அரண்மனை குடும்பம் - 35
கணேசனின் அப்பா கைலாசராஜாவும், அம்மா கஸ்தூரியும் குலசேகர ராஜா சொன்னதைக் கேட்டு மௌனமாக சிந்தித்ததே தனக்கொரு நல்ல ஆரம்பம் போல் தோன்றியது குலசேகர ராஜாவுக்கு.ஆனாலும், “நான் நல்லா யோசிச்சு பாத்துட்டுதான் மாமா பேசறேன்.
நான் சொன்னதுல உங்களுக்கும் ஆட்சேபணை இருக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, கணேசன் இதுக்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டான்... அதுதான் இப்ப பிரச்னை!விடுங்க மாமா... இவ இப்படி தனிமரமா நின்னு சீக்காளியாவே கிடந்து சாகணும்னு எழுதியிருந்தா அதை யாரால மாத்தமுடியும்?”என்று, தான் முன்பு சொன்னதற்கு சற்று எதிர்மறையாகவும் பேசிவிட்டு மெல்ல அங்கிருந்து விலகினார். குலசேகர ராஜா அப்படி பேசியதும், கைலாச ராஜாவும் கஸ்தூரியும் பதிலுக்கு எதுவும் பேசாமல் சிந்தித்ததையும் தற்செயலாக ரத்தி தன் அறை முகப்பில் இருந்து கேட்டபடி இருந்தாள்.
அதனால் அவள் முகம் ஒரு மாதிரி இருண்டு கலங்கிப் போனது. சற்று தள்ளி தியா கட்டிலின் மேல் பொம்மை கார் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். இடையில் வீட்டு மராமத்து வேலை செய்பவர்கள் சுவரில் டிரில் போடும் சப்தம் மட்டும் கேட்டது. அப்போது சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் இருந்து கோயில் குருக்கள் அபிஷேகப் பிரசாதத்துடன் கைலாச ராஜாவும் கஸ்தூரியும் அமர்ந்திருக்கும் ஹாலில் நுழைந்திருந்தார். உடன் மூர்த்தி!குருக்களைப் பார்க்கவுமே கைலாச ராஜா “வாங்க குருக்களே...” என்றார்.
“இன்னிக்கு கோயில்ல நம்ம கட்டளை... அபிஷேகம்லாம் நல்லபடியா முடிஞ்சது. அன்னதானமும் நடக்கத் தொடங்கிடுத்து. பிரசாதம் கொடுக்கத்தான் வந்துருக்கேன்...” என்றார்.“ரொம்ப சந்தோஷம்...” என்று குருக்கள் கையில் இருந்த தட்டை வாங்கிக்கொண்ட கைலாச ராஜா, “அம்மாடி மஞ்சுளா...” என்றார் அடுத்த நொடியே. “அவள எதுக்கு கூப்பிட்றீங்க..? அவதான் தலைவலின்னு படுத்திருக்காளே...” என்றாள் கஸ்தூரி.“சரி நீயே இந்த பிரசாதத்தை கொண்டு போய் நம்ம பூஜை அறைல வை... இதுக்குதான் கூப்ட்டேன்...” என்று மனைவி வசம் பிரசாதத் தட்டைத் தர, அவளும் அதை எடுத்துக்கொண்டு விலகினாள்.
“பெரியவா இப்பல்லாம் முன்ன மாதிரி கோயிலுக்கு வர்றதில்ல... இனியாவது வரணும்...” என்று குருக்களும் அந்த இடைவெளியில் பேசினார்.“வரேன் குருக்களே... உடம்பு முன்ன மாதிரி இல்லை. மருந்து மாத்ரைலதான் நடமாடிக்கிட்டிருக்கேன். இப்பல்லாம் எல்லாத்தையும் கணேசன்தான் பாத்துக்கறான்.
அவனை வரச் சொல்றேன்...”“ரொம்ப சந்தோஷம்... அவர் வரப்போற எலெக்ஷன்ல நம்ப தொகுதில நிக்கப் போறார்னும் கேள்விப்பட்டேன். அப்படி நின்னா நிச்சயமா லட்ச ஓட்டு வித்தியாசத்துல ஜெயிப்பார்...நம்ம ஊர்லயும் நிறைய நல்ல காரியம் நடக்கும். குறிப்பா இந்த ரயில்வே பாலம் பாதியிலயே நிக்கறது... அதை கட்டி முடிச்சா பெரிய ரிலீஃபா இருக்கும்...”என்று கணேசன் கிட்டத்தட்ட எம்.பி.யாகிவிட்டது போலவே பேசினார்.
“ஓ... கணேசன் எலெக்ஷன்ல நிக்கப்போறது உங்க வரை தெரிஞ்சிருக்கா...”“அவர் பேசின வீடியோவைத் தான் இதுவரை லட்சம் பேருக்கு மேலயே பாத்திருக்காளே... தெரியாமப் போகுமா?”
“இந்த வீடியோ, யூடியூப் இதெல்லாம எனக்கு இன்னும் பிடிபடலை குருக்களே... நான் இப்பவும் கொஞ்சம் அந்தக் காலத்து ஆள்தான்...”“நானும் சும்மா மேலெழுந்த வாரியாதான் பார்ப்பேன். ஆனாலும் காலம் ரொம்பவே மாறிப் போயிடுத்து. ஒரு தகவலை பரப்பறதுக்கு இன்னிக்கு அஞ்சு நிமிஷம் ரொம்ப அதிகம் ணா.
நம்ம கோயில் யானைக்கு முகப்பு பட்டயம் இல்லைங்கற தகவலை நான் சாதாரணமாதான் சொன்னேன். அதை வீடியோ எடுத்து போட்டுட்டார் ஒருத்தர். அப்றமா பார்த்தா ஒரு அரைமணி நேரத்துலயே நான் நீன்னு போட்டி போட்டுண்டு பலபேர் முன்வந்துட்டா!முன்ன எல்லாம் ஒரு அம்பது நூறு வசூல் பண்ணவே ரசீது புத்தகத்தோட வீடு வீடா ஏறி இறங்குவோம். இப்ப கூகுள் பேல சொடக்கு போட்ற நொடில பணம் வந்து சேர்ந்துட்றது!’’குருக்களும் கைலாச ராஜாவும் பேசிக் கொள்வது ரத்தி காதிலும் விழுந்தது.
பிரசாத தட்டை தர அவர் தன்னைத்தான் கூப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் வாயில் மஞ்சுளா என்கிற பெயர்தான் வந்தது. அது அவளை அப்போது நன்றாகவே உறுத்தியது.
இப்படித்தான் அலட்சியமாக இந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்து இருக்கிறார் கைலாச ராஜா.இப்போது மஞ்சுளாவை இரண்டாம் திருமணம் செய்யும் எண்ணமும் உருவாகி விட்டது.
குலசேகர ராஜா அந்த எண்ணத்தைச் சொன்ன போது அதற்கு துளி எதிர்ப்பு அவரிடமில்லை... அதெல்லாமே ரத்தியை கலக்கத் தொடங்கி விட்டது. ஒரு புறம் கணேசன் உயிருக்கும் தன் உயிருக்கும் ஆபத்து என்கிற ஏற்காட்டு சாமியாரின் அருள்வாக்கு... மறுபுறம் இப்படி ஒரு கல்யாணப் பேச்சு... ரத்தி தன்னையும் மீறி அழத் தொடங்கினாள்! சேர்வராயன் மலைத் தலத்தின் அடர்ந்த மரச்சரிவுகளினூடே ஆளுக்கொரு கைத்தடியோடு ஊன்றி ஊன்றி கீழ் இறங்கிக் கொண்டிருந்தனர் மாரப்ப வாத்தியார், ஜல்லி, போதிமுத்து என்கிற அந்த மூன்று பேரும்.மடித்துக் கட்டிய வேட்டி, அரைக்கை சட்டை, மேல் பட்டனைத் திறந்து விட்ட மார்பு, உதட்டில் பீடித் துண்டு என்கிற அவர்கள் தோற்றமும் நடையும் ஆபத்தானதாகவும் இருந்தது.
இடையில் வாய்க்கால் போல் ஓடை நீரோட்டம். தண்ணீரில் தேன்பாகின் குணம். குனிந்து குடித்ததோடு முகத்திலும் அள்ளிப்பூசி அலம்பிக் கொண்டனர்.ஓரிடத்தில் செம்மரம் ஒன்று அரை வளர்ச்சியில் கண்ணில் பட்டது. அதில் வன இலாகாவினர் பெயிண்ட் கொண்டு எட்டு என்கிற எண்ணை எழுதியிருந்தனர். மாரப்பவாத்தியார் அந்த மரத்தை கையால் வருடிப்பார்த்தார். அதை ஜல்லியும் கவனித்தான்.
