அன்று பூலன் தேவியின் இடம்... இன்று இந்தியாவின் முதல் ஸ்மார்ட் வில்லேஜ்!
சம்பல் என்றதும் நினைவுக்கு வருவது பூலன் தேவிதான். இந்தியாவை நடுங்க வைத்த கொள்ளைக்காரியாக இருந்து பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக மாறிய பூலன் தேவி வாழ்ந்த இடமே சம்பல்.மணல் மேடுகள், வித்தியாசமான பாலைவனத் தாவரங்கள் நிறைந்த அந்த இடம்... கிராமமே, இன்று ‘இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கிராமம்’! ராஜஸ்தான் மாநிலம் துல்பூர் மாவட்டத்திலுள்ள சம்பலின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தனோரா. இங்கு சுமார் 2 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
 2014ம் ஆண்டு வரை சுகாதாரம், சாலைகள், குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்த கிராமம், இப்போது ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பைகள், திறந்த வெளியில் மலம் கழிப்பது என அசுத்தம் நிறைந்து காணப்பட்ட கிராமம் இன்று பளபளப்பான சாலைகள் மற்றும் பசுமையான மரங்களால் சூழப்பட்டுள்ளது. சோலார் விளக்குகளால் ஒளிரும் தெருவிளக்குகள், ஒரே மாதிரி வர்ணம் பூசப்பட்ட வீடுகள், ஒரு திறன் மேம்பாட்டு மையம், ஒரு தியான மையம் மற்றும் ஒரு பொது நூலகம்... என ஒரு மினி நகரமாக உருவெடுத்துள்ளது.
 அனைத்து கிராமங்களுக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ள தனோரா கிராமத்தில், ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, கான்கிரீட் சாலைகளுக்கான அணுகல், கழிவு மேலாண்மைக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியன உள்ளன. இங்கு மது உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை என்பது ஹைலைட். இந்த மாற்றத்துக்கான முன்னெடுப்பை ஐஆர்எஸ் அதிகாரியான டாக்டர் சத்யபால் சிங் மீனாதான் எடுத்துள்ளார். அவுரங்காபாத்தில் பதவியில் இருந்தபோது, என்ஜிஓ எகோ நீட்ஸ் அறக்கட்டளை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழல் புரட்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு பேசப்பட்ட ‘ஸ்மார்ட் கிராம’ கருத்தாக்கம் அவரை ஈர்த்தது. அவர்கள் உதவியுடன் மாற்றத்தை ஏற்படுத்த பிள்ளையார் சுழி போட்டார்.
 இதைத் தொடர்ந்து, என்ஜிஓவின் நிறுவனர் பேராசிரியர் ப்ரியானந்த் அகலே மற்றும் அவரது குழுவினர் இந்த மாற்றத்துக்கான பயணத்தைத் தொடங்கினர். சத்யபாலும் ஆலோசனைக் குழுவில் சேர, தன்னார்வலர்களுக்கு உணவு சமைப்பது முதல் கிராம மக்களை அணிதிரட்டுவது வரை சகலமும் அரங்கேறத் தொடங்கியது. “ஸ்மார்ட் கிராம திட்டத்தை உருவாக்க எங்களுக்கு நிறைய காலம் தேவைப்பட்டது. முதலில் மக்களுக்கு புரிய வைக்க நேரம் எடுத்துக்கொண்டோம். நிறைய கிராம சபை கூட்டங்களை நடத்தி, மக்களுக்கு இத்திட்டம் குறித்து புரிய வைத்தோம். எங்களுக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பதை உணர்த்தினோம்...” புன்னகைக்கிறார் சத்யபால் சிங் மீனா.
கழிப்பறையும் சாலைகளும்
450 மிமீ விட்டம் கொண்ட 2 கிலோ மீட்டர் கழிவுநீர் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு கழிப்பறையும் மேன்ஹோல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு சேகரிப்படும் அனைத்து கழிவுநீரும், சுத்திகரிக்கப்பட்டு பாசனத்துக்கு பயன்படுத்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.மக்களின் முழு ஒத்துழைப்போடு 8 - 10 அடி அகலத்தில் இருந்த சாலைகள் 20 - 25 அடியாக அகலப்படுத்தப்பட்டுள்ளன.
மேம்படுத்தப்பட்ட இணைப்புக்காக தோடேகாபுரா கிராம பஞ்சாயத்துக்கு கூடுதலாக 2 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டது.சிலர் சாலை வசதிக்காக தங்களது நிலங்களை வழங்கியுள்ளனர். கிராமத்தை சீரமைப்பதற்காக அக்கிராமத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் 25 சதவீதத்தை வழங்கியுள்ளனர்.
என்.ஆனந்தி
|