அரண்மனை குடும்பம்-33
போதிமுத்து, சிணுங்கிய செல்போனை எடுத்து காதருகில் வைத்தான். வைக்கும்போதே கொஞ்சம் பதற்றமுமானான்.“இது போதிமுத்து தானே..?” மறு புறத்தில் இருந்து கேள்வி.“அ... ஆமாம்... நீங்க யாருங்க சாமி..?”“சொல்றேன்... நீ பாம்புப் பிடாரன்தானே?”“ஆ... ஆமாங்க. நீங்க யாருங்கோ..?”
 “சொல்றேன்... சொல்றேன்... சதீஷ் உன்னை வெச்சுதானே ஏற்காட்ல ஒரு திட்டம் போட்ருந்தான்..?” “சதீஷா... அது யாருங்க... தெரியலீங்களே..?”“நடிக்காதய்யா... அந்த சதீஷ்கிட்ட இருந்த போன்ல இருந்துதான் உன் நம்பரை கண்டு பிடிச்சு நான் போன் பண்ணிக் கிட்டிருக்கேன்...” “அய்யோ... அப்ப நீங்க அந்த செக் போஸ்ட் போலீசுங்களா?”“பயப்படாத... நீ செக்போஸ்ட் போலீசுக்கே தண்ணி காட்டிட்டு தப்பிச்சு போயிட்டது எனக்கு நல்லா தெரியும். நான் போலீஸ் இல்ல...”“அப்ப நீங்க யாருங்க சாமி..?”
 “முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்... சதீஷ் உண்மையா எப்படி செத்தான்?” “ அவர் பாம்பு கடிச்சு செத்தார்னுதான் எல்லாருக்குமே தெரியுங்களே?”“அந்த பாம்பு எப்படிய்யா அவனை கடிச்சிச்சு... உனக்கும் அவனுக்கும் ஏதாவது தகராறு வந்து பாம்பை விட்டு கடிக்க விட்டு கொலை பண்ணிட்டியா..?”“ஐயோ... ஐயோ... இப்படி அபாண்டமால்லாம் சொல்லாதீங்க சாமி... காரு வளைஞ்சு திரும்பைல பாம்பு இருக்கற பெட்டிங்க சீட்டுல இருந்து கீழ விழுந்ததுல ஒரு பாம்பு வெளிய வந்துடுச்சிங்க. அது காரை ஓட்டிக்கிட்டிருந்த அவர் கால் கிட்ட போய் அவர் மிதிக்கவும் ஒரே போடா போட்ருச்சுங்க... இது தாங்க நடந்தது...” “ஆனா, போலீஸ்ல வேற மாதிரி சொல்றாங்களே..?”
“எது உண்மையோ அதை நான் சொல்லிப்புட்டேங்க... நீங்க யாருன்னே சொல்லாம இப்படி என்ன நோண்டுனா என்னங்க அர்த்தம்?” “நான் யார்னு சொல்றதென்ன... என்னை நீ பாக்கவே போறே... அப்ப தெரிஞ்சுக்க... நான் உன்னை பாக்கணுமே?”“எதுக்குங்க சாமி..?”
“அதையெல்லாம் நேர்ல சொல்றேன். நீ இப்ப எங்க இருக்கே..?”“சாமி... இப்படி ஒளிஞ்சிகிட்டே பேசினா எப்படி சாமி? நீங்க போலீசுன்னு இதுல இருந்தே தெரியுது. நான் நீங்க புடிச்சு தண்டிக்கற அளவுக்கு எந்த தப்பும் பண்ணல சாமி... அதேபோல அந்த மலைல யாரைக் கொல்ல வந்தோம்னோ, யார் அனுப்பி வெச்சாங்கன்னோ... வழுக்குப் பாறை முனி சத்தியமா சொல்றேன்... எனக்கு தெரியாதுங்க... என்னை உட்றுங்க சாமி...”என்று வேகமாக போனை கத்தரித்துக் கொண்டான் போதி முத்து.
