சீறிப் பாயும் ஓடிடி!



இன்றைய நிலவரப்படி,கன்டென்ட் கன்ஸ்யூமிங் மார்க்கெட் எனப்படும் அசல் காணொலி நிகழ்ச்சிகளின், படைப்புகளின் பார்வையாளர்களை அதிகம் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய ஓடிடி சந்தைகளில் ஒன்றாக இந்தியா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த சில வருடங்களாக இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் துறையில் உருவாகியிருக்கும் புரட்சி ஓடிடி தளங்களுக்கு தோள் கொடுத்து வருகின்றது. இதனால் உலகிலேயே இளைய தலைமுறையினரை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் ஓடிடி சந்தையாக இந்தியா முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஒரே நேரத்தில் ஒரு படத்தை பல மொழிகளில் டப் செய்து வெளியிடுவதால், அது மொழி எல்லைகளைத் தாண்டி வரவேற்பைப் பெறுகின்றது.இப்படி ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் ஒரு பிராந்திய மொழி படத்திற்கு கிடைக்கும் இந்த வரவேற்புதான் ஓடிடி சீறிப் பாய காரணம். இந்தியாவில் சந்தா செலுத்தி ஓடிடி சேவைகளைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021ம் ஆண்டில் 65 - 70% வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இப்போது 110 மில்லியன் இந்தியர்கள், சந்தா செலுத்தி பார்த்து வருகிறார்கள். இது வெறும் 15% மட்டுமே. மீதமுள்ள 85%ஐ குறிவைத்து ஓடிடி தளங்கள் களத்தில் முழுவீச்சில் இறங்கியிருக்கின்றன.

கவுண்டர் பாயிண்ட் ஆய்வு, இந்தியச் சந்தையில் இருக்கும் 89% ஆடியன்ஸ் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஓடிடி வாடிக்கையாளர்களில் 55% பேர் 5 பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள். இது ஓடிடி இன்னும் சென்றடையாத சந்தை மிகப்பெரியது என்று உணர்த்தியிருக்கிறது. இந்த சந்தையைக் குறித்து வைத்து ஓடிடி தளங்கள் களத்தில் இறங்கியிருக்கின்றன. இதனால் 2021ம் ஆண்டில் மட்டும் பிராந்திய மொழி வெப் சீரிஸ் உட்பட மொத்தமாக 200 வெப் சீரிஸ்கள் வெளியாகியிருக்கின்றன.

இதன் பலனாக, ஓடிடி தளங்கள் 4.8 மடங்கு அதிக வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால், 2022ம் நிதியாண்டில் சுமார் 4000 கோடிக்கும் அதிக வருவாயை ஓடிடி தளங்கள் பெறும். ஆய்வுப்படி, இந்தியாவில் இன்று ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 761 மில்லியன். இவர்களை வளைத்துப் போடும் பட்சத்தில், 2022ம் ஆண்டின் இறுதியில் மேலும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை ஓடிடி தளங்கள் பெற வாய்ப்புகளுண்டு.

2019ம் ஆண்டில் ஓடிடி வீடியோ தளங்கள் சுமார் 12 பில்லியன் ரூபாய் மதிப்பிலான சந்தாவை ஈட்டியிருக்கின்றன. இது 2024ம் ஆண்டில் 74 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் ஓடிடி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 10வது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. ஆனால், 2023ம் ஆண்டில் தென்கொரியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, 8வது இடத்தை இந்தியா பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இப்படி நடந்தால் 2023ல் இந்திய ஓடிடி தளத்தின் வருவாய் சுமார் 13,800 கோடியாக அதிகரிக்கும்.

ஒரு இந்திய வாடிக்கையாளர் சராசரியாக நாளொன்றுக்கு 70 நிமிடங்களை ஓடிடி-யில் செலவிடுகிறார். அதேபோல் நாளொன்றுக்கு 2.5 ஓடிடி தளங்களையாவது ரசிக்கிறார். இந்தியாவில் இருக்கும் 30% மக்கள் ஓடிடி வீடியோ தளங்களில்தான் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். ஓடிடி தளத்தின் வாடிக்கையாளர்களில் 87% பேர் தங்களது மொபைல் ஃபோனில்தான் பார்க்கிறார்கள்.அதில் 27% தங்களது அலுவலகப் பணி நேரத்தில் பார்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன!

காம்ஸ் பாப்பா