கன்டெய்னர் வீடு



ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஆரவ் காந்தியைப் பற்றித்தான் ஐநா சபையில் ஹாட் டாக்.  ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்துவரும் மாணவன்தான் ஆரவ். அவரது குடும்பம் கட்டடக்கலை மற்றும் கட்டுமானத்தில் அனுபவம் வாய்ந்தது.
குடும்பத்தினர் மூலம், இந்தியாவில் வீடில்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டார்.இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தந்தையின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தார் ஆரவ். அங்கே பழைய கன்டெய்னர்கள் புதுப்பிக்கப்பட்டு அலுவலகம் இயங்குவதற்கான இடமாக மாற்றப்படுவதைக் கண்டார்.

பழைய கன்டெய்னர்களை வீடாக மாற்றி வீடில்லாதவர்களுக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் அவருக்குள் தோன்ற, உடனே களத்தில் இறங்கிவிட்டார். இந்த கன்டெய்னர் வீட்டைக் கட்டுவதற்காக கிரவுட் பண்டிங் முறையில் நிதி திரட்டியிருக்கிறார். மூன்றே வாரத்தில் 5 லட்சம் ரூபாய் சேர்ந்துவிட, முதல் கன்டெய்னர் வீடு தயாராகிவிட்டது.

இதில் 5 பேர் வரை வசிக்கலாம். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து கட்டப்படுவதால் இந்த வீட்டால் சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் இல்லை. எதிர்காலத்தில் 100 கன்டெய்னர் வீடுகளைக் கட்டி, அங்கே வீடில்லாத 500 பேரைக் குடியமர்த்த வேண்டும் என்பது ஆரவ்வின் கனவு. இந்த செயலே அவரை ஐநா அழைப்பதற்கான காரணம்.

த.சக்திவேல்