5ஜி...என்னென்ன மாற்றங்கள் வரும்?
தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும்... 2023 டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை எட்டும்... என்ற நிலையில் இதை அறிவது அவசியம்.5ஜி என்றால் என்ன?
5ம் தலைமுறை இணையதள தொழில்நுட்பமே 5ஜி. இது முந்தைய 4ஜி, அதாவது நான்காவது தலைமுறை தொழில்நுட்பத்தை விட பத்து மடங்கு அதிக பதிவிறக்க, பதிவேற்ற வேகத்தைக் கொண்டிருக்கும்.
இதனால் என்னென்ன மாற்றம் நடக்கும்?
1ஜி எனப்படும் ஒன்றாம் தலைமுறை சேவை 1980களில்தான் முதலில் தொடங்கப்பட்டது. இதன் டேட்டா திறன் 2Kbpsதான். அலைவரிசை: 800 to 900MHz. அனலாக் முறை தொலைத் தொடர்பு சேவையான இதில் வெறும் கால் அழைப்புகள் மட்டுமே செய்ய முடிந்தது.இரண்டாம் தலைமுறை இணைய சேவையான 2ஜி, 1991ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
டேட்டா திறன்: 10Kbps, அலைவரிசை: 850MHz to 1900MHz (GSM) மற்றும் 825MHz to 849MHz (CDMA). டிஜிட்டல் வயர்லெஸ் தொழில்நுட்ப சேவையான இதில் ஒயர் இல்லாமல் சிம் கார்டு மூலம் இன்டர்நெட் பெறும் வசதி வந்தது. கால் அழைப்புகளுடன் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் அறிமுகமானது. 2ஜி சேவையே பின்னர் மேம்படுத்தப்பட்டு 2.5ஜி, 2.75ஜி ஆனது. இவற்றின் மூலம் டேட்டா திறன் 200Kbps என அதிகரித்ததுடன் புதிதாக MMS அறிமுகமானது.பின்னர் 3ஜி 1998ம் ஆண்டு அறிமுகமானது. டேட்டா திறன் 384Kbpsக்கும் அலைவரிசை 1.6 to 2.5 GHzக்கும் அதிகரித்தது. இதனால் கால் அழைப்புகள், இன்டர்நெட், எஸ்எம்எஸ், வீடியோ கால் என சேவைகளும் கூடியது. வீடியோ கான்பரன்ஸ், இடங்களை அறிந்துகொள்ளும் ஜிபிஎஸ் வசதியும் வந்தது.
3ஜி-யும் பின்னர் 3.5ஜி, 3.75ஜிகள் என மேம்படுத்தப்பட்டது. டேட்டா திறன் 2Mbps ஆனது. இதனால் உயர் வேக வாய்ஸ் டேட்டா சாத்தியமானது. இதன்பின்னர் வந்ததுதான் இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4ஜி. இது 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் டேட்டா திறன் 1Gbpsக்கும் அலைவரிசை 2 to 8 GHzக்கும் அதிகரித்ததால் அதிவேக இன்டர்நெட் வசதி, ஹெச்டி தர வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் இ-மெயில் என இணையத்தை வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே மாற்றி என்ஜாய் செய்து கொண்டிருக்கிறோம்.
5ஜி இதன் டேட்டா திறன் ஆரம்ப வேகம் 1Gbps, அலைவரிசை 30 to 300 GHz. அதாவது 4ஜியைவிட பத்து மடங்கு மேல் அதிக அலைவரிசை என்பதால் வேகமும் 10 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2019ம் ஆண்டே அமெரிக்கா, சீனா, தென்கொரியா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் 5ஜி அறிமுகமாகிவிட்டது. இதன் அனுபவத்தில் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், 5ஜி தொழில்நுட்பத்தில், அதிகபட்சமாக ஒரு நொடிக்கு 7ஜிபிபிஎஸ் பதிவிறக்க வேகமும், 3ஜிபிபிஎஸ் பதிவேற்ற வேகமும் இருக்குமென்று கூறுகிறது. இதனால், ஒரு முழு திரைப்படம் சில விநாடிகளில் பதிவிறக்கம் ஆகிவிடும். 5ஜி வேகம் காரணமாக ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி மற்ற பல சாதனங்களையும் இணையம் மூலம் கட்டுப்படுத்துவது சாத்தியமாகும்; இதனால் பல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும்.
உதாரணமாக, 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட சாலையில் சென்று கொண்டிருக்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடொன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். இதனால் விபத்துகளையும் எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும். 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்கலாமா?
5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் எல்லா மொபைல் நெட்வொர்க் நிறுவனமும் கலந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட 5G அலைவரிசையை ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் ஒன் ப்ளஸ், ரியல்மி, சியோமி சாம்சங், மோட்டோ, நத்திங் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதலே 5G போன்களை விற்பனை செய்து வருகின்றன. ஆனாலும், அவசரப்படாமல் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது.
5ஜி வந்துவிட்டாலும் இந்தியாவில் அனைத்து நகரங்களிலும் அனைவருக்கும் உடனடியாக அந்த வசதி கிடைத்துவிடாது. 4ஜி-யே இப்போது வரை பல இடங்களில் தொங்குகிறது. இதுபோல் 5ஜி-யும் படிப்படியாகத்தான் விரிவுபடுத்தப்படும். எனவே, இப்போதே அதிக விலைகொண்ட 5ஜி ஸ்மார்ட் போன்களை வாங்காமல் இருப்பதே நல்லது.
என்.ஆனந்தி
|