“ஆசானே...” என்றான்.“செம்மரம்டா... நான் வெச்ச மரம்... நல்லா வளர்ந்திருச்சி. ஆனா, பாரு காட்டிலாகாகாரன் வந்து நம்பரைப் போட்டுட்டு போயிருக்கான்...” என்றார் மாரப்ப வாத்தி. “இங்கெல்லாம் அது வளராதுன்னு சொல்வாங்களே ஆசானே...”“வைக்கற விதமா வைக்கணும். அப்படி வெச்சா கற்பக மரம் கூட விளையும்...”“கற்பக மரமா?”“என்னவே... அப்படி ஒரு மரம்பத்தி நீ கேள்விப்பட்டதில்லையா?”“அது இந்த புராண கதைலல்ல வரும்?”“அதனால அது கிடையாதுன்னு அர்த்தமா?”“அப்ப இருக்குதா?”
“இருக்கு... ஆனா, இங்க இல்ல…” “வேறு எங்க ஆசானே..?”“நீ சதுரகிரி பக்கம் போயிருக்கியா?”“இல்ல ஆசானே...”“அந்த மலை பக்கம் இல்லாத விருட்சமில்லடா... அங்க இருந்துதான் ஜோதி சர்ப்பம், மாய வன்னி, மங்குரட்டை, ஆனை வணங்கின்னு பலதை கொண்டு வந்து இங்கல்லாம் நட்டுருக்கேன்...”“இப்படி பேரெல்லாம் நான் கேட்டதே இல்ல ஆசானே?”“சோத்துக்கு செத்து செருப்பு தைச்சவன் தானேடா நீ... உனக்கு சோத்த தவிர வேற எது தெரியும்?”“அது என் குத்தமா ஆசானே?”“குத்தம் சரின்னே ஒண்ணு கிடையாதுடா... எல்லாமே கட்டம்தான். கட்டத்துக்கு மிஞ்சி ஒண்ணு கிடையாது...” “கட்டம்னா?”“உன் சாதகத்தை சொன்னேன்.
ஆத்தா வயித்துக்குள்ள இருக்கைலயே எல்லாம் முடிவாயிடுது...” “யாரு முடிவு பண்றா ஆசானே?”“நீ தாண்டா... நீயேதான்...” மலைச்சரிவில் இறங்கிக் கொண்டே இருவரும் பேசியதில் எதுவும் புரியவில்லை போதிமுத்துவுக்கு. மணியோ மாலை ஐந்தரை! எதிரில் சேலம் நகரின் ஒரு துண்டுப்பகுதி கட்டட கொப்புளங்களோடு தெரிந்தது. இடையில் ஒரே பசலை... சாம்பிராணி போட்டது போல பனி மூட்டம் சற்று...மூவரின் நடையும் அடிவாரத்து வழுக்குப்பாறை முனி கோயில் பொங்கலிடும் மந்தைப் பகுதி நோக்கித்தான் இருந்தது.எட்டு மணிக்குள் போய் விட்டால் போனில் பேசியபடி குலசேகர ராஜாவும், மூர்த்தியும் அங்கு வந்து காத்திருப்பார்கள்.
அதற்குள் போய்ச்சேர வேண்டும். சேர முடியுமா என்கிற சந்தேகம் போதிமுத்துவுக்குள் தோன்றியது.அப்போது ஒரு அசாத்யமான வன்னி மரம் ஒன்று கண்ணில் படவும் மாரப்ப வாத்தி அதற்கு உடனேயே கற்பூரம் காட்டி வணங்கத் தயாரானார். தலைப்பாகைக்குள்ளேயே கற்பூரம், தீப்பெட்டி எல்லாம் இருந்தது.மளமளவென்று மரத்தின் முன் ஒரு சிறு கல்மீது கற்பூரத்தை வைத்து படபடவென்று கன்னத்திலும் போட்டுக் கொண்டார். அவர் செய்யவும் போதிமுத்துவும் ஜல்லியும் கூட வணங்கினர்.“ஆசானே... இதென்ன சாமி மரமா?” ஜல்லி கேட்டான்.
