சிறுகதை - பெரிய கருப்பி



‘‘ஏம்மா... பெரிய கருப்பி வந்துட்டான் பாரு...’’காலைச் சிற்றுண்டிக்காக இட்லிப்பானையை அடுப்பில் ஏற்றிக் கொண்டிருந்தவளின் காதில் விழுந்தது கணவரின் குரல்.‘‘வந்துட்டேங்க...’’ என்று குரல் கொடுத்தபடியே ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.
கேட்டின் கீழே தெரிந்தன கருப்பும், மஞ்சளுமான அந்தக் கால்கள். ஜன்னலில் என் தலை தெரிந்ததும் உற்சாகமாக ‘‘ஊஹூ... ஊஹூ...’’ என்று தனக்கேயுரிய ஒரு  கொஞ்சலான சப்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.‘‘வந்துட்டேன்டா...’’ என்று சிரித்துக்கொண்டே குரல் கொடுத்தபடியே வேகமாக அரைடம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து எடுத்துப் போனேன். என் கையில் டம்ளரைப் பார்த்தவுடனேயே என் மேல் தவ்வ ஆரம்பித்தான்.

‘‘பொறுடா... அம்மாதான் ஊத்தாறால்ல...’’ என்றபடியே கணவர் அவன் தட்டை எடுத்து வைக்க, வேகமாக வாலைக் குழைத்துக்கொண்டே பாலைக் குடிக்க ஆரம்பித்தான்.
வேகவேகமாக பாலைக் குடித்தவன், மீண்டும் ‘‘ஊஹூ... ஊஹூ...’’ என்று சப்தம் எழுப்பவே, கையில் தயாராக வைத்திருந்த பிஸ்கட் இரண்டை கணவர் போடவே, சாப்பிட்டான்‌.
‘‘சாப்பிட்டாச்சில்ல... போய்ப் படுத்துக்கோ...’’ என்று சொல்லவே அங்குசத்திற்கு கட்டுப்படும் யானை போல்  கேட்டின் பக்கவாட்டில் போய் படுத்துக் கொண்டான்.

அவனையே பார்த்தேன். இவன் வந்து ஆறு மாதம் இருக்குமா..?! இருக்கும். கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த காலம் அது.‌ எங்கள் வீட்டின் பக்கவாட்டில் கட்டப்படாத காலிமனை ஒன்று உண்டு. காலனி போன்ற அமைப்பில் வரிசையாக அமைந்திருந்த மனைகள் அத்தனையும் கட்டப்பட்டு இருக்க, கட்டப்படாத அந்த மனை எங்கள் ஏரியாவாசிகளின் குப்பை கொட்டும் மனையாகி விட்டது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான். என்னதான் மாநகராட்சி வண்டி வீட்டுக்கு வீடு வந்து குப்பை சேகரிப்பு பண்ணி, பத்தாததற்கு அந்த காலி இடத்தில் இருந்த குப்பையை அள்ளிக்கொண்டு போனாலும், குப்பை லாரி போன ஐந்து நிமிடத்தில் மீண்டும் குப்பை கொட்டுவார்கள்.நாங்கள் மிதமாகவும், சத்தம் போட்டும், சண்டை போட்டும் சொல்லிப் பார்த்தாலும், யாரும் கேட்பதாக இல்லை. கொசு மட்டுமல்லாது ஓணான், பாம்பு, எலி போன்ற உயிரினங்களும் அவ்வப்போது எங்கள் காம்பவுண்டிற்குள் எட்டிப் பார்த்தது.

ஒரே தீர்வாக அந்தக் காலி மனையின் உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒரு கம்பிவேலியாவது போடச் சொல்லலாம் என்று அவர் வீடு தேடிப் போனால் , அங்கே இருந்த முதியவர் ‘‘சார்... என் பசங்க இரண்டு பேரும் வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டாங்க. இப்போதைக்கு அதை விற்கமாட்டோம்னு சொல்லிட்டாங்க. என்னாலும் எதுவும் செய்ய முடிவதில்லை. நீங்க வேணும்னா கம்பி வேலி போடுங்க. ஆகற செலவை நான் குடுத்துர்ரேன்...’’ என்று சொல்லவே என் கணவர் முனைந்து கம்பி வேலி போட்டார்.

ஆனால், கொண்டு வந்த குப்பைகளை அதற்குள்ளேயே தூக்கி எறிய, குப்பை லாரி வந்து சுத்தம் பண்ண முடியாமல் மிகுந்த நாற்றம். கடைசியாக வேறு வழியில்லாமல் கம்பிவேலியை ஒரு பக்கமாக நாங்களே உடைத்து விட வேண்டியதாயிற்று.அந்த இடத்தில்தான் கொரோனா காலகட்டத்தில் ஒருநாள் இரவு ‘‘விஜி... இங்க வந்து பாரேன்... பாவமா இருக்கு...’’ என்று கூப்பிட்டார்.

பக்கத்து காலி மனைக்கும் எங்கள் வீட்டு வாசலுக்கும் இடையில் பாவமாக நின்றது அந்த செங்கலர் நாய். நிறைமாத கர்ப்பிணி. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க,கண்ணில் உயிரைத் தேக்கிக் கொண்டு நின்றிருந்தது.

‘‘சோறு மீதி இருந்தா போடேன்...’’ தயிர் கலந்து எடுத்து வந்த சாதத்தை ஒரு பழையதட்டில் போடவே, நன்றியுடன் வாலாட்டியபடியே சாப்பிட ஆரம்பித்தது. தொடர்ந்து காலை, இரவு இரு நேரங்களிலும் சாப்பாடு போட  ஆரம்பித்தோம். கூட இரண்டு மூன்று நாய்கள் இருந்தாலும், எதோ காருண்யமாக அதனுடன் பங்குக்கு வராமல் விலகிப் போய்விட்டன.
ஒரு பதினைந்து நாட்கள் கழிந்திருக்கும். பக்கத்து மனையில் இருந்த செடிகள் நிரம்பிய புதர் பகுதியில் இருந்து சலசலப்பும், க்கீ... க்கீ சத்தங்களும், லேசான உறுமலும் கேட்க ஆரம்பித்தன.
‘‘குட்டி போட்டுருச்சு போலங்க...’’ சுற்றி உள்ளே போய் பார்க்கும் தைரியம் வரவில்லை.

என்னதான் பழகிய நாய் என்றாலும், குட்டி போட்டால் ரௌத்திரமாக இருக்கும் என்ற பயம் காரணம். ஒரு வாரம் கழிந்திருக்கும். அன்று வெளியே வந்த என் பெண் கிருத்திகா, ‘‘அம்மா..இங்க வந்து பாரேன்... குட்டி வெளியே வந்துட்டான்...’’ என்று கூப்பிடவே ஓடி வந்து பார்த்தோம்.பூங்குட்டி இரண்டும் தத்தித்தத்தி குப்பை மேட்டில் விளையாடிக் கொண்டிருந்தன‌. வேடிக்கை என்னவென்றால், செங்கலரில் இருந்த அம்மா நாய்க்கு உடல் முழுவதும் முழுக் கருப்பிலும், கால்கள் மட்டும் மஞ்சளும் கருப்பும் கலந்த கலரிலும் குட்டிகள் பிறந்திருந்தன.

அந்த அம்மா நாய் எங்கே போனது என்றே தெரியவில்லை. குட்டிகள் இண்டும் ஜோடியாக விளையாடினாலும் பசிக்கு அழுகிற மாதிரி குரல் கொடுக்கவே, அவங்க அம்மா சாப்பிட்ட தட்டிலேயே பால் ஊற்றி வைக்க அந்தத் தட்டுக்குள்ளேயே காலை விட்டு தட்டி விட்டு எப்படியோ ரெண்டும் குடிக்க ஆரம்பித்தன. அவ்வளவுதான், அன்றிலிருந்து எங்கள் வீட்டு செல்லக்குட்டிகளாகி விட்டன.அதிலும் இரண்டில் ஒன்று ரொம்ப சுறுசுறுப்பு.

