தமிழுக்கு அரும்பணியாற்றிய ஜி.யு.போப் வாழ்ந்த இல்லம்...
தமிழ் சமுதாயத்திற்கும் தமிழ் மொழிக்கும் மகத்தான பணிகளை ஆற்றியவர் தமிழறிஞர் டாக்டர் ஜி.யு.போப். திருக்குறளை முதன்முதலில் முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உலகம் முழுவதும் எடுத்துச் சென்ற பேராசிரியர் அவர். பிறகு நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்தார். இதனுடன் இலக்கண வினா விடை நூலை உரையுடன் வெளியிட்டார். தமிழ்த் தென்றல் திரு.வி.க, ‘தான் முதன்முதலில் பயின்ற இலக்கண நூல் போப்பினுடையது’ என உளம் மகிழ்ந்து பாராட்டியதுடன், 19ம் நூற்றாண்டில் போப்பின் இலக்கண நூல் சீரும் சிறப்புமாக விளங்கியதாகச் சொல்கிறார்.
தன் கல்லறையில் ‘இவன் ஒரு தமிழ் மாணவன்’ என எழுதுமாறு சொன்ன அந்தத் தமிழ்ப் பற்றாளர் வாழ்ந்த இல்லம் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இருக்கிறது. சாயர்புரத்தின் தந்தை என போற்றப்படும் ஜி.யு.போப், ஏழு ஆண்டுகளே அங்கு வாழ்ந்தார். அதற்குள் சாயர்புரத்தை மாற்றியமைத்து கல்வியில் பல அற்புதங்களை நிகழ்த்தினார். அவர் தூவிய கல்வி விதை இன்று சாயர்புரத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களாக வேரூன்றி ஆலமரம் போல் நிற்கிறது. சரி, போப் ஏன் சாயர்புரம் வந்தார்?
அந்த வரலாற்றை நம்மிடம் பகிர்ந்தார், சாயர்புரம் போப் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வெலிங்டன் பிரான்சிஸ் பிரபாகர். இவர் போப் பற்றி முழுவதும் படித்தறிந்து, அவர் எழுதிய இலக்கணநூலை ஆய்வு செய்து அதில் முனைவர் பட்டம் பெற்றவர். ‘‘போப்பின் பூர்வீகம் இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் நகரம். அவர் தந்தை ஜான் போப். தாய் கேத்தரின் உக்ளோ. ஜான் போப் இறைநாட்டம் கொண்டவர். இந்தியாவில் சமயப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து, மெதடிஸ்ட் எனும் திருச்சபையில் கேட்டிருக்கிறார். அப்போ திருச்சபைக்கு போதிய பணவசதியில்ல. அதனால அவரால் இந்தியா வரமுடியல.
பிறகு, கேத்தரின் உக்ளோவை திருமணம் செய்து வணிகத்திற்காக கனடா நாட்டின் எட்வர்ட் தீவு அருகிலுள்ள நோவாஸ்கோசியா எனும் இடத்துக்கு போறார். அங்க ரிச்சர்டு, ஜார்ஜ், வில்லியம், தாமஸ்னு நான்கு மகன்கள் பிறக்கிறாங்க. இதுல இரண்டாவது பையனான ஜார்ஜ் உக்ளோ போப் என்கிற ஜி.யு.போப் 1820ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிறந்தார்.
தந்தை ஜான் போப் கிறிஸ்துவ நற்செய்திப் பணிக்காக அடிக்கடி வெளியூர் செல்வார். ஒருமுறை மேற்கிந்திய தீவுகளுக்குக் குடும்பமா போகும்போது ரொம்ப கஷ்டப்படுறாங்க. தொழிலும் மந்த நிலை. இதனால், அங்கிருந்து மீண்டும் இங்கிலாந்து பிளைமவுத் நகருக்கே குடும்பத்துடன் வந்திடுறாங்க. இங்க வந்தபிறகு ஜான் போப்பின் வியாபாரம் முன்னேற்றம் அடையுது. ஜி.யு.போப்பும் சிறப்பாகப் படிக்கிறார். அதேநேரம், இறைபக்தியுடன் வளர்கிறார்.
