மாமியார் நினைவாக மனைவிக்கு பிறந்தநாள் பரிசு!
குஜராத் மாநிலத்திலுள்ள பரோடா நகரத்தில் வசித்து வருகிறார் சொப்னலி தாப்கே. கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று, தனது 46வது பிறந்த நாளை கணவர் சுனீத்துடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக வீட்டில் காத்திருந்தார் சொப்னலி.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/8.jpg) வீட்டுக்கு வருவதாகச் சொன்ன நேரத்துக்கு முன்பே வந்துவிட்டார் சுனீத். இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்த சொப்னலி, கணவர் வெளியே அழைத்துச்சென்று பரிசுப்பொருட்களை வாங்கிக் கொடுப்பார் என்று நினைத்தார். சொப்னலி நினைத்தபடியே வெளியே சென்றுவிட்டு வரலாம் என்று மனைவியை அழைத்திருக்கிறார் சுனீத். ஏதாவது ஷாப்பிங் சென்டருக்கு சுனீத் போவார் என்று சொப்னலியும் எதுவுமே கேட்காமல் பயணித்திருக்கிறார். ![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/8a.jpg) சுனீத்தின் வாகனம் கடைகள் இருக்கும் இடத்துக்குச் செல்லாமல், புற நகர்ப் பகுதியிலிருக்கும் மஞ்சுஸர் என்ற கிராமத்துக்குச் சென்றிருக்கிறது. அங்கே உள்ள ஒரு சுடுகாட்டுக்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு, சொப்னலியை இறங்கச் சொல்லியிருக்கிறார் சுனீத். சொப்னலிக்கு எதுவுமே புரியவில்லை. பிறந்த நாளன்று சுடுகாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாரே என்று குழம்பிப் போயிருந்த சொப்னலிக்கு ஓர் இன்ப அதிர்ச்சியை வழங்கியிருக்கிறார் சுனீத்.
ஆம்; சுடுகாட்டுக்கு அருகிலேயே ஒரு வண்ணத்துப்பூச்சி தோட்டத்தை உருவாக்கி, மனைவிக்கு பிறந்த நாள் பரிசாகத் தந்திருக்கிறார் சூழல்வாதியான சுனீத். சொப்னலியின் அம்மாவான பிரதிக்ஷா குல்கர்னி கடந்த வருடம் புற்றுநோயால் இறந்துவிட்டார். பிரதிக்ஷாவின் நினைவாக அந்த தோட்டத்தை சுனீத் அமைத்திருப்பதில் அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார் சொப்னலி. இரண்டாயிரம் சதுர அடிகொண்ட தரிசு நிலத்தில் இந்த தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார் சுனீத்.
வண்ணத்துப்பூச்சிகள் வந்து போவதற்காக நூற்றுக்கணக்கான செடிகளை வைத்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதத்திலேயே தோட்டத்துக்கான வேலையை ஆரம்பித்து, செப்டம்பரின் மத்தியில் முடித்திருக்கிறார். ‘‘சுடுகாட்டுக்கு சோகமாக வருபவர்களுக்கு இந்த தோட்டமும், வண்ணத்துப்பூச்சிகளும் அமைதியைக் கொடுக்கும். அதற்காகவே சுடுகாட்டுக்குப் பக்கத்தில் தோட்டத்தை அமைத்தேன்...’’ என்கிறார் சுனீத். ‘‘என் வாழ்க்கையில் இப்படியான ஒரு பரிசை நான் பெற்றதே இல்லை...’’ என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறார் சொப்னலி.
த.சக்திவேல்
|