சிறுகதை-பிரியாணி
“அத்தாச்சி! டிவில படம் போட்ருவாங்க! கேட்டை திறந்து விடுங்க அத்தாச்சி...” ஒருக்களித்த கதவின் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துக் கத்திக் கொண்டிருந்தான் கதிர் என்கிற கதிரவன். இளங்குருத்திலிருந்து சிறிது சிறிதாக, சிறுமரமாக மாறிக்கொண்டிருக்கும் வளரிளம் பருவம். பெரிய பெரிய இளஞ்சிவப்பு நிற தாமரைப்பூக்களும், நடுவே இரும்பினாலான லெட்சுமி வடிவமும், நீரோடைபோல் வளைத்து வளைத்து கம்பிகளால் வடிவமைக்கப்பட்ட அந்த கேட்டைப் பிடித்துக்கொண்டு கத்திக்கொண்டிருந்தான் கதிரவன்.

அவனைப்போலவே ஏழெட்டு சிறுவர்கள் அந்த பிரம்மாண்ட வீட்டின் முன்பு நின்று உள்ளே யாராவது தெரிகிறார்களா, யாராவது வந்து எட்டிப்பார்த்து அந்தக்கதவைத் திறந்துவிடமாட்டார்களா... என ஏக்கம் படிந்த கண்களோடும், அதையும் மீறிய ஆர்வத்தோடும் உள்ளே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர்.  அந்தத் தெருவிலேயே மிகப்பெரிய வீடும், தொலைக்காட்சிப்பெட்டி உள்ள வீடும் அதுதான். டிவி அப்பொழுதுதான் கதிரவனுக்கும் பிறருக்கும் அறிமுகமாகி இருந்தது. பைத்தியமாக மாற்றியிருந்தது.இந்த வீடு கதிரவனின் சொந்தக்கார வீடுதான். அவனின் பங்காளி வீட்டு பெரியப்பா அண்ணனுக்கு, அவனது அத்தைப்பெண்ணைக் கொடுத்திருந்தார்கள். இருப்பினும் உரிமை எடுத்துக்கொண்டு அவன் அந்த வீட்டில் நுழைந்துவிடமுடியாது. ஒவ்வொரு முறை டிவி பார்ப்பதற்காக தெருப்பையன்களோடு, தானும் நின்று பூட்டியிருக்கும் கதவைத் திறக்கச் சொல்லி வெளியில் நின்று கத்தும் பொழுதெல்லாம் வெட்கம் பிடுங்கித் திங்கும்.ஆனால், டிவியின் மேல் அவனுக்கிருந்த ஆர்வம், அவனது அவமானத்தை மறக்கச்செய்து அதன்மீது அவனை மேலும் மேலும் ஈர்த்துக்கொண்டிருந்தது.
இவர்களின் சத்தம் கேட்டு, ஒருக்களித்திருந்த கதவை, நெருப்புக்கோழிபோல் தலையை மட்டும் நீட்டி படுத்துக்கொண்டே திறந்து பார்த்தாள் பப்பி பெரியம்மா.அவளுக்கு லலிதாவெனப் பெயர் இருந்தும் மிகப்பெரிய உடலும், தலையை பிசிறில்லாமல் சீவி முடிக்குள் சிறிய உருண்டை மாதிரி பஞ்சை சுருட்டி வைத்து, தூக்கிப் போடப்பட்ட பன்கொண்டையும், அதைச்சுற்றி வைக்கப்பட்ட பூச்சரமுமாக நிற்கும் அவளைப்பார்த்து, சிறிய வெண்பஞ்சு மிட்டாய் கால்முளைத்தது மாதிரி ஓடிவரும் நாய்க்குட்டியை அழைப்பது போல் பெரியப்பா ‘பப்பி’ எனக் கூப்பிடும்பொழுதெல்லாமல் உள்ளுக்குள் பொத்துக்கொண்டு வரும் சிரிப்பைக் கதிரவன் கஷ்டப்பட்டு அடக்கிக்கொள்வான்.
“சித்ரா! ஏய் சித்ரா! யாருடி இருக்கீங்க? அடுப்படீல என்னடி பண்றீங்க? வாங்கடீ இங்க!” உள்ளேபார்த்து சத்தம் கொடுத்தாள் பப்பி பெரியம்மா.அங்கே அவசர அவசரமாக முந்தானையில் கைகளைத் துடைத்தபடியே வந்தாள் சித்ரா அத்தாச்சி.“டேய் கதிரவா நீ மட்டும் உள்ள வா! தேன்மொழி அக்கா மெட்ராஸ்லேர்ந்து வந்துருக்கு!