தன் தந்தையைப் போலவே இந்தியாவில் இறைப்பணியாற்ற விருப்பம் தெரிவித்து மெதடிஸ்ட் சபையின் அனுமதியைப் பெறுகிறார். இதற்கு முன்பே தென்னிந்திய மொழியான தமிழையும், வடஇந்திய மொழியான சமஸ்கிருதத்தையும் கற்றுக் கொள்கிறார். 1839ம் ஆண்டு தன் பத்தொன்பதாம் வயதில் சென்னைக்கு வருகிறார். கப்பல்ல வரும்போதே நிறைய படித்து கிறிஸ்துவத் தமிழ் நற்செய்தி போதனை ஒன்றை தயார் செய்துவிடுகிறார்.
சென்னை வந்ததும் மயிலாப்பூர் சாந்தோம் சர்ச்சில் அந்தத் தமிழ் அருளுரையை போதிக்கிறார். திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் அவதரித்த மயிலாப்பூரில், முதன்முதலில் தமிழில் போதனை செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார் போப். சென்னையில் சபையின் குருவான ராபர்ட் கார்வர் என்பவருக்கு உதவியாளரா பணி செய்றார். அப்போது அவரின் மகள் ஜேன் மேரி ஆண்டர்சன் என்பவரை விரும்பி மணக்கிறார். ஆனா, இந்தச் சபையில் போப்பால் நினைச்சபடி பணி செய்ய முடியல. அதனால, அவர் எஸ்.பி.ஜி சங்கத்திற்குப் போறார்.
அங்கிருந்து 1841ல் போப்பும், கால்டுவெல்லும் ஒரே சமயத்தில் கிறிஸ்துவ நற்செய்தி அறிவிப்பாளராக தென்தமிழகத்தை நோக்கி வர்றாங்க. கால்டுவெல் முதலூருக்கு உட்பட்ட உபசபையான இடையன்குடிக்கு பொறுப்பேற்கிறார்.
போப், நாசரேத்துக்கு உட்பட்ட உபசபையான சாயர்புரத்திற்கு பொறுப்பாகிறார்.அப்போது சாயர்புரத்துல சிறு ஆலயம் இருந்தது. அது பகல்ல ஆரம்பப் பள்ளியாகவும், இரவுல ஆலயமாகவும் செயல்பட்டிருக்கு. போப் இங்க வந்ததும் அரசாங்க அனுமதி பெற்று காடாகக் கிடந்த இடங்களை சுத்தப்படுத்தி ஒரு செமினரியை 1844ல் தொடங்குகிறார். அதாவது ஒரு கல்விக்கூடத்தை ஆரம்பிக்கிறார்.
இதுக்காக சென்னையில் இருந்த கிறிஸ்துவ சங்க மேலிடத்தில் ஒப்புதல் வாங்கி இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். சாயர்புரம் ஊருக்குத் தெற்கே ஒரு சிறிய ஓடை இருக்குது. அதற்கு வடக்கே பெரிய மைதானம் உள்ளது. அங்கிருந்து ஒரு மதில்சுவர் கட்டி அதனுள் செமினரிக்கான வகுப்பறைகள், முதல்வர் அறை, விடுதி, சமையலறை என பல கட்டடங்களை 1844ல் கட்டத் தொடங்கினார்.
ஆனா, தற்காலிகமாக ஓலைக்கூரை மண் சுவர்களுடன் இரண்டு கட்டடங்களை வேகமாக எழுப்பி வகுப்புகளை ஆரம்பிக்கிறார். 1846ல் பனிரெண்டு அறைகள் கொண்ட செமினரியின் கட்டடங்கள் சிறப்பா கட்டி முடிக்கப்படுது. இந்தக் கட்டடங்கள் எல்லாம் இப்போது போப் நினைவு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தினுள் இருக்கு...’’ என்கிற பேராசிரியர் வெலிங்டன், நினைவு பள்ளிக்கு அழைத்துச் சென்று காட்டினார்.
சுற்றிலும் மரங்கள் சூழக் காணப்படும் அந்தப் பள்ளியின் பழமையை அந்தக் கட்டடங்களே பறைசாற்றுகின்றன. போப் கட்டிய கட்டடங்கள் வகுப்புகளாக மிளிர்கின்றன.