இன்னொன்று கொஞ்சம் மந்தம்தான். சரியாக பசி நேரத்தில் பெரியவன் வந்து அவனுக்கே உரிய ‘‘ஊஹூ... ஊஹூ...’’ என்று குரல் கொடுப்பான். பால் ஊற்றினால் ஓடிப் போய் சின்னவனைக் கூட்டி வந்துதான் குடிப்பான். கருப்புக் காதுகளும், துறுதுறு கண்களுமாக அவ்வளவு அழகாக இருந்தவனை பெரிய கருப்பி என்றும், மந்தமாக இருந்த சின்னவனை சின்னக்கருப்பி என்றும் கூப்பிட ஆரம்பித்தோம்.

நாய்கள் பேசுமா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், பெரிய கருப்பிக்கென்று ஒரு பரிபாஷை இருந்தது. நான் எது கேட்டாலும் ‘‘ஊஹூ... ஊஹூ...’’ என்று பதில் சொல்வான். எங்கள் வீட்டிலேயே இருவரையும் வளர்க்கலாம் என்று கூட நினைத்தோம். ஆனால், வாழ வந்த ஊரிலிருந்து அடிக்கடி சொந்த மண்ணிற்கு பயணம் செய்ய நேரிடும் என்பதால் இவர்களை பாரமரிக்க முடியாது என்று விட்டு விட்டோம்.

எங்கள் காம்பவுண்டை ஒட்டியே ஒரு தண்ணீர் தொட்டியும் அவர்களின் தட்டையும் வைத்து விடவே, எங்கே விளையாடினாலும் சாப்பாட்டு நேரத்திற்கு வந்து சாப்பிட்டு விடுவார்கள். அதுவும் காலையில் வாசல் தெளிக்கும்போதே தட்டில் பாலை ஊற்றிவிட வேண்டும். இல்லையென்றால் வாசல் தெளிக்கவே விடாமல் ரகளை செய்ய‌ ஆரம்பித்து விடுவார்கள்.

அப்போதுதான்  மூன்றாம் வீட்டுக்காரர் ‘‘ஏங்க... எங்கள் தோட்டத்திற்கு கொண்டு போய் வளர்க்கிறேன்... இங்கே அனாதையாகத்தானே சுத்திக்கிட்டு கெடக்கு... அங்கே கறவை கறக்குது... ஒரு மாட்டுப் பாலாகவே ஊத்தி வளர்க்கிறேன்...’’ என்றார்.

‘‘வேண்டாங்க...’’ என்றேன் என் கணவரிடம் ரகசியமாக.
‘‘விடும்மா... அங்கேதான் நல்லா வளரட்டுமே...’’
‘‘சரிங்க...’’ என்றேன் அரை மனதாக.

ஆனால், சாக்கைப் போட்டு பிடிக்கலாம் என்று எடுத்து வந்தால், எப்படித்தான் தெரிந்ததோ, இல்லை தொந்தரவு செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டார்களோ... ஒரே ஓட்டம்தான். அரைமணி நேரம் போராடி சின்னவனைப் பிடித்து விட்டார்கள். பெரியவனை அந்த வட்டாரத்திலேயே காணோம்.

தேடி அலுத்துப் போய் கிளம்பி விட்டார்கள்.அன்று மதியம் வரை பெரிய கருப்பி வரவே இல்லை. மதியம் மெதுவாக வந்தவனிடம் ‘‘என்னடா... தம்பியை பிடித்துக் கொண்டு போய் விட்டார்களா..?!’’ என்று கேட்டால் ‘‘ஊஹூ... ஊஹூ...’’ என்று அழுவது மாதிரி கத்திவிட்டு தட்டையும், தண்ணீரையும் முகர்ந்து விட்டு தொட்டிக்கடியிலேயே படுத்து விட்டான். சாப்பாடும் சாப்பிட வில்லை.

