அப்பா ஐஏஎஸ்... அண்ணன் சிஇஓ... நான் டாக்டர் +காஸ்டியூம் டிசைனர்!
வித்தியாசமான ஆடை வடிவமைப்பு மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளார் காஸ்டியூம் டிசைனர் டாக்டர் வினோதினி பாண்டியன்.
சமீபத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்து வெளிவந்த ‘விருமனில்’ அதிதியை வண்ண வண்ண ஆடைகளால் சிங்கப் பெண்ணாகக் காட்டியவர். இவர், புகழ் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியனின் மகள். இவருடைய வக்கீல் அண்ணன் ராஜ்சேகர் பாண்டியன் சூர்யாவின் 2டி கம்பெனியின் சிஇஓ. டாக்டருக்கு படித்த வினோதினிக்கு ஃபேஷன் துறையில் அதீத ஆர்வம் என்பதால் சினிமாவுக்கு வந்துள்ளார்.
உங்க டிராவல் பற்றி சொல்லுங்களேன்?
சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தேன். எனக்கான உடைகளுக்கு நானே மெட்டீரியல் வாங்கி டிசைனிங் பண்ணுவது பிடிக்கும். அதே மாதிரி மத்தவங்களுக்கும் பண்ண பிடிக்கும். ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளில் யாராவது ஃபங்ஷன் போறதா இருந்தா எங்கிட்ட டிசைன் பண்ணித்தரச் சொல்லி கேட்பாங்க.
படிப்பு முடிஞ்சதும் திருமணம் நடந்ததால் குடும்ப பொறுப்புகள் இருந்துச்சு. பிறகு பிரபல தனியார் மருத்துவமனைகளில் டாக்டராக பணிபுரிந்தேன். பிரபல விமான நிறுவனத்திலும் டாக்டராக இருந்துள்ளேன். இப்ப சினிமாவுல கவனம் செலுத்தி வருவதால் டாக்டர் புரொஃபஷனுக்கு பிரேக் விட்டுள்ளேன்.
சினிமா வாய்ப்பு ராஜ்சேகர் அண்ணன் மூலமாதான் வந்துச்சு. ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் ஆரம்பிச்சபோது ‘ஒர்க் பண்றியா’னு கேட்டார். அப்ப நான் ஒரு பொடிக் ஷாப் நடத்தி வந்தேன். அண்ணனிடம் ‘நான் கஸ்டமைஸ்ட் ஸ்டைல்தான் பண்ணி வருகிறேன்’னு கொஞ்சம் தயக்கம் காட்டினேன். அண்ணனோ ‘காஸ்டியூமர் செல்வத்தோட சேர்ந்து ஒர்க் பண்ணு, நல்லா வரும்’னு சொன்னார். அப்படித்தான் காஸ்டியூம் டிசைனரா சினிமாவுக்குள் வந்தேன்.
முதல் சினிமா?
முதலில் சைன் பண்ணியது ரம்யா பாண்டியன், வாணிபோஜன், மிதுன் நடிச்ச ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. ஷூட்டிங் போனது ‘ஓ மை டாக்’. ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ சிவகங்கை சுற்று வட்டாரக் கதை என்பதால் அருகில் உள்ள ஊர்களில் டிரஸ் பர்ச்சேஸ் பண்ணினோம். அந்தப் படத்துல காஸ்டியூமர் செல்வம் அண்ணனுடைய ஒர்க் அதிகம். செல்வம் அண்ணன் ‘அசுரன்’, ‘சூரரைப்போற்று’ உட்பட ஏராளமான ஹிட் படங்களுக்கு ஒர்க் பண்ணியுள்ளார்.
ஒரு கதையில் டிரஸ்ஸை பழமையா காட்ட சீசனிங் பிராசஸ் முக்கியம். அதுல செல்வம் அண்ணன் கைதேர்ந்தவர். ஒளிப்பதிவாளர் சுகுமார் சார் கலர் பேலட் கொடுத்து என்ன தேவை என்பதை சொன்னதால் புரிதலுடன் வேலை பார்க்க முடிந்தது. அந்தப் படத்துக்கு சிறந்த காஸ்டியூம் டிசைனர் விருதும் வாங்கினேன். அடுத்து, ‘ஓ மை டாக்’. அருண் விஜய், விஜயகுமார், ஆர்னாவ்னு அதுல நடிச்ச எல்லாருமே எனக்கு தெரிஞ்ச குடும்பம். ஊட்டியில் 45 நாட்கள் ஷூட் நடந்துச்சு. அந்தப் படத்துக்கு அருண் விஜய்யின் காஸ்டியூமர் கணேஷ், ஹெல்ப்ஃபுல்லா இருந்தார்.
அந்தப் படத்துல எல்லா ஆர்ட்டிஸ்ட்டுக்கும் நான்தான் காஸ்டியூம் பண்ணினேன். சில சமயம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கேமராவுல பளிச்சுன்னு தெரியணும் என்பதற்காக கலர்ஃபுல்லா டிரஸ் பண்ணிட்டு வருவாங்க. ஆனா, அது கதைக்குப் பொருத்தமா இருக்காது. அதனால அதுலேயும் கவனம் செலுத்திப் பண்ணினேன். அந்தப் படம் எனக்கு லேர்னிங் பிராசஸா இருந்ததுச்சு. கேமராமேன் கோபிநாத் சார், இயக்குநர் சரோவ் சண்முகம் சப்போர்ட் இருந்துச்சு. மகிமா, விநய் எல்லோரும் பழகுவதற்கு இனிமையானவர்கள்.
‘விருமன்’ அதிதியுடன் வேலை செய்த அனுபவம் எப்படி?
என்னுடைய 3வது படம் ‘விருமன்’. படத்துக்கு செல்வம் அண்ணன் காஸ்டியூம் பண்ணியிருந்தார். அதிதிக்கு நான் பண்ணினேன். அதிதி குழந்தையா இருந்ததிலிருந்து தெரியும். எங்க வீடு, ஷங்கர் சார் வீடு, சூர்யா சார் வீடு... எல்லாம் ஒரே தெரு என்பதால் எங்களுக்குள் நல்ல பரிச்சயம் உண்டு. பண்டிகை நாட்களில் அதிதிதான் ஸ்வீட் கொண்டு வந்து கொடுப்பாங்க. படத்துல வர்ற மாதிரி அதிதி சின்ன வயசுலேயே துறுதுறுனு இருப்பாங்க.
நிஜத்துல அதிதி ரொம்ப மாடர்ன் பொண்ணு. தலை முடி சுருளா இருக்கும். கதைக்கேத்த மாதிரி ஸ்கின் டோன் டல் ஃபினிஷ் கொடுத்தோம், தலை முடியை மாத்தினோம். காஸ்டியூம்ஸ் பொறுத்தவரை இயக்குநர் முத்தையா சாரும், கேமராமேன் செல்வகுமார் சாரும் என்ன மாதிரி டிரஸ், பாவாடையில் என்ன மாதிரி பூ, எந்த சைஸில் இருக்கணும், தாவணி கலர்ஸ் எப்படி இருக்கலாம்னு சொல்லிட்டாங்க. ஷாப்பிங் டைம்ல இருவரும் வந்தாங்க.
சில காஸ்டியூம்ஸ் சென்னை, சில காஸ்டியூம்ஸ் மதுரை, தேனி என்று தமிழ்நாடு முழுவதும் சுத்திச் சுத்தி வாங்கினோம். படத்துக்கு வில்லேஜ் லுக்கிலும், புரொமோஷனுக்கு மாடர்ன் லுக்கிலும் அதிதிக்கு காஸ்டியூம்ஸ் பண்ண வாய்ப்பு கிடைச்சது. படத்துல 25 வகை காஸ்டியூம்ஸ், புரொமோஷனுக்கு ஒரு நாளைக்கு நாலைந்து காஸ்டியூம்ஸ் சேஞ்ஜ் இருந்துச்சு.
ஷங்கர் என்ன சொன்னார்?
இரண்டு படம் பண்ணிட்டேன். யாருமே எதுவுமே சொல்லலை. ‘விருமன்’ படத்துக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைச்சது. அதிதி சிட்டி பொண்ணு மாதிரி தெரியலனு பாராட்டினாங்க. என்னுடைய நிக் நேம் பாபி. அந்தப் பெயரைச் சொல்லித்தான் ஷங்கர் சார் என்னைக் கூப்பிடுவார். ஆடியோ ஃபங்ஷன் டைம்ல ‘ரொம்ப நல்லா பண்ணியிருந்தீங்க’னு பாராட்டினார். ‘வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்’னு நன்றி சொன்னேன்.
