பால் விற்று என்னை இன்ஜினியர் ஆக்கிய அண்ணன் நினைவா வேலூரையே மாத்திகிட்டு வர்றேன்!
‘‘எங்களுக்கு எல்லாமே அண்ணன்தான். அவர் ஒரு சாலை விபத்துல இறந்தப்ப எங்க உலகமே நின்ன மாதிரி ஆகிடுச்சு. அவர் இறந்த அன்னைக்கு ஆயிரக்கணக்கானவங்க திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினாங்க. ஏன்னா, அவர் தன்னுடைய சம்பாத்தியத்துல அவராலான சமூக சேவையை எங்களுக்கே தெரியாமல் செய்திட்டு இருந்திருக்கார்.
 அப்பதான், பிறருக்காக வாழ்ந்தால் நம் இறப்பு அன்னைக்கு ஊரே அழும்னு தெரிஞ்சுகிட்டேன். அண்ணன் விட்டுப்போன சமூக சேவையை தொடர்ந்து செய்யணும்னு ஆசைப்பட்டு, அவர் நினைவா செய்திட்டு வர்றேன்...’’ மரக்கன்று ஒன்றை நட்டபடியே பேசுகிறார் சமூக சேவகர் தினேஷ் சரவணன். 
இந்த இளைஞர் செய்துவரும் சமூகப் பணிகளை வெறும் விரல்களால் எண்ணிவிட முடியாது. ஏனெனில், அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் பணிகளுக்காக தமிழக அரசின் மாநில, மாவட்ட விருதுகள் உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். ‘‘என் நிஜப்பெயர் தினேஷ் பாபு. என் அண்ணன் பெயர் சரவணன். சமூகப் பணிக்காக அவர் பெயரை சேர்த்து தினேஷ் சரவணன்னு வச்சுக்கிட்டேன்...’’ என அண்ணனை நினைத்து நெகிழ்ந்தபடியே ஆரம்பிக்கிறார் தினேஷ்.  ‘‘சொந்த ஊர் வேலூர் ரங்காபுரம். பி.இ எஞ்சினியரிங் படிச்சிருக்கேன். 2013ல் படிப்பு முடிஞ்சதும் சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்பா செல்வராஜ் பால் வியாபாரம். அம்மா அம்சா, தலையில் தயிர் கூடையை வச்சிட்டு தெருத் தெருவா போய் விற்பாங்க. வறுமையான குடும்பம். அண்ணன் சரவணன்தான் மூத்தவர். அடுத்து அக்கா, அண்ணன், கடைசியா நான்.  இதனால, அண்ணன் சரவணன் எட்டாவது வரை அரசுப் பள்ளியில் படிச்சிட்டு வறுமையால் படிப்பை பாதியில் நிறுத்திட்டார். என்னைவிட பத்து வயசு மூத்தவர். 15 வயசுலயே பால் வியாபாரத்துக்கு போயிட்டார். பிறகு, எங்கள மெட்ரிக்குலேஷன்ல படிக்க வச்சார். தன் வாழ்க்கையைத் தியாகம் பண்ணி எங்கள படிக்க வச்சு முன்னுக்குக் கொண்டு வந்தார். 2014ல் அவர் திருவண்ணாமலையில் கிரிவலம் போகும்போது சாலை விபத்துல இறந்துட்டார்.

தன்னுடைய சம்பாத்தியத்துல முதியோர் இல்லங்களுக்கு இலவசமாக பால் ஊத்துறது, சாப்பாடு வழங்குறதுனு நிறைய பணிகளை செய்திட்டு இருந்திருக்கார். இப்பவரை அவரைப் பத்தி பேசாதவங்களே இல்ல. அண்ணன் இறந்த அடுத்தநாளே நானும் அடுத்தவங்களுக்கு பயனுள்ளதா இருக்கணும்னு சமூகப் பணியில் இறங்கிட்டேன். ஆரம்பத்துல எனக்கு என்ன பண்ணணும்னு தெரியல. அதனால, அவர் நினைவா நர்சரியில் இருந்து மரக்கன்றுகள் வாங்கி சைக்கிள் ரிக்ஷாவுல வச்சு வீடு வீடாகக் கொடுக்க ஆரம்பிச்சேன். கூடவே விழிப்புணர்வும் ஏற்படுத்தினேன்.
வேலூர்ல ஆரம்பிச்சு திருப்பத்தூர், ராணிப்பேட்டைனு மூணு மாவட்டங்களைக் கவர் பண்ணி இந்தப் பணியைச் செய்தேன். ஆரம்பத்துல 45 ஆயிரம் மரக்கன்றுகள்தான் கொடுத்தேன். இதன்பிறகு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கணும்னு ஒரு டார்கெட் வச்சேன்.
பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வு கொடுத்தேன். அப்படி போகும்போது அங்க என் பேச்சைக் கேட்க வர்ற 250 முதல் முந்நூறு மாணவ - மாணவிகளுக்கு இலவசமா மரக்கன்றுகள் கொடுத்தேன். அப்படியாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் என்பதை ரீச் பண்ணினேன்.
இதுக்கிடையில், கொடுப்பதுடன் நாமே நட்டு வளர்க்கலாமேனு தோணுச்சு. அதனால, ஒரு குறுங்காடு திட்டத்தைத் தொடங்கினேன். அது இப்ப வெற்றிகரமா போயிட்டு இருக்கு. வேலூர் துரைப்பாடி மத்திய சிறையில் பண்றேன். சிறை நிர்வாகத்தினர் நிலம் கொடுத்தாங்க. 2000 மரக்கன்றுகள் நடுவதாகத் திட்டம். இப்ப வரை 1500 மரக்கன்றுகள் நட்டிருக்கோம். சிறைத்துறையினர் சிறைவாசிகளை வச்சு தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறாங்க. நான் வாரத்துல ரெண்டு நாட்கள் போய் பராமரிப்புப் பணிகளை மேற்பார்வையிடுவேன்.
அடுத்ததா பனங்காடுனு ஒரு திட்டத்தைத் தொடங்கி அதுவும் நல்லா போயிட்டு இருக்கு. இதுல இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள், ஏரிக்கரைகள், அப்புறம் பாலாறு கரையோரங்களில் ஆறு கிமீ தூரம் நட்டிருக்கேன்.இதுக்கென தனியா நான் எந்த அமைப்பும் உருவாக்கல. எல்லாமே தினேஷ் சரவணன் பெயர்லதான் செய்றேன். இதுக்கு சமூக வலைத்தளத்தை ஒரு கருவியா பயன்படுத்திக்கிறேன். சமூக ஊடகங்களில் நான் போடுகிற விஷயங்களைப் பார்த்து நிறைய பேர் உதவுறாங்க...’’ என்கிறவர், கொரோனா காலத்தில் செய்த பணிகள் அளப்பரியது.
‘‘கொரோனா நேரத்துல நான் 15 ஆயிரம் பேருக்கு மளிகை சாமான்கள் வழங்கினேன். இதுக்குதான் எனக்கு சோஷியல் மீடியா ரொம்ப உதவிகரமா இருந்தது. இப்பவரை நான் இந்தப் பணிகளுக்காக என் சம்பளப் பணத்தில் 50 சதவீத தொகையை ஒதுக்குறேன். ஆரம்பத்துல 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினப்ப 8 ஆயிரம் ரூபாய் ஒதுக்கினேன். இப்ப ஒரு லட்சம் ரூபாய் வாங்குறேன். அதனால, ஐம்பது ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இந்தப் பணிகளைச் செய்றேன்.
முதல் மூன்று ஆண்டுகள் என் காசுலதான் பண்ணினேன். அப்புறம், நிறைய கேட்க ஆரம்பிச்சாங்க. அதனால, சோஷியல் மீடியாவுல போட்டேன். ஆனா, யார்கிட்டயும் வாய் திறந்து உதவி வேணும்னு கேட்டதில்ல. சோஷியல் மீடியாவில் ரீச்சாக பலரும், தானாக முன்வந்து பண உதவி செய்ய ஆரம்பிச்சாங்க. கொரோனா நேரம் மட்டும் 40 லட்சம் ரூபாய் வரை செலவாச்சு. என்னுடன் நிறைய பேர் கைகோர்த்து நிதியுதவி செய்தாங்க.
இதுல சிலருக்கு வாழ்வாதாரத்துக்காக இளநீர், காய்கறிகள்னு தள்ளுவண்டி கடைகள் வச்சுக் கொடுத்தேன். தவிர, நாற்பது பேரின் வீடுகளுக்கு ஓலை போட்டுக் கொடுத்தேன். கிராமப்புறத்துல ஓலைக் குடிசையில் நிறைய பேர் வசிப்பாங்க. வீடு சிமென்ட்ல இருக்கும். ஆனா, மேல் கூரை ஓலையில் வேய்ந்திருப்பாங்க. அவங்க ஓலை வாங்க முடியாமல் மழைக்காலத்தில் ஒழுகல்ல வசிப்பாங்க. அப்படியானவங்களுக்கு ஓலை கட்டிக் கொடுத்தேன்.
