ஜெயலலிதாவின் கடைசிப் படம்...எனது முதல் படம்..!



தன் ஃப்ளாஷ்பேக்கை அசை போடுகிறார் நளினிகாந்த்

நடிகர் நளினிகாந்தை நினைவிருக்கிறதா? 1970களின் இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே அதே தோற்றத்துடன் சினிமாவில் வலம் வந்தவர். ஆனால், காலம் அவரை வில்லன் நடிகராக முன்நிறுத்தியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்இந்திய மொழிப் படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார் நளினிகாந்த். தமிழில், ‘முந்தானை முடிச்சு’, ‘ராசுக்குட்டி’, ‘ருத்ரா’ என நடிகர் பாக்யராஜின் பல படங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

பிறகு 90களின் மத்தியில் நடிப்பிலிருந்து விலகி, சின்னத்திரை தயாரிப்பாளராக கோலோச்சினார். பின்பு அதிலிருந்தும் விலகி பத்து ஆண்டுகள் ரிலாக்ஸாக வெவ்வேறு பணிகளைச் செய்துவிட்டு மீண்டும் நடிப்பிற்குள் வந்திருக்கிறார் நளினிகாந்த்.‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரியில் பி.எஸ்சி மேத்ஸ் படிச்சேன். காலேஜ்ல படிக்கிறப்பவே ஸ்போர்ட்ஸ் சேர்மனா இருந்தேன். தவிர, நடிப்பு, டான்ஸ்னு போட்டிகள்ல கலக்குவேன். காலேஜில் சிறந்த நடிகர்னு பெயர் வாங்கினேன்.

காலேஜ் முடிச்சதும் எனக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலைவாய்ப்பு எல்லாம்  வந்தது. ஆனா, எனக்கு சினிமா மேல் காதல். வீட்டுல நடிக்க எல்லாம் வேண்டாம்னு வற்புறுத்தினாங்க. நான் பிடிவாதமா வேறு வேலைக்குப் போகாமல் சினிமா சான்ஸிற்கு சுத்திட்டு இருந்தேன். இந்நேரம், இயக்குநர் ஏபி நாகராஜனும், தெலுங்கு தயாரிப்பாளர் டிவிஎஸ் ராஜும் தொடங்கின ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தேன். என் வீட்டுல பயங்கர எதிர்ப்பு. அப்ப டிவிஎஸ் ராஜ், ‘நீங்கதான் நல்லா நடிக்கிறீங்களே... பிறகு ஏன் இங்க படிக்கணும்னு நினைக்கிறீங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க’னு அட்வைஸ் பண்ணினார்.

நான் நிறைய கத்துக்கணும்னு சேர்ந்துட்டேன். அப்புறம், அங்கிருந்து வெளியே வந்து சினிமாவுக்கு முயற்சிக்கு பண்ணிக்கிட்டிருக்கிறப்ப ரஜினியும் தமிழ்நாடு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல கோர்ஸ் முடிச்சிட்டு வெளியே வந்தார். அப்ப, நடிச்சா கே.பாலசந்தர் சார் படத்துல நடிக்கணும்னு எல்லோருக்கும் ஒரு ஆசை இருந்தது. இல்லனா சினிமா பக்கமே போகக்கூடாதுனு ஒரு வைராக்கியத்துடன் வாழ்ந்த காலம்.   

பாலசந்தர் சார் பத்து ஆர்ட்டிஸ்ட்ஸை அறிமுகப்படுத்தினார். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணினேன். நானும் ரஜினியும் மாத்தி மாத்தி பாலசந்தர் சார் அலுவலகம் போவோம். அதுல ரஜினிக்கு லக் அடிச்சு பாலசந்தர் சார் படத்துல நடிச்சார். பிறகு, கொஞ்சநாள் சினிமாவிற்கு முயற்சி செய்தும் எனக்கு சரியா வாய்ப்பு அமையல. நான் சினிமாவுக்கு குட்பை சொல்லிட்டு மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் வேலைக்குப் போயிட்டேன். பம்பாய், டெல்லி, பெங்களூர், ஆந்திரானு பல ஊர்களைச் சுத்திட்டு மீண்டும் சென்னைக்கு வந்தேன்.

இனி சினிமாவே வேண்டாம்னு வேலை பார்த்திட்டு இருக்கும்போது சில புரொடியூசர்கள் அவங்களே வந்து என்னை அணுகினாங்க. நான் வேண்டாம்னு தவிர்த்தேன். அந்நேரம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேடம் கூட நடிக்க ஒப்பந்தமானேன். அவங்களுக்கு அது கடைசிப் படம். எனக்கு முதல்படம். ஆனா, அந்தப் படம் அறுபது சதவீதம் ஷூட்டிங் முடிஞ்ச நேரம், அன்றைய முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா மேடத்தை அரசியலுக்கு வரச்சொல்லி அழைச்சாங்க. அதனால, அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. அந்தப் படம் வெளிவந்திருந்தால் எனக்கு ஒரு நல்ல பெயர் கிடைச்சிருக்கும்.

பிறகு, தெலுங்கு இயக்குநர் தாசரி நாராயணராவ் இயக்கத்தில் ‘ரங்கூன் ரவுடி’ படத்தில் எனக்கு அறிமுகம் கிடைச்சது. அந்தப் படம் செம ஹிட். அப்புறம், ‘அடிமைப்பெண்’ டைரக்டர் கே.சங்கர் இயக்க, என்.டிஆர் ஹீரோவா நடிக்க, எம்ஜிஆர் படத்தைத் தயாரிச்சார். அந்தப் படம் பேரு, ‘சிருங்கார ராமுடு’. இதில் நான் செகண்ட் ஹீரோவா பண்ணினேன்.