பேசி முடித்ததில் மலைக் குளிரையும் மீறி முகத்தில் வியர்வை பூத்துவிட்டிருந்தது.மாரப்ப வாத்தியார் ஒரு சுருட்டை எடுத்து பற்றவைத்திருந்தார். புகையை குழற விட்டபடியே, “அந்த கொலகாரன்தாண்டா பேசறான்... நீ... யாரு யாருன்னு கேட்டுகிட்டே இருக்கே... நான் சொல்லலை... நாம மட்டும் அவனைத் தேடலை... அவனும் நம்மள தேட்றான்னு...’’ என்ற மாரப்ப வாத்யாரை சற்று ஆச்சரிய அதிர்வோடு பார்த்தான் போதிமுத்து.“ஆசானே... இவன் நம்பர் எப்படி வாத்யாரே அந்தாளுக்கு கிடைச்சிருக்கும்...” என்று இடை வெட்டினான் ஜல்லி.
“அந்த செத்துப்போன சதீஷ் செல்போன் இப்ப அந்த ஆள் கைல இருக்குதாம். அதை குடைஞ்சாதான் எல்லாமே தெரிஞ்சிடுமே... இதை அந்தாளே சொன்னான் ஜல்லி...” “அப்ப ஆஸ்பத்திரில உடம்பைக் கூறுபோடும்போதே சட்டைப்பைல இருந்து எடுத்து இவன்கிட்ட கொடுத்துட்டாங்க போல...”“எலேய்... இதெல்லாம் விசயமாடா? போலீஸ்லயே இவன் மாதிரி ஆளுங்களுக்கு கையாள் இருப்பாங்க... அதனால இந்தக் கேள்விய விடு... அவன் எதுக்கு பேசினான்னு யோசி...”“எதுக்காக இருக்கும் ஆசானே..?”
“எல்லாம் எதுக்கு..? அதான் இன்னும் அவன் நினைச்ச மாதிரி கொலைய செய்யலியே... அதுக்காதான் இருக்கும்...”“இத கர்ண யட்சிணிகிட்ட கேட்டா சொல்லாதா ஆசானே?”“இதுக்கு எதுக்குடா அத போய் கேட்டுகிட்டு..? அஞ்சையும் மூணையும் யார் எங்க கூட்னாலும் எட்டுதாண்டா வரும். அந்த மாதிரி இது ஒரு கணக்கு. இப்ப திரும்பக் கூப்பிடுவான் பாரு...” சுருட்டுப் புகையை உமிழ்ந்தபடியே மாரப்ப வாத்தியார் அலட்சியமாகச் சொன்னது நடந்தே விட்டது. போதிமுத்துவின் கைபேசி திரும்ப சிணுங்கியது. போதிமுத்துவும் அதன் திரையைப் பார்த்தான். அன்நோன் நம்பர் என்று காட்டியது திரை.
“இந்த நம்பர் புதுசா இருக்குதே?” “பேசு... பேசு... அவன்தான் வேற போன்ல இருந்து பேசறான்... கில்லாடிக்காரமவன்... உஷாராம்... நீ பேசு பேசு...” என்று மாரப்ப வாத்தியார் ஊக்கம் தரவும் திரும்ப காதைக் கொடுத்தான் போதிமுத்து.“ஹலோ... போதிமுத்துங்களா..?” “அ... ஆமாம்... நீங்க?”