‘‘இதுல சில கட்டடங்கள் இடிக்கப்பட்டுடுச்சு. இந்தக் கட்டடங்களை போப் தன் மேற்பார்வையிலேயே கட்டியிருக்கிறார். சுற்றிலும் இருக்கிற பள்ளியின் சுற்றுச்சுவர் கோட்டைனு சொல்ற அளவுக்கு இருந்திருக்கு.
இப்பவும் இருக்குது. இந்தக் கட்டடங்கள் கட்ட கல்லும், மண்ணும் தோண்டி எடுத்திருக்காங்க. அந்தப் பள்ளங்களில் ஒன்றை தெப்பக்குளமாக மாற்றியிருக்கிறார் போப். இப்பவும் அந்தத் தெப்பக்குளம் இருக்கு. இது வெப்பமான பகுதி என்பதால் தண்ணீருக்காக அலையக்கூடாது என்பதற்காகவே நேர்த்தியாக இந்த விஷயங்களைச் செய்திருக்கிறார். இங்குள்ள புளியமரங்கள் எல்லாம் போப் வைத்தவை...’’ என்கிறவர் நிதானமாகத் தொடர்ந்தார். ‘‘இது பள்ளியின் நூற்றாண்டு மண்டபக் கட்டடம். ஏ.டி.தாமஸ் என்பவர் இந்த செமினரி ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதையொட்டி இந்தக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பிறகு, இதை 1955ல் அன்றைய தமிழக முதல்வர் கு.காமராஜ் திறந்து வைத்தார்.அந்நேரம் முதல்வர் காமராஜிடம் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில், ‘முன்னாடி 1880ல் இங்க மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி இருந்தது. இப்ப பள்ளியா மாறிடுச்சு. அதனால, கல்லூரி கொண்டு வரணும்’னு கோரிக்கை வைக்கிறாங்க. அதனால் இங்க போப் கலைக் கல்லூரி 1962ல் தொடங்கப்பட்டது. 2012ல் பொன்விழா கொண்டாடப்பட்டது.
இன்னைக்கு தன்னாட்சி பெற்ற கல்லூரியா வளர்ந்திருக்கு. போப் நினைச்ச மாதிரி ஒரு பல்கலைக்கழகமா மாறும் அளவுக்கு ஆண், பெண் மேல்நிலைப் பள்ளிகள், கலைக்கல்லூரி, கல்வியியல் கல்லூரி, எஞ்சினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என எல்லாமே இன்னைக்கு சாயர்புரத்துல இருக்கு. சாயர்புரம் கல்விபுரமா மாற போப்பே காரணம்.
அவரின் கையெழுத்து நூல்கள், படித்த புத்தகங்களை இன்றும் கலைக் கல்லூரியில் பாதுகாத்து வருகிறோம்...’’ என்கிறவர், அங்கிருந்து போப் கல்வியியல் கல்லூரிக்குள் அழைத்துச் சென்றார். அங்கே அருகருகே இரண்டு பெரிய வீடுகள் உள்ளன. ‘‘இதுதான் போப் வாழ்ந்த இல்லம். முதல்ல பள்ளிக்கான வகுப்புகளா இருந்தன. 2006ல் இங்க கல்வியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. பக்கத்துல உள்ள அந்த இல்லம் மாணவர் விடுதி அல்லது சமையலறை மாதிரி இருந்திருக்கும்னு நினைக்கிறோம். இப்ப அதுல கல்லூரி அலுவலகம் செயல்படுது...’’ என்கிறார்.
சுற்றிலும் தூண்கள்ல வடிவமைக்கப்பட்டிருக்கிறது அவர் வசித்த வீடு. பின்புறமுள்ள தூண்களை இணைத்து பி.எட் வகுப்பிற்காக இரண்டு பெரிய அறைகளாக மாற்றியுள்ளனர். வீட்டையொட்டி ஒரு பெரிய கிணறு உள்ளது.
