Pan India நடிகையாகும் படிப்ஸ் பொண்ணு!
‘‘எல்லாத்துக்கும் முதல் காரணம் எங்க அம்மாதான். சின்ன வயசுல இருந்து டிவில நியூஸ் ரீடர்ஸ் வரப்போ அவங்களுடைய புடவை, ஜுவல்லரி இப்படி அம்மா பார்த்துப் பார்த்து நோட் பண்ணி ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, ‘அந்தப் புடவைய பாரேன், இந்த நகைய பாரேன்’னு.
அப்பதான் ‘ஓ... நியூஸ் ரீடர்ஸ் டிரெஸ்ஸ கூட இவ்ளோ நோட் செய்வாங்களா’னு யோசிக்க ஆரம்பிச்சு சின்ன வயசுல இருந்து நியூஸ் ரீடர் ஆகணும்னு நினைச்சேன். ஒரு கட்டத்துல டிவி, நியூஸ் ரீடர் ஆசைகள் குறைஞ்சு பெரிய ஸ்கிரீன், கைதட்டல், நடிப்பு... இப்படி ஆர்வமா மாறிடுச்சு...’’ கண்கள் விரிய சொல்கிறார் நடிகை தீப்ஷிகா. வெல்கம் டூ பான் இந்தியன் சினிமா?
தேங்க்யூ. ஆனா, பக்கு பக்குன்னு இருக்கு. தெலுங்குல மொத்தம் 3 படம். அதுல ‘மைக்கேல்’ படமும் ஒண்ணு. ‘மைக்கேல்’ படத்துல எனக்கு சின்ன ரோல்தான். ஆனாலும் முக்கியமான ரோல். அஞ்சு லாங்குவேஜ்ல ரிலீஸ் ஆகப்போகுது. அடுத்து ரவிதேஜா சார் தயாரிப்பில் ஒரு படம். படத்துடைய தலைப்பு, மற்ற விஷயங்கள் எல்லாம் இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது. இது மட்டுமில்லாமல் ஒரு ஹீரோயின் சார்ந்த படத்துலயும் மெயின் ரோல்ல நடிச்சிட்டிருக்கேன்.
தமிழ்ல பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு சார் படத்துல ஹீரோயின். ‘ரேணிகுண்டா’, ‘கருப்பன்’ பட டைரக்டர் பன்னீர்செல்வம் சார் டைரக்ஷன்ல ஒரு படம்... அதிலும் ஹீரோயின்தான். கூடவே ‘நாட்பட தேறல்’ என்கிற ஒரு ஆல்பம். இயக்குநர் பரதன் சார் டைரக்ஷனில் வைரமுத்து சார் வரிகள்ல அவருடைய கனவு புராஜெக்ட். அதிலே ‘கேசாதிபாதம்’ பாடலில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது.
உங்களைப் பற்றி சொல்லுங்க... எங்க அப்பா அம்மா, நான் எல்லாருக்கும் சொந்த ஊர் சென்னைதான். பக்கா தமிழ்ப் பொண்ணு பாஸ். பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு இருக்கும்போதே பட வாய்ப்புகள் தேடி வந்துடுச்சு. சொன்னா நம்பமாட்டீங்க... டாக்டராகணும்கிற கனவுகளோட நீட் எக்ஸாம் எல்லாம் கூட எழுதினேன்.
சின்ன வயசில் இருந்தே கொஞ்சம் நல்லா படிப்பேன். பேசிக்கலி நான் பயாலஜி ஸ்டூடண்ட். டாக்டர் கிடைக்கல. அடுத்து என்ன... இன்ஜினியரிங்தான். அப்படித்தான் நானும் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்தேன். அப்பா உமாபதி பிசினஸ்மேன், அம்மா லட்சுமி ஹவுஸ் ஒயிஃப். படிப்ஸ் பொண்ணு நடிப்ஸ் துறைக்குள்ள வந்தது எப்படி?
வீட்டிலேயும் இதே அதிர்ச்சிதான். நீட், அகாடமி இப்படி எல்லாம் சுத்திட்டு திடீர்னு சினிமாவானு ஒரே குழப்பத்தில் இருந்தாங்க. ஆனா, அவங்கள ஆரம்பத்திலிருந்தே ஒருவித குழப்பத்திலேயேதான் நான் வைச்சிருக்கேன்! பயாலஜி அடுத்து, கம்ப்யூட்டர் சயின்ஸ், நீட்... இப்படியே பத்தாம் வகுப்பிலிருந்து என் அம்மா, அப்பாவை ஒரு அதிர்ச்சி மொடிலேயேதான் வெச்சிருக்கேன்.