“என் பேர் மூர்த்தி... எனக்கு கொஞ்சம் பாம்பு விஷம் வேணும்... கிடைக்குமா? ஒரு கிராமுக்கு ரெண்டாயிரம் தரேன்...” “எதுக்கு..?”“மருந்து ஒண்ணு தயாரிக்கறோம். அதுக்கு நாக விஷம் தேவைப்படுது. அதான்...”“இப்ப நான் பாம்பு பிடிக்கறதில்லீங்களே... போலீஸ் கெடுபிடி ஜாஸ்தியாயிடிச்சு...’’“தா... நீ யாரு... எப்படிப்பட்ட தில்லாலங்கடி பார்ட்டின்னுல்லாம் தெரிஞ்சுதான் பேசிக்கிட்டிருக்கேன். சும்மா என்கிட்ட ரீல் உடாதே. நான் உன்னைப் பாக்கணும்... எங்க பாக்கலாம்? எப்ப பாக்கலாம்? மரியாதையா சொல்லு...”“என்னங்க எகிர்றீங்க... இப்படி பேசினா எப்படிங்க பாக்க தோணும்?”
“பின்ன... பெரிய உத்தமன் மாதிரி பேசினா கோபம் வராதா? நல்லா கேட்டுக்க... சதீஷ் எதுக்கு உன்னைக் கூப்ட்டானோ அதுக்குதான் நான் கூப்பிட்றேன். அவன் அஞ்சு லட்சம் சம்பளம் பேசினது தெரியும். நான் அதுக்கு மேல தரேன். அந்த வேலை எங்களுக்கு முடியணும். என்ன சொல்றே?”“ஒரு நிமிஷம் இருங்க...” என்று செல்போனை கையால் மூடியபடி மாரப்ப வாத்தியாரைப் பார்த்த போதிமுத்து “ஆசானே... இது யாரோ மூர்த்தியாம்... ஆனா, நீங்க சொன்ன அந்த பார்ட்டிதான்! நேர்ல பாக்கணும்னு சொல்றான்...” “இவன் அவனோட அல்லக்கை... வரச் சொல்லு. வரச்சொல்லு... நான் சொல்லலை... நாம தேட வேண்டாம் அவனே தேடி வருவான்னு...” “எங்க ஆசானே... இங்க வரச் சொல்லவா?”
“இங்க வேண்டாம்... வழுக்குப்பாறை முனியப்பன் கோயில்ல பொங்கல் வைக்கற மந்தைக்கு வரச்சொல்... நாளைக்கு ராத்திரி 8 மணிக்கு சொல்லு...” “தப்பா எதுவும் ஆயிடாதே..?”“இப்படி கேக்கறதா இருந்தா என்கிட்ட இருக்காதே... ஓடிப்போயிடு...” “ஐயோ ஆசானே... தெரியாம பேசிட்டேன்...” “இனி பேசாதே... அவன்கிட்ட இப்ப பேசு...”
போதிமுத்துவும் பேசி முடித்தான். இப்போது போதிமுத்துவுக்குள் பழம் நழுவி பாலில் விழுந்து விட்டது போலவும் இருந்தது. அந்த பால் கவிழ்ந்து கொட்டி விடுமோ என்று அச்சமாகவும் இருந்தது!ஃபேர்லாண்ட்ஸிலுள்ள கணேசனின் ஆபீசுக்குள்ளே நுழைந்து கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் விக்டர் ராஜ். சிவில் ட்ரெஸ்ஸில் கேப், கூல்கிலாஸ், மாஸ்க் என்று வந்ததில் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.வந்தது கூட ஓலா டாக்சியில்!“வெல்கம் மிஸ்டர் விக்டர் ராஜ்... எனக்காக நேர்ல வந்ததுல ரொம்ப சந்தோஷம்...” என்று கணேசனும் கை கொடுத்தான்.
“நீங்க இப்படி ரொம்ப பர்சனலா சந்திக்க விரும்பினது எனக்கேகூட ஒரு சர்ப்ரைஸ்தான் சார்... சொல்லுங்க சார்... வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?”விக்டர் ராஜிடம் ஒரு ஆர்வமும் கணேசன் பாலான மதிப்பும் துல்லிதமாய்த் தெரிந்தது.
“எனக்கு சில உண்மைகள் தெரியணும். அதுவும் நம்ம எம்.பி. அருணாசலம் பத்தி... உங்கள கேட்டா தெரியும்னு நம்ம பரந்தாமன்தான் சொன்னார்...” “ஓ... அவரைப்பத்தியா... என்ன சார் தெரியணும்?”“அவர் ஒரு ஊழல் பேர்வழின்னு நல்லாவே தெரியும். உக்காந்தா கமிஷன், நின்னா கமிஷன்னு வாரிச் சுருட்றார்னு நிறையபேர் சொல்லிட்டாங்க. ஆனா, அவர் ஒரு கொலைகாரர்னும் சொல்றாங்க. உண்மையா?”கணேசன் கேட்க விக்டர் ராஜ் முகத்தில் பலத்த மாற்றங்கள்..!
(தொடரும்)
மண்ணாங்கட்டி சித்தர் முக்தியடைந்து எழுபது வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது என்கிற பதிலால் அதிர்ந்துபோன அசோகமித்திரன் அப்படியே மிரளவும் செய்தார். அதைக் கண்ட நொடி கனபாடிகளுக்கும் புரிந்து விட்டது.“என்ன சார்... எப்பவோ செத்துப் போனவரை இப்ப எப்படி பார்க்க முடியும்கற கேள்வியா..?”
“ஆமாம்... இந்த நாகேந்திரநல்லூர்ல இன்னும் இந்த மாதிரி அமானுஷ்யங்கள் எவ்வளவு இருக்கும்னும் கேள்வி...”“அது நிறைய இருக்கு... அமானுஷ்யங்களை மட்டும் யாரும் உலகறிய நம்பவைக்க முடியாது. அதுக்காக முயற்சி செய்தா அது தோல்வியில்தான் முடியும். சமீபத்துல கூட ஒரு டிவில ஒரு டாக்ஷோ... அதுல ஆவி பேய்லாம் இருக்குன்னு சிலர்... இல்லைன்னு சிலர்... இந்த இரண்டு வித நம்பிக்கை கொண்டவர்களையும் வெச்சுண்டு அந்த நிகழ்ச்சியோட ஆங்கர் நிகழ்ச்சியை நடத்தினார்.
இதுல இருக்குங்கற கருத்துடையவர் இங்கயே நான் ஒரு ஆவி கூட பேசிக் காட்றேன்னு சொல்லி அசிங்கப்பட்டுப் போனார். எல்லாரும் சிரிச்சாங்க! எனக்கு அதைப் பார்த்தப்ப ரொம்ப சங்கடமா இருந்தது. எந்த விஷயத்துலயும் அது இல்லை, கிடையாதுன்னு சொல்றது ரொம்ப சுலபம்... அதுக்கு தேவையில்லைங்கற ஒரு வார்த்தைதான்.
ஆனா, இருக்குன்னு நம்பவும் ஏற்கவும்தான் திராணி நிறைய வேணும். அந்த திராணியை நமக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்கள் மட்டும்தான் தர முடியும். இப்ப உங்க வரைல அப்படி ஒரு அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கறதா நான் நினைக்கறேன்...’’ என்று கனபாடிகள் ஒரு பெரிய விளக்கத்தையே அளித்தார்.
“அப்ப நான் பார்த்தது மண்ணாங்கட்டி சித்தரையா... அவரைப் பார்த்தது ஒரு அதிசயமா..?” “அதுல என்ன சந்தேகம்... முதல்ல கனவுல வந்தார். பிறகு நேர்லயும் வந்து பேசிட்டு போயிருக்காரே..?”“அப்ப நான் அந்த தென்னந்தோப்புக்கு திரும்பிப் போனா அவரைப் பார்க்க முடியாதா..?”
