சின்ன சிவகாசி!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா 50 கிராம ஊராட்சிகளையும், 71 வருவாய் கிராமங்களையும், 15 பேரூராட்சி வார்டுகளையும் உள்ளடக்கியது. கோயில் நகரமான வலங்கைமானில் ஐம்பெரும் சிவாலயங்கள், சக்தி ஸ்தலம் என அழைக்கப்படும் பாடைகட்டி மாகமாரியம்மன் கோயில், நவகிரகங்களில் ஒன்றான குருபரிகார ஸ்தலமான ஆபத்சகாயேஸ்வரர் கோயில்... உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. ![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/2.jpg) அனைத்துக்கும் மேல் பல ஓலைச்சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து அச்சுவடிவம் கொடுத்த தமிழ்த்தாத்தா உ.வே.சா., மற்றும் ஆங்கிலேயர்களால் சில்வர் டங் என அழைக்கப்பட்ட சீனிவாச சாஸ்திரி ஆகியோர் பிறந்தது இங்குதான். ![](http://kungumam.co.in/kungumam_images/2022/20221028/2a.jpg) வலங்கைமானில் உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் நல்ல நிறத்துடனும், வலுவாகவும், தரமாகவும் இருப்பதால் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டப்படும் புதிய கட்டடங்கள் அனைத்தும் இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்களால் கட்டப்படுகின்றன. 1923ம் ஆண்டு தமிழகத்தில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டது. அதனையடுத்து பல்வேறு காலகட்டங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.
அப்படித்தான் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக 60 ஆண்டுகளுக்கு முன் பட்டாசு உற்பத்தி சிறிய அளவில் தொடங்கப்பட்டது. அன்று முதல் இங்கு பட்டாசு உற்பத்தி ஆண்டு முழுவதும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. வலங்கைமான் பகுதியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசு உற்பத்தி ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. பட்டாசுத் தயாரிப்பில் நேரடியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், மறைமுகமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்துக்களின் திருமணம், துக்கம் என அனைத்திலும் பட்டாசு முன்னிலைப்படுத்தப்படுகிறது. அதேபோல் தீபாவளிப் பண்டிகையிலும் இனிப்பு, புத்தாடைக்கு அடுத்தாற்போல் பட்டாசு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் ஆண்டு முழுவதும் 100 வாலா, 200 வாலா, 300 வாலா, 600 வாலா, ஆயிரம் வாலா, இரண்டாயிரம் வாலா, பத்தாயிரம் வாலா மற்றும் மாப்பிள்ளை வெடிகள், யானை வெடி, ஒத்தை வெடி, லெட்சுமி வெடி, சணல் வெடி... உள்ளிட்ட பட்டாசு தயாரிக்கும் பணி இங்கு நடைபெற்று வருகிறது.
பட்டாசு செய்வதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது திரி. இதனைச் செய்வதற்கு முன்னதாக நூலினை ரசாயன கலவையில் கலந்து நிழலில் பந்தல் போன்று அமைத்து உலர வைப்பர். பின்னர் சுமார் 15 சென்டிமீட்டர் அளவுக்கு நூலினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்வர். அதையடுத்து வெட்டப்பட்ட சிறு துண்டுகளில் மெல்லிய காகிதம் சுற்றப்பட்டு பின்னர் தேவைப்படும் அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி திரி தயாரிக்கின்றனர்.
பின்னர் வெட்டி அவற்றை மெல்லிய கம்பி கொண்டு உருளையாக தயார் செய்து உலர வைக்கின்றனர். உலர வைத்த உருளைகளை வெடியின் அளவுக்கு ஏற்ப துண்டுகளாக நறுக்கிக்கொண்டு ஒவ்வொரு காகித உருளை துண்டின் ஒரு பரப்பில் முன்னதாகத் தயார் செய்யப்பட்ட திரியை இணைத்து நூலினைக்கொண்டு கட்டிக் கொள்கின்றனர் . பின்னர் ஒவ்வொரு உருளையாக நூல் இணைப்பினைத் துண்டித்து, ஒவ்வொரு காகித உருளையிலும் தேவையான அளவுக்கு மருந்துகள் நிரப்பப்படுகின்றன.
பேப்பர் உருளையின் ஒரு பக்கம் திரியும் நடுவில் மருந்துகளும் அடைக்கப்படுகின்றன. அடைக்கப்பட்ட மருந்துகள் கொட்டாமல் இருப்பதற்கு பேப்பர் அடிப் பரப்பில் சிறிய அளவில் பசை கொண்டு அடைக்கின்றனர்.
பின்னர் ஒவ்வொரு உருளையாக எடுக்கப்பட்டு அவற்றில் தேவையான அளவு பேப்பர் சுற்றப்பட்டு இறுதியில் வண்ணக் காகிதம் அல்லது வெடியின் பெயர் அச்சிடப்பட்ட படத்துடன் கூடிய காகிதத்தைச் சுற்றுகின்றனர்.தனித்தனியாகச் சுற்றப்பட்ட வெடிகளை, தேவைப்படின் ஒரு நூலுடன் இணைத்து சரவெடியாக மாற்றுகின்றனர்.
ந.சந்திரமோகன்
|