“சரியா கேட்டே... இது சாமி மரமேதான். பூச்சாண்டி சித்தர்னு ஒருத்தர். இந்த மலைக்காடுதான் அவரோட நாடு, ஊரு, வீடு எல்லாம்! மனுஷன் மண்ணை சக்கரையாக்குவார். சக்கரைய உப்பாக்குவார்... அவ்வளவு கியாதி...”
“கியாதின்னா..?” “பவருடா... பவரு...” “அந்த சித்தர் நட்ட மரமா இது?”“அவர் நட்ட மரமில்ல... அவர்தான் இப்ப இங்க இந்த மரமாவே நிக்கறாரு! கீழே இருக்கறது அவரோட ஜீவசமாதி...”“ஜீவசமாதியா..?”“சமாதியேதான்... இங்க யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. இந்த வன்னியும் ராஜ வன்னி... இப்படி ஒரு மரப் பொந்துக்குள்ளதான் பாரதத்துல பாண்டவனுங்க, தங்களோட ஆயுதங்களை வெச்சிட்டு போனாங்க... இதோட இலைய சட்டை பாக்கெட்ல வெச்சு கிட்டு இருந்தா, காசு எப்பவும் பாக்கெட்ல நிரம்பிகிட்டே இருக்கும்... லட்சுமியோட கடாட்சம் அலை அலையா பாயற மரம் இந்த மரம்...”அங்கிருந்து விலகி நடந்தபடியே பேசினார் மாரப்ப வாத்தி.
அதைக் கேட்ட போதிமுத்துவுக்குள் அப்படியானால் இந்த வாத்தி எதற்காக சொக்குப் பொடி, வசிய மருந்து என்று பணத்துக்காக குகையில் மெனக் கெட வேண்டும் என்கிற கேள்வி. சரியாக அவ்வேளையில் வனப்பகுதி ஊடே ஏற்காடு நோக்கிச் செல்லும் தார்ச்சாலை இடையிட அதை மூவரும் கடந்து மறுபுற சரிவிலும் இறங்கினர். அப்போது ஒரு போலீஸ் ஜீப்பின் குறுக்கீடு... உள்ளே ஏற்காடு எஸ்.ஐ.சாமிக்கண்ணு.
மூவர் வனப்பகுதி சரிவில் நுழைவதைப் பார்த்து வண்டியை ஓரம் கட்டியவர் “ஏய்... யாருடா அது... நில்லுங்கடா...” என்றார்.“ஆத்தி... போலீசு...” என்று திரும்பிப் பார்த்துக் கூவினான் போதிமுத்து.“நீ நட... வேகமா நட... அவனாலல்லாம் நம்மள தொடர்ந்து வரமுடியாது. நடவே...” என்று மாரப்ப வாத்தி முதல் ஆளாக திபு திபுவென சரிவில் அமர்ந்து சறுக்கியபடியே இறங்க அப்படியே போதியும் ஜல்லியும் பின் தொடர்ந்திட, சாமிக்கண்ணுவும் “இவனுங்கள விட்றக் கூடாது...” என்று ஒரு வெறியோடு பின் தொடரத் தொடங்கினார்.
“சார்... வேண்டாம் சார்... இருட்ற நேரம்... எதாவது ஆயிடப்போகுது...” என்கிற கான்ஸ்டபிள் மாணிக்கம் ஜீப்புக்கு வெளியில் நின்று கொடுத்த குரல் சாமிக்கண்ணுவை நிறுத்தவில்லை. அவர்கள் ஓட... அவரும் துரத்த...
(தொடரும்)
குதிரை வண்டியை விட்டு இறங்கிய அந்தக் கிழவி பிரம்புக் கூடையுடன் கண்மாய் ஓரமாக தழைத்து வளர்ந்திருந்த ஒரு பெரும் அரச மரத்தடியை நோக்கித்தான் சென்றாள். அதைக் கவனித்த அசோகமித்திரனும் சற்று நெருங்கிச் சென்று அந்தக் கிழவியின் செயல்பாட்டை கவனிக்கத் தொடங்கினார். குதிரை வண்டியை ஓட்டி வந்த குதிரை வண்டிக்காரனும் வண்டியில் இருந்து ஒரு விளக்குமாறு, மண்வெட்டி, இரும்புச் சட்டி என்று பொருட்களை எடுத்துக்கொண்டு கிழவியை நெருங்கினான்.அந்தக் கிழவி மரத்தடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடர்ந்து வளர்ந்து கிடந்த செடிகொடிகளை கையாலேயே பிடுங்கத் தொடங்கினாள்.