“அது எனக்கு எப்படி தெரியும்... பாக்கலாம், பாக்க முடியாமலும் போகலாம். சித்தர்கள் விஷயமே பெரிய புதிராச்சே..?”“அது எப்படி இறந்த ஒருவர் திரும்ப வந்து நடமாட முடியும்..?”“இதுக்கும் பதிலை அவர்தான் சொல்ல முடியும். நான், அப்புறம் நீங்க... மொத்தத்துல நாமெல்லாமே உப்பு, புளி, காரம்னு சாப்ட்டு உடம்போடு ஒட்டிக் கிடக்கறவா. நம்ம பேச்ச உடம்பு கேட்காது, உடம்போட பேச்சதான் நாம கேட்போம்.
ஒரு இடத்துல ஒரு மூணு மணி நேரம் சிலைமாதிரி உக்கார நம்மால முடியாது. ஆனா, சித்தர்கள் மூணு வருஷமெல்லாம் உக்காந்திருப்பா. அவால்லாம் பாக்கத்தான் நம்மைப் போல மனுஷ சாதி. ஆனா, சிந்தனை, செயல் இதுல அவா தேவஜாதி...”“தேவ ஜாதின்னா..?”“நம்ம வேதங்களும், புராணங்களும் இந்த உலகம், அப்புறம் பிரபஞ்சம், வானமண்டலம், அப்புறம் கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்றியெல்லாம் நிறையவே சொல்லியிருக்கு.
அதுல மனித இனத்தைப் போல பல இனங்கள் இருப்பதையும் சொல்லியிருக்கு. தேவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், நாகர்கள்னு ஒரு வரிசையே இருக்கு!இவர்களை எல்லாம் நாம நம்ம ஊனக் கண்ணால பார்க்க முடியாது. தொலைதூரத்துல இருக்கறத பார்க்க டெலஸ்கோப்பை பயன்படுத்திக்கற மாதிரி, இவாளைப் பார்க்க நமக்கு யோக சக்தி வேணும். அந்த சக்தி நம்ம உடம்புக்குள்ளயே இருக்கு. ஆனா, அதை எப்படி கண்டறிஞ்சு பயன்படுத்தணும்கறது நமக்கு தெரியாது.
அதுக்கு ஒரு குரு வேணும். அவர் சொல்றபடி எல்லாம் நாம கேட்டு நடந்தா நமக்கு அந்த யோக சக்தி கிடைக்கும்.இந்த யோக சக்திலகூட பல உச்சங்கள் இருக்கு. அவைகளை அடைந்தவர்களைத்தான் ரிஷிகள், முனிகள், சித்தர்கள்னு சொல்றோம்.இதுல சித்தர்கள் தனி ரகம். சுயமா தங்களுக்குள்ள தங்களை உணர்ந்தவா இவா! அஷ்டமா சித்திங்கற எட்டு சக்திகளையும் அடைஞ்சவா. ‘அனிமா, மகிமா, கரிமா, லஹிமா, பிராப்தி, கூடுபாய்தல், வசியம், ஈசத்வம்’கறதுதான் அந்த எட்டு சக்தி. இதை ‘எண்பேராற்றல்’னு சொல்வா.
இது முழுக்க முழுக்க மனசு, உடம்பு சார்ந்த ஒண்ணு. இதுல அனிமான்னா கழுகாட்டம் சிறுத்துப் போறது; மகிமான்னா மலையாட்டம் எழும்பி நிக்கறது; கரிமான்னா கனக்கறது; லஹிமான்னா லேசாயிட்றது; பிராப்தின்னா நினைத்ததை அடைவது; கூடு பாய்வதுன்னா உடம்புல இருந்து உயிரைப் பிரிச்சு வெளியேற்றி இன்னொரு உடம்புக்குள்ள நுழைஞ்சு அந்த உடம்பால இயங்குவது; வசியம்னா எதிர்ல இருப்பவர்களை தன்வசப்படுத்துவது; ஈசத்துவம்னா கடந்த ஏழு சக்திகளால தன்னையே கடவுளாக்கிக் கொள்வது... ஒவ்வொரு சித்தருக்கும் தன்னைக் கடவுளாக்கிக் கொள்வதுதான் லட்சியமா இருக்கும். மண்ணாங்கட்டி சித்தருக்கும் அப்படித்தான்.
