இன்று வங்கியில் சீனியர் மானேஜர்... ஒரு படத்தின் தயாரிப்பாளர்... இசையமைப்பாளர்... பாடலாசிரியர்!
மீனவர் மகள்... போலியோ அட்டாக்...
‘‘ஒரு செக்ஸாலஜி ஸ்டூடண்ட் அவ வயசுக்கே உரிய எந்த ஜாலி, கேலி, விளையாட்டு, காதல்... இப்படி எதுவும் இல்லாம அவளுடைய படிப்புக்காக ஒரு வித்யாசமான தேடல்ல இறங்கறா. இந்தியா முழுக்க மக்கள் தொகை போதும் என்கிற அளவுக்கு பெருகிட்டு இருக்கு. ஆனால், ஒரு குறிப்பிட்ட ஆதிவாசி குழுவுல மட்டும் மக்கள் தொகை பெருகாம காலம் காலமாவே பேலன்ஸா இருக்கு... எப்படி? இந்தக் கேள்விதான் அந்தப் பொண்ணுடைய பிஹெச்.டி ஆய்வு. அந்த ஆய்வு செய்யறதுக்காக போன பொண்ணு அங்கே மாட்டிக்கிறா. என்ன ஆனா, மீண்டு வந்தாளா? இதுதான் ‘புதர்’ படத்தின் கதை.
 இது ஒரு கற்பனைக் கதைதான்... சுவாரஸ்யமா செய்திருக்கோம்...’’ படத்தின் கதையை ஆர்வமாகச் சொல்லி முடித்தார் மேரி ஜெனிதா. அடிப்படையில் ஒரு மீனவரின் மகள், போலியோ தாக்கத்தால் நடக்க முடியாது, ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் வாழ்க்கை, ஆனால், இப்போது பேங்க் மானேஜர், ‘புதர்’ படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்! எப்படி சாத்தியப்பட்டது இந்த உயரம்? நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் மேரி ஜெனிதா.

‘‘வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் அப்பா, அம்மா, அண்ணா கூட இருக்கலாம்னு நினைச்சா கூட வீடு பத்தாது. நான் குளிக்கணும்னா கூட குளிச்சு முடிச்சு ரெடியாகுற வரைக்கும் அப்பாவும், அண்ணாவும் வெளியே இருக்கணும். அவ்ளோ சின்ன வீடு எங்களுக்கு. கன்னியாகுமரி மாவட்டம் பக்கத்துல கடற்கரையோரம் இணையம்னு ஒரு சின்ன கிராமம்.
 அதுதான் எனக்கு சொந்த ஊர். அப்பா மில்கியாஸ், மீனவர்; அம்மா லில்லி, அண்ணா ஜெகன். அப்பாவும் அந்தப் பகுதியிலே நாலஞ்சு பேரும் ஒண்ணு சேர்ந்து தினக் கூலிக்கு மீன் பிடிப்பாங்க. எவ்ளோ மீன் பிடிப்பாங்களோ அதுக்கேத்த மாதிரி வள்ளத்தினுடைய (மீன் பிடிக்கும் படகு) உரிமையாளர் கூலி கொடுப்பார். எவ்ளோ மீன் கிடைக்குதோ அதுதான் எங்களுடைய அந்த நாள் சாப்பாட்டை நிர்ணயிக்கும். ஒருவேளை மீன் கிடைக்கலைன்னா பட்டினிதான். மாசம் முழுக்க உழைச்சா கூட முழுசா ரெண்டாயிரம், மூவாயிரம் கிடைக்குமான்னே தெரியலை. அதனால்தான் எங்க அப்பா என்னை சின்ன வயதிலேயே கொண்டு போய் கன்னியாகுமரியிலே இருந்த மிஷனரி ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலே விட்டுட்டார். அப்பப்ப அப்பா, அம்மா வந்து பார்த்துப்பாங்க. அங்கயேதான் வளர்ந்தேன்.
இடைல திடீர்னு போலியோ அட்டாக். எனக்கு நடக்க முடியாத நிலை உண்டாகிடுச்சு. என்ன தடை வந்தாலும் படிப்பை விடக் கூடாதுனு கறாரா இருந்தேன். ஆதரவற்றோர் காப்பகத்திலே எட்டாம் வகுப்பு வரை சிஸ்டர்ஸ் உதவிகளோடு படிச்சேன். அடுத்து சி.எஸ்.ஐ போலியோ ஹோம்ல தங்கியிருந்தேன். அருகிலே இருந்த நேசமணி பஸ் டிப்போவிலே இருந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் படிக்க வைச்சாங்க.
அடுத்து ஹோலி கிராஸ் காலேஜ்... அங்கயும் சிஸ்டர்கள் உதவி செய்ய படிச்சு முடிச்சேன்..’’ என்னும் ஜெனிதா சென்னை சத்தியபாமா கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். அதன் உரிமையாளர் ஜேப்பியார் செய்த ஃபீஸ் சலுகைகள் மூலமா எம்பிஏ முடித்திருக்கிறார். ‘‘சின்ன வயசிலே இருந்தே, என் அப்பா என்னால நடக்க முடியாது என்கிறதால், ‘அருகிலே இருக்கற பேங்க்ல நீ மானேஜரா வந்திட்டா, உனக்கு வீடுகிட்ட இருக்கும்’னு சொல்லிக்கிட்டே இருப்பார். அதையே மனசுல நிறுத்திக்கிட்டு படிச்சேன். அந்த பேங்க்ல மானேஜர் போஸ்டிங் வருதோ இல்லையோ, என்னுடைய வேலை வங்கி மேலாளர்னு முடிவு செய்தேன்.
