அன்று எதிர்க்கட்சித் தலைவராக பாராட்டினார்... இன்று முதல்வராக விருது வழங்கி இருக்கிறார்!



நெகிழ்கிறார் சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருதைப் பெற்றிருக்கும் முகமது ஆசிக்

நீலகிரி மாவட்டம் கூடலூரைச்  சேர்ந்த இளைஞர் முகமது ஆசிக், 75வது இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ‘சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருதை’ தமிழக முதல்வரின் கரங்களால் பெற்றிருக்கிறார். ‘‘‘சமூகசேவை செய்கிற இளைஞர்களுக்கான விருது’ என்கிற அடிப்படையில் நீலகிரி மாவட்டம் சார்பாக எனக்கு இந்த விருது கிடைத்தது. இந்த விருது எனக்கானது மட்டுமல்ல, நான் சார்ந்திருக்கும் ‘ஜீவசாந்தி’ அறக்கட்டளைக்கானது. என்னைப்போலவே சேவை மனப்பான்மையோடு இயங்கும் அனைவருக்குமானது...’’ புன்னகைக்கிறார் ஆசிக்.

‘‘இதற்குமேல் ஒன்றுமில்லை என்கிற நிலையில் மனித வாழ்வின் கடைசி நிலையே இறப்பு. விரக்தி வெளிப்படும் இடத்தில் நின்று, கடந்த 13 ஆண்டுகளாக 12500க்கு மேற்பட்ட ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ள ‘ஜீவசாந்தி’ அமைப்பின் நோக்கம், ‘உறவின்றி மறிப்போருக்கு உறவாய் இருப்போம்’ என்பதே.
கொரோனா நோய்த் தொற்று நேரத்தில் மட்டும் 2500க்கு மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்ததற்காக, தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஜீவசாந்தி அமைப்பின் தோழர்களை அழைத்து அப்போதே வெகுவாக எங்களைப் பாராட்டினார். இப்போது தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களுக்கு இடையே வித்தியாசமான முறையில் சேவை செய்கிற இளைஞர்களுக்கான விருது என்கிற முறையில் எனக்கு இந்த விருதைக் கொடுத்து கௌரவித்துள்ளார்...’’ என்ற ஆசிக், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

‘‘சிறிய அளவில் அப்பா பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நான் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கில் டிப்ளமோ முடித்துள்ளேன். என் இரண்டாவது அண்ணன் முகமது ரஃபீக், மருந்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் சேவையில் ஜீவசாந்தி அமைப்பில் இருந்து வருகிறார்.

அண்ணன் ரஃபீக்கின் செயலால் ஈர்க்கப்பட்டே கல்லூரியில் படிக்கும்போதே நானும் உடல்களை நல்லடக்கம் செய்யும் சேவையை கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய ஆரம்பித்தேன்.
படிப்பை முடித்து வேலை தேடும்போது, மனம் எதிலும் ஒட்டாமல் சேவையை நோக்கி பயணித்தது. பெற்றோர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அண்ணனின் ஆதரவுடன் முழுநேரமாக இதில் களமிறங்கினேன்.

திருமணம் என்றபோது, பெண் தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது. என் மனைவி வழக்குரைஞர். என் வேலை குறித்த உண்மையை அவரிடம் சொன்னதும், புரிந்து என்னை ஏற்றுக்கொண்டார். இப்போது ஆறுமாதக் குழந்தை எங்களுக்கு இருக்கிறது.நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது, நீலகிரியில் இருந்த என் நண்பன் திடீரென இறந்துவிட்டான். அவன் உடலை வாங்க கோவை அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றேன். ஜீவசாந்தி அறக்கட்டளை நண்பர்கள் அப்போதுதான் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள்தான் என் நண்பன் உடலைப் பெற்று என்னிடம் ஒப்படைத்தார்கள். அந்த நேரம் எனக்குள் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளில் விளக்க முடியாது.

நீலகிரி மலைவாழ் மக்கள் தோட்டங்களில் கூலி வேலை செய்பவர்கள். பெரும்பாலும் படிப்பறிவற்றவர்கள். அவர்களுக்கு கோவைதான் அருகாமையில் உள்ள மிகப் பெரும் நகரம். நோய் தீர்க்கும் மருத்துவத்துக்காக கோவை வருபவர்கள், எங்கே யாரை எப்படி அணுகுவதெனத் தெரியாமல், பதட்டமும் டென்ஷனுமாகத் திரிவதையும்; உணவுக்கும், இருப்பிடத்துக்கும் அல்லல்படுவதையும் பார்க்கலாம்.

