காந்திக்கு முன்பே காந்தியின் கனவை நினைவாக்கிய மன்னார்குடி!



ஆம். அந்தப் பெருமை நம் தமிழ்நாட்டுக்கு உரியது!மகாத்மா காந்தியின் கனவு, தேசிய பள்ளி. அதுவும் அனைவருக்கும் கல்வி, தாய்மொழியில் கல்வி, பெண்களுக்கு கல்வி, கைத்தொழில் கல்வி... மொத்தத்தில் அறிவு, ஆன்மீகம் மற்றும் உடல் ஆற்றலை மேம்படுத்துவதற்கான அம்சத்தைக் கொண்டதாக கல்வி இருக்க வேண்டும்.
இதுதான் அவர் கண்ட கனவு.1920களில் காந்தி கண்ட இந்த தேசியக் கல்வியையே தன் பெயராகக் கொண்டு அதற்கும் முன்பே 1899ல் தொடங்கப்பட்டு இன்று வரை காந்தியின் கனவை நினைவாக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது மன்னார்குடியில் இருக்கும் தேசியப் பள்ளி!

இதை ஆரம்பித்து வைத்தவர்கள் இரண்டு சமூகத்தின் பிரதிநிதிகள். ஒருவர் சிங்காரவேல் உடையார்; மற்றவர் ராமதுரை ஐயர். ராமதுரையின் வழிவந்தவர்கள் விஸ்வநாதன் ஐயர், ஸ்ரீநிவாச ஐயர், சேதுராமன். 1940களில் ஸ்ரீநிவாசன் தலைமை ஆசிரியராக இருந்தபோது மேலும் விரிவாக்கப்பட்ட இந்தப் பள்ளியை 1990 முதல் நிர்வகித்து வருபவர் ஸ்ரீநிவாசனின் மகன் சேதுராமன். தனியார் பள்ளிகள் மூலம் ஏற்பட்ட ஆங்கில மோகம், மாயை, கல்லூரி நுழைவுத் தேர்வுகள், வசதிக்கேற்ப பள்ளிக்கூடங்கள், படித்தாலும் இந்தியாவில் வேலை கிடைக்குமா என்னும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துவரும் இன்றைய கல்விச் சூழ்நிலையில் மன்னார்குடி தேசியப் பள்ளி, அந்நகரை ஒரு கல்வி நகரமாக மாற்றியிருக்கிறது.

மன்னார்குடியில் இயங்கி வரும் இந்த தேசியப் பள்ளியின் பயணத்தை நிகழ்கால, எதிர்காலத் தலைமுறையினர் அறிய வேண்டும் என்பதற்காக ஆவணமாக்கியிருக்கிறார்கள். புத்தகமாக வந்திருக்கும் அந்த ஆவணத்தின் பெயர் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’. தொகுத்திருப்பவர் பத்திரிகையாளரான சமஸ்.‘‘1899களில் இந்திய தேசிய நீரோட்டம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அனைவரது மனதிலும் விடுதலை உணர்ச்சி மேலோங்கியிருந்தது.

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தன் சொந்தப் பெயரை மறந்து தேசியம் என்ற பெயருடன் ஒன்றிப்போனான். அப்படித்தான் இந்தப் பள்ளியை ஆரம்பித்த என் கொள்ளுப் பாட்டனார் ராமதுரைக்கும் சிங்காரவேல் உடையாருக்கும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்...’’ மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் சேதுராமன்.

‘‘இந்தப் பள்ளி தொடங்கப்படுவதற்கு முன்பு இதே மன்னார்குடியில் ஆங்கிலேயர்களால் ஒரு பள்ளி தொடங்கப்பட்டது. அப்பள்ளியில் பயின்ற மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து இந்துக்களுக்காக இந்தத் தேசியப் பள்ளி தொடங்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. 

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே இந்தப் பள்ளியைத் தொடங்க காரணமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில், ஆங்கிலேயர்களின் ‘பின்லே பள்ளி’யில் இன்றும்  ‘பால் ரங்கராமானுஜம்’ என்ற திறந்தவெளி அரங்கு இருக்கிறது. அந்த அரங்கின் பெயருக்குக் காரணமான ரங்கராமானுஜம் என்ற மாணவன் மதமாற்றம் செய்யப்பட்ட 7 பிராமண மாணவர்களில் ஒருவன் என்பது ‘பால் ரங்கராமானுஜம்’ என்ற முழுப் பெயரில் இருந்து தெரிய வருகிறது அல்லவா!

எனவே, இந்தப் பள்ளி தொடங்கப்பட்டதற்கான முக்கிய நோக்கம், எல்லோருக்கும் கல்வி என்பதுதான். அந்தக் காலத்தில் - அதாவது ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்திலிருந்து - 1915 வரை தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் மட்டுமே இருந்தன. அந்தப் பள்ளிகளும் ஆங்கிலவழியில்தான் நடந்தன. இதனால்தான் தேசிய பள்ளிக்கு முன்பே ஆரம்பிக்கபட்ட ‘பின்லே’ ஒரு கல்லூரியாகத்தான் தொடங்கியது. ஆனால், ஆங்கிலம் மட்டுமே பாட மொழியாக இருந்ததால் 1950க்குப் பிறகு மாணவர் சேர்க்கை குறைந்து, வெறும் தமிழ் மொழி வழி பள்ளி
யாக சுருங்கிப்போனது.

