லிவிங்ஸ்டன் மகள்! கெத்தாக சொல்கிறார் அருவி ஜோவிதா



‘அருவி’ தொடரில் அருவியாக பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி வருபவர் ஜோவிதா. துறுதுறுவென, போல்டாக நடிக்கும் அந்த அருவியை பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் கைதட்டி ரசிக்கின்றனர். ‘‘இது, நான்-ப்ரைம் டைம்ல வர்ற தொடர்தானேனு நினைச்சேன். ஆனா, மக்கள்கிட்ட இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கல. ரொம்ப பரவலா ரீச்சாகியிருக்கு. போகிற இடங்களெல்லாம் ‘அருவி’, ‘அருவி’னு மக்கள் கூப்பிடறதை பார்க்கிறப்ப என்ன சொல்றதுனே தெரியல. சன் டிவிக்குதான் நன்றி சொல்லணும்...’’ அவ்வளவு சந்தோஷமாகப் பேசுகிறார் ஜோவிதா.

இவர் வேறு யாருமல்ல. ஹீரோ, வில்லன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், இயக்குநர், கதாசிரியர்... என பன்முகத்தன்மை கொண்ட நடிகர் லிவிங்ஸ்டனின் மகள். சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு ஷூட்டிங் ஹவுஸில் அருவியாக பாய்ந்து கொண்டிருந்தவரை இடைவெளியில் நிறுத்தினோம். ‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைலதான். அண்ணா ஆதர்ஷ் காலேஜ்ல பி.ஏ டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட் படிச்சேன். அப்பா லிவிங்ஸ்டனுக்கும், அம்மா ஜெஸிந்தாவுக்கும் நான் நிறைய படிக்கணும்னு ஆசை. அவங்களுக்கு என்னை ஒரு கல்லூரி பேராசிரியரா ஆக்கணும்னு விருப்பம். ஆனா, எனக்கு நடிப்புல ஆர்வம் இருந்ததால, அவங்க அனுமதியுடன் நடிக்க வந்துட்டேன்.  

எனக்கு முதல்ல நடிக்கிற ஐடியா கிடையாது. அது எப்படி ஆரம்பிச்சதுனா, நான் பிளஸ் டூ முடிச்சிட்டு சம்மர் லீவுல இருந்தேன். அப்ப ஒரு பிரைவேட் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிக்கிற மாணவர்கள், குறும்படத்திற்காக அப்பாவை நடிக்க கேட்டு வீட்டுக்கு வந்தாங்க. என்னைப் பார்த்துட்டு, ‘நடிக்கிறீங்களா... இந்த குறும்படத்திற்கு ஹீரோயின் தேடிட்டு இருக்கோம்’னு கேட்டாங்க. நான் ரொம்ப பயந்தேன். ஏன்னா, நான் வீட்டுக்குள்ளே வளர்ந்த பொண்ணு. ஸ்கூல் விட்டால் வீடு, வீடு விட்டால் ஸ்கூல்னுதான் இருந்தேன். அப்புறம், கல்லூரியிலும் அப்படியேதான் வளர்ந்தேன். என் தங்கச்சி ஜெம்மாவும் அப்படிதான். அவ இப்ப பிபிஏ படிக்கிறா.

வீட்டுல செம கண்டிப்பு. அந்த மைண்ட்செட்ல வளரும்போது கேமராவை ஃபேஸ் பண்றது பயமா இருந்துச்சு. அந்நேரம் அப்பாதான், ‘சரி போய் பண்ணிப்பாரு. பிடிக்கலனா வந்திடு’னு சொன்னார். அந்த மாணவர்கள்கிட்டயும், ‘அவளுக்கு நடிச்ச அனுபவம் கிடையாது. நல்லா பண்ணினா ஓகே. இல்லனா விட்டுட்டுங்க’னு சொல்லி அனுப்பினார்.  

ஆனா, என்கிட்ட ஒரு குணம் உண்டு. அதாவது எதையும் முயற்சி செய்து பார்க்கணும்னு நினைப்பேன். அது வெற்றியோ, தோல்வியோ, முயற்சி செய்கிற ஆர்வம் இருந்தது. அதனால, நம்பிக்கையா போனேன். அப்புறம், அந்தச் சூழல் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. நடிக்கிறதுல ஆர்வம் வந்திடுச்சு. அந்தக் குறும்படம் மாணவர்களின் படிப்பிற்காக பண்ணினது. வெளியே வரல.

அப்புறம் காலேஜ்ல சேர்ந்துட்டேன்.

எனக்கு வரலாறு, சுற்றுலாவுல எல்லாம் ரொம்ப ஆர்வம். அதனால, அந்த கோர்ஸ் எடுத்துப் படிச்சேன். 2020ல் கோர்ஸ் முடிச்சப்ப கொரோனா வந்திடுச்சு. அந்நேரம் வீட்டுல சும்மா இருந்தேன். அப்பாவுக்கு தெரிஞ்ச ஒரு காஸ்டிங் டைரக்டர் மூலம் சன் டிவியில் இருந்து ‘பூவே உனக்காக’ சீரியல்ல நடிக்க வாய்ப்பு வந்தது. ‘ஆடிஷன் போயிட்டு இருக்கு. இரண்டாவது ஹீரோயினுக்கு தேவைப்படுது’னு கூப்பிட்டாங்க.

அப்பதான் அப்பா வேண்டாம்னு சொன்னார். அவர் நிறைய அனுபவம் கொண்டவர். இந்த இண்டஸ்ட்ரியில் சர்வைவ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு அவருக்குத் தெரியும். அதனால, மறுத்தார். ஆனா, நான் ரொம்ப அடம்பிடிச்சேன். அவரை கன்வின்ஸ் செய்தேன். அப்பா எப்படினா, ரொம்ப நல்லவர். பிள்ளைங்களுக்காக எல்லாம் செய்யக்கூடியவர். ரொம்ப பாசமா இருப்பார். அதேநேரம் கடுமையா கோபப்படுவார். கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்னு சொல்வாங்க. அதுமாதிரி அப்பா.

அப்போ, அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. ‘அவ ஆசைப்படுறா. நடிக்கட்டுமே’னு அப்பாகிட்ட சொன்னாங்க. அப்பாவுக்கு பிடிக்கல. ஆனாலும் என் ஆசையை எப்பவும் நிறைவேற்றி வைச்சிருக்கார். அந்த நம்பிக்கை வீண் போகல. கடைசியில் ஓகே சொன்னார். இந்த இடத்துல அம்மாவைப் பத்தியும் சொல்லணும். அவங்க அப்பாவை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி சர்ச் பார்க் பள்ளியில் தாவரவியல் ஆசிரியரா இருந்தாங்க. கல்யாணத்துக்குப் பிறகு வேலையை விட்டுட்டாங்க. அதனாலதான் அவங்களுக்கு என்னை ஆசிரியராக்கிப் பார்க்கணும்னு ஆசை.

ஆனா, அப்பாவுக்கு என்னை பாடகியா கொண்டு போலாம்னு ஒரு ஆசை இருந்தது. நான் மியூசிக் படிச்சிருக்கேன். மெட்ராஸ் மியூசிக் அசோசியேஷன்ல வெஸ்டர்ன் வோக்கல்ல ஐந்து கிரேடு முடிச்சிருக்கேன். அப்புறம், கர்நாடிக் இசையும் கத்துக்கிட்டேன். அதனால, கொஞ்சம் பாடுவேன். அதுக்கு இப்பவும் முயற்சி செய்றேன்.

