குடி... கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையையும் கெடுக்கும்! இது வினோத் காம்ப்ளியின் கதை



ஒரு வீடியோ... ஒரேயொரு வீடியோ... அது சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கிய அடுத்த நொடி ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்தது. காரணம், அந்த வீடியோவில் இருந்தவர் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் ஹீரோவாக வலம் வந்தவர். ஆனால், குறிப்பிட்ட அந்த வீடியோவில் அவர் ஹீரோவாக இல்லை...
ஜீரோவாகக் காட்சியளித்தார்!இந்திய கிரிக்கெட்டின் ஹீரோ யார் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்வார்கள். ஏனெனில் காலகட்டம் மாற மாற ஹீரோக்களும் உருவாகியபடியே இருப்பார்கள்.

அந்த வகையில் 1990களில் - குறிப்பாக 1993ல் - இந்திய கிரிக்கெட் அணியின் ஹீரோவாகத் திகழ்ந்தவர் வினோத் காம்ப்ளி. எவர்க்ரீன் ஹீரோவான சச்சின் டெண்டுல்கரின் பள்ளிக்காலத் தோழர் என்பது இவரது ப்ளஸ். ஆனால், இதுவேதான் இவரது மைனஸ் ஆகவும் அமைந்தது சோகம்.1993ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து சதம், இரட்டை சதம் என விளாசி எடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் வினோத் காம்ப்ளி.அப்படிப்பட்ட ஹீரோதான் இன்று பேசும் பொருளாகியிருக்கிறார். காரணம் அந்த வீடியோ.

குடித்துவிட்டு சாலையில் தள்ளாடியபடி அலையும் வினோத் காம்ப்ளியின் தோற்றம் காண்போரைத் திகைக்க வைத்தது; அதிர்ந்து நடுங்க வைத்தது. உடனே செய்தியாளர்கள் பதறியடித்து அவரைத் தேடி தொடர்பு கொண்டபோது...காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்ல... வினோத் காம்ப்ளி குடும்பம் நடத்தவே பொருளாதார வசதியில்லாமல் வறுமையில் வாடும் அவலம் அனைவரது முகத்தையும் அறைந்தது.

முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 793 ரன்கள்... 1993ம் ஆண்டில் 113 ரன்களை சராசரியாக வைத்திருந்த பேட்டிங் திறமை... என்று சச்சினுக்கு போட்டியாக இருந்த வினோத் காம்ப்ளியின் இந்த வீழ்ச்சி பதற வைக்கிறது. வினோத் காம்ப்ளி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அவர் அணிந்திருந்த - ஆமாம்... அணிந்த அல்ல - தடிமனான தங்கச் சங்கிலிதான். ரன்களை எடுக்க அவர் ஓடும்போது அந்தச் சங்கிலி குலுங்கும். இதைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள். இந்த தடிமனான தங்கச் சங்கிலிக்கு ஜோடியாக அவர் கைகளில் தவழும் பிரேஸ்லெட் மின்னும். இந்த தோற்றம்தான் வினோத் காம்ப்ளி குறித்த சித்திரமாக 1990களின் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பதிந்திருக்கிறது.

அப்படிப்பட்ட சித்திரத்தை அழிக்கும் விதமாக இன்று அவர் காணப்படுகிறார். உடைந்துபோன தனது செல்போனின் ஸ்கிரீனைக்கூட மாற்ற வசதியில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இருந்த அல்லது வாங்கிய கார் இப்போது அவரிடம் இல்லை. பரிதாபப்பட்டு நண்பர் ஒருவர் வழங்கியுள்ள காரில் அவ்வப்போது கிரிக்கெட் கிளப்புகளுக்கு வந்து செல்வதாகச் சொல்கிறார்கள்.வினோத் காம்ப்ளியின் இந்த வீழ்ச்சிக்கு அல்லது நிலைக்கு என்ன காரணம்..?

குடி. குடிப்பழக்கம்தான் அவரை இப்படிப்பட்ட சூழலுக்குள் தள்ளியிருக்கிறது என வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்கள். இந்திய அணியில் கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே அவரிடம் குடிப்பழக்கம் இருந்துள்ளது. போட்டிக்கு முந்தைய நாட்களில் நன்றாகக் குடித்துவிட்டு, சக ஆட்டக்காரர்களின் அறைகளுக்குச் சென்று அவர்களைத் தூங்கவிடாமல் செய்வாராம். இதனால் சரியாக உறங்காமல் சக ஆட்டக்காரர்கள் மறுநாள் விளையாடுவதைக் கண்ட கிரிக்கெட் போர்டு, முதலில் வினோத் காம்ப்ளியை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அப்படியும் அவர் திருந்தவில்லை. எனவே வேறுவழியின்றி அணியில் இருந்து ஒதுக்கத் தொடங்கினார்கள்.

