சிறுகதை-கேமரா...ரோலிங்...ஆக்சன்...
“யாரும் கேமராவைப் பாக்காதீங்கனு சொன்னா கேக்குறீங்களா? ஒரு ஷாட் எடுக்குறதுக்குள்ள உயிர் போகுது...”
டைரக்டர் மானிட்டரைப் பார்த்தவாறு மைக்கில் கத்திக்கொண்டிருந்தார்.மாநிறக் கருப்பு என்றொரு வகையுண்டு. அதோடு சராசரி உயரத்திற்கு சற்று கீழேயிருந்தாலும் நல்ல உடல்வாகு. ‘இளம் டைரக்டர்’ என்கிற அடைமொழியுடன் மீடியாவில் நுழைந்திருப்பதற்கான அடையாளமாக முன் நெற்றியில் கூடுதலாக முடி வளர்த்திருப்பது தெரிந்தது.
 தனக்கு எதிரில் வைக்கப்பட்டிருந்த மின்விசிறி, ராட்சதத்திற்கு சற்று குறைவாய் கேசம் கலைத்துவிடுவதை கையால் சரிசெய்தபடியே, பக்கத்திலிருந்தவனிடம் எதையோ சொல்லிக்கொண்டிருந்ததையும், அருகில் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தவன் ஏதோ மந்திரம் கேட்பதுபோல அதற்கு பவ்யமாக செவிமடுத்துக் கொண்டிருந்ததையும் தூரத்திலிருந்த செல்போன் கடையிலிருந்து வான்மதி பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ப்ரொடக்சன் டீம்... தண்ணி கொண்டுவாங்க...”பின்னுக்கு நின்றுகொண்டிருந்தவன் அசிஸ்டண்ட் டைரக்டர்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும், கையிலிருந்த வாக்கிடாக்கியில் “வேலு... டைரக்டருக்கு தண்ணி கொண்டு வா...” என்று கிளிப்பிள்ளையாட்டம் சொல்லிக்கொண்டிருந்தான்.எங்கிருந்தோ புயல் வேகத்தில் வந்துசேர்ந்த வேலு, தான் வைத்திருந்த ஈயம் பூசப்பட்ட வாளியில் நிரப்பப்பட்ட தண்ணீருக்குள்ளிருந்து, இறுக மூடப்பட்டு தவளையாக மிதந்து கொண்டிருந்த ப்ளாஸ்டிக் பாட்டில்களை பரபரவென எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தவுடன், சுற்றியிருந்த அத்தனை கைகளும் தாகத்தில் நீண்டன.
‘‘டைரக்டருக்கு அந்த பச்சை பாட்டிலைக் கொடு...”குரல் யாருடையது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் கட்டளைக்கு அடிபணிந்தது போல செயல்பட்டுக்கொண்டிருந்தவனின் வேகத்தை, திருமண மண்டபத்தில் கை நீட்டுபவர்களுக்கெல்லாம் ஐஸ்க்ரீம் கப்புகளை வழங்குபவனோடு ஒப்பிட்டுக்கொண்டாள் வான்மதி. “ஏ.டீ-ஸ் யாராவது கேமராவுக்குப் பக்கத்துல வாங்கப்பா...”கேமராமேனின் குரல் வந்த திசையை யூகித்து வான்மதி தலை திருப்புவதற்கும், சுரேந்தர் கேமராவை நோக்கி ஓடுவதற்கும் சரியாக இருந்தது.“அந்த வெள்ளைச்சட்டைய முதல்ல வெளியனுப்பு, எவ்ளோ சொன்னாலும் அந்தப்பக்கம் பாக்க மாட்டீங்குறான்...”மானிட்டரில் அடையாளம் காட்டப்பட்ட வெள்ளைச்சட்டையை நோக்கி நடையின் வேகத்தைக் கூட்டியவன் தற்செயலாக வான்மதியின் பக்கம் பார்வையைத் திருப்பினான். அவ்வளவு நேரம் சுரேந்தரையே பார்த்துக்கொண்டிருந்தவள் நொடிப்பொழுதில் தன் பார்வையை விலக்கிக்கொண்டு, பரவலாகக் கூட்டத்தினை வேடிக்கை பார்ப்பவள் போல முகத்தை வைத்துக்கொண்டாள்.
அது ஒரு திருவிழா நடப்பதற்கான அல்லது கடைவீதிக்கான ‘செட்’ என்பதை பறைசாற்றும்வண்ணம் வீதி நெடுக வளையல் கடைகள், குளிர்பானக்கடைகள், ப்ளாஸ்டிக் விளையாட்டுச் சாமான்கள், செருப்புக் கடைகள் என செயற்கையாக வடிவமைக்கப்பட்டு கடைக்காரர்களாக நடிகர்கள் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். தெருவின் இரு முக்கிலும் கயிறுகளைக் குறுக்காகக் கட்டி ஜனநடமாட்டத்தினைத் தடுத்திருந்தனர்.
“கேமரா ரெடியா..? டேக் பொசிசன்...”விசிலுக்குக் காத்திருக்கும் தட்டச்சுப் பரீட்சை போல, சட்டென தெருவே அமைதியாகியது.‘‘ஆக்சன்...”வான்மதிக்கு சலிப்பாக இருந்தது. இதோடு ஆறாவது முறையாக அவர்கள் அந்தத் தெருவில் நடந்துசென்றார்கள், ஆறாவது முறையாக குழந்தைக்கு செருப்பு வாங்கினார்கள், ஆறாவது முறையாக கணவன் மனைவியாக பேசிக்கொண்டார்கள்.சுரேந்தரைத் தேடினாள். மொழி தெரியாத ஊரின் திருவிழாக்கூட்டமொன்றில் பரிச்சயமான முகமொன்று கண்ணுக்குப் புலப்படுவதுபோல், தூரத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருநதவன