பயோடேட்டா-முதியவர்கள்



பெயர் : முதியவர்கள்.

பிறந்த தேதி : 60 வருடங்களுக்கு முன்பு.

வசிப்பிடம்: உலகம் முழுவதும்.

இந்தியா : 2021ம் வருடத்தில் இந்தியாவில் 60 மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை 13.8 கோடியாக இருந்தது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 6.7 கோடி, பெண்கள் 7.1 கோடி. அடுத்த பத்து வருடங்களில், அதாவது 2031ல் முதியவர்களின் எண்ணிக்கை 41 சதவீதம் உயர்ந்து, 19.4 கோடியை எட்டும். இதில் பெண்களின் எண்ணிக்கை 10.1 கோடி, ஆண்கள் 9.3 கோடி.

2011ல் முதியவர்களின் எண்ணிக்கை 10.4 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது என்று அரசின் முதியவர்கள் பற்றிய ஆய்வு தெரிவிக்கிறது. மட்டுமல்ல, 2036ல் முதியவர்களின் எண்ணிக்கை 22.5 கோடியையும், 2061ல் 42.5 கோடியையும் எட்டும். அதாவது 2011க்கும் - 2061-க்கும் இடைப்பட்ட 50 ஆண்டுகளில் முதியவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயரப்போகிறது.

2061ல் நான்கு இந்தியர்களில் ஒருவர் 60 வயதைத் தாண்டியவராக இருப்பார். அதே நேரத்தில் 2021ல் 37.1 கோடியாக இருந்த இளைஞர்களின் எண்ணிக்கை 2036ல் 34.5 கோடியாகச் சரியும்.
தவிர, 1991ல் வயதான பெண்களின் எண்ணிக்கை 2.94 கோடியாகவும், ஆண்களின் எண்ணிக்கை 2.73 கோடியாகவும் இருந்தது என்கிறது அந்த வருடத்தில் எடுக்கப்பட்ட அதிகாரபூர்வமான மக்கள் தொகை கணக்கெடுப்பு.

2011ம் வருடம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 8.6 சதவீதமாக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை, 2021ல் 10.1 சதவீதமாக உயர்ந்து, 2031ல் 13.1 சதவீதத்தைத் தொடப்போகிறது.
2001 - 11ல் 35.5 சதவீதம் அதிகரித்த முதியவர்களின் எண்ணிக்கை, 2011 - 21ல் 35.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் 60 வயதுக்கும் குறைவானவர்களின் எண்ணிக்கை 2001 - 11ல் 17.7 சதவீதமும், 2011 - 21ல் 12.4 சதவீதமும் குறைந்திருக்கிறது. 2021 - 31ல் 8.4 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது 71 சதவீத முதியோர்கள் நகர்ப்புறத்திலும், மீதியுள்ள 29 சதவீதம் பேர் கிராமங்களிலும் வசிக்கின்றனர்.

மாநிலங்கள் : 2021ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி அதிக முதியவர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை மட்டுமே 16.5 சதவீதம். அடுத்து தமிழ்நாட்டில் 13.6 சதவீதம், இமாச்சலப் பிரதேசத்தில் 13.1 சதவீதம், பஞ்சாப்பில் 12.6 சதவீதம், ஆந்திராவில் 12.4 சதவீதம் என்ற விகிதத்தில் முதியவர்களின் எண்ணிக்கை உள்ளது.

2031ல் கேரளாவில் முதியவர்களின் எண்ணிக்கை 20.9 சதவீதமாக உயரும். தமிழ்நாட்டில் 18.2 சதவீதம், இமாச்சலப் பிரதேசத்தில் 17.1 சதவீதம், ஆந்திராவில் 16.4 சதவீதம், பஞ்சாப்பில் 16.2 சதவீதம் என்ற விகிதத்தில் முதியவர்களின் எண்ணிக்கை உயரப்போகிறது. குறைவான முதியவர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது. பீகாரில் முதியவர்களின் எண்ணிக்கை 7.7 சதவீதம் மட்டுமே. இதற்கடுத்து உத்தரப்பிரதேசத்தில் 8.1 சதவீதம், அசாமில் 8.2 சதவீதம் என்ற விகிதத்தில் முதியவர்கள் உள்ளனர்.

முக்கிய நிகழ்வு : உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கணிசமாக முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை முக்கிய நிகழ்வாகக் கருதுகிறது ஐநா சபை.
மனித குல வரலாற்றிலேயே அதிகமான முதியவர்கள் வாழும் காலகட்டத்தில் இருக்கிறோம்; இனிவரும் காலங்களிலும் முதியவர்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதத்தில்தான் செல்லும் என்கிறது இன்னொரு ஆய்வு.

ஆயுட்காலம் நீட்டிப்பும், குழந்தைபிறப்பு விகிதம் குறைவும்தான் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமானதற்கு மூலகாரணம் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். முதியவர்களின் அதிகரிப்பால் உண்டாகும் சவால்களைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு நாட்டின் மருத்துவத்துறையும், சமூக அமைப்பும் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் : 2019ல் ஐநா வெளியிட்ட ஒரு தகவலின்படி உலகளவில் 65 முதல் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை, 70.3 கோடி.

2050ம் வருடத்தில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகி, 150 கோடியாக உயரும். 2050ல் உலகின் மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் முதியவர்களாக இருப்பார்கள். அதாவது 6 பேரில் ஒருவர் 65 அல்லது அதற்கு மேலான வயதுடையவராக இருப்பார்.

2030லேயே 6 பேரில் ஒருவர் 60 வயதைத் தொட்டிருப்பார். 2050ல் 60 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை 210 கோடியைத் தாண்டும். தவிர, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள், கரீபியன், லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் முதியவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும். 2050ல் 80 சதவீத முதியவர்கள் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளில் வசிப்பார்கள். மட்டுமல்ல, 2020 - 2050க்குள் 80 மற்றும் அதற்கு அதிகமான வயதுடையவர்களின் எண்ணிக்கை 42.6 கோடியை எட்டும்.

ஆயுட்காலம் : உலகம் முழுவதுமே 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆயுட்காலம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 2015 - 2020க்குள் 65 வயதை எட்டியவர்கள், கூடுதலாக 17 வருடங்கள் (சராசரி) வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

2045 - 2050ல் கூடுதல் ஆண்டுகளின் எண்ணிக்கை 19 ஆக உயரும். 2015 - 2020க்கும், 2045 - 2050க்கும் இடையிலான வருடங்களில் எல்லா நாடுகளிலும் 65 வயதை அடைந்தவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும். குறிப்பாக ஆண்களைவிட, பெண்கள் சராசரியாக 4.8 வருடங்கள் அதிகமாக வாழ்வார்கள்.

பிரச்னைகள் : பொதுவாக முதியவர்கள் உடல் ரிதீயாகவும், மன ரீதியாகவும் பல பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். கேட்கும் திறன் குறைதல், கண்புரை, முதுகு மற்றும் கழுத்து வலி, சர்க்கரை நோய், மறதி நோய், பலவீனம், அடிக்கடி கீழே விழுதல், தனிமை, பொருளாதாரப் பற்றாக்குறை, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை, மலச்சிக்கல்... என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
இதுபோக உலகமயமாகுதல், நவீன தொழில்நுட்பங்களின் வருகை, நகரமயமாகுதல், இடப்பெயர்வு போன்று பல விஷயங்கள் முதியவர்களின் வாழ்க்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

ஜப்பான் : உலகிலேயே அதிக முதியவர்களைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது ஜப்பான். அங்கே மொத்த மக்கள் தொகையில் 29.1 சதவீதம் பேர் 65 மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்கள். மட்டுமல்ல, ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டும். 2036ம் வருடம் மூன்றில் ஒரு ஜப்பானியர் முதியவராக இருப்பார்.

முதியோர் இல்லங்கள் : 2020ம் வருடம் நடந்த ஓர் ஆய்வில் இந்தியாவில் சுமார் 1.8 கோடி முதியோர்கள் வீடில்லாமல் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்தியாவில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமாக 728 முதியோர் இல்லங்கள் இருக்கின்றன.

547 இல்லங்களைப் பற்றி ஆய்வு செய்ததில் கிடைத்த தகவலின்படி, 325 இல்லங்கள் இலவச சேவையை வழங்குகின்றன. 95 இல்லங்கள் தங்குவதற்கு கட்டணம் வசூலிக்கின்றன. இன்னொரு 116 இல்லங்கள் இலவசம் மற்றும் கட்டண அடிப்படையில் இயங்குகின்றன. தவிர, 278 இல்லங்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இயங்குகின்றன. 101 இல்லங்கள் பெண்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

த.சக்திவேல்