முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க பாலை மரத்துக்கு வழிபாடு!



நெகிழ்ச்சியூட்டிய கல்லார்குடி காடர்களின் விழா

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற காந்தியின் கனவு நனவாகியதா என்றால் இல்லை. நிலம் இல்லை. வீடு இல்லை. சாலை இல்லை. மின்சாரம் இல்லை. தெருவிளக்கு இல்லை. குடிதண்ணீர் வசதி இல்லை. நாட்டில் இப்படி எத்தனையோ இல்லைகள். இதற்காக உண்ணாவிரதம், மறியல், கடையடைப்பு, வேலை நிறுத்தம் எல்லாம் அன்றாடம் மூலைக்கு மூலை நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், உலகில் எத்தனை இல்லைகள் உள்ளனவோ, அத்தனை இல்லைகளும் அமையப்பெற்ற ஒரு பழங்குடி கிராமம், ‘எங்களுக்கு நீங்க உதவி செஞ்சீங்க. அதுக்கு நாங்க நன்றி செலுத்தறோம்!’ என்று சொல்லி ஒரு மரத்தை தெய்வமாக்கி வழிபட்டு, ஊராட்சி மன்றத்தலைவர், வட்டாட்சியர், வனத்துறை அதிகாரி என அத்தனை பேரையும் அழைத்து விருந்து வைத்து தமிழக முதல்வருக்கு நன்றி செலுத்தியிருக்கிறது!
கோவை மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள மலைக் குவியல்கள் நகரமான வால்பாறைக்குச் சென்று அங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் பயணித்தால் எட்டுவது தாய்முடி எஸ்டேட். அதையடுத்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு கல்லார்குடி, தெப்பக்குளமேடு. 21 காடர் குடும்பங்கள் இங்கு வசிக்கிறார்கள்.

இக்கிராமத்திற்குச் செல்ல கரடுமுரடான மலைகள், மலைக்குன்றுகள், பள்ளத்தாக்குகள், நீரோடைகள் மட்டுமல்ல, புலி, யானை, சிறுத்தை, கரடி என பல வனவிலங்குகளையும் கடக்க வேண்டும். மண், கல் பாதையில் டூவீலரில் குதித்துக் குதித்துச் செல்லலாம். ஜீப்பில் போகலாம். அதுவே மழைக்காலம் என்றால் மூன்று பகுதிகளிலும் ஆறுகளும், சிற்றோடைகளும் குறுக்கிடும். நடந்து கூட செல்ல முடியாது.

மரங்கள் சூழ்ந்திருக்கும் மூங்கில் மீது செம்மண் பூசி உருவாக்கப்பட்ட சில வீடுகள். தார்ப்பாய் வேய்ந்து, மூங்கில் வேய்ந்து... இவைதான் ஊர். முகப்பில் ஒரு மரத்திற்குக் கீழே சின்னதாக தகரத்தில் ஒரு சிறுகோயில் மாதிரி செய்திருந்தார்கள்.  அதனுள்ளே ,‘வாழ்ந்தது கல்லார்குடி, வென்றது தெப்பக்குளமேடு’ என்று இரண்டு அட்டைகளில் எழுதி வைத்து நடுவே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கூடவே வாழைப்பழம், பொரி கடலை. ஊதுபத்தி புகைய, கற்பூரம் ஏற்றி ஆராதித்து பூஜை செய்து கொண்டிருந்தார் இந்த ஊர் மூப்பன் சக்திவேல்.

சாமி புகைப்படமோ, சிலையோ, குறைந்தபட்சம் ஒரு கல்லையாவது வைத்து வழிபடுவதுதான் நம் வழக்கம். ஆனால், இங்கே இவர்கள் மரத்தை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மரத்தின் பெயர் பாலை மரமாம். வெயில் காலத்தில் இதன் பட்டைகள் வழியே பால்போல ஒருவித பிசின் வடியும். அதனால் இப்பெயர் என்றார் மூப்பன் அது சரி, இந்த மரத்துக்கு இரண்டு பக்கமும் அப்படியொரு வாசகங்கள் எழுதின அட்டைகளை வைத்து அதற்கும் சேர்த்து எதற்கு பூஜை செய்ய வேண்டும்? அதிலிருந்துதான் இவர்களின் வரலாறே விரிகிறது.