அடுத்து கொரோனா நேரத்துல தொடர்ந்து 200 நாட்கள் உணவு வழங்கினேன். வேலூர் மாவட்ட சமூகநலத்துறை சார்பா சாலையில் சுற்றினவங்களை மாநகராட்சிப் பள்ளியில் தங்க வச்சாங்க. நூறு பேருக்கு இருநூறு நாட்கள்னு மூன்று வேளையும் பசியாற உணவு வழங்கினேன். இப்ப சாலையோரம் வசிப்பவர்களுக்கு வாரத்துல ரெண்டு நாட்கள் ஒருவேளை உணவு மட்டும் வழங்கிட்டு இருக்கேன்.
அதேமாதிரி வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்குப் பென்சன் வாங்கித் தர்றது, பட்டா வாங்கித் தர்றது, சாலையோரம் வசிக்கிற முதியோர்களை இல்லங்கள்ல சேர்க்கிறதுனு வேறு சில சேவைகளும் பண்றேன். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியோர்களை மீட்டு காப்பகத்துல சேர்த்திருக்கிறேன். ஆரம்பத்துல என் பணியைப் பார்த்து எதுக்கு இதெல்லாம்னு வீட்டுல திட்டினாங்க. இப்ப என் குடும்பம், மனைவினு பலரும் எனக்கு பக்கபலமா இருக்காங்க.
அப்புறம், இப்ப அரசுப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் பண்ணிக் கொடுத்திட்டு இருக்கேன். இதுவரை மூன்று அரசுப் பள்ளிகளுக்கு செய்திருக்கேன். எல்லாமே பெருமுகை, அலுமேலுமங்காபுரம், கருகம்பத்தூர்னு வேலூர் மாவட்டத்துல இருக்கிற ஆதிதிராவிடர் பள்ளிகள். இதை தலா ஒரு லட்சம் ரூபாய் செலவில் பண்றேன். இதுல ரெண்டு பள்ளிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் சாரே நேரடியா வந்து தொடங்கி வச்சார். இப்ப மூணாவதா ஒரு பள்ளி அணைக்கட்டு தொகுதியில் வர்றதால அந்தத் தொகுதி எம்எல்ஏ நந்தகுமார் சாரை வச்சு திறக்க டைம் கேட்டிருக்கேன்.
இதுல ஹோம் தியேட்டர், ப்ரொஜெக்டர், ஸ்கிரீன் எல்லாம் இருக்கும். புக், பேப்பர் இல்லாமல் குழந்தைகள் படிக்கலாம். அடுத்து ஒரு பள்ளிக்கு பெண்கள் கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கேன். மாதவிடாய் காலத்தில் பெண் குழந்தைகள் வகுப்புகளுக்கு வர்றதில்லனு சொன்னாங்க. அதனால, நாப்கின் மாற்றுவதற்கான அறையுடன் சேர்ந்த ஒரு கழிப்பறையைக் கட்டினேன்...’’ என்கிறவருக்கு சமீபத்தில் மாநில அரசு விருது கொடுத்து கௌரவித்திருக்கிறது.
‘‘இதுவரை நான் முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கியிருக்கேன். இதுல ரொம்ப முக்கியானது கடந்த ஜூன் மாசம் சுற்றுச்சூழல் தினத்துல மாநில சிறந்த பசுமை முதன்மையாளர் விருதினை தமிழக அரசு வழங்கினதுதான். ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வேலூர் மாவட்ட கலெக்டர் கையால் அந்த விருதினைப் பெற்றேன். உடனே இந்த விருது தொகையை ஒரு ஸ்மார்ட் கிளாஸ் பணிக்கே வழங்கிட்டேன்.
இதுதவிர, வேலூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த சமூக சேவகர் விருது இரண்டு முறை வாங்கியிருக்கேன். அப்புறம், நம்மாழ்வார் விருது, வள்ளலார் விருது, அப்துல்கலாம் விருதுனு பல விருதுகளை வெவ்வேறு அமைப்புகள் வழங்கியிருக்காங்க...’’ என உற்சாகமாகச் சொல்லும் தினேஷ் சரவணன், ‘‘என் குறிக்கோள் வேலூரை பசுமையாக்கணும் என்பதுதான்.
இப்ப வேலூர் பகுதி மலைகள்ல ஆறு லட்சம் விதைப் பந்துகள் தூவி இருக்கேன். அப்புறம், இல்லாதவங்களுக்கு என்னாலான பணிகளை அண்ணனின் நினைவா என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்யணும்னு ஆசைப்படுறேன்...’’ என யதார்த்தமாகச் சொல்கிறார் தினேஷ் சரவணன்.
பேராச்சி கண்ணன்
|