தன் பசிக்கு தன் மக்களையே விழுங்குபவன்தான் இந்த ‘பகாசூரன்’!



‘‘ஒவ்வொரு வீட்டுலயும் பசங்க கதவை மூடிட்டு என்ன செய்யறாங்கன்னு பேரண்ட்ஸ் கவனிச்சாதான் இந்தக் கிரைம் குறையும்...’’அழுத்தமாக நட்டி நட்ராஜ் பேசும் அட்வைஸ், வித்யாசமான கெட்டப்பில் இயக்குநர் செல்வராகவன் என ‘பகாசூரன்’ டீஸர் இப்போது டிரெண்டிங் மோட்.
‘‘ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போல?!’’ கேட்டவுடன் சிரித்துக் கொண்டு படம் குறித்து பேசத் தொடங்கினார்கள் இயக்குநர் மோகன் ஜியும் நட்டி நட்ராஜும்.‘‘மகாபாரதத்தில் நிறைய கேரக்டர்கள் இருக்கு. அதிலே தன்னுடைய அகோரப் பசிக்கு தன் மக்களையே விழுங்கின அசுரன்தான் பகாசூரன். அந்த கேரக்டரை அடிப்படையாக வைத்து உருவாக்கின உண்மைச் சம்பவங்களின் கோர்வைதான் இந்தப் படம்...’’ ‘பகாசூரன்’ பெயர்க் காரணத்தோடு தொடங்கினார் மோகன் ஜி.
இயக்குனர் செல்வராகவன், நட்டி நட்ராஜ்... எப்படி இந்த காம்போ நிகழ்ந்தது?

மோகன் ஜி: இந்தப் படத்தின் மிகப்பெரிய ரெண்டு கேரக்டர்கள் செல்வராகவன் சாரும் நட்டி சாரும்தான். இந்த ரெண்டு கேரக்டர்களுக்கும் ரொம்ப ஸ்ட்ராங்கான இரு நடிகர்கள் தேவைப்பட்டாங்க. அப்பதான் ‘சாணிக் காயிதம்’ படத்தின் போஸ்டர் ரிலீஸ் ஆச்சு. தலைவர் செல்வராகவன் மாஸ் போஸ் கொடுத்து தெறிக்க விட்டிருந்தார்.
சட்டென ஒரு ஸ்பார்க்... நடந்தாலும் ஓகே நடக்கலைன்னாலும் ஓகே, கேட்டுப் பார்க்கலாம்னு செல்வராகவன் சார்கிட்ட கதை சொன்னேன். பொறுமையா உட்கார்ந்து கதை கேட்டவர், ‘நீங்க போங்க... இந்தப் படத்துல நான்தான் நடிக்கிறேன்’னு சொல்லி அனுப்பினார்.

நட்டி சார் என்னுடைய முந்தைய படங்கள்லயே நடிக்க வேண்டியது. ஆனா, அமையலை. இந்தப் படத்தில் விடக்கூடாதுனு ஒருவழியா அவரை விரட்டிப் பிடிச்சிட்டேன். செல்வராகவன் பற்றி சொல்லுங்க...ஆர்வமாக முந்திக்கொண்டு முதலில் பதில் சொன்னார் நட்டி நட்ராஜ்!நட்ராஜ்: இந்தக் கதை எப்படிப்பட்ட கதை... இதுல என்ன பிரச்னை இருக்கு என்பதையெல்லாம் கடந்து நடிப்புனு எடுத்துக்கிட்டா செல்வராகவன் சாருக்கு இருக்கும் அத்தனை விருதுகளும் கிடைக்கும்! அது எப்படி ஒரு மனுஷன் பத்து ஸ்டெப் நடந்து வர்றதுக்குள்ள அப்படியே கேரக்டரா மாறமுடியும்னு ரொம்ப ஆச்சரியப்பட்டு பார்த்தேன்.

கேஷுவலா பேசிட்டு இருப்பார். சீன் சீட்டை வாங்கி படிச்சிட்டு கொஞ்ச நேரம் யோசிப்பார்... எழுந்து கேமரா முன்னாடி நிற்கும்போது அப்படியே வேற ஒரு செல்வராகவன் சாரைப் பார்க்கலாம். அவர் பாடி லாங்குவேஜ், நடிப்பு இதெல்லாம் ரொம்ப லேட்டா தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரம் இந்திய சினிமாவே அவரை எடுத்துக்கும்!