இந்த வீடு கட்ட தேவையான மண், கல் எடுக்கும்போது உருவானதாகச் சொல்கிறார்கள். ‘‘இந்தக் கட்டடத்தின் பிரதான அறையில் அமர்ந்தால் அந்தப் பக்கம் மைதானமும், இந்தப் பக்கம் பள்ளியின் வகுப்பறைகளும் தெரியும். இங்கிருந்தபடியே போப் கண்காணிச்சிருக்கார். நாற்காலியில் அமர்ந்து மைதானத்தில் பசங்க விளையாடுவதை ரசித்திருக்கிறார். சிலநேரங்கள்ல அவரும் சேர்ந்து விளையாடியிருக்கிறார்.
1842ல் சாயர்புரத்தில் இருந்தே அவர் எழுதிய முதல் தமிழ்ப் புத்தகமான ‘தமிழ் இலக்கண நூல்’ வெளியாகுது. போப் தன்னை இலக்கண ஆசிரியர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இந்தக் கையடக்க புத்தகத்தை அன்று சி.வி.இ.எஸ் என்ற புத்தக நிறுவனம் மட்டும் 3 லட்சத்து 75 ஆயிரம் பிரதிகள் விற்பனை செய்துள்ளது .
இதுதவிர பல்வேறு மிஷனரி சங்கங்களும் இந்நூலை வெளியிட்டு இருக்காங்க.1844ல் இரண்டாவது இலக்கண நூல் வெளியானது. இந்தப் புத்தகம் 75 ஆயிரம் பிரதிகள் போயிருக்கு. இங்கிருந்தே மூன்றாவது இலக்கண நூல், நன்னூல், யாப்பருங்கலம் எனும் இரண்டு இலக்கண நூல்களை பதிப்பித்து அதற்கான உரையையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். பிறகு, ‘கிறிஸ்துவத் தத்துவ தீபிகை’ என்ற நூலை 1848ல் வேப்பேரி சி.கே.எஸ் பிரஸ் மூலம் வெளியிட்டுள்ளார். கடந்த 2017ல் போப்பின் 198வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி டயோசீசன் இந்த வீட்டை நினைவு இல்லமாக்கினாங்க. பிறகு, போப்பின் இருநூறாவது பிறந்தநாளை சிறப்பா கொண்டாடணும்னு முடிவெடுத்தாங்க. அந்நேரம், இந்த இல்லத்தை நினைவு இல்லமா அரசே பராமரிக்கணும்னு கோரிக்கை வச்சாங்க. ஆனா, கொரோனா வந்ததால் எதுவும் நடக்கல. சீக்கிரம் இந்த வீடு அரசின் நினைவு இல்லமாகும்...’’ என்கிறவரிடம், போப் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் சாயர்புரம் விட்டுப் போனார் என்றோம்.
‘‘அவரின் கண்டிப்பு. ஆமா... ‘நல்ல படிப்பு, நல்ல சாப்பாடு, நல்ல ஒழுக்கம், நல்ல அடி’ ஆகிய நான்கும்தான் இந்த செமினரியின் அடிப்படைக் கொள்கையா இருந்திருக்கு. ‘முதல்வனாய் இரு. முதல்வனோடு இரு’ என்கிற குறிக்கோளுடன் செயல்பட்டிருக்கு. அப்ப கிறிஸ்துவ சமயத் தலைமை இடங்கள்ல இருந்த நடுநிலைப்பள்ளிகளில் தேறின மாணவர்கள் மேற்படிப்புக்காக சாயர்புரம் செமினரிக்கு வந்திருக்காங்க. படிப்படியாக 250 மாணவர்கள் வரை எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. ஆசிரியர்களும் நிறைய பணியாற்றி இருக்காங்க.
1845ல் போப் மனைவி மேரி தன்னுடைய இரண்டாவது பிரசவத்துல இறந்திடுறாங்க. அதனால, போப் ரொம்ப வேதனையாகி உடல் பலவீனம் ஆகிடுறார். போப்பின் அதீத கண்டிப்பும் காரணமாகி பிறகு, சென்னை மேலிடம் சொன்னதன் பேரில் 1849ம் ஆண்டு கனத்த இதயத்துடன் ஓய்வுக்காக இங்கிலாந்து திரும்புகிறார் போப்.