ஆனால், ஆரம்பத்தில் தமிழ் வழியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசியப் பள்ளி, 1971க்குப் பிறகு தமிழ், ஆங்கிலம் என இருமொழி பள்ளியாக வளர்ந்து இன்றும் நிலைத்து நிற்கிறது...’’ என்ற சேதுராமனிடம், தேசியப் பள்ளி மற்ற பள்ளிகளைவிட காந்தி கண்ட உள்ளூர் மயம், அனைவருக்குமான கல்வி மற்றும் தேசிய உணர்வுகளில் எப்படி சாதித்தது என்று கேட்டோம்.
‘‘அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் சில இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்ட தனியார் கல்லூரிகளில் ஆங்கில வழி போதனையே இருந்தது. வசதி படைத்தவர்களின் குழந்தைகளே இப்பள்ளிகளில் பயின்றார்கள்.

ஆனால், அன்றும் இன்றும் நம் நாட்டில் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினருமே அதிகம். இவர்கள் கல்வி பயில்வதற்கான கூடமாகவே இப்பள்ளி தொடங்கப்பட்டது. என்றாலும் அங்கீகாரம் பெற அன்று பல நடைமுறைகள் இருந்தன. உதாரணமாக, இந்த தேசியப் பள்ளி ஆரம்பித்தபோது 6ம் வகுப்பு முதல் பாடங்களை எடுத்தோம். இதற்கு ஆரம்ப பாடசாலை, பள்ளிக்கு மைதானம் ஆகியவை எல்லாம் இருக்க வேண்டும் என்பது ஆங்கிலேயர்கள் வகுத்த விதி.

எனவே, என் தாத்தா தன் சொத்துக்களை எல்லாம் விற்று இந்த இரண்டு விஷயத்தையும் செய்தார். இதனால் கடனாளியானார். இறக்கும்போது, இருந்த கொஞ்சம் நஞ்சம் சொத்துக்களையும் விற்று, அக்கடன்களை அடைத்தார். என் அப்பா நிவாசன் காலத்தில்தான் அங்கீகாரமும், அரசு உதவி பெறும் பள்ளியாகவும் 1950களில் இப்பள்ளி உயர்ந்தது. உள்ளூர் மயத்தைப் பொறுத்தளவில் அப்பாதான் புதிய வகை பாடத்திட்டங்களை புதுமையாகப் புகுத்தினார்.

எடுத்துக்காட்டாக, உலகளவில் எந்தவித தொழில்நுட்பம் அறிமுகமானாலும் அதை இந்த தேசியப் பள்ளியில் ஒரு பாடமாக வைத்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதை தன் கடமையாக நினைத்தார். பள்ளி வளாகத்திலேயே குப்பைகளைச் சேகரித்து பேப்பர் செய்வது, பள்ளிக்கூட அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பது என பல கைத்
தொழில்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.

அன்று அரசின் மேற்பார்வையில் மையப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள் எதுவும் இல்லை. அந்தந்தப் பள்ளிகள்தான் தங்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கவேண்டும். அப்பா இதில் சளைத்தவரில்லை. 1930களில் இந்தியாவுக்கு காமிரா வந்தபோது அதை வாங்கி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து புகைப்படக் கண்காட்சியையும் அன்று நடத்தினார்.

அதுபோல மன்னார்குடிக்கு மின்சாரம் வந்தபோது வீடுகளில் எப்படி வயரிங் செய்வது என்று கும்பகோணத்தில் இருந்த ஒரே ஒரு எலக்ட்ரீஷியனை வைத்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்...’’ என்ற சேதுராமன், எல்லோருக்கும் கல்வி எனும் தாரக மந்திரத்தை இப்பள்ளி எப்படி கடைப்பிடிக்கிறது என்றும் விவரித்தார்.

‘‘ஒருகாலத்தில் பிராமண மாணவர்கள்தான் 90 விழுக்காடு இருந்தனர். கல்வி பற்றி காந்தி அக்கறை கொண்டு பிரசாரம் செய்ததன் பயனாக பள்ளிகளில் கிராம மாணவர்களின் எண்ணிக்கை பெருகியது. 1970 வரை பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. இன்று சுமார் 70 சதவிகித மாணவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலைக்கு மாறியிருக்கிறது.

இது இந்த தேசியப் பள்ளியின் தேசிய நீரோட்டத்தை காண்பிக்கிறது; எல்லோருக்கும் கல்வி என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதற்கு இப்புள்ளி விபரமே உதாரணம்.அதேநேரம் இன்று இந்தியாவில் கல்வியின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக மாறி வருவது இந்த தேசியப் பள்ளியின் சாதனைக்கு சவாலாகத்தான் இருக்கிறது.

தமிழக கல்லூரிகளில் கம்ப்யூட்டர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே 1990களில் 6 முதல் 11ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் வகுப்புகள் இங்கு எடுக்கப்பட்டன! ஆங்கில வழி கல்வியை கற்பிக்கும் மற்ற பள்ளிகளை விட, இந்தியா அல்லது தமிழகம் எங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் எங்களைப் போன்ற பள்ளிகளே மாணவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறது. எங்கள் பள்ளி போன்று தமிழ் வழியில் கற்பிக்கப்பட்ட மாணவர்களே சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் இன்று உயர் பொறுப்பில் இருக்கிறார்கள்.

ஆனாலும் இன்றும் குறையாத ஆங்கில மோகத்தால் தனியார் மெட்ரிக் பள்ளிகளை இப்பொழுதும் பெற்றோரும் மாணவர்களும் நாடுகிறார்கள். இச்சூழலில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் நிர்வாகத்தினரும் கொஞ்சம் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தால் மெட்ரிக் மோகத்தை இந்த மண்ணிலிருந்து துடைத்து எறியலாம்.  அதற்கேற்ப இன்றைய தமிழக அரசும் இதுதொடர்பாக பல வேலைகளில் இறங்கியுள்ளது. எதிர்காலம்தான் தேசியப் பள்ளிகளுக்கு புத்துயிர் கொடுக்கும்...’’ என்கிறார் சேதுராமன்.

டி.ரஞ்சித்