மோகன் ஜி: செல்வராகவன் சார் பற்றி மட்டும் கிடையாது... நட்டி சார் பற்றியும் சொல்லணும். ஒரு பக்கம் இந்தியாவே ஏறெடுத்துப் பார்க்கும் கேமராமேன், இன்னொரு
பக்கம் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டிங் இயக்குநர்... ரெண்டு பேர் கிட்டயும் இந்த சீன் இப்படி வரணும்னு எங்கயும் விளக்கிச் சொல்லவே இல்ல. ஜஸ்ட் லைக் தட் மாஸ் பண்ணிட்டு போயிடுவாங்க ரெண்டு பேரும்!

மோகன் ஜி-னா சர்ச்சை நிச்சயம் இருக்கும்... அவர் கதை சொன்ன தருணத்துல உங்களுக்கு என்ன தோன்றியது..?

நட்ராஜ்: கதை கேட்கும்போது படத்துல இருக்கற உண்மை சம்பவங்களையும், ஆபத்தையும் மட்டும்தான் உள்ள வாங்கிக்கிட்டேன். ஒரு சில சம்பவம் என்னை உலுக்கிடுச்சு. நிச்சயம் இந்தப் படம் வரும்பொழுது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு மிகப்பெரிய புரிதல் உருவாகும். இந்த மாதிரியான ஒரு படத்துல நான் இருக்கறது எனக்கு சந்தோஷமா இருக்கு. ஒரு சினிமா ரெண்டு விஷயம் செய்யணும்... ஒண்ணு, கொடுத்த காசுக்கு நல்ல என்டர்டெயின்மென்டா அவங்களை மகிழ்விச்சு வெளிய அனுப்பணும் அல்லது சமூகத்தில் ஒரு மாற்றம், சின்ன தாக்கத்தை ஏற்படுத்தணும்.

அதைத்தான் ‘சதுரங்க வேட்டை’ படத்துல செய்திருந்தோம். ஒரு வழக்கின் தீர்ப்பில் கூட ‘சதுரங்க வேட்டை’ படத்தை மேற்கோள் காட்டும் அளவுக்கு அந்தப் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த மாதிரிதான் ‘பகாசூரன்’ படமும் இருக்கும்.  

மற்ற கேரக்டர்ஸ், டெக்னீஷியன்ஸ்..?

மோகன் ஜி: படத்தின் கதையை நகர்த்தப் போவது செல்வராகவன் சாரும் நட்டி சாரும்தான். இதுக்கு முன்னாடி செய்யாத ஒரு வித்தியாசமான கேரக்டர்ல ராதாரவி சார் நடிச்சிருக்கார். கே.ராஜன் சாருக்கு நல்ல எமோஷனலான ஒரு கேரக்டர். மன்சூர் அலிகான் சார் ஒரு பாட்டு செய்திருக்கார். அடுத்து தேவதர்ஷினி மேடம், டைரக்டர் சரவணன் சுப்பையா சார் ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல ரோல். தயாரிப்பாளர் தேனப்பன் சாரையும் கூட விட்டு வைக்கல! அவருக்கும் ஒரு முக்கியமான ரோல் இந்த படத்தில் இருக்கு.

ஒளிப்பதிவு ஃபரூக் கே பாஷா. பின்னணி மியூசிக்கிற்காகவே அதிகம் பேசப்பட்டவர் சாம் சி எஸ். அவர்தான் இந்தப் படத்துக்கு மியூசிக். எடிட்டர் கமல் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தேவராஜ் இன்னொரு எடிட்டர். என்னுடைய முந்தைய படங்களுக்கும் அவர்தான் எடிட்டர். சினிமாவில் சாதி அரசியல் தேவையா?

நட்ராஜ்: வேண்டாம்... பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கிறவன் எந்த சாதி, மதம், மொழினு தெரியாம வந்து செல்கிற ஒரே இடம் சினிமாதான். அங்கேயும் சாதி வேண்டாம்னுதான் நான் சொல்வேன். ஆனா, ஒருசில உண்மைகளைப் பேசும்போது தானாகவே அந்த அரசியல் பின்னணி வெளிப்பட்டுடும். அதையும் தாண்டி படத்துக்குள்ள என்ன கருத்துகள் இருக்கு... என்ன விழிப்புணர்வு இருக்குனு மட்டும் மக்கள் எடுத்துக்கிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை எனக்கு கொடுத்த கேரக்டர் இது. அதிலே நான் நடிச்சிருக்கேன். மத்தபடி எந்த இயக்குநர், எந்த தயாரிப்பாளர் என்னைக் கூப்பிட்டு வேலை கொடுத்தாலும் எதுவும் சொல்லாம செய்திட்டு போற ஆள் நான். மோகன் ஜி: என் முதல் படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. அந்தப் படத்துல எந்த சாதி அரசியலும் பேசலை. கம்யூனிசம் பேசினேன். ஆக்‌ஷன், கேங்ஸ்டர் படங்கள் எடுக்கணும்னு இயக்குநரானேன். கால மாற்றம்... நடக்கும் சம்பவம் நமக்குத் தெரிந்த சில உண்மைகளையும் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளுச்சு. மத்தபடி சாதிப் பிரச்னையை உருவாக்கணும் என்ற எண்ணம் கிடையாது.

