியைப் பார்த்து டான்ஸும் ஆடியிருக்கேன். அதை அம்மா பார்த்து இவளுக்கு டான்ஸ் ரொம்பப் பிடிச்சிருக்குனு சப்போர்ட் செய்தாங்க. பிறகு, வீட்டுல பெரிய கண்ணாடி வச்சிட்டாங்க.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/20b.jpg)
நான் அந்தக் கண்ணாடியைப் பார்த்திட்டு டான்ஸ் ஆடுறது, எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்குறது, அதை அம்மாவுக்கு காட்டுறதுனு இருப்பேன். நானே சேலை கட்டிட்டு மேக்கப் எல்லாம் பண்ணுவேன். அதனால, அம்மாவும் அப்பாவும் என் திறமைய அங்கீகரிச்சு ஊக்கப்படுத்தினாங்க. இப்பவரை ஊக்கப்படுத்திட்டு இருக்காங்க.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/20c.jpg) அவங்க சப்போர்ட் இல்லனா நான் இந்த இடத்துல இருக்கவே முடியாது. நானாகவே டான்ஸ் கத்துக்கிட்டதும் ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் பண்ணினேன். என் நடனத்தைப் பார்த்த ஒருத்தர் என்னைக் கூப்பிட்டு ஃப்ரீயா டான்ஸ் கத்துத்தர்றேன்னு சொன்னார். அப்ப வீட்டுல ஃபைனான்சியல் பிரச்னை இருந்தது. ![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/20d.jpg) அவரிடம் டான்ஸ் கத்துக்கிட்டேன். அப்புறம் நிறைய ஈவென்ட்ஸ் பண்ணினேன். நிறைய ஆடிஷனுக்கு அப்பாவும் அம்மாவும் கூப்பிட்டுப் போவாங்க. அப்படியாக ரியாலட்டி ஷோக்கள் எல்லாம் பண்ணினேன். நான் எக்ஸ்பிரஷன்ஸ் நிறைய காட்டுவேன். என்னை எல்லோரும் ‘எக்ஸ்பிரஷன்ஸ் குயின்’னு சொல்வாங்க. எனக்கு ஆக்டிங் ஆர்வம் இருக்கானு கேட்டாங்க. அப்ப எனக்கு சுத்தமா ஆர்வமில்ல. ஆக்டிங் பத்தி எதுவும் தெரியாது. இருந்தாலும் அவங்க கேட்டதால நான் ஆர்வமிருக்குனு சொல்லிட்டேன். ஏன்னா, பெரிய திரையில் என்னைப் பார்க்கணும்னு நினைச்சேன்.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/20e.jpg) முதல்ல ‘அந்தரி பந்துவயா’னு ஒரு படம் பண்ணினேன. அதுல ஹீரோயினுக்குத் தங்கச்சியா நடிச்சேன். அப்ப எட்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அந்த மூவிக்குப் பிறகு ஆங்கரிங் வாய்ப்புகள் நிறைய வந்தது. பல டிவி சேனல்களுக்கு ஆங்கரிங் செய்தேன். ‘ஜெமினி டிவி’க்கும் செய்திருக்கேன். இடையில் ‘ஹைப்பர்’, ‘கிக் 2’, ‘நேனே ராஜு நேனே மந்திரி’, ‘பீமவரம் புல்லடு’, ‘W/o ராம்’னு நிறைய படங்கள்ல நடிச்சேன். அப்படியே ஆங்கரிங் வொர்க் போயிட்டு இருந்தது.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/20f.jpg) நான் ஆக்டிங்க்கு வந்ததும் சில சீரியல் மானேஜர்கள் என் நடிப்பைப் பார்த்திட்டு சின்னத்திரைக்கு கூப்பிட்டாங்க. அப்படியாக சீரியல் வாய்ப்பு அமைஞ்சது. ‘ஷரவந்தி’னு ஒரு சீரியல் ‘ஜெமினி டிவி’க்கு பண்ணினேன். அதிலும் தங்கச்சி ரோல். அந்த சீரியல் செம ரீச்சானது. அப்படியே அடுத்தடுத்து வெவ்வேறு சேனல்களுக்கு சீரியல்கள் செய்தேன். நான் எந்த ஷோக்கு போனாலும் சென்டர் ஆஃப் என்டர்டெயின்மென்ட்டா இருப்பேன்.
என்னால் எல்லோரும் சிரிப்பாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தச் சுறுசுறுப்பை பார்த்திட்டு இந்தக் கேரக்டருக்கு நான்தான் பொருத்தமா இருப்பேன்னு ‘ரோஜா’வுல நடிக்கக் கூப்பிட்டாங்க. உடனே சென்னைக்கு வந்திட்டேன்...’’ என கலகலவெனச் சிரித்தவர், தொடர்ந்தார். ‘‘ஆரம்பத்துல ரொம்ப பயமா இருந்தது. இப்ப ரொம்ப நல்லாயிருக்கு. இங்க வந்தபிறகு தமிழ் மக்கள் சப்போர்ட் செய்தது மட்டுமில்லாமல் எனக்கு ஒரு பெரிய பெயரும் தந்து, சீரியலை ஹிட்டடிக்க வச்சிட்டாங்க. தமிழக மக்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
கூடவே, சிறந்த நடிகை விருதும் வாங்கிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுதவிர சிறந்த வளர்ந்து வரும் ஜோடினு ஒரு விருதும், சிறந்த பிரபலமான ஜோடினும் ரெண்டு விருதுகள் கிடைச்சது. இந்தமுறையும் ஃபேவரைட் ஜோடினு விருது கிடைச்சிருக்கு. சன் டிவியில் நான்கு விருதுகள் வாங்கிட்டேன்.