இந்தப்படத்தில் எம்ஜிஆர்தான் என்னை போடச் சொன்னார். சரத்பாபு வில்லனா நடிச்சார். லதா ஹீரோயின் பண்ணினாங்க. இந்தப் படம் நல்ல பேர் வாங்கித் தந்தது. பிறகு, அடுத்தடுத்து தெலுங்கில் என்.டிஆர், சோபன்பாபு, நாகேஸ்வரராவ், சிரஞ்சீவினு பல முன்னணி ஹீரோக்களுடன் நடிச்சேன்.

தமிழ்ல ‘இதயம் பேசுகிறது’ மணியனின் தயாரிப்பில் ‘காதல் காதல் காதல்’ படத்துல அறிமுகமானேன். அப்புறம் சிவாஜி சார் தொடங்கி எல்லா நடிகர்களுடனும் ஆக்ட் பண்ணினேன். பாரதிராஜா இயக்கத்துல வெளியான ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்துல நடிகர் விஜயன் கேரக்டரில் நான் நடிக்க வேண்டியது. அந்தப் படத்துல நடிக்க முடியாமல் போனது இப்பவும் வருத்தமா இருக்கு.

பிறகு கே.பாலாஜி சார் தயாரிப்பில் ஐந்து படங்கள், பஞ்சு அருணாசலம் சார் யூனிட்டில் மூன்று படங்கள், ஏவிஎம் தயாரிப்பில் மூன்று படங்கள் என தமிழ்ல எழுபது படங்கள் வரை நடிச்சேன். தவிர, மலையாளத்துல பத்து படங்கள், தெலுங்கில் நாற்பது படங்கள், கன்னடத்தில் பத்து படங்கள்னு எல்லா மொழிகள்லயும் பண்ணினேன்...’’ என்கிறவர், சிரித்தபடி தொடர்ந்தார்.
‘‘இப்படியே போயிட்டு இருந்தப்ப பாக்யராஜ் சார் யூனிட்டில் ‘முந்தானை முடிச்சி’ல் நடிச்சேன்.

அது சில்வர் ஜுப்ளி படம். அப்ப எம்ஜிஆர் கையால் விருதும் பாராட்டும் பெற்றேன். அப்புறம் தொடர்ந்து பாக்யராஜ் சார்  படங்கள்ல நடிச்சேன். ‘ராசுக்குட்டி’ படத்துல சூப்பர் ரோல். அந்த ரோலைக் கொடுக்க பஞ்சு அருணாசலம் சார் கொஞ்சம் தயங்கினார். அப்ப பாக்யராஜ் சார், ‘ஒரே கேரக்டர்ல பலவிதமான முகபாவனைகளைக் காட்டக்கூடிய நடிகர்’னு சொல்லி என்மேல் நிறைய நம்பிக்கை வச்சு கொடுத்தார். சிறப்பா செய்தேன். என் வாழ்நாளில் மறக்கமுடியாத இயக்குநர் அவர். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டவன்.

இந்தப் படத்தை பார்த்திட்டு ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்கனு பஞ்சு சாரும் பாராட்டி, இனிமே எங்க கம்பெனி ஆர்ட்டிஸ்ட்னு சொன்னார். உடனே, ‘எங்க முதலாளி’படத்துல நடிக்க வச்சார். பிறகு ஒருகட்டத்துல நடிச்சது போதும்னு நினைச்சேன். எனக்கு திருமணமாகி இரண்டு பசங்க இருக்காங்க. மூத்தவன் சினிமாவில் ட்ரை பண்ணினான். செட்டாகல. எம்.எஸ் படிச்சிருக்கான். கல்யாணம் பண்ணிவைச்சிட்டேன். மருமகள் டாக்டர்தான். துபாய்ல இருக்காங்க. சின்ன பையன் சாப்ட்வேர் இஞ்ஜினியர். அவன் மனைவியும் டாக்டர்தான்.

இதன்பிறகு 1995ல் சீரியல் தயாரிச்சு சன் டிவிக்கு கொடுக்க ஆரம்பிச்சேன். எனக்காக நிறைய நடிகர், நடிகைகள் ஒத்துழைச்சாங்க. அதுக்கப்புறம் பத்து வருஷங்கள் எதிலும் நடிக்காமல் சும்மாவே இருந்தேன். அடுத்து ரீ என்டரி, ‘யாமிருக்க பயமே’ படம் மூலம் வந்தது. அதுல ஃப்ரைடு ரைஸ் திருடுகிற கிழவனா நடிச்சேன். அப்ப யார் இந்த கிழவர்னு பலரும் கேட்டாங்க. அப்படியே தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது. விஜய் நடித்த, ‘கத்தி’, விஜய் ஆண்டனி நடித்த ‘அண்ணாதுரை’ உள்ளிட்ட படங்கள்ல நடிச்னே்.

முதியவர்களைப் பற்றின ‘சியான்கள்’ படம் பெரிய வரவேற்பு பெற்றது. இப்படியே என் ஜர்னி போயிட்டு இருக்கு...’’ என்கிறவர், ‘‘இப்ப டைரக்டர் எச்.வினோத் இயக்கத்துல அஜித் சார் படம் பண்ணிட்டு இருக்கேன். இதனுடன் இரண்டு சீரியல்கள்ல நடிக்கிறேன். கடவுள் மறுபடியும் லைஃப் கொடுத்திருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என உற்சாகமாகச் சொல்கிறார் நளினிகாந்த்.

ஆர்.சந்திரசேகர்