ஒரு பக்கம் வனத்துறை ஊழியர்; இன்னொரு பக்கம் துணை நடிகர்!



‘அய்யப்பனும் கோஷியும்’ புகழ் அட்டப்பாடி பழனிசாமி

ஒரு துணை நடிகர் அவ்வளவு சுலபமாகப் பிரபலமாக முடியுமா?

அட்டப்பாடி பழனிசாமி அப்படி ஆகியிருக்கிறார். அட்டப்பாடி காடுகளில் 186 பழங்குடி செட்டில்மெண்ட் மக்களிடம் மட்டுமல்ல, கேரள திரையுலகில் அனைவரும் அறிந்த நபராக
மாறியிருக்கிறார். தவிர கேரள வனத்துறையில் ஃபீல்டு ஸ்டாஃப்பாக அரசுப் பணியில் இருந்தபடியே பத்துக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் அண்மையில் சாதித்த சாதனை, ‘அய்யப்பனும் கோஷியும்’ பட டைரக்டர் சச்சிக்கு, நஞ்சம்மா என்ற பழங்குடிப் பெண்ணை அறிமுகப்படுத்தியதுதான். அவர் பாடிய ‘களக்காத்தா சந்தன மேரம்...’ பாடல் உலகம் முழுக்க பிரபல்யமானதும், சென்ற ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினை அவர் பெற்றதும், அவரோடு சேர்ந்து இவருக்கும் அந்தப் பாராட்டும் புகழ் வெளிச்சமும் கிடைத்து விட்டது.

இதுலயிருந்துட்டு நீங்க எப்படி சினிமாவுல நடிக்க முடியுது? எப்படி அரசாங்கத்துல அனுமதிக்கிறாங்க?

‘‘கேரள அரசாங்கத்துக் கிட்ட முறையா அனுமதி கேட்டா கொடுக்கிறாங்க. முதல்ல ஒரு படத்துக்கு அனுமதி கேட்டேன். ‘அய்யப்பனும் கோஷியும்’ நடிச்ச பின்னால ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டேன்ல... அதை வச்சு இனிமே ரிட்டயர்டு ஆகற வரைக்குமே சினிமாவுல நடிச்சுக்கலாம்! அந்த அளவுக்கு எழுத்துபூர்வமாக அனுமதி கொடுத்துட்டாங்க. ஆனா சினிமாவுல நடிக்கப்போற காலகட்டத்தில லீவு போட்டுட்டுத்தான் போக முடியும்.

‘நான் இன்ன படத்தில் இத்தனை நாள் நடிக்கப் போறேன்... இதுக்கு சம்பளம் இல்லாத லீவோ, சம்பளம் உள்ள லீவோ இத்தனை நாளைக்கு கொடுக்கணும்’னுகேட்டுட்டு லெட்டர் கொடுக்கணும்... அவ்வளவுதான்...’’ புன்னகைக்கிறார் பழனிசாமி. உங்களால் எப்படி வனத்துறைப் பணி, சினிமா என்ற இரட்டைக்குதிரை சவாரி செய்ய முடிகிறது?

இது எனக்குள்ள இரண்டறக் கலந்துடுச்சு. இந்த இரண்டையும் நான் வேலையாகப் பார்க்கவில்லை. என் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன்.  அட்டப்பாடி ஹில்ஸ் ஏரியா சொசைட்டி என்ற அகாட்ஸ் அமைப்புக்கு அரசு நூற்றுக்கணக்கான கோடிகள் ஒதுக்கீடு செய்து பழங்குடி மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டை செய்து வந்தது. அந்த திட்டத்திற்கு புராஜக்ட் டைரக்டர்கள் இருந்தனர். அந்த அகாட்ஸின் புராஜக்ட் ஆபீசர் ஒருவருக்கு நான் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன்.

பதினான்கு வருடத்தில் அந்த புராஜக்ட் முடிந்தது. அதுல என்னைப் போன்ற பழங்குடி மக்கள் பலர் வேலையிழந்தனர். பாதிக்கப்பட்ட நூறு பேர் வேலை வேணும்னு போராட்டம் செஞ்சோம். அதனால கேரள அரசாங்கம் இந்த நூறு பேருக்கும் ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்ல வேலை தந்தாங்க. அதுலதான் எனக்கு ஃபாரஸ்ட் வாட்ச்சர் வேலை கிடைச்சது. நான் கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்தான். காட்டு யானையோ மற்ற வனவிலங்குகளோ ஊருக்குள்ளே வந்தாச்சுன்னா சர்ச் லைட், பட்டாசு எல்லாம் வெடிச்சு திரும்ப அதைக் காட்டுக்குள்ளே துரத்தி விடறதும், வனவிலங்குகள்கிட்ட இருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்புத் தர்றதும் எங்க வேலைதான். இயற்கையோடவும், யானையோடவும் எனக்கு ரொம்ப இஷ்டம் இருக்கிறதால நான் இந்த யானை ஸ்குவாடுலயே இருக்கேன்.