கார்த்திக்கும், உமாவும் லீவு முடியற வரை இங்கதான் இருப்பாங்க! கார்த்திக்குக்கு இந்த தெருப்பசங்கள எல்லாம் பிடிக்காது. நாளைலேர்ந்து நீயும் நல்லா குளிச்சிட்டு, தலையெல்லாம் சீவிட்டு, பளிச்சின்னு வரணும் புரியுதா?” சத்தமாகச் சொல்லிக் கொண்டே, இடுப்பிலிருந்த வெள்ளி, நகாசு வேலைகள் நிறைந்து, மகிழம்பூக்கள் செதுக்கப்பட்ட சாவிக்கொத்தை எடுத்துஅலட்சியமாக சித்ராவிடம் தூக்கி எறிந்தாள் பப்பி பெரியம்மா. ‘‘போய் தொறந்து உன் மாமன் மவன மட்டும் உள்ள வுடு... எல்லாம் வந்து சேர்ந்துது பாரு தரித்திரியம் புடிச்ச நாய்ங்க...” என சித்ராவையும் ஜாடையாகப் பேசுபவளைப் பார்த்துக்கொண்டே கேட்டைத் திறந்தாள் சித்ரா.கருப்பாக, களையாக, உருண்டு திரண்டிருப்பவளை மிகவும் பிடிக்கும் கதிரவனுக்கு. கூடுதலாக அத்தைப் பெண் என்ற உரிமையும் இருப்பதால் அவளோடு சிறிது ஒட்டுதலாகவே இருப்பான். அவளும் மாமியார் இல்லாத சமயங்களில் அவனுக்கு தின்பதற்கு ஏதாவது கொண்டுவந்து கொடுப்பாள்.
என்னதான், தான் சுத்தமாக இல்லையென, பப்பி பெரியம்மா மட்டமாகப் பேசியது உள்ளுக்குள் உறுத்தினாலும், தன்னை மட்டும் உள்ளே வரச்சொன்ன பெருமிதத்தில் மோவாயை உயர்த்தி தோள்களை நிமிர்த்திக்கொண்டு தெருப்பசங்களிடையே மதிப்பு கூடியதாக அவனே நினைத்துக்கொண்டு உள்ளே வந்தான்.ஸோபாவில் கார்த்திக்கும், உமாவும் அமர்ந்து கிண்ணத்தில் நெய் மிதக்கும் கேசரியைத் தின்றுகொண்டே, டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். பார்ப்பதற்கே அத்தனை அழகாக, ஆரஞ்சு வண்ணத்தில், நெய் மணக்கும் வாசனையோடு, அதை ஸ்பூனால் எடுத்து நாசூக்காக தின்னும் அழகையும் பார்த்தவனுக்கு, கேசரி திங்கவேண்டும் போல் இருந்தது.
காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாதது வேறு வயிற்றைப்பசித்தது. ஆனால், வீட்டுற்குப் போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம் என்றால், மறுபடியும் கதவைப் பூட்டி விடுவார்கள். வலுக்கட்டாயமாக கண்களைக் கேசரியிலிருந்து விலக்கி டிவியைப் பார்த்தான் கதிர்.“ஏய் கதிர்... இங்கப்பாரு புது சைக்கிள்... இப்பதான் வாங்குனோம். நீ இதெல்லாம் பார்த்துருக்கீயா? நாங்க மெட்ராஸ்லேர்ந்து இதக் கார்லையே எடுத்துட்டு வந்தோம்...’’ என்றான் கார்த்திக். இவனைவிட ஐந்து வயது சிறியவனாக இருந்தாலும் விடுமுறைக்கு வரும்பொழுதெல்லாம் ஏதேனும் சொல்லி இவனிடம் வம்பளத்துக்கொண்டே இருப்பான்.
சைக்கிளை இவன் அமர்ந்திருந்த இடத்திற்கு குறுக்கு மறுக்காக ஓட்டியவன், இவனது கவனம் தொலைக்காட்சியில் இருப்பதைக் கண்டு சைக்கிளைப் பற்றிய பிரதாபங்கள் இவனைக் கவரவில்லை என்றதும், “பாட்டீ! என்னால சைக்கிளை ஓட்ட முடியல. கதிரவனை பின்னால வந்து தள்ளிவிடச் சொல்லுங்க...” என்று சிணுங்கினான்.“டேய்! கதிரு... புள்ளஆசையா கேக்கறான். அவன்லாம் இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிறவன்... அவன் ஃபிரண்ட்ஸ்லாம் ஆபீசர் வீட்டுப்புள்ளைங்க தெரியுமா... போய் தள்ளிவிடு....’’ என சிறுபிள்ளை கதிரவனிடம் பெருமை பீற்றினாள்.