பொதுவாக காடுகளில் வாழும் முதுவர், காடர், மலசர், இருளர், தொதவர், புலையர் உள்ளிட்ட பழங்குடிகள் தம் தாத்தன், பாட்டன், பூட்டன், முப்பாட்டன், முப்பூட்டன் வாழ்ந்த பூர்வீக பூமியை விட்டுப் போக மாட்டார்கள். நிலச்சரிவு, புயல், மழை, வெள்ளம், பேரிடர் காலம், கொள்ளை நோய்கள் வரும் காலத்தில் தங்கள் வீடுகளை எரித்துப் பொசுக்கி விட்டு தங்களுக்கு அருகாமையில் உள்ள வேறு நிலத்தில் பாதுகாப்பாக மண்வீடுகள், குடிசைகள் அமைத்து அதையே ஊராக்கி விடுவது இவர்கள் தொன்று தொட்டு கடைப்பிடிக்கும் முறை.

இவர்கள் வாழ்ந்த பூமியை செட்டில்மெண்ட் என்று வகைப்படுத்தி பிரிட்டிஷார் காலத்திலிருந்தே ஆவணங்கள் உள்ளன. அதை வைத்துத்தான் பழங்குடிகளுக்கான உரிமையை நாடெங்கும் நிலைநாட்டி வருகிறார்கள். 1980ம் ஆண்டு வரை பிரச்னையில்லை. பிறகுதான் வனத்துறைச் சட்டங்கள் கடுமையானது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனவிலங்குகள் சரணாலயம் என்ற பெயரில் இவர்கள் தம் நிலங்களில் விவசாயம் செய்யக்கூடாது; ஆடு, மாடு மேய்க்கக்கூடாது; நெல்லிக்காய், கடுக்காய், பூச்சக்காய் எடுக்கப் போகக்கூடாது என்றெல்லாம் கெடுபிடிகள்.

அதிலும் 2000ம் ஆண்டுக்குப் பின்னர் நீலகிரியில் முதுமலை சரணால ய ம்  முதுமலை புலிகள் காப்பகமாகவும், வால்பாறைக் காடுகள் சார்ந்த இந்திராகாந்தி வன உயிரினச் சரணாலயம் ஆனைமலை புலிகள் காப்பகமாகவும் புதிய பெயர்கள் சூடிக் கொள்ள இதன் சட்டப்படி பழங்குடிகளைக்கூட காட்டை விட்டே வெளியேற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தன.

சமதளப்பகுதியில் நிலம், லட்சக்கணக்கில் ரொக்கம் தருவதாக ஆசை காட்டப்பட்டன. பெரும்பான்மையோர் காட்டை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் பழங்குடிகளுக்கும், வனத்துறைக்கும் தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் மோதல் தொடர்ந்தது.

பழங்குடியின செயல்பாட்டாளர்கள் மூலம் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதன் விளைவாக 2006 வன உரிமைச்சட்டத்தை அமல்படுத்தியது இந்திய அரசு. இதன்மூலம் காடு வனவாசிக்குத்தான் சொந்தம். அவர்கள் கிராம சபையில் தீர்மானம் போட்டால் அது உச்சநீதிமன்றம் வரை செல்லும் என்கிற அளவில் இதில் சட்ட
வரையறைகள் வந்தன.

அதையும் மீறி வனத்துறை இவர்களை வெளியேற்ற முயற்சிப்பதும், அதற்கு எதிராக பழங்குடிகள் போராடுவதும் நாடு முழுக்க ஆங்காங்கே நடந்தும் வருகிறது.
இப்படியான சூழலில்தான் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் கல்லார்குடி செட்டில்மெண்ட் காடர் இனப் பழங்குடிகளுக்கு 2017ம் ஆண்டில் பெரும் சோதனை வந்தது.
இவர்கள் வசித்த நிலப்பகுதி அப்படியே ஒரு பாறை மீது ஒட்டிக் கொண்டு, அருகே ஓடும் ஆற்றின் மூலமாக மழைக்காலங்களில் கரைந்து கொண்டிருந்தது. அதனால் மழைவெள்ளத்தின் போது ஒவ்வொரு வீடும் கரைந்து ஆற்றுக்குள் சென்று கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில்  நிலச்சரிவு ஏற்பட்டு ஊரே காணாது போகும் நிலை. அதை உணர்ந்த இவர்கள் இங்கிருந்து வெளியேறி மூன்று கிலோமீட்டர் தூரத்தில் குடிசைகளை அமைத்தனர். வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அவர்களோ இங்கே குடிசை அமைக்கக்கூடாது என்று குடிசைகளைப் பிரித்தெறிந்தனர்.