சான்ஸ் கிடைச்சால் நிச்சயம் பாடுவேன்.
இப்படியிருந்த நேரம் சீரியல் வாய்ப்பு வந்தது. சரி, நடிக்கலாமேனு அனுமதி கேட்டேன். அப்பா ஓகே சொன்னதும் ஆடிஷன் போய், ‘பூவே உனக்காக’வுல செலக்ட்டானேன். பிறகு, ‘அருவி’ ஹீரோயினா பண்ணச் சொல்லி சேனல்ல இருந்து கூப்பிட்டாங்க. அந்த கேரக்டர் பத்தி சொன்னதும் என்னுடைய ரியல் கேரக்டர் மாதிரி இருக்கேனு தோணுச்சு.

ஏன்னா நானும் போல்டா, துறுதுறுனு இருப்பேன். எல்லார்கிட்டயும் நல்லா பேசுவேன். பழகுவேன். ரொம்ப ஜோவியல் டைப் நான். அதனால, உடனே ஓகே சொன்னேன். இப்ப சீரியல் நல்லபடியா போயிட்டு இருக்கு. தொடருக்கு மட்டுமில்ல... என் நடிப்புக்கும் நிறைய ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. ஒரு உதாரணம் சொல்றேன். என் வீட்டுல வேலைக்கு புதுசா ஒரு அம்மா வந்தாங்க. அவங்க, ‘என் பொண்ணு, உங்க பெரிய ஃபேன். பார்க்கணும்னு சொல்றா. நான் வீட்டுக்குக் கூட்டிட்டு வரட்டுமா’னு கேட்டாங்க. சரி அழைச்சிட்டு வாங்கனு சொன்னேன். வந்தால் போட்டோ எடுப்பாங்கனு நினைச்சேன்.

ஒருநாள் அந்த அம்மா வந்ததும் நான்தான் போய் கதவைத் திறந்தேன். என்னைப் பார்த்ததும் அவங்க பொண்ணு அழ ஆரம்பிச்சிட்டா. ரொம்ப சின்ன பொண்ணு. ‘எதுக்குமா அழுற’னு கேட்டேன். ‘உங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும் அருவி...’னு சொல்லிட்டு அழுதா. அப்பதான் சின்னப் பசங்களுக்குள்ள எவ்வளவு தாக்கத்தை ‘அருவி’ ஏற்படுத்தியிருக்குனு நினைச்சேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

இதேமாதிரி, எங்க வீட்டுக்கு எதிர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. அந்த ஸ்கூல்ல இருந்து சின்னப் பசங்க எட்டிப் பார்த்து, ‘அருவி அக்கா, அருவி அக்கா’னு டாட்டா காட்டுவாங்க. அப்பெல்லாம் சின்னக் குழந்தைங்க மனசுல இடம்பிடிச்சிருக்கோம்னு ஹேப்பியா இருக்கும்.

சமீபத்துல மதுரைக்கு ‘சன் நட்சத்திரக் கொண்டாட்டம்’ நிகழ்ச்சிக்குப் போயிருந்தப்பவும் நினைச்சுப் பார்க்காத அளவுக்கு ‘அருவி’னு பலரும் கொண்டாடித் தீர்த்தாங்க...’’ என உற்சாகத்துடன் சொல்கிறவர், ‘‘இந்த ரெஸ்பான்ஸ் எல்லாம் பார்க்கிறப்ப இன்னும் பொறுப்பா நடிக்கணும்னு நினைக்கிறேன். சினிமா வாய்ப்புகள் கூட அப்பா இருக்கிறதால நிறைய வருது. ஆனா, நல்லதொரு புரொஜெக்ட் வந்தால் செய்யணும்.

என் குறிக்கோள் இப்படித்தான் வாழ்க்கையில் ஆகணும் என்பதெல்லாம் கிடையாது. எனக்குப் பிடிச்ச வேலையை உற்சாகமா செய்யணும். எப்பவும் சந்தோஷமா இருக்கணும். அவ்வளவுதான்...’’ என ரிலாக்ஸாக சொல்கிறார் ‘அருவி’ ஜோவிதா லிவிங்ஸ்டன்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்