எனவே கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து தங்கியிருந்து, டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பிச் செல்லும்வரை அவர்களுக்கான தேவைகளை ஜீவசாந்தி அமைப்பின் நண்பர்கள் உடனிருந்து கவனிக்க ஆரம்பித்தோம். கோவையைச் சுற்றியுள்ள 200 கிலோ மீட்டருக்கும் இந்த உதவிகளைச் செய்து வருகிறோம். நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் சிறப்பு கவனம் எடுத்து செய்கிறோம். காரணம், அவர்கள் தோட்ட வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள்.

ஒவ்வொரு ஆதரவற்ற உடலையும் அடக்கம் செய்தபின், இறந்தவர் கேஸ் ஹிஸ்டரியை எடுத்து முழுமையாகப் படித்துப் பார்ப்பேன்...’’ என்கிற ஆஸிக் அதில் போதைக்கு அடிமையானவர்களே அதிகமாக இருக்கிறார்கள் என்கிறார் வருத்தத்துடன்.‘‘போதைக்கு அடிமையானவரின் குடும்பம் எத்தனை சொத்துடையதாக இருந்தாலும் அனாதைதான். இந்த மாதிரியான இளைஞர்கள் உருவாகாமல் சமூகத்தை நேசிக்கிற, பெற்றோரை நேசிக்கிற, சமூகப் பணி செய்வதை நேசிக்கிற இளைஞர்களை உருவாக்குவதற்காகவே தமிழக அரசு சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருதை வழங்கி சிறப்பிக்கிறது...’’ என்கிறார் ஆசிக்.

ஆதரவுக்கரம் நீட்டும் இளைஞன், தன் பெற்றோரை ஆதரவற்றவர்களாக விட்டுவிட மாட்டான்!

‘‘எங்கள் அறக்கட்டளையின் தோழமை முகமது ஆசிக்கிற்கு தமிழக முதல்வர் வழங்கிய விருதை ஒவ்வொரு பள்ளிக் குழந்தைகள், ஒவ்வொரு கல்லூரி இளைஞர்கள் கைகளிலும் கொடுத்து மீண்டும் அதை அவர்கள் கரங்களில் இருந்து ஆசிக்கை பெற வைக்கிறோம்...’’ என்றபடி பேசத் தொடங்கினார் கோவை ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிறுவனரான சலீம்.

‘‘இப்படிச் செய்வதன் மூலம் குழந்தைகள் வளரும்போதே பிறருக்கு உதவும் தன்மை அவர்களுக்குள் வளரும். இன்றைய இளம் தலைமுறை பப்ஜி, கேண்டி க்ரஷ், ஆன்லைன் ரம்மி, டிடிஎஃப் என நேரத்தை விரயம் செய்கிறார்கள். இதில் தோற்றால் வாழ்க்கையே இல்லை என்கிற மனநிலையில், தோல்வியைச் சந்திக்கும் திராணியற்றவர்களாக வளர்கிறார்கள்.

சக மனிதனுக்கு, சக உயிருக்கு உதவுவதே நாம் பிறந்த சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துவது. அது ஒரு புன்னகையாகக்கூட இருக்கலாம். உணவு கொடுப்பது, உடை கொடுப்பது, சமூகப்பணி செய்வது மட்டுமே இங்கு தர்மம் இல்லை. ஒருவரை நேரில் பார்க்கும்போது சிரிப்பதும், அருகாமையில் இருப்பர்களை சாப்பிட்டாயா என்று கேட்பதும்கூட தர்மமே.

சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருது பெற்ற தம்பி ஆசிக் தனது 29 வயதுக்குள்ளாகவே 5000க்கும் மேற்பட்ட சடலங்களை நல்லடக்கம் செய்யும் பணியைச் செய்து முடித்திருக்கிறார். சாலையோரம் ஆதரவற்று கிடக்கும் ஒருவரை தொட்டுத் தூக்கி ஆதரவுக்கரம் நீட்டும் இளைஞனுக்கு தன் பெற்றோரை ஆதரவற்றவர்களாக விடும் எண்ணம் கண்டிப்பாக வராது.

ஆசிக்குடன் படித்த நண்பர்களுக்கும், அவரோடு பயணிக்கும் நண்பர்களுக்கும் அவரைப் பார்க்கும்போதும், முதல்வரின் கரங்களால் அவர் விருது பெற்றதைப் பார்க்கும்போதும், நாமும் சமூகப்பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தானாகவே வரும். அதற்கான அங்கீகாரமே சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் முதல்வரின் கரங்களால் இந்த விருது...’’
என்கிறார் சலீம்.

மகேஸ்வரி நாகராஜன்