வேறு எஸ்டேட் குடியிருப்பு ஒன்றில் தற்காலிகமாக தங்க வைத்து விட்டு கண்டுகொள்ளவில்லை. அப்படி பாழடைந்த நான்கு அறைகளில் 21 குடும்பங்கள் வசித்தனர். இருந்தாலும் இவர்களுக்கு தம் பூர்வீக நிலத்தில்தான் வசிக்க வேண்டும் என்ற வேட்கை அதிகரித்தது.  திரும்ப தாம் வசித்த கல்லார்குடி பகுதியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தெப்பக்குளமேடு பகுதியில் குடிசைகள் அமைத்தனர்.

அதற்கும் வனத்துறையினரிடம் கடும் எதிர்ப்பு. வீடுகள் பிரித்தெறிதல், போராட்டம்.  தொடர் உண்ணாவிரதம், கலெக்டர் அலுவலக முற்றுகை. பேச்சுவார்த்தை, ஆகஸ்ட் 15ம் தேதியன்று சுதந்திர தினப் புறக்கணிப்பு, அக்டோபர் 2 காந்திஜெயந்தி அன்று அஹிம்சை, சத்தியாக்கிரக வழிப் போராட்டம் எல்லாம் கடும்மழை, குளிரிலும் தொடர்ந்தன. இதன் பின்னே பல்வேறு பழங்குடியின அமைப்புகள், இயக்கங்கள், பழங்குடி செயல்பாட்டாளர்கள் துணை நின்றனர்.  

இது எல்லாமே கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தது. ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. புதிதாக கோவை கலெக்டர் சமீரன் வந்தபிறகு இங்கு வசிப்பவர்கள் வீடு கட்ட ஆளுக்கு ஒன்றரை சென்ட் நிலம் பட்டாவாக வழங்கச் செய்தார்.

தவிர 12 ஏக்கர் நிலத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. விளைவு- மக்களே மண்ணைக் குழைத்து வீடுகள் கட்டினார்கள். மண்ணைக் கிளறி 2 கிலோமீட்டர் தூரம் பாதையை உருவாக்கினார்கள். தண்ணீர் தேக்க ஒரு தொட்டியை ஏற்படுத்தினார்கள். ஆறு செல்லும் பாதையின் குறுக்கே மூங்கில் பாலத்தை அமைத்தார்கள். எல்லாமே சுய உழைப்பு.

இதற்கு பழங்குடியின செயல்பாட்டாளர்கள் மூலம் உதவிகளும் வந்தன. இடையில் இந்தப் போராட்டத்தின் எதிரொலியோ என்னவோ இவர்களுக்கு துணை நின்ற லீலாவதி தன்ராஜ் தமிழக அரசின் பழங்குடியின ஆணை உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். இந்தப் போராட்டத்தை மீடியாக்களுக்குக் கொண்டு போன இந்தக்கிராமத்து இளைஞர் அனீஸ்குமாருக்கு தேசிய அளவிலான பழங்குடியினர் பாதுகாவலர் விருது கிடைத்தது.

இந்தியாவிலேயே முன்மாதிரியாக அறவழிப் போராட்டத்தின் மூலம் புலிகள் காப்பக உள்வட்டப்பகுதியில் மாற்று இடத்தில் கிராமத்தை அமைத்தவர்களில் முதன்மையானவர் என்பதற்காக இந்த விருதினை தேசிய ஹார்மோனி ட்ரஸ்ட் எனப்படும் சமூக நல்லிணக்க முன்னணி வழங்கியுள்ளது. இந்த மாற்று இடம் இவர்களுக்குக் கிடைத்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அந்த நாளில் தங்களுக்கு உறுதுணையாக நின்ற அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவே அக்டோபர் 8ம் தேதி இந்த இயற்கை விழாவை நடத்தியிருக்கின்றனர் இங்கு வசிக்கும் காடர் இனப் பழங்குடிகள்.