சில நொடிகளிலேயே அங்கொரு கல் நாகர் சிலை தெரிந்தது. அது சாய்ந்து விழுந்து அதைப் புதர்கள் மூடியிருந்தன. அவள் சற்று அப்பால் அகலவும் வண்டிக்காரன் அந்த இடத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். மண்வெட்டியால் புதர்களை வெட்டியவன், அதை இரும்புச் சட்டியில் அள்ளிப் போட்டு தூரப்போய் கொட்டிவிட்டு வந்தான்.வரும்போது அசோக மித்திரனைப் பார்த்தவன் ஜாடையில் “நிற்காதே... போய்விடு...” என்று சைகை காட்டினான். அசோகமித்திரன் அதை சட்டையே செய்யவில்லை. அந்த இடைவெளியில் கிழவி அப்படியே, தான் அணிந்திருந்த காவிப் புடவையோடு அருகில் சரிவில் இறங்கி கண்மாயில் மூழ்கிக் குளிக்கத் தொடங்கினாள்.
குளித்து முடித்து ஈரம் சொட்டச் சொட்ட மரத்தடிக்கு வந்தபோது அந்த இடம் சுத்தமாகி இருந்தது. கிழவி கர்மமே கண்ணாக ஈரப்புடவையுடன் கல் நாகர் சிலை முன்னால் கோலம் போட்டு கல் நாகர் சிலையில் படம் எடுத்தபடி நிற்கும் பாம்பின் நெற்றிமேல் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வழிபாட்டிற்குத் தயாரானாள். வண்டிக்காரன் அவ்வப்போது அசோகமித்திரனைப் பார்த்து “போய்விடு, நிற்காதே...” என்று சொன்னது அவருக்கு ஒருவகை எரிச்சலைத்தான் தந்தது.
இன்னமும் நெருக்கமாக வந்து பார்க்கத் தொடங்கினார்.ஆனால், கிழவி அவரை கவனிக்கவேயில்லை. கர்மமே கண்ணாக இருந்தாள். பிரம்புக் கூடையில் இருந்து இரண்டு அகல் விளக்குகளை எடுத்து விளக்கேற்றி அது அணையாதபடி கூம்பு வடிவில் அருகில் கிடந்த தட்டையான கற்களைக் கொண்டு வந்து வைத்தாள்.பின் ஒரு தட்டில் பூ, பழம், தேங்காயை வைத்து, அப்படியே ஒரு காலி கிண்ணத்தில் பாலையும் நிரப்பி முன்னால் வைத்து விட்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். சூரிய கிரகணத்திடம் ஒரு பூரணம் தெரிந்தது.பொழுதிலும் சாம்பல் கருப்பு நிறம். எங்கும் துளிக் கூட அரவமில்லை. செடி கொடிகளிடமெல்லாம் கூட அசைவற்ற தன்மை.
அசோகமித்திரனுக்கு அங்கு ஒரு பூஜை நடக்கப் போவது தெரிந்தது. அப்போதுதான் அவர் பார்க்க இன்னொரு அதிசயமும் ஆரம்பமாயிற்று. வயல் காட்டுப் பக்கமிருந்து ஒரு பத்தடி நீள நாகமொன்று அந்த கல்நாக சிலை நோக்கி வந்தபடி இருந்தது. சில நொடிகளில் அது கல்நாக சிலையை வளைத்துக் கொண்டு படம் விரித்து நிற்கவும், கிழவியும், “வந்துட்டியா... எங்க வராம போயிடுவியோன்னு நினைச்சு கலங்கிட்டேன். எப்பவும் போல உன் ஆசியும் அனுக்ரகமும் எங்க குடும்பத்துக்கு வேணும்...” என்று வாய்திறந்து சொல்லிக்கொண்டே அந்த கல் நாக சிலை முன் மண்டியிட்டு வணங்கினாள்.
அப்படியே எழுந்து கிண்ணத்து பாலை படம் விரித்த பாம்பின் தலைமேல் விடவும் அது ஒழுகி சிலையையும் நனைத்தபடி மண்ணில் இறங்கிக் கலந்தது.கிழவி பின் கற்பூர தீபம் காட்டினாள். அதை அப்படியே வானத்து கிரகண சூரியனுக்கும் காட்டியபோது கிரகணம் விலக ஆரம்பித்திருந்தது. பின் கீழே கற்பூரத்தை தரையில் போட்ட நிலையில் பாம்பும் அங்கிருந்து விலகிச் செல்லத் தொடங்கியது.அசோகமித்திரனிடம் அடங்காத பிரமிப்பு.கிழவி அதன்பின் பொருட்களை பிரம்புக் கூடையில் போட்டுக் கொண்டு புறப்படத் தயாரானாள். அதற்கு மேல் மௌனமாக இருக்க அசோகமித்திரன் தயாரில்லை.