ஓர் அரசு ஊழியர் சினிமாவுல நடிக்கப் போறதுக்கு தமிழ்நாட்டுலயோ கேரளத்திலயோ உங்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி கொடுத்துப் பார்த்திருக்கீங்களா?

தமிழ்நாட்டுல எப்படின்னு தெரியலை. ஆனா கேரளத்துல கொடுக்கிறாங்க. ஒரே கண்டிஷன்- அப்படி நடிக்கிறதுக்கு பணமோ, பொருளோ ஊதியமா வாங்கக்கூடாது. சர்வீஸ் அடிப்படையிலயே அதைச் செய்யணும். நான் பேமெண்ட் எதுவும் வாங்காமத்தான் சினிமாவுல நடிக்கிறேன். அதை மீறி பேமெண்ட் கொடுக்க ஆசைப்பட்டாங்கன்னா எங்க பழங்குடி மக்கள் யாருக்காவது கொடுக்கச் சொல்லிடுவேன்.

சரி, உங்களுக்குள்ளே இந்த சினிமா ஆர்வம் வந்தது எப்படி?

அட்டப்பாடி கோட்டத்துறைதான் சொந்த ஊரு. சின்ன வயசிலயே எங்க இசை, நடனம், நாடகத்தில் ரொம்ப ஆர்வம். எங்க பழங்குடி மக்களோட பாடல்கள், இசை, நடனம் எல்லாமே காணாமப் போறது வருத்தமா இருந்தது. அதைக் கற்றுக்கொள்ள, ஊர் ஊராக கொண்டு போறதுக்கான வாய்ப்பு சுத்தமாக எங்களுக்கு இல்லாமல் போனது. அதை முன்னெடுக்க ஆஸாத் கலா சங்கம் என்று ஓர் அமைப்பை 2004ல் தொடங்கினோம்.

அதன் மூலமா பழங்குடி மக்களோட பண்பாடு, கலாசாரத்தை உள்ளடக்கின பாடல்கள், நடனம், இசை என உள்ளூர் அளவுல கொண்டு போனோம். அதுவே பாலக்காடு ஜில்லா முழுக்கக் கொண்டு போய், பிறகு கேரள மாநிலம் முழுக்கச் சென்று தில்லி, ஒரிசா, மும்பைன்னு கொண்டு போக ஆரம்பிச்சோம். அதுக்கு அகாட்ஸ் துணை நின்றது. இந்த கலைநிகழ்ச்சி முழுக்க முழுக்க அட்டப்பாடி மக்களோட இசை, நடனம், பாடல்கள்தான் இடம்பெற்றது. அந்தக்குழுவில் நஞ்சம்மாக்காவையும் சேர்த்திருந்தோம்.

அப்ப முதல் இப்ப வரை பதினெட்டு வருஷமா கேரளா மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலும் ஏகப்பட்ட கச்சேரிகளில் பங்கெடுத்திருக்காங்க நஞ்சம்மாக்கா. நிறைய பாடல்கள் பாடியிருக்காங்க. ஒரு இருநூறு ஸ்டேஜுக்கும் குறையாம ஏறியிருப்பாங்க. 2010ல் நாட்டுப்புறப்பாடகிக்கான கேரள அரசோட விருது நஞ்சம்மாக்காவுக்கு கிடைச்சிருக்கு. எனக்கு அதே விருது 2018ல் கிடைச்சிருக்கு.

நான் இதுக்கு பத்து வருஷம் முன்னாலயே சினிமா ஃபீல்டுல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்து வர்றேன். ‘பழசிராஜா’, ‘பாக்கியதேவதை’ன்னு நிறைய படத்துல சின்ன சின்ன வேஷங்களில் நடிச்சிருக்கேன். இதுக்காக திருவனந்தபுரம், கொச்சி, பாலக்காடுன்னு போயிருவேன்.‘பழசிராஜா’ ஷூட் பண்ணினது கர்நாடகா மடிக்கேரியில். அங்கே இருபது நாள் ஷூட்டிங்கிற்காகவே ஒரு வருஷம் பெரிசா முடியெல்லாம் விட்டுட்டு இருந்தேன். அதுல குறிச்சிபடையாளு வேஷம் எனக்கு. சரத்குமார், மம்முட்டி, டைரக்டர் மனோஜ் கே ஜெயன் கூட எல்லாம் வேலை செஞ்சிருக்கேன். எம்.டி.வாசுதேவன் சாரோட ஸ்கிரிப்ட் அது. ‘அன்வர்’ படத்துல போலீஸ் கான்ஸ்டபிளா நடிச்சேன்.

நீங்க இன்னும் துணை நடிகராகவே இருக்கீங்களே..?

