பிரபஞ்ச ஜோதிடர் பாபா வாங்கா சொன்னது பலிக்குமா..? மிரளும் உலகம்
உடான்சா அல்லது நிஜமா என்று தெரியாது. ஆனால், உலகமே மிரண்டு போயிருப்பது மட்டும் நிஜம். காரணம், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம்.
இதற்கும் இந்த மேட்டரின் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்றுதானே கேட்கிறீர்கள்..? விஷயமே அதுதான் பாஸ்.  உலக அளவில் எதிர்காலத்தை கணிப்பதில் பிரபலமானவர் என்று அறியப்படுபவர் பாபா வாங்கா. முழுப்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், 1970 மற்றும் 80களில் புகழ்பெற்றவர். அந்த நேரத்தில் அவர் கணித்ததாகக் கூறப்படும் பல விஷயங்கள் அடுத்தடுத்த வருடங்களில் இம்மி பிசகாமல் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 
உதாரணமாக, அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல்... கருப்பின ஆப்ரிக்க அமெரிக்கர் (ஒபாமா) ஒருவர் அமெரிக்க அதிபராவார் என்ற கூற்று... இதையெல்லாம் 70களிலேயே பாபா வாங்கா கணித்துச் சொல்லிவிட்டாராம். இப்படி இவர் சொன்ன ஆருடங்களில் 85% வரை அப்படியே பலித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்த ஆண்டு - அதாவது 2022ல் - ஆஸ்திரேலியா மற்றும் சில ஆசிய நாடுகளில் பெருவெள்ளம் ஏற்படும் என்பது கூட 40 ஆண்டுகளுக்கு முன் பாபா வாங்கா சொன்னதுதானாம். அதற்கேற்பவே ஆஸ்திரேலியாவில் இன்று நிலைமை மோசமாக இருந்ததை - இருப்பதைப் பார்க்க முடிந்தது; முடிகிறது.
இப்படி பாபா வாங்கா சொன்னவற்றில் பெரும்பாலானவை பலித்திருப்பதால் அடுத்து வரும் வருடங்கள் குறித்தும் இவர் ஆருடம் சொன்னது பலிக்குமோ என்ற அச்சத்தில் நகத்தைக் கடிக்கிறது இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும்.அதாவது, 2023ம் ஆண்டில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மாற்றம் காணும்...
2028ம் ஆண்டில் மனிதன் வெள்ளி கோளுக்கு பயணிப்பான்... 2046 காலகட்டத்தில் மனிதர்களின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளாக இருக்கும்... 2100ம் ஆண்டு வாக்கில் உலகில் இருள் என்பதே இருக்காது, செயற்கை சூரியன் மூலம் உலகின் மறுபக்கத்துக்கு ஒளி கொடுக்கப்படும்... என்பன அவரது பிரபலமான கணிப்புகள். பாபா வாங்கா கூறியதிலேயே மிகவும் முக்கியமானதாகவும், ஒரு சிலரால் ஆபத்தானதாகவும் கருதப்படும் கணிப்பு, இன்னும் 50 ஆண்டுகளுக்கும் குறைவான தொலைவில் இருக்கிறது. ஆம். 2040 - 43க்குள் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துவ மதமே இருக்காது... அமெரிக்கா சுற்றுச் சூழலை அழிக்கும் கருவியை (Environmental Destructor) கண்டுபிடிக்கும்... என்பவை இவரது கணிப்புகளில் சில. இந்த ஆருடங்கள் அனைத்தும் இப்போது மிகவும் தீவிரமானதாகவும், அசாதாரணமானதாகவும் தெரிந்தாலும், இவை நிறைவேறக்கூடும் என்கிறார்கள்.
அதேநேரம் காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதைதான்... பாபா வாங்கா ஒன்றும் எதிர்காலத்தை துல்லியமாகக் கணித்துச் சொன்னவர் அல்ல... எடுத்துக்காட்டாக, சோவியத் ரஷ்யா 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று அவர் கணித்ததும்; 2010ம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் மூளும் என்று அவர் சொன்னதும் நடந்ததா..? சும்மா குருட்டாம்போக்கில் அவர் பிதற்றியதை எல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை...
அறிவியல் + தொழில்நுட்ப பாய்ச்சலை - வளர்ச்சியை ஊகித்து அவர் சொன்னவை மட்டுமே அவர் காலத்துக்குப் பிறகு நடந்திருக்கின்றன... இதையெல்லாம், ஊகிக்கும் திறனுள்ள யார் வேண்டுமானாலும் அப்படிப்பட்ட ஆருடங்களைச் சொல்லலாம்... மற்றபடி பாபா வாங்காவை வைத்து பலரும் தங்கள் இஷ்டத்துக்கு, தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் அவர் பெயரில் பரப்புகிறார்கள்... என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
ஜான்சி
|