Must Watch
 ஷெர்தில் : தி பிலிபிட் சாகா ‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திப்படம் ‘ஷெர்தில் : தி பிலிபிட் சாகா’. இந்தியாவில் உள்ள வனப்பகுதி. அதையோட்டிய ஒரு குக்கிராமம். அந்தக் கிராமத்தில் எந்தவிதமான வேலை வாய்ப்பும் இல்லை. வனவிலங்குகள் பயிர்களை அழிப்பதால் விவசாயமும் இல்லை. அத்துடன் மக்களின் உயிர்களுக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை.
கிராமத்துக்கு உதவி வேண்டும் என்று அரசு அதிகாரிகளைச் சந்திக்கிறார் கிராமத்தின் தலைவர் கங்காராம். அந்த அதிகாரிகள் யாரும் கங்காராமை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. அத்துடன் ஆன்லைனில் உங்களின் பிரச்னைகளை பிரதமருக்கு தெரிவியுங்கள் என்று சொல்கின்றனர். ஆன்லைன், இண்டர்நெட் பற்றி கங்காராமுக்கு எதுவுமே தெரியவில்லை.
இனி அரசாங்கத்தை நம்பி எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு வரும் கங்காராம், தானே களத்தில் குதிக்கிறார். அவர் தன்னுடைய மக்களின் நன்மைக்காக செய்யும் விஷயம்தான் திரைக்கதை. மலையை ஒட்டிய குக்கிராமங்களில் வறுமையில் வாடுகின்ற மக்களின் அவலங்களை பதிவு செய்கிறது இந்தப் படம். கங்காராமாக பின்னியிருக்கிறார் பங்கஜ் திரிபாதி. இயக்கியிருக்கிறார் ஜித் முகர்ஜி.
நோ எக்ஸிட்
வித்தியாசமான திரில்லர் படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்கான நல்ல சாய்ஸ், ‘நோ எக்ஸிட்’. ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம். போதைக்கு அடிமையான டார்பியை குடும்பமே வெறுக்கிறது. மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுகிறாள். இந்நிலையில் அவளது அம்மாவுக்கு மூளையில் ஏதோ பிரச்னை. அம்மாவைப் பார்க்கத் துடிக்கும் டார்பி, மறு வாழ்வு மையத்திலிருந்து தப்பிக்கிறாள்.
வெளியே கடுமையான பனிப்புயல். அவள் அம்மா இருக்கும் இடத்துக்கு செல்லும் பாதைகள் எல்லாம் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு கிடக்கிறன்றன. வழியில் இருக்கும் ஒரு விருந்தினர் இல்லத்தில் தங்குகிறாள் டார்பி. அவளைப் போல சிலர் அங்கே தஞ்சமடைந்துள்ளனர்.
அங்கே போன் டவர் கிடைக்கவில்லை. அதனால் சிக்னலுக்கு வெளியே வருகிறாள். ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. ஒரு வேனுக்குள் குழந்தையைக் கடத்தி வைத்திருக்கிறார்கள். கடத்தல்காரர்கள் அந்த இல்லத்தில்தான் இருக்கிறார்கள்.முன் பின் தெரியாத ஒரு குழந்தைக்காக எந்த எல்லைக்கு டார்பி செல்கிறாள் என்பதே திரைக்கதை. டார்பியாக ஹவானா ரோஸ் அசத்தியிருக்கிறார். படத்தின் இயக்குநர் டேமியன் பவர்.
கடுவா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்த மலையாளப்படம், ‘கடுவா’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் பார்க்க கிடைக்கிறது. பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் குரியச்சன். சுற்றியிருப்பவர்களால் கடுவா என்று அழைக்கப்படுகிறார். அவரைக் கைது செய்து, கோட்டயத்தில் உள்ள சிறையில் அடைக்கப்படுவதற்காக அழைத்து வரப்படுகிறார். கடுவா சிறைக்கு வரப்போவதைக் கேள்விப்படும் காவலர்கள் பதறிப்போகின்றனர். அவர் வருகைக்காக எல்லோரும் காத்திருக்கின்றனர்.
கடுவா சிறைக்கு வருகிறார். அதே நேரத்தில் கொடுமையான குற்றவாளிகள் சிலர் அந்த சிறைக்கு மாற்றப்படுகின்றனர். கடுவாவை சிறையில் வைத்தே கொல்வதற்காக அந்த குற்றவாளிகளை அனுப்பியிருக்கிறார் ஐ.ஜி. ஜோசப். கடுவா அவர்களைத் துவம்சம் செய்கிறார். உண்மையில் யார் இந்த கடுவா? யார் இந்த ஜோசப்? இருவருக்கும் இடையில் என்ன பிரச்னை என்பதுதான் ஆக்ஷன் திரைக்கதை.
லாஜிக்கை மறந்து படம் பார்ப்பவர்களுக்கு அட்டகாசமான விருந்து படைத்திருக்கிறது ‘கடுவா’. மசாலா திரைப்படப் பிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது. கடுவாவாக பிருத்விராஜும், ஜோசப்பாக விவேக் ஒபராயும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ஷாஜி கைலாஷ்..
பஜ்ரே ட சிட்டா
இசையின் மகத்துவத்தை உணர்த்தும் படமாக வெளியாகியிருக்கிறது ‘பஜ்ரே ட சிட்டா’.‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது இந்த பஞ்சாபி திரைப்படம். ஒரு பழமையான கிராமம். அந்த கிராமத்தை வழிநடத்தும் குடும்பத்தில் பிறந்தவர்கள் ரூப்பும், பசந்தும். சகோதரிகளான அவர்கள் பாடுவதை அந்த கிராமமே ரசிக்கிறது.
இந்நிலையில் தில்லியில் உள்ள ஓர் இசை நிறுவனம் புதிதான குரலைத் தேடிக்கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் ரூப், பசந்தின் கிராமத்துக்கு வருகிறார். அவர்களின் குரலைக் கேட்டு மயங்கி, ரூப்பின் தந்தையிடம் தனது நிறுவனம் வெளியிடும் ஆல்பத்துக்காக சகோதரிகள் பாட வேண்டும் என்று கேட்கிறார். ஆனால், தந்தை மறுத்துவிடுகிறார். ரூப்பும், பசந்தும் உடைந்து போகின்றனர்.
இறுதியாக பாட அனுமதி தருகிறார் தந்தை. ஆனால், ரூப், பசந்தின் பெயரோ, புகைப்படங்களோ, எந்தவிதமான அடையாளமோ வெளியில் தெரியக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார். ரூப், பசந்தின் குரல் பஞ்சாப்பை மட்டுமல்ல, இசை ரசிகர்கள் எல்லோரையும் ஈர்க்கிறது. அவர்களின் புகைப்படங்கள் ஆல்பத்தில் வெளியாக, சூடுபிடிக்கிறது திரைக்கதை. ஆணாதிக்க குடும்பத்தில் பிறந்த பெண்களின் திறமைகள் எப்படி ஒடுக்கப்படுகின்றன என்பதை படம் சுட்டிக்காட்டுகிறது. இயக்கம் ஜாஸ் க்ரூவால்.
தொகுப்பு: த.சக்திவேல்
|