Must Watch



கட்புட்லி

சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி, வசூலை அள்ளிய தமிழ்ப்படம், ‘ராட்சசன்’. இதன் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்தான் ‘கட்புட்லி’. கடந்த வாரம் ‘ஹாட்ஸ்டாரி’ல் நேரிடையாக வெளியாகி பார்வைகளை அள்ளி வருகிறது.  இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி மாணவிகளைக் கடத்தி கொலை செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கொலையாளியைக் குறித்து ஒரு தடயமும் கிடைப்பதில்லை.

இன்னொரு பக்கம் சீரியல் கில்லர்களைக் குறித்து பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து, ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறான் இயக்குநர் ஆகும் கனவில் இருக்கும் அர்ஜன்.
பல தயாரிப்பாளர்களிடம் கதையைச் சொல்லியும் யாரும் படம் தயாரிக்க முன்வரவில்லை. அதனால் உறவினர் ஒருவரின் உதவியால் சப் இன்ஸ்பெக்டர் ஆகிவிடுகிறான் அர்ஜன்.

அவன் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இன்னொரு பள்ளி மாணவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். சினிமா கதைக்காக சீரியல் கில்லர்களைக் குறித்து ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்களை வைத்து பள்ளி மாணவிகளைக் கொலை செய்பவனைக் கண்டுபிடிக்க களத்தில் குதிக்கும் அர்ஜனின் இன்வெஸ்டிகேசன் பயணமே திரைக்கதை. ‘ராட்சசனில்’ இருந்த விறுவிறுப்பும், எதார்த்தமும் இதில் காணவில்லை. அர்ஜனாகப் பொருந்த முயற்சித்திருக்கிறார் அக்‌ஷய் குமார்.  படத்தின் இயக்குநர் ரஞ்சித் எம். திவாரி.

மீ டைம்

ஜாலியா, கலகலப்பா ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘மீ டைம்’ எனும் ஆங்கிலப்படம். துடிப்பான, உற்சாகமான குடும்பத் தலைவன் சன்னி. அவனுடைய மனைவி வேலைக்குச் செல்கிறாள். மகனும் , மகளும் பள்ளியில் படிக்கின்றனர். சமைப்பது, குழந்தைகளைப் பள்ளியில் கொண்டுபோய் விடுவது, அழைத்து வருவது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு ஹவுஸ் ஹஸ்பெண்டாக
இருக்கிறார் சன்னி.

சன்னியின் உயிர்த்தோழன் ஹக். ஜாலியாக ஊர் சுத்தலாம் என்று சன்னியை அழைத்துக்கொண்டே இருக்கிறான் ஹக். சன்னிக்கு ஊர் சுத்த ஆசை இருந்தாலும், நேரம் கிடைப்பதில்லை. தனக்கான நேரமே இல்லை என்று சலிப்படைகிறான் சன்னி.

இந்நிலையில் சன்னியின் மனைவியும், குழந்தைகளும் சில நாட்களுக்கு வெளியில் சென்று விடுகின்றனர். இதுதான் சரியான நேரம் என்று சன்னியும் ஹக்குடன் காட்டுக்குள் பயணம் போக, கலகலப்பாகிறது திரைக்கதை. லாஜிக்கை மறந்து சினிமாவை ரசிப்பவர்களுக்கு செம விருந்து வைத்திருக்கிறது இந்தப் படம். சன்னியாகவும், ஹக்காகவும் நடித்தவர்கள் மனதைக் கவர்கின்றனர். படத்தின் இயக்குநர் ஜான் ஹம்பர்க்.

அனன்யா

‘அமேசான் ப்ரைமின்’ டாப் லிஸ்ட்டில் இருக்கும் மராத்தி படம் ‘அனன்யா’. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் அனன்யா. படிப்பில் கோல்டு மெடல் வாங்கியிருக்கிறாள். சிஏ பாஸ் செய்து ஆடிட்டராக வேண்டும் என்பது அவளது லட்சியம். அவளுடைய அண்ணன் எம்பிஏ முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான்.

அப்பா ஓர் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் அனன்யாவின் அழகில் மயங்கி அவளைப் பெண் கேட்டு வருகிறது ஒரு பெரும் பணக்காரக் குடும்பம். சம்பந்தம் வைத்தால் அண்ணனுக்கு வேலை தருவதாகச் சொல்கிறார் மாப்பிள்ளையின் அப்பா. நல்ல சம்பந்தம் என்று அனன்யாவை ஒப்புக் கொள்ள வைக்கின்றனர் அப்பாவும், அண்ணனும்.  

அனன்யாவும் சம்மதிக்க நிச்சயதார்த்தம் முடிகிறது. திருமணத்துக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் அனன்யாவுக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. தன் இரண்டு கைகளையும் இழக்கிறாள். மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர்.  ஒருவருடைய உதவி இல்லாமல் வாழ முடியாத சூழலுக்குத் தள்ளப்படும் அனன்யா, எப்படி மீண்டு வருகிறாள் என்பதே திரைக்கதை. மன உறுதியுடன் போராடினால் மீண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்தப்படம். அனன்யாவாக நடித்தவர் மனதில் பதிகிறார். படத்தின் இயக்குநர் பிரதாப் பட்.

சமாரிட்டன்

ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டோலன் நடிப்பில் லேட்டஸ்ட்டாக வெளியாகியிருக்கும் ஆங்கிலப்படம், ‘சமாரிட்டன்’. தமிழ் டப்பிங்கில் ‘ப்ரைமில்’ காணக்கிடைக்கிறது.

கிரானைட் எனும் நகரத்தில் அதீத சக்தி படைத்த சமாரிட்டன், நிமிசிஸ் என்ற இரட்டைச் சகோதரர்கள் இருந்தனர். அவர்களைக் கொல்வதற்காக மக்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் உறங்கிய பிறகு வீட்டுக்குத் தீ வைத்து விடுகின்றனர்.

இந்த விபத்தில் இரட்டையர்களின் பெற்றோர் இறந்துவிடுகின்றனர். கடும் கோபத்துக்கு உள்ளாகும் நிமிசிஸ், மக்களுக்கு எதிராக மாறுகிறார். ஆனால், சமாரிட்டன் நல்லவனாகவே தொடர்கிறான். நிமிசிஸின் ஆட்டம் அதிகமாக சமாரிட்டன் அவனை எதிர்த்து சண்டையிடுகிறான்.

இதில் இருவருமே இறந்துவிடுகின்றனர்.  நிகழ்காலத்தில் சாம் எனும் சிறுவன் சமாரிட்டனின் பெரும் ரசிகனாக இருக்கிறான். அவன் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் ஜோவை சமாரிட்டன் என்று நம்புகிறான். ஓர் ஆபத்தில் சாம் சிக்கிக்கொள்ளும் போது ஜோதான் அவனைக் காப்பாற்றுகிறார்.

இந்நிலையில் நிமிசிஸ் போல ஒருவன் நகரத்தில் அட்டூழியம் செய்கிறான். சிறுவன் நம்புவதைப் போல ஜோ சமாரிட்டனாக மாறினாரா என்பதே மீதிக்கதை. வழக்கம்போல சில்வஸ்டர் ஸ்டோலன் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். படத்தின் இயக்குநர் ஜூலியஸ் அவெரி.

தொகுப்பு: த.சக்திவேல்