ஷங்கர் சார் படத்துல காஸ்டியூம்ஸ் யூனிக்கா இருக்கும். அதெல்லாம்தான் இன்ஸ்பிரேஷன்னு சொன்னேன். படம் வெளியான முதல் நாள் ஷங்கர் சார் குடும்பத்துடன் படம் பார்க்கப் போனேன். படம் முடிந்து ஒரு உணவகத்துல சாப்பிடப் போனோம். அங்கும் ‘உங்க மெனக்கெடல் நல்லாவே தெரிஞ்சது’னு சொன்னார்.
கார்த்தி சாரும் ‘உங்களுக்குள் இப்படி ஒரு திறமையா... சான்ஸே இல்ல’னு பாராட்டினார். சூர்யா சார் ஆடியோ விழாவில் வெகுவா பாராட்டினார். ஸ்கூல் படிக்கும்போது நானும் அவரும் கம்பைண்ட் ஸ்டடி பண்ணியதையும் நினைவுகூர்ந்தார். ஃபேஷனைப் பொறுத்தவரை தமிழ் சினிமா பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளதாக நினைக்கிறீர்களா?
முன்பு தமிழ் சினிமாவை தெலுங்கு, இந்தி படங்களுடன் கம்பேர் பண்ணுவாங்க. இப்ப நாம மத்த மொழிகளுக்கு நிகரா பண்ணிக்கிட்டு இருக்கோம். இந்தி சினிமாவில் கரண் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி படங்களில் காஸ்டியூம்ஸ் வேற மாதிரி இருக்கும். சவுத்ல ‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’ வந்தது. ‘கே.ஜி.எப்.’ காஸ்டியூம்ஸ் வேற லெவல்னு சொல்லலாம். ஒவ்வொரு சூட்டும் கலக்கலா இருந்துச்சு.
இந்த மாதிரி படங்கள் எப்படி பேன் இந்தியா படமா வெற்றி பெறுகிறது என்றால் கதை மட்டும் காரணமல்ல, காஸ்டியூம்ஸையும் ஆடியன்ஸ் நோட் பண்றாங்க. அதுவும் வெற்றி தருகிறது. ‘பாகுபலி’யில் அனுஷ்கா காஸ்டியூம் ப்யூட்டிஃபுல்லா இருக்கும். இப்ப ‘பொன்னியின் செல்வன்’ எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
டிரைலர் பார்க்கும்போது ஆர்ட்டிஸ்ட்டோட ஜுவல்லரி, காஸ்டியூம்ஸ் மிரட்டலா இருக்கு. மணி சார், ஷங்கர் சார் போன்ற இயக்குநர்கள் எப்போதுமே டிரெண்ட் செட்டர்ஸ். அவங்க படம் சினிமாவுக்கு வருபவர்களுக்கு என்சைக்ளோபீடியா.
ஒரு படத்தில் காஸ்டியூம் டிசைனரின் வேலை என்ன?
முழுப் படம் என்றால் இயக்குநர் முழுக் கதையைச் சொல்லி காஸ்டியூம்ஸ் எப்படி இருக்கணும்னு சொல்வார். ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு மட்டும் என்றால் அவங்க கேரக்டரைப் பற்றி சொல்வார். பொதுவா இயக்குநர் மைண்ட்ல ஒரு இமேஜினேஷன் இருக்கும். அதை கொண்டுவருவதற்காக ரெஃபரன்ஸ் கொடுப்பாங்க. பிறகு என்னுடைய இமேஜினேஷனின்படி டிசைனிங் பண்ணுவேன்.
‘ஓ மை டாக்’ படத்துக்கு ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட்டுக்கும் ஸ்கெட்ச் பண்ணி, கலர் டோன் கொடுத்து காஸ்டியூம்ஸ் இப்படித்தான் இருக்கும்னு டிஜிட்டல் பிரிண்ட் போட்டு ஓகே வாங்கி ஒர்க் பண்ணினேன். சமீபத்துல வெளிவந்த படங்களில் யாருடைய காஸ்டியூம்ஸ் உங்களை இம்ப்ரஸ் பண்ணியது?‘விக்ரம்’ விஜய் சேதுபதி சார் காஸ்டியூம்ஸ் பிடிச்சிருந்தது.
எஸ்.ராஜா
|