‘பகாசூரன்’ படம் சமூகத்துக்கு என்ன செய்யப் போகுது?

நட்ராஜ்: கண்ணுக்குத் தெரிந்த, கையில் இருக்கற மிகப்பெரிய எமன், டெக்னாலஜி. இப்ப வரைக்கும் நம்ம கையில வெறும் 4Gதான் இருக்கு. கூடிய சீக்கிரம் 5G, 6G... எல்லாம் வரப்போகுது. அதெல்லாம் வந்தா எதிர்கால சந்ததி இன்னும் எப்படிப்பட்ட ஆபத்தான வாழ்க்கைக்குள்ள போகப் போறாங்க என்பதற்கான முந்தைய அலர்ட்தான் இந்தப் படம்.
மோகன் ஜி: எந்தப் படத்தையும் சமூகத்துக்கு என்ன செய்யும்னு நினைச்சு எடுக்கிறதே கிடையாது. நமக்குத் தெரிந்த சில உண்மைச் சம்பவங்கள் மூலமா மக்களை அலர்ட் செய்யணும்னு நினைக்கிறோம். அதைத்தான் இந்தப் படத்திலும் செய்திருக்கோம்.

எப்போதுதான் இந்த சண்டை முடியும்... சினிமாவை சினிமாவாகவே விடலாமே?

நட்ராஜ்: அதைத்தான் நானும் சொல்றேன்... சினிமாவை சினிமாவாகவே பார்க்கறது நல்லது. அந்த இயக்குநர் இந்த சாதி... அரசியல் பேசுகிறார்... இந்த இயக்குநர் அந்த சாதி... அரசியல் பேசுகிறார்... இதையெல்லாம் தள்ளி ஓரமா வைச்சுட்டு படத்துக்குள்ள இருக்கிற உண்மைத் தன்மையையும் அதனால் சமூகத்துக்கு என்ன நல்லது கிடைக்கும்னும் பார்த்தா போதும்.
மோகன் ஜி: சினிமாவை நேசிச்சு உள்ள வந்தவன் நான். என்னைச் சுற்றி என்னென்ன சம்பவங்கள் நடந்துச்சு... நடந்துகிட்டு இருக்கு என்கிற உண்மையை மட்டும்தான் மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லணும்னு நினைச்சேன், நினைக்கறேன்.

எல்லா இயக்குநர்களுமே அவங்க அவங்க வாழ்ந்த சூழலில் நடந்த உண்மைச் சம்பவங்களையும் சந்தித்த மக்களையும் வச்சுதான் கதைகள் உருவாக்கறாங்க. நானும் அப்படித்தான்.
நட்டி நட்ராஜ்: பொதுவா தமிழ் மக்கள் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதேபோல் பாரம்பரிய பழமையான கலாசாரங்கள் மற்ற மொழிகளைக் காட்டிலும் நமக்கு கொஞ்சம் அதிகம். அதனாலதான் இங்க சின்ன விஷயம் கூட பெருசா மாறிடுது.

நாம எந்தச் செய்தியை, எந்தக் கருத்தை எப்படி மக்கள் கிட்ட சேர்க்கறோம்னு உணர்ந்து செயல்பட்டாலே பாதி பிரச்னைகள் தீரும். மோகன் ஜி: சமூகம் சார்ந்து சினிமாவில் பொய் சொன்னா ஜெயிக்க முடியாது. என்று சமூகத்தில் இந்தப் பிரச்னைகள் எல்லாம் ஓயுதோ அன்று சினிமா சினிமாவாகவே உருவாகும்... ஃபேன்டஸி படங்கள், பொழுதுபோக்கு, கமர்ஷியல் சினிமா எல்லாம் அதிகரிக்கும்.

ஷாலினி நியூட்டன்