இதைவிட ரோஜா கதாபாத்திரம் அவ்வளவு ரீச்சாயிருக்கு. எங்க போனாலும் மக்கள் அப்படியொரு அன்பு செலுத்துறாங்க. இவ்வளவு ஃபேன்ஸ் நான் பார்த்ததில்ல. சில மாதங்களுக்கு முன்னாடி பாண்டிச்சேரிக்கு குடும்பத்துடன் போயிருந்தேன். அன்னைக்கு பெண்கள் தினம். ஒரு லேடீஸ் குரூப் என்னைப் பார்த்திட்டு நேரா வந்து நீங்கதான் கேக் வெட்டணும்னு என்னை கட் பண்ண வச்சாங்க. அது எனக்கு அதிர்ச்சியாவும், ஆச்சரியமாவும் இருந்துச்சு. இதுமாதிரி நான் எதிர்கொள்றது இதுவே முதல்முறை. என் வாழ்நாள்ல மறக்க முடியாத தருணம்...’’ என நெகிழும் பிரியங்கா தன் குடும்பம் பற்றி பகிர்ந்தார். ‘‘நாங்க மொத்தம் ஐந்து பேர். நான், அப்பா, அம்மா, ரெண்டு தங்கச்சி. அப்பா பெயர் கிருஷ்ணா நல்காரி. அவர் கன்ஸ்ட்ரக்ஷன்ல இருக்கார். அம்மா பெயர் உஷாராணி. ஹவுஸ் வொய்ஃப். தங்கச்சிங்க பாவனா, கீதா. ரெண்டு பேரையும் நான் படிக்க வச்சேன். எல்லோரும் ஹேப்பியா இருக்காங்க...’’ என்கிறவரிடம் எதிர்காலத் திட்டம் பற்றி கேட்க, மீண்டும் பலமாக சிரிக் கிறார்.
‘‘இப்ப ‘ரோஜா’ ஷெட்யூல் வேகமாக போயிட்டு இருக்கிறதால என் முழு கவனமும் அதுலதான் வச்சிருக்கேன். இதன்பிறகு படங்கள்ல தொடர்ந்து நடிக்கலாம்னு நினைக்கிறேன். எனக்கு தங்கச்சி ரோல்னா ரொம்பப் பிடிக்கும். எல்லா படத்திலும் எல்லா ஹீரோவுக்கும் பெஸ்ட் தங்கச்சியா நடிக்கணும்னு ஆசையிருக்கு. தங்கச்சினா பிரியங்கானு சொல்லணும். அந்தமாதிரி நம்பர் ஒன் தங்கச்சியா வரணும்னு மைண்ட்ல இருக்கு.
அப்புறம், இண்டஸ்ட்ரியில் நல்ல பெயர் வாங்கணும். ‘பிரியங்கா வெரிகுட் ஆர்ட்டிஸ்ட், சிறப்பா நடிப்பாங்க’னு சொன்னாலே நான் இந்தத்துறையில் சாதிச்சமாதிரிதான்...’’ இயல்பாகச் சொல்கிறார் ரோஜா @ பிரியங்கா நல்காரி.
மறக்கமுடியாத தீபாவளி...
தீபாவளினாலே மறக்கமுடியாததுதான். எங்க வீட்டுல தீபாவளி எப்பவும் ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, என் அம்மா பிறந்தநாள் தீபாவளி அன்னைக்குனு மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்கேன். என்னுடைய பாட்டி அவ்வளவா படிக்காததால என் அம்மாவின் பிறந்தநாளைக் குறிச்சு வைக்கல. அதனால, அம்மாவுக்கு பிறந்த தேதி தெரியாது. அவங்களுக்கு ஒரே ஒரு ஞாபகம் மட்டும் இருக்கு. அவங்க பிறந்தநாள் ஒரு தீபாவளி அன்னைக்கு வந்ததாம். அதனால, தீபாவளித் திருவிழா அன்னைக்கு அம்மாவின் பிறந்தநாளை நாங்க கொண்டாடுவோம். அதுதான் எங்களுக்கு ஸ்பெஷல்.
வீடு முழுவதும் தீபம் ஏற்றுவோம். அம்மாவுக்கு நானும் தங்கச்சிங்களும் கிஃப்ட் கொடுப்போம். எல்லோரையும் அழைச்சு கேக் கட் பண்ணுவோம். அம்மாவை வெளியில் கூட்டிட்டு போவோம். அன்னைக்கு வீடு முழுவதும் கலகலனு ஹேப்பியா இருக்கும்.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்:ஆ.வின்சென்ட் பால்
|