15 குழந்தைகளைக் காப்பாற்றிய வீரத் தம்பதி!
அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினர் டேவிட் - டோரன். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதே தேனிலவுக்கு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகருக்குத்தான் செல்ல வேண்டும் என்பது டோரனின் அன்பு வேண்டுகோள். பார்சிலோனா கால்பந்து அணி, அங்கிருக்கும் ஆச்சர்யமான கட்டடங்கள், விதவிதமான சுவையான உணவுகள், அழகான கடற்கரை... என இரவு வாழ்க்கை மீது தீராத காதல் கொண்டவர் டோரன்.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/6.jpg) வருங்கால மனைவியின் வேண்டுகோளை மறுக்க முடியுமா... டேவிட்டும் சம்மதம் தெரிவித்துவிட்டார். திருமணம் முடிந்து தேனிலவுக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு விமானம் ஏறுவதற்கான நாளுக்காக காத்திருந்தனர் டேவிட்டும், டோரனும். ஆனால், நடந்ததோ வேறு. ஆம்; கொரோனாவின் கோரப்பிடியில் உலகமே சிக்கிக்கொள்ள தேனிலவும் தடைபட்டது. பார்சிலோனா செல்ல விருப்பப்பட்டவர்களால் பக்கத்தில் உள்ள கடைக்குக்கூட போக முடியாத நிலை.
![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/6a.jpg) இருந்தாலும் தேனிலவு திட்டத்தை அவர்கள் மாற்றவில்லை. கொரோனா பிடி தளர்ந்தது. உலகமெங்கும் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது. வேலை, குடும்பச்சூழல் காரணமாக தேனிலவைத் தள்ளிப்போட்டனர். ஒரு மாதத்துக்கு முன்பு டேவிட்டும், டோரனும் தேனிலவுக்குப் பறந்துவிட்டனர். இருபத்தைந்து நாட்களுக்கு மேல் பார்சிலோனாவைத் திகட்டத் திகட்ட சுற்றிவந்தவர்கள், ஒரு பூங்காவில் நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது கருகிய வாடை வீசியிருக்கிறது. என்னவென்று பார்ப்பதற்காக பூங்காவிலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். அதிர்ந்தார்கள்.
அருகிலிருந்த ஒரு கட்டடத்தில் தீ பிடித்திருக்கிறது. கட்டடத்துக்குள் இருந்து சிலர் பதற்றத்துடன் ஓடி வருகின்றனர். தேனிலவுக்கு வந்திருக்கிறோம் என்று கூட யோசிக்காமல் கட்டடத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள் டேவிட்டும் டோரனும். இருவருக்கும் பேரதிர்ச்சி. மின்கசிவால் தீப்பிடித்த கட்டடத்துக்குள் ஒரு நர்சரி பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே பதினைந்து குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். பக்கத்தில் யாருமே இல்லை. டேவிட்டும், டோரனும் சேர்ந்து பதினைந்து குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். தேனிலவுக்காக வந்தவர்கள் இன்று பார்சிலோனாவின் சூப்பர் ஹீரோக்களாகிவிட்டனர்.
த.சக்திவேல்
|