வயதுக்கு மீறி உயரமாக வளர்ந்திருந்த கதிர், குனிந்து, தரையிலிருந்து ஒரு அடி உயரமிருந்த சைக்கிளைத் தள்ளி விட்டபடி, அழுக்கான சட்டையோடும், அரணாக்கொடியில் சுற்றிவிடப்பட்ட டிராயரோடும், பிச்சைக்காரனைப் போல் நடத்தப்படுவதைக் கண்டு சித்ராவுக்கு கண்கலங்கியது.சைக்கிளைத் தள்ளியபடியே வந்த கதிர், சித்ராவைப்பார்த்து அழகான பற்கள் தெரிய கபடமில்லாமல் சிரித்தான்.“என்ன அத்தாச்சி... ஒரே கமகமன்னு இருக்கு... என்னபண்றீங்க?’’
“சத்தம் போடாத கதிரு, அந்தக் கிழவி காதுல விழுந்தா எதாவது திட்டும். பிரியாணி கிண்டுறோம். படம் பார்த்துட்டு போயிடாத, சாப்பிட்டதும் அத்தை தூங்கப்போயிடும். நான் உனக்கு பிரியாணி தர்றேன். வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் தின்னு. நான் கொடுத்தேன்னு யாருட்டையும் சொல்லாத... சரியா...” என்றாள் சித்ரா.இதுவரை, தான் சுவைத்திராத பிரியாணியை சாப்பிடப் போகிறோம் என்பதில் கதிர் உற்சாகமானான்.
“போதும் விளையாண்டது. கார்த்திக்! உமா! வாங்க சாப்பிட...” என்ற தேன்மொழி அக்கா இவனைப் பார்த்து, ‘‘என்ன கதிர்... எப்படி இருக்க? மணியாச்சி... நீ வீட்டுக்கு சாப்பிடப் போகலையா? அம்மாதேடப் போறாங்க, போ, போய் சாப்பிட்டுட்டு வா...” என்றாள். “இல்லை அக்கா! பசிக்கல... வரும்போதுதான் அம்மாட்ட சாதம் போடச்சொல்லி வயிறு நிறையச்சாப்பிட்டேன்...” என்று வயிற்றை பொய்யாகத் தடவியவாறே பதில் சொன்னான் கதிரவன்.“சரி சரி டிவியப் பாரு...” என அவனைக் கத்தரித்துவிட்டு, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சாப்பாட்டு மேசைக்கு போனாள் தேன்மொழி.
கதிரின் கவனம் டிவியிலிருந்து, பிரியாணிக்கு மாறியிருந்தது. இங்கிருந்து சாப்பாடு மேசை தெளிவாகத் தெரிந்தது. மஞ்சளும், சிகப்புமாக, நீளநீளமாக இருந்த சாதமும், அதன் இடைஇடையே தெரிந்த மாமிசத் துண்டுகளும் இவனை பசியின் உச்சத்திற்கே கொண்டு போயின.பெரியப்பா, இரண்டு பெரிய அண்ணன்கள், பெரியம்மா என அனைவரும் ஒவ்வொருவராகச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். கதிரை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
வேண்டுமென்றே தண்ணீர் வேண்டுமென்று அங்குபோய் நின்றான். யாராவது தன்னைக்கூப்பிட்டு ‘சாப்பிடு கதிர்’ எனச் சொல்லிவிடமாட்டார்களா என ஒவ்வொரு முகத்தையும் பரிதாபமாக நோக்கினான்.அனைவரும் பிரியாணி தின்பதிலேயே கருத்தாக இருந்தார்கள். ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் வேலைகளைப் பார்க்க நகர, சித்ரா அத்தாச்சி ஒரு சிறிய அலுமினிய டப்பாவில் பிரியாணியை வைத்து, அதன் மூடியை அழுத்தமாக மூடி, முந்தானையில் சுத்தமாக துடைத்தவாறே அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே, டப்பாவை இவனை நோக்கி நீட்டியவாறே வந்துகொண்டிருந்தாள்.
“ஏண்டி எழவெடுத்தவளே! இந்தப்பொறுக்கிய உள்ள விடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது? பிஞ்சில பழுத்த சனியன்...’’ என்று கூறியவாறே அந்த டப்பாவைப் பிடுங்கினான் சிவா.
சிவா அண்ணன், சித்ராவின் கணவன். இவனுக்கு பங்காளி வீட்டுப் பெரியப்பா பையன். போன வாரம் வரை இவன் மீது பிரியமாக இருந்தவன்தான். மிக்சரோ, காரப்பொரியோ தின்றுகொண்டிருக்கும்போது கைநிறைய இவனுக்கு அள்ளி அள்ளித்தந்தவன்தான்.