பொதுவா சித்தர்களை எரிக்கற வழக்கம் கிடையாது. அவர்கள் தங்களைத் தாங்களே சமாதிக்குள்ள உக்காந்து அடக்கம் பண்ணிப்பா. அவர்கள் உடம்பு அவ்வளவு சுலபத்துல அழியாது.
இதை எல்லாம் கேட்டா நம்ப முடியாது. ஏன்னா ஒரு சிறு முள் குத்தினா கூட தாங்கிக்க முடியாம ‘ஆ’ன்னு கத்தறவா நாமல்லாம்... அதனால நமக்கு இதெல்லாம் ஒரு பிரம்மாண்ட பொய்யா, கற்பனையா தெரியும். ஆனாலும் அப்பப்ப இதெல்லாம் அப்படி இல்லேங்கற மாதிரி சில அதிசயங்கள் உலகறிய நடக்கறதும் உண்டு.
சமீபத்துல கூட வாட்ஸ்அப்ல 150 வருஷமா படுத்த படுக்கையா சமாதி நிலைல இருக்கற ஒரு யோகியோட உடம்பை வீடியோ எடுத்து போட்ருந்தா. கிட்டத்தட்ட எலும்புக் கூடாதான் அவர் தெரிஞ்சார். நமக்கிருக்கற சதைல பத்துல ஒரு பங்கு கூட அவர்கிட்ட இல்ல... கண்ணெல்லாம் கூட பூஞ்சை பூத்துப் போச்சு. ஆனா, சுவாசம் நிக்கல... கண் திறந்து பார்க்கவெல்லாம் செய்தார். அவர் நம்ம மருத்துவ உலகத்துக்கே ஓர் ஆச்சரியமா தெரிஞ்சார். இப்பவும் அந்த வீடியோ யூடியூப்ல இருக்கு... போய்ப் பார்க்கலாம். சுருக்கமா சொல்லணும்னா, சுய அனுபவம் மட்டுமே அமானுஷ்யங்கள்ல நிதர்சனம். உங்களுக்கு அது இப்ப நடக்கத் தொடங்கியிருக்கு...”கனபாடிகள் ஒரு நெடிய விளக்கமளித்து முடித்தார்.
அசோகமித்திரனிடம் ஒரு கனத்த மௌனம். எதற்கும் இன்னொரு முறை தென்னந்தோப்புக்குப் போய்ப் பார்த்தாலென்ன என்கிற கேள்வியும் கூட... அப்போது கோயிலைப் பூட்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு கோயில் குருக்கள் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்த குருக்களின் சகோதரர், கனபாடிகளைப் பார்ப்பதற்காக உள் நுழைந்தார்.அப்போது கடிகாரத்தில் மணி பத்து...
“அண்ணா... என் அண்ணாவுக்கு எல்லாமே அடங்கிடுத்தாம்... கடைசி மூச்சு மட்டும் இழுத்துண்டுருக்கு. அதிகபட்சம் அரைமணிதான்னு டாக்டர் சொல்லிட்டார். அதான் கோயில் கதவை கிரகண உத்தேசம் பூட்டிட்டு போயிண்டிருக்கேன். அண்ணா பரமபதிச்சிட்டா கோயிலை இன்னிக்கு திறக்க முடியாது. உங்ககிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட வந்தேன்...” என்றார். அடுத்த நொடி அசாகமித்திரன் காதில் நாடிஜோதிடர் சொன்னதுதான் எதிரொலிக்கத் தொடங்கியது!
- இந்திரா செளந்தர்ராஜன்
ஓவியம்: வெங்கி
|