அவன் பக்கத்தில் சென்று ‘‘உங்க நல்லதுக்குத்தானே செய்தோம்...’’ என்றேன். என்ன நினைத்தானோ என் முகத்தையே சோகமாகப் பார்த்தவன், மெதுவாக எழுந்து வந்து சாப்பிட்டான்.

மறுநாளிலிருந்து சகஜமாக ஆகிவிட்டான். எப்போதும் நானோ, கணவரோ, பெண்ணோ வெளியே நடந்து போனால் தெருக்கோடி வரை வழியனுப்பி விட்டுத்தான் திரும்பி வருவான். வண்டியில் போனாலும் அப்படித்தான்.

‘‘டேய்... பெரிய கருப்பி..‌.’’ கூப்பிட்டுக் கூப்பிட்டு சலித்து விட்டேன். இப்போதெல்லாம்‌ முன் போல் இல்லை. தெரு நாய்களோடு சேர்ந்து சுற்ற ஆரம்பித்து விட்டான். ஆனாலும் என்ன... தெரு நாய்களோடு சென்றாலும் தெருக்கோடி வரை சென்று விட்டு, மற்ற நாய்களை ஏமாற்றிபோக்கு காட்டிவிட்டு திரும்ப வந்து, பால் வாங்கி குடித்து விட்டு‌ ஓடி  விடுவான். ஆறு மாதங்கள்தான் ஆகி யிருக்கும் என்றாலும், நல்ல உயரம் வந்து விட்டான். ஆண் நாய் என்பதால்  காதுகளை விரைத்துக்கொண்டு நல்ல கம்பீரமாக சிலிர்த்துக் கொண்டு நிற்பான்.

அன்று மாலை ஆறு மணியிருக்கும். கேட் முன்னால் ‘‘ஊஹூ... ஊஹூ...’’ என்று சத்தம் கேட்டது. ‘‘மத்தியானம் சாப்பிடக் கூட வராமல் எங்கடா சுத்திக்கிட்டு வர்ற...’’ என்றபடியே பாலை ஊற்றி வைத்தேன்.வழக்கம் போல் குடித்தவன் நினைத்தாற் போல் தவ்வித் தவ்வி கொஞ்ச ஆரம்பித்தான். பிஸ்கட் கொண்டு வந்து போடவும் சாப்பிட்டு விட்டு குப்பை மேட்டு அருகிலேயே படுத்துக் கொண்டான். நீட்டியிருந்த நீளக்கால்களையே பார்த்தபடி மனதில் ஆச்சரியப்பட்டுக்கொண்டேன்... ‘எவ்வளவு நீளம்..?!’அன்று இரவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்த கணவர் ‘‘பெரிய கருப்பி... பெரிய கருப்பி...’’ என்று கூப்பிடும் சத்தம் கேட்கவே, வெளியே வந்தேன்.

‘‘கூப்பிடுவது கூடக் கேட்காமல் எப்படித் தூங்குறான் பார்...’’
‘‘தட்டை உருட்டினால் ஓடி வந்து விடுவான்...’’
தட்டை உருட்டினேன். அப்பவும் எழுந்திருக்கவில்லை.
‘‘போய் டார்ச் எடுத்துட்டு வா...’’

எடுத்து வந்த டார்ச் லைட்டுடன் பக்கத்தில்  போனவர் ‘‘ஐயோ... அடப் பாவிங்களா...’’ என்று கத்தினார்.பரிதவிப்புடன் ஓடினேன்.‘‘வராதே... உன்னால தாங்க முடியாது... எந்தப் பாவியோ அடிச்சுப் போட்டுட்டுப் போயிருக்கான். ரோட்டு ஓரமா படுத்துருக்கான். இருட்டுல தெரியாம லேசா தட்டிருக்கான். குட்டி நாய்ங்கறதுனால பூ மாதிரி உயிர் போயிருச்சு...’’ கதறினேன். என் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து விட்டார்கள். ஓடி வந்த கிருத்திகாவும் அழ ஆரம்பித்தாள். அவளையும் பக்கத்தில் விடவில்லை என் கணவர்.