போன வாரம் வியாழக்கிழமை, காலையில் “ஏய் கதிரு இங்க வாடா! மாடில சிவா அண்ணன் ரூமுல இருக்கான். முடிவெட்றவரு வந்துருக்காருன்னு வரச்சொல்லு...’’ என்றார் உற்சாகமாக பெரியப்பா.‘‘இதோ கூப்பிடுறேன்...’’ என இரண்டு, இரண்டு படிக் கட்டுகளாக, தாவித்தாவி ஏறினான் கதிர். அந்த மாடியின் கடைசியில் இருந்தது சிவா அண்ணனின் அறை. ஏதோ ஒரு பாடலை சிறிது சத்தமாகப் பாடிக்கொண்டே அறையின் கதவைத் திறந்தவன்... சிலையாக நின்றான்.
அங்கே சிவா அண்ணனும், சித்ரா அத்தாச்சியும் ஆடைகள் அணியாமல் ஒருவர் மேல் ஒருவராகப் படுத்திருந்தார்கள். மெல்ல மெல்ல அலையடித்துக்கொண்டு நிற்கும் கடலில், கட்டுமீறி மிதமாக ஆடும் படகுபோல அவனை அந்தக்காட்சி அசைத்துக் கொண்டிருந்தது.“கதவைத்தட்டாம ஏண்டா உள்ள வந்த பொறுக்கி நாயே!’’ முதுகில்அறைந்து சிவா உலுக்கியதும், ‘‘பெரியப்பாதான் முடி நறுக்க கூப்டாங்க...” என திரும்பிப்பார்க்காமல் ஓடிவந்துவிட்டான் கதிர்.அதிலிருந்து சிவா அண்ணனுக்கு, இவனைக்கண்டால் பிடிக்காமல் போயிற்று.
பேயறைந்த மாதிரி வந்த மகனை, ‘‘ஏண்டா! ஒரு மாதிரி இருக்க, பசிக்கிதா, வா! பழையது இருக்கு சாப்பிடலாம்...” என்றவாறே கன்னம் தடவினாள்ரேவதி.
“எனக்கு பிரியாணிதான் வேணும். அத்தாச்சி வீட்ல பிரியாணி, எல்லாரும் சாப்பிட்டாங்க... வாசமா சூப்பரா இருந்துச்சு. நீ போய் அத்தாச்சிட்ட வாங்கிட்டு வா... எனக்கு பசிக்குது...’’ கண்கள் கலங்கக் கூறினான் கதிர்.“ஏண்டா நேரம் காலம் தெரியாமப் படுத்தற... உங்க அப்பா போனதுக்கப்பறம் ஒத்த மனுசியா, தையல் மிசின்ல கிடந்து, கஞ்சியோ, கூழோ கௌரவமா குடிக்கிறோம். அந்த பப்பி அக்காவப்பத்திதான் உனக்கு தெரியுமே... வீட்டு வேலைக்கு வரச்சொல்லிக் கூப்புடுது. அசிங்கமா நடந்துக்காத கதிரு. உன் தம்பியப் பாரு. போட்ட சோத்தை தின்னுட்டு, வேம்பக்கொட்டை பொறுக்க போயிட்டான். அத வித்து கிடைக்கிற காசுல, ஏதோ தீனி வாங்கித் தின்னுக்கிறான்.
நீயும் நல்லபுள்ளைதான... வா... அம்மா சாப்பாடு போட்டு ஊட்டிவிடுறேன்!’’ இல்லாமையை எடுத்து நைச்சியமாக அவனுள் புரியவைத்துக் கொண்டிருந்தாள் ரேவதி..
“இல்லமா, பப்பி பெரியம்மா தூங்கிட்டாங்க. அத்தாச்சி எடுத்து வச்சிருக்கு. நீ போய் வாங்கிட்டு வா...” என்ற கதிரைப்பார்க்க பாவமாக இருந்தது ரேவதிக்கு.
எப்படியாவது பிரியாணி எப்படி இருக்கும் என சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டும் என்ற எல்லைமீறிய ஆசையில், அவனுக்கு சிவா திட்டியதோ, கேவலப்படுத்தியதோ கூட பெரிதாகப்படவில்லை. அவன் எண்ணம் முழுவதும் பிரியாணியைத்தின்று பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் மட்டுமே நிலைத்திருந்தது. “டேய் கதிரு... அவுங்க மீதி பிரியாணிய வேலைக்காரவங்களுக்கு கொடுத்திட்டாங்களாம்டா... பப்பி அக்கா சொல்லுது. அங்க சித்ராவையே காணும்டா... ஏண்டா என்னை இப்படி அசிங்கப்படுத்துற...” வேதனையின் உச்சத்தில் அடிபட்டபூனை போல் கீச்சிட்டகுரலில் ரேவதி சொன்னாள். அழ ஆரம்பித்தான் கதிர்.
- தேவி லிங்கம்
|