சின்ன வயசிலிருந்தே ரஜினி சாரோட தீவிர ரசிகன். அவர் படம் எது வந்தாலும் உடனே பார்த்துடுவேன். பல தடவை பார்க்கறதுண்டு. அடுத்தது விஜய் சாரோட சினிமா எதுவந்தாலும் போயிருவேன். தவிர நான்  தமிழ்ப்படம்தான் அதிகமாகப் பார்ப்பேன். அட்டப்பாடி கேரள பிரதேசம்னாலும் இங்கே தமிழ்ப்படம்தான் அதிகமா வரும். இங்கே தமிழர்கள்தான் அதிகம். இப்ப பத்து வருஷமாதான் இங்கே மலையாளப்படங்கள் வர ஆரம்பிச்சிருக்கு. சின்ன வயசிலயிருந்தே ஒரு நடிகன் ஆகணும்னு ஆசையுண்டு. நிறைய சினிமா ஷூட்டிங்ல போய் டைரக்டர்கள்கிட்ட எல்லாம் சினிமா சான்ஸ் கேட்டுப் பார்த்திருக்கேன். கொடுக்கவேயில்லை. சின்னச் சின்ன ரோல்கள் துணைநடிகரா கிடைச்சதேயொழிய கேரக்டர், ரோல் கிடைக்கவேயில்லை.

சின்ன வயசிலிருந்தே தமிழ்லபேசி வளர்ந்ததால தமிழ்ப் டத்துல நடிக்கணும்னு ஆசையுண்டு. அதற்காகவும் தமிழ்ப்பட ஷூட்டிங் எல்லாம் போய் கேட்டுப் பார்த்திருக்கேன். அப்படியிருக்கும்போதுதான் இயக்குநர் சச்சி சார் என்னைக் கூப்பிட்டு பேசினார். எனக்குள்ளும் சினிமா ஆசை இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு, ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்துல பிருத்விராஜ் சாருக்கு எதிர் கேரக்டர் ஒன்று கொடுத்தார். படத்துல வர்ற டர்னிங் பாயிண்ட்டே அந்தக் கேரக்டர்தான். எக்சைஸ் ஆபீசர் ஃபைசல்.

அந்தப் படம் தொடங்கினவுடனே கதவைத் திறந்து பிருத்விராஜ் சாரோட சட்டையைப் பிடிச்சுடுவேன். அதுல அவர் கீழே விழுந்துடுவார். பிருத்விராஜ் சாரோட வேட்டியில மிதிச்சு அவரை இன்சல்ட் பண்ணி விடற சீன் அது. அதேபோல் அவர் ஸ்டேஷன்ல வச்சு ஒரு காம்பினேஷன்ல இரண்டு பேரும் சந்திக்கிற சீன் இருக்கு. அவர் சாராயம் குடிச்சுட்டு வரும்போது நான் செக்கிங் பண்ணிட்டு இருப்பேன். அங்கேயும் ஒரு பிரச்னை முளைக்கும்.

இப்படி மூணு சீன் அவரோட காம்பினேஷன்ல வலுவா அமைஞ்சுது. இப்படி ஒரு கேரக்டர் ரோல் முதன்முதலா எனக்குப் பண்ணிக் கொடுத்தவர் சச்சி சார். அந்தப் படம் பார்த்துட்டு ரோசன் ஆண்ட்ரூஸ் சார், துல்கர்சல்மான் காம்பினேஷன்ல ‘சல்யூட்’ படத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வேஷம் கொடுத்தார்.

உங்களோட எதிர்பார்ப்பு என்ன?

இன்னும் நல்ல கேரக்டர் ரோல் பண்ணணும். குறிப்பா தமிழ்ப்படத்துல நடிக்கணும். விஜய் சார், சூர்யா சார் படத்துலன்னா இரட்டிப்பு சந்தோஷம் கிட்டும்.
நிஜ வாழ்க்கையில் காட்டு யானையை விரட்டும்போது நிஜக் கதாநாயகனா செயல்பட்ட அனுபவம் ஏதாச்சும் உண்டா?

நிறைய உண்டு. நாம யானை வந்தாச்சுன்னா பட்டாசு வெடிச்சுத்தான் விரட்டுவோம். அப்ப சில யானைகள் போகும். சில யானைகள் போகவே போகாது. அப்ப ரப்பர் புல்லட்ல நானே ஷூட் பண்ணுவேன். அதுலதான் எனக்கு ட்ரெயினிங் கொடுத்திருக்காங்க. இப்படி காட்டுக்குள்ள யானைக்கும் எனக்கும் முப்பது, நாற்பது மீட்டர் இடைவெளியில் வச்சு யானைகளை நோக்கி ரப்பர் புல்லட் அடிச்சிருக்கேன். அடிபட்டா அது பெரிசா தெரியாது. அது ஒண்ணு ஓடிப்போகும். அல்லது நம்மளைத் துரத்திட்டு ஓடி வரும். அட்டாக் பண்ண பார்க்கும்.

ஒரு முறை என்னை நேரா ஒரு யானை அட்டாக் பண்ண வந்துடுச்சு. நான் பயப்படாம வண்டிய நேரா அது முன்னாடி எடுத்துட்டுப் போனேன். யானைக்குபயம் புடிச்சு அப்படியே நின்னுடுச்சு. இப்படி யானைகிட்ட நிறைய அனுபவங்கள் இருக்கு.

கா.சு.வேலாயுதன்