‘‘சாக்கு எடுத்துட்டு வாம்மா... காலையிலேதான் கார்ப்பரேஷன்ல சொல்லணும்...’’எடுத்து வந்த சாக்கை மேலே போர்த்தினார். அழுது கொண்டே நிமிர்ந்து பார்த்தேன். அப்போதும் முழுவதும் மூட முடியாமல் நீட்டிக் கொண்டிருந்தன அவன் நீளக்கால்கள். ஓடிப்போய் இன்னொரு சாக்கு எடுத்து வந்து கொடுக்கவே முழுவதும் போர்த்தி கல் வைத்து விட்டு வந்தார்.

அன்றிரவு அழுது கொண்டே எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. விடிந்தும் வாசல் தெளிக்கவே இல்லை. நம்  நெருங்கிய உறவுகள் தவறிவிட்டால் , மூன்று நாட்கள் வாசல் தெளிச்சுக் கோலம் போடமாட்டோமில்ல..?! சூரியன் சுள்ளென மேலே வந்தான். யார் செத்தாலும்,பிழைச்சாலும் வயிற்றில் சரியாக அந்தந்த நேரத்திற்கு, அலாரம் அடிக்கத்தானே செய்கிறது. ‌‌மனசு கஷ்டமா இருந்தாலும், சமைக்க ஆரம்பித்தேன். கணவர் கார்ப்பரேஷன் ஆட்களுக்கு போன் செய்தார். ‘‘வந்து எடுத்துர்ரோம் சார்...’’ என்றனர்.

மதியம் வரை ஆட்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். வரவில்லை. இப்போது லேசாக ஈக்கள் மூட்டையை மொய்க்க ஆரம்பித்தன. ‘விரைத்து இருப்பானோ‌.?!’ கவலையுடன் மூட்டையைப் பார்த்தேன். போர்த்தியிருந்தாலும் தனித்துத் தெரிந்தன அந்தக் கால்கள்...போன் அழைத்தது. கணவர்தான். ‘‘ஏம்மா... கார்ப்பரேஷன்காரர்கள் வந்தார்களா..?!’’‘‘இல்லைங்களே...’’

‘‘நம்பர் அனுப்பறேன்... எதுக்கும் கூப்பிட்டுப் பாரு...’’
அனுப்பினார். கூப்பிட்டேன். மூன்று முறை முயன்றும் எடுக்கவில்லை.
இப்போது இன்னும் அதிகமாக ஈக்கள் மொய்க்கத் தொடங்கின.

‘‘என்னம்மா... குப்பையைப் பார்த்துகிட்டு இருக்கீங்க..?’’

குரல் கேட்டுத் திரும்பினேன். எப்போதும் வழக்கமாக குப்பையிலிருந்து தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு போகும், நடுத்தர வயதுக்காரர் தன் வண்டியுடன் நின்றிருந்தார்.

சொன்னேன். பக்கத்தில் போய் மூட்டையை லேசாக நீக்கிப் பார்த்தார். ‘‘இப்பத்தான்மா லேசாக வெரைக்க ஆரம்பிச்சிருக்கு...’’
‘‘இவங்கள வேற இன்னும் காணுமே...’’ ‘‘வந்தாலும் ஊர்பட்ட காசு கேப்பாங்கம்மா...’’ என்றவர் வண்டியைத் தள்ள ஆரம்பித்தார்.

இரண்டடி நகர்ந்தவர் லேசான யோசனையுடன் ‘‘சரி... கொடுக்கறது கொடுங்கம்மா. நானே வண்டியில கொண்டு போய், அங்க ஒரு காடு இருக்கு... நல்லா குழி தோண்டி போட்டுடறேன்...’’ என்றார்.இருநூறு ரூபாயைக் கொடுத்தேன்.