அங்க ஹென்ரீட்டா பேஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்கிறார். 1851ல் மீண்டும் சென்னை வருகிறார். சாயர்புரம் போகலாமென நினைத்தவரை எஸ்.பி.ஜி. சங்கம் தஞ்சாவூர் அனுப்பியது. அங்கேயும் சமயப் பணியுடன் தனக்குப் பிடித்த ஆசிரியர் பணியையும் செய்தார். அங்கிருந்த தூய பேதுரு ஆரம்பப் பள்ளியை மறுசீரமைத்து உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தினார். 1854ல் அப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை ஏற்றார். அதுவே சென்னைக்கு வெளியே அரசு உதவிபெறும் முதல் பள்ளியாக செயல்பட்டு வந்தது. அங்கே ஏழு ஆண்டுகள் இருந்தார். அங்கே உயர்சாதியைச் சேர்ந்தவர்கள், தாங்கள் நற்கருணை பெற்ற பிறகே தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் நற்கருணை பெற வேண்டும் என வலியுறுத்தினர். ‘இது இயேசு கிறிஸ்துவின் நெறிக்கு மாறானது. இறைவன்முன் அனைவரும் சமம்’னு போப் போதனை செய்தார். பிரச்னை பெரிசாகுது.
சென்னை பேராயர் உயர்சாதியினர் கருத்துக்கு இணங்கும்படி கடிதம் எழுதுகிறார். இதனால் போப் ராஜினாமா செய்துவிட்டுக் கிளம்புகிறார். தஞ்சாவூரில்தான் அவர் தமிழ்ப் புலவராகவும், சிறந்த இலக்கண ஆசிரியராகவும் விளங்குகிறார். அவரின் மூன்றாவது இலக்கண நூலை 1857ல் மிகப்பெரியதாக தஞ்சையிலிருந்தே இரண்டாவது பதிப்பாக வெளியிடுகிறார். அது மாணவர்களின் இலக்கண பாட நூலாக விளங்கியது.
பிறகு ஊட்டி போய் அங்கே இலக்கணப் பள்ளி தொடங்குகிறார். அப்புறம், பெங்களூர்ல பிஷப் காட்டன் பள்ளியின் தலைமையாசிரியரா பொறுப்பேற்கிறார். இதன்பிறகு இங்கிலாந்து சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துல இந்தியன் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பை உருவாக்குகிறார். அங்கே தமிழ், தெலுங்கு கற்பிக்கும் ஆசிரியரா விளங்குகிறார்.
அவரின் மொழிபெயர்ப்பு நூல்கள் எல்லாம் இங்கிலாந்துல இருந்துதான் வெளியாகுது. இங்கே தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். ரெண்டு பேருமே பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறிக்கிறாங்க. அப்புறம், சூரிய நாராயண சாஸ்திரியார் இங்கிருந்து ஒரு புத்தகம் அனுப்ப அதை மொழிபெயர்த்து அனுப்புகிறார்.
அதை சூரிய நாராயண சாஸ்திரியார் புத்தகமா வெளியிடுகிறார். தமிழுக்காக அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. பிறகு, 1908ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி தன் 88வது வயதில் முதுமையின் காரணமாக போப் இயற்கை எய்தினார். அப்போது பல்வேறு பத்திரிகைகளும் ‘தமிழ் ஸ்காலர்’ என்றே அவருக்குப் புகழாரம் சூட்டின.
அவரின் கல்லறை ஆக்ஸ்போர்டில் இருக்குது. அதிலும் ‘இவர் தென் இந்தியர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆசிரியர்’ என்றும், இந்தக் கல்லறையின் கல் போப்பின் குடும்பத்தாராலும், அவரின் தமிழ் நண்பர்களாலும் நிறுவப்பட்டுள்ளது என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழில் நிறுத்தற்குறிகள், கமா எல்லாம் கிடையாது.
ஒரே செய்யுளா அல்லது தொடரா எழுதுவாங்க. இன்னைக்கு நிறுத்தற்குறிகள், கமா பயன்படுத்துறோம்னா அதுக்கு போப்பின் பங்கு அளப்பரியது. அவற்றை இலக்கணமாக்கியவர் போப்...’’ என நெகிழ்ந்து சொல்கிறார் பேராசிரியர் வெலிங்டன் பிரான்சிஸ் பிரபாகர்.
பேராச்சி கண்ணன்
|