ரத்தம் சார்ந்த ஆய்வுக்கூட பயிற்சியிலெல்லாம் கூட சேரலாம்னு அப்பாவைக் கூட்டிட்டு அலைஞ்சிருக்கேன். அதனால இதையும் அப்படி ஒரு அதிர்ச்சியாதான் ஏத்துக்கிட்டாங்க. என்ன ஒரே சந்தோஷம்... ஆரம்பமே கொஞ்சம் பெரிய படங்கள் என்கிறதால அதிர்ச்சியோடு நிக்குது. கோபமா மாறலை!
ட்ரீம் ரோல் ஏதேனும் இருக்கா?
கதையிலே 10 நிமிஷங்கள் வந்தாலும் நான் கதையிலே யாரு... இந்தக் கேள்விக்கு சரியான பதில் கிடைச்சாலே அந்தக் கேரக்டர்கள் எல்லாமே எனக்கு ட்ரீம் ரோல்தான். நடிப்பைத் தவிர வேறு எதில் அதீத நாட்டம்? சின்ன வயசுல இருந்து நியூஸ் ரீடிங் வேலை மேல ஆர்வம் இருந்த காரணமோ என்னவோ இந்த பிரேக்கிங் நியூஸ் மேல எப்பவுமே ஒரு ஈடுபாடு உண்டு. காலை முதல் மாலை வரை நடக்கும் நிகழ்வுகள், நியூஸை ஏதாவது ஒரு வகையில தெரிஞ்சுக்க ஆசைப்படுவேன். நிறைய எழுதுவேன். தமிழ் மொழியில எழுத பிடிக்கும். பிடிச்ச நடிகர் யார்?
ஆல் டைம் ஃபேவரைட் சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவருடைய ஸ்டைல், மாஸ் ஓபனிங் இதுக்கெல்லாம் நான் மயங்குவேன்னு சொல்லணும். அடுத்து கமல் சார்... ஒரு மனுஷன், தான் ரசிச்ச ஒரு கலைக்காக இவ்வளவு டெடிகேஷன் பண்ண முடியுமானு இப்ப வரை வியப்புல இருக்கேன்.இளைஞர்களுக்கு இவங்க ரெண்டு பேருமே கண்ணு முன்னாடி இருக்குற மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். எப்படிப்பட்ட உயரம் போனாலும் கூட ரெண்டு பேர்கிட்டயும் எந்த தலைக்கனமோ பந்தாவோ இல்ல. இன்னைக்கு நடிக்க வர யங்ஸ்டர்ஸ் இவங்க ரெண்டு பேரையும் பார்த்து கத்துக்கணும்னு நினைக்கிறேன்.
எனக்கும் அவங்கதான் ரோல் மாடல். அடுத்து ஹாலிவுட் வரையிலும் போய் தமிழ் சினிமாவையும் தமிழர்களையும் தலைநிமிர வெச்சிருக்கும் தனுஷ் சார். அவருடைய நடிப்புக்கு நான் அடிமை. நல்லா படிச்சு முடிச்சு சினிமாவுக்குள்ள நுழையும்போது என்னென்ன பிளஸ்... மைனஸ் கிடைச்சிருக்கு?
நமக்கு என்ன வேணும்... நாம எதை நோக்கி பயணிச்சிட்டு இருக்கோம்னு ஒரு தெளிவு இருக்கும். ஆணும் பெண்ணும் படிச்சிருந்தா எங்கே போனாலும் அதற்குரிய மரியாதை கிடைக்கும். அதை நான் கண்கூடா பார்க்கறேன். மைனஸ்... ஒண்ணே ஒண்ணுதான். ரொம்ப சீக்கிரமே நடிக்க வந்திருக்கலாம்... இன்னும் நிறைய வாய்ப்புகள் முன்னாடியே கதவைத் தட்டி இருக்கும்! மத்தபடி படிப்பு எனக்கு முதல்ல மரியாதையை வாங்கிக் கொடுத்திருக்கு; பக்குவ நிலை கொடுத்திருக்கு.
ஷாலினி நியூட்டன்
|