‘‘ஒரு பாட்டில் பினாயில் கொடுங்கம்மா...’’அரைபாட்டில்தான் இருந்தது. வாங்கிக் கொண்டவர் படுத்திருந்த கருப்பியைச் சுற்றி பாதி ஊற்றி விட்டு, சாக்குடனே அவனைத் தூக்கி வண்டியில் வைத்தார். மீதி பினாயிலை அவன் படுத்திருந்த இடம் முழுக்கத் தெளித்தவர் வண்டியை என் வாசலில் கொண்டு வந்து நிறுத்தினார்.‘‘அம்மா... உங்க கையால ரெண்டு பூப்போட்டு பால் ஊத்துங்கம்மா...’’பக்கத்துச் செடியில் இருந்து ரோஜாவைப் பறித்து மேலே தூவினேன். கால் டம்ளர் பால் எடுத்து சாக்கு மேலேயும், அவன் கால்கள் மேலேயும் ஊற்றினேன். பிஸ்கட் இரண்டை நொறுக்கி மேலே‌ போட்டவள், அதற்கு மேல் தாங்க முடியாமல் கதறினேன்.

‘‘அழுகாதீங்க... நா நல்லா அடக்கம் பண்ணிர்ரேன்...’’ மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த குப்பை வண்டியையே பார்த்தபடி நின்றேன்.

மீண்டும் போனின் அழைப்பு மணி கேட்டது. கணவர்தான். விஷயத்தைச்சொன்னதும் ‘‘நானும் மீண்டும் பண்ணினேன். ஏதோ மினிஸ்டர் ஃபங்ஷனுக்கு சுத்தம் பண்ணப் போயிட்டாங்களாம்... நாளைக்குத்தான் வருவேன்னாங்க. விடு... நல்லா குழி தோண்டி புதைக்க சொல்லிட்டல்ல..?’’‘‘ம்...’’ மாலை வேலை விட்டு வந்த கணவரிடம், ‘‘அத்தை வீட்ல போய் ஒருநாள் இருந்திட்டு வர்ரேங்க...’’ என்றேன்.‘‘போய்ட்டு வா... நமக்கும் அவனுக்கும் அவ்வளவுதான் உப்பு.‌ ம்‌‌...’’

அத்தை வீட்டுக்குப் போனாலும், கருப்பியின் நினைவுதான் வந்துகொண்டே இருந்தது. மறுநாள் வீடு வந்தவள், அந்த குப்பை போடும் பக்கமே திரும்பவில்லை. எப்போதும் நடைப்பயிற்சிக்காக போகும் பாதையில் மிகப்பெரிய குப்பைத் தொட்டி இருக்கும். அதை சமீபிக்கும்போதே காற்றில் அடித்தது குப்பென்று வாந்தி வரவழைக்கும் ஒரு வாடை.

மூக்கைப் பொத்திக் கொண்டு கடந்தேன். பக்கத்தில் எப்போதும் வழக்கமாக நடைப்பயிற்சி செய்யும் அம்மாள் ‘‘எந்தப் பாவியோ செத்த நாய தூக்கிப் போட்டுட்டு போயிருக்கான்... அது நாறிகிட்டு கெடக்கு... எப்ப கார்ப்பரேஷன் லாரி வந்து தூக்கிட்டுப் போகுமோ...’’ புலம்பலாக தன்பாட்டில் சொன்னபடி கடந்தாள்.திடீரென மனதை உறுத்தவே, மூக்கைப் பொத்திய கைக்குட்டையுடன் திரும்பிப் பார்த்தேன்.குப்பைத் தொட்டியின் மேற்புறத்தைத் தாண்டித் தெரிந்தன அந்த மஞ்சளும் கறுப்பும் கலந்த நீளக்கால்கள்...

- விஜி முருகநாதன்