இந்நிகழ்வில் இயற்கை வழிபாட்டோடு, மரம் நடு விழா, பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி, பழங்குடிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அனைவருக்கும் தம் கையினால் சமைத்த பாரம்பரிய உணவுகளையே பரிமாறி மகிழ்ந்தனர் மக்கள்.  ‘‘நாங்க காட்டுக்குள்ளே நடத்தின போராட்டத்திற்கு வெளிச்சமா நின்னது நாட்டு மக்களான நீங்கதான்.

இல்லாட்டி இது நடந்திருக்கவே நடந்திருக்காது. கலெக்டர் சமீரன் அய்யா, முதலமைச்சர் ஸ்டாலின் அய்யா எல்லோருமே எங்க மேல கருணை வச்சு நடந்த காரியம். நாங்க ரொம்பக் கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைஞ்சிருக்கோம். நாங்க இந்த இடத்தை அடையறதுக்கு உங்களைப் போல எல்லோரும் கஷ்டப்பட்டிருக்காங்க.

நாங்க இப்ப நல்லாத்தான் இருக்கோம்ன்னு உங்களுக்கெல்லாம் சொல்லணும். நன்றி கூறணும், அதை எப்படி செய்யலாம்ன்னு ரெண்டு மாசமா கலந்து  பேசினோம். புலி, கரடி, சிறுத்தைன்னு இருக்கற எங்க காட்டுக்குள்ளே நடந்து வரக்கூடிய ஜனங்க ரொம்ப கஷ்டப்பட்டு வருவாங்க. அவங்களை பாதுகாப்போட வரவச்சு, ஒரு வாய் சாப்பாடு போட்டு, காபித் தண்ணி கொடுத்து பாதுகாப்பா அனுப்ப வேண்டியது எங்க கடமை. அதைத்தான் இப்படி செஞ்சிருக்கோம்!’’ நெகிழ்ச்சியோடு சொல்கிறார் ஊர் மூப்பன் சக்திவேல்.

‘‘நாங்க செஞ்ச வேலை பெரிசில்லை... ஒரு வம்பு தும்பு இல்லாம அறவழியில் நிலத்தைப் பெற்று நாங்க இப்படி உட்கார்ந்திருக்கிறோமே, அதுக்கு நீங்க எல்லாம் ஒத்தழைச்சீங்கல்ல... அதுதான் பெரிசு. நீங்க எல்லாரும் எங்க அழைப்புக்காக வந்திருக்கீங்கல்ல அதுதான் பெரிய விருது..!’’ என்கிறார் அனீஸ்குமார்.

பழங்குடியின செயல்பாட்டாளர் தன்ராஜ், அவர் மனைவியும், தமிழக அரசின் பழங்குடியின ஆணைய உறுப்பினருமான லீலாவதி ஆகியோர், ‘‘அறவழிப் போராட்டம், காந்தி வழியில் அகிம்சை, சத்தியாக்கிரகப் போராட்டமாக மாறியது. அன்றைக்கு எந்த அதிகாரிகள் இந்த மக்கேளாட குடிசைகளைப் பிரித்து எறிந்தார்களோ, யாரெல்லாம் இவங்க மேலே பழிசுமத்தினார்களே அவங்க விழாவுக்கு வந்திருக்காங்க.

பாராட்டறாங்க. வேண்டிய உதவிகள் செய்றோம்னு சொல்றாங்கன்னா, இவங்க பதிலுக்கு பதில் வன்மம் காட்டாம அவங்க மேலயும் இவங்க அன்பு செஞ்சதுதான் காரணம்.  இவங்க பிரச்னையை சட்டுன்னு புரிஞ்சுகிட்டு அதை தீர்த்து வைத்த மாவட்ட கலெக்டர் சமீரனுக்கும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் மக்கள் நிறைந்த நன்றிக் கடன் பட்டுள்ளார்கள்!’’ என்றனர்.

கா.சு.வேலாயுதன்