எம்பிஏ முடிச்சு ஆறு மாசத்துல டைரக்ட் மெரிட்ல எனக்கு 22 வயசுல பேங்க் மானேஜர் போஸ்டிங் கிடைச்சது. அடுத்து சீனியர் மேனேஜர், இப்ப வரைக்கும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுல சீனியர் மானேஜர் போஸ்டிங்ல இருக்கேன். எனக்கும் சமூக ஆர்வலர் லிபின் குரியனுக்கும் காதல் ஏற்பட்டுச்சு. அவங்க குடும்பமே ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு, தங்குமிடம் இப்படி நிறைய சேவைகள் செய்துட்டு இருக்கிறதால லிபின் என்னை அறிமுகப்படுத்தும் போது அவருடைய அப்பா குரியன், அம்மா மெர்குரி குரியன் ரெண்டு பேரும் என்னை முழு அன்போடு ஏத்துக்கிட்டாங்க.
எங்களுக்கு 2014ல் கல்யாணம் ஆச்சு. எங்களுக்கு அஞ்சு வயசில் ஒரு குழந்தை இருக்கா. பெயர் சான் இலைஜாஹ். சின்ன வயசுல இருந்து படிப்புதான் பிரதானம், அதனாலேயே என்னுடைய தனித்திறமை எதையுமே நான் காட்டிக்கலை. சின்ன வயசுல இருந்து மிஷனரியில் வளர்ந்ததால எனக்கு இசை கம்போசிங், பாடல் எழுதறது... இதெல்லாம் தானாகவே வந்துடுச்சு. ஸ்கூல், காலேஜ் நாட்களில் எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் என்னுடைய சொந்த டியூனில் போட்ட பாடல்களைத்தான் பாடுவேன்.
இதை திருமணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுகிட்ட என் கணவர் ஏன் இதையே அடிப்படையாக வைச்சு நிறைய விஷயங்கள் செய்யக்கூடாதுனு என்னைக் கேட்டார். தொடர்ந்து ஒரு குறும்படம் கூட செய்தோம். இன்னும் கொஞ்சம் அதிகமா வருமானமும் இருந்தால் இன்னும் நிறைய ஆதரவற்ற ஏழைகளைப் பார்த்துக்கலாம்னு நினைச்சோம். அதனால்தான் சினிமாவுக்குள்ள நுழையலாம்னு தோணுச்சு. அப்படி யோசிச்சு உருவானதுதான் ‘புதர்’ படத்தினுடைய வேலைகள். என் கணவர் லிபின் குரியன்தான் ‘கெர்ப்ஸெரா புரொடெக்ஷன்ஸ்’ உரிமையாளர். தயாரிப்பு மேற்பார்வை, மியூசிக் கம்போசிங், தமிழ்ப் பாடல்களுக்கு வரிகளைப் பார்த்துக்கிட்டேன்.
இன்னொரு விஷயம், நான்கு மொழிகள்ல ஒரு படத்துக்கு மியூசிக் செய்த முதல் இந்தியப் பெண் இசையமைப்பாளர் நான் என்பதையும் பெருமையா சொல்லிக்கிறேன். ஆனா, பாடலும் நானே பாடக்கூடாதுன்னு சயனோரா பிலிப், சுனிதா சாரதி, பிரசன்னா, சன்னிதாநந்தன் போன்ற பிரபலமான பாடகர்களைக் கொண்டு பாடல்கள் உருவாக்கியிருக்கோம். இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே எங்களுடைய குடும்ப நண்பர் அகஸ்டீன். கடவுள் அருளால் நான் நினைத்ததை விட ரொம்ப நல்லாவே இருக்கேன். என்னால முடிஞ்ச அளவுக்கு என் குடும்பத்தார் கூட சேர்ந்து நிறையவே உதவி செய்திட்டு இருக்கேன்.
என் அப்பா, அம்மாவுக்கு அவர்களுடைய சொந்த ஊரிலேயே ஒரு வீடு கட்டிக் கொடுத்து பாதுகாப்பாக பார்த்துக்கறேன். பசினு வர்றவங்களுக்கு வயிறார சோறு போடணும்... இதுதான் எங்க குடும்பத்தின் ஒரே லட்சியம். அதை நோக்கிதான் இப்ப குடும்பமா பயணிச்சிட்டு இருக்கோம். எங்களுடைய ‘புதர்’ படம் அருமையா வந்திருக்கு. நிறைய ரிஸ்க்கான லொகேஷன்கள்ல ஷூட் செய்திருக்கோம். சீக்கிரம் திரைக்கு வரப் போகுது...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் மேரி ஜெனிதா.
ஷாலினி நியூட்டன்
|