தான், ஓரம் கட்டப்பட்டதைப் புரிந்துகொண்ட காம்ப்ளி, பின்னர் பயிற்சியாளராக அவதாரம் எடுத்தார். தன் பள்ளிக்கால நண்பனுக்கு உதவுவதற்கு சச்சின் டெண்டுல்கரும் முன்வந்தார். தனது ‘டெண்டுல்கர் மிடில்செக்ஸ் குளோபல் அகடமியி’யில் வினோத் காம்ப்ளியை பயிற்சியாளராக நியமித்தார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் காம்ப்ளியால் அங்கு பணிபுரிய முடியவில்லை. இதைத்தொடர்ந்து மும்பை டி20 லீக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்ற அணிகளுக்கு பயிற்சியாளராக வலம் வந்தார்.

இச்சூழலில்தான் உலகம் முழுக்க பொது முடக்கத்துக்குச் சென்றது. கொரோனா காலம் அனைவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது என்றால் காம்ப்ளியின் வாழ்வில் சுனாமியையே கோவிட் 19 ஏற்படுத்தியது. இதன் காரணமாக சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் இன்று வறுமையில் வாடுகிறார். இதற்கு கொரோனாவை குற்றம்சாட்ட முடியாது; கூடாது. அவரது குடிப்பழக்கம்தான் இன்றைய அவரது வாழ்க்கைக்கு முழுக்காரணம்; பொறுப்பு.

“பிசிசிஐ எனக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரத்தை பென்ஷனாக வழங்கி வருகிறது. அதை வைத்துத்தான் குடும்பம் நடத்துகிறேன். எனக்கு வேலை வேண்டும். அதற்கு மும்பை கிரிக்கெட் வாரியத்தின் தயவை எதிர்பார்க்கிறேன். அவர்கள் என்னை பயிற்சியாளராக நியமித்தால் இளம் கிரிக்கெட் வீரர்கள் பலரை என்னால் உருவாக்க முடியும்...” என்கிறார் வினோத் காம்ப்ளி.
ஆனால், காம்ப்ளியின் பழையகால நடவடிக்கைகள் மற்றும் குடிப்பழக்கத்தால் அவருக்கு வாய்ப்பு வழங்க மும்பை கிரிக்கெட் வாரியம் யோசிக்கிறது. இந்நிலையிலும் தனது குடிப்
பழக்கத்தால்தான் இந்த நிலை வந்தது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் காம்ப்ளி. “நான் ஒன்றும் குடிப்பழக்கத்துக்கு முழுமையாக அடிமையானவன் அல்ல.

மாறாக ஒரு சோஷியல் டிரிங்கர். எப்போதாவது குடிப்பேன். அப்படி குடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? குடிப்பழக்கத்தால்தான் என் கிரிக்கெட் திறன் பாதிக்கப்பட்டது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. ஒருமுறை ரஞ்சி கோப்பை போட்டிக்கு முன்தினம் இரவில் 10 பெக் அடித்தேன். எங்கள் அணியின் பயிற்சியாளர், அடுத்த நாள் காலையில் நான் எழுந்திருக்க மாட்டேன் என்று நினைத்தார். ஆனால், அடுத்த நாள் போட்டியில் சதம் எடுத்தேன். அதனால் குடிப்பழக்கத்தால் என் கிரிக்கெட் திறன் பாதித்தது என்பதை ஏற்க மாட்டேன்...” என்று சொல்லும் வினோத் காம்ப்ளி, தன் நண்பரிடம் உதவி கேட்க விரும்பவில்லை.

 “சச்சின் எனது சிறந்த நண்பன். என் சூழ்நிலை அவனுக்குத் தெரியும். அவனாக ஏதாவது உதவினால் ஏற்பதில் தயக்கமில்லை. ஆனால், நானாகச் சென்று அவனைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனது கிரிக்கெட் ரசிகர்களிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான். எனக்காக பிரார்த்தியுங்கள். என்மீது அன்பு செலுத்துங்கள். அது போதும்...”
எத்தனை திறமை இருந்தாலும் குடி போன்ற தீய பழக்கங்கள் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது என்பதற்கு காம்ப்ளியின் வாழ்க்கை ஓர் உதாரணம்.
                                 

நிரஞ்சனா