“பாட்டியம்மா ஒரு நிமிஷம்...” என்று கிழவியை தன் பக்கம் திருப்பப்பார்த்தார். ஆனால், கிழவி அவரைப் பார்ப்பதாக இல்லை. வேகமாய் போய் கூடையை குதிரை வண்டிக்குள் வைத்துவிட்டு, தானும் ஏறிக்கொண்டாள். வண்டிக்காரனும் மண்வெட்டி, இரும்புச் சட்டி, விளக்குமாற்றை முன்பக்கமாய் வண்டியில் போட்டுவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்த நிலையில் வண்டியும் புறப்பட்டது.அசோகமித்திரன் முகத்தில் ஏமாற்றம். கழுத்தை வளைத்து அந்த கல்நாக சிலையைப் பார்த்தார். ஒரு பூஜை நிகழ்ந்து முடிந்துள்ளது. அதுவும் கிரகண காலத்தில்... ஆனால், அதைப் பார்க்க ஊரில் ஒருவர் கூட வரவில்லை. வண்டிக்காரன் கூட அச்சத்தோடுதான் நின்று பார்த்தான். தன்னையும் ஏன் போகச் சொன்னான் என்பதும் அசோகமித்திரனுக்குப் புரியவில்லை.
ஒன்று மட்டும் புரிந்தது. நடந்து முடிந்த அந்த சம்பவம் நிச்சயம் ஒரு அமானுஷ்ய சம்பவமே! கச்சிதமாய் ஒரு பாம்பு வந்து படம் விரித்து நின்று பூஜை முடியவும் திரும்பிச் சென்றதன் பின்புலத்தில் நிச்சயம் ஏதோ இருப்பது தெரிந்தது.இது ஒரு வகையில் கோயிலில் நாகம் வந்து பூஜிக்கும் அந்த சம்பவத்துக்கு இணையான காட்சிதான் என்றும் தோன்றியது.
அப்போதுதான் கைபேசி மூலம் அதை வீடியோவாக எடுக்கத் தவறியதும் உரைத்தது.வானில் கிரகணத்திடமும் கரைவு... பூரணமாய் சூரியன் தெரியத் தொடங்கி பொழுதிடமும் ஒரு மாற்றம். காற்றும் மெல்ல வீசத் தொடங்கியது. பட்சிகளும் குரல் கொடுக்கத் தொடங்கின. அங்கங்கே மனிதர்களின் நடமாட்டமும் தெரியத் தொடங்கியது.
வேகமாய் நடந்து தென்னந்தோப்புக்குள் சென்று பார்த்தபோது அங்கு, தான் முன் பார்த்த சிவலிங்கத்துக்கு பூஜை நடந்து முடிந்து விளக்கெரிந்து கொண்டிருந்தது. ஆனால், யாருமில்லை. குறிப்பாக மண்ணாங்கட்டிச் சித்தர் என்று கனபாடிகள் குறிப்பிட்ட மனிதர் அங்கு எங்கும் இல்லை.ஒரு புறம் ஏமாற்றம்... இன்னொரு புறம் ஒருவகை பிரமிப்பு... இரண்டின் கலவையாக வீடு திரும்பியபோது கனபாடிகள், குருக்கள் வீட்டுக்கு எழவுக்கு சென்று விட்டிருந்தார்.
அவர் வரும்வரை காத்திருக்கவேண்டியதுதான் என்று எண்ணிய அசோகமித்திரனுக்கு பசி எடுத்தது. அதேவேளை, தனக்கு பசிக்கிறது என்று சொல்லி அந்த வீட்டுப் பெண்ணிடம் உணவு கேட்க ஏனோ சங்கடமாய் இருந்தது. அப்போது அவர் அலைபேசியில் அழைப்பொலி. திரையில் மணிமொழியனார் பெயர்!
இந்திரா செளந்தர்ராஜன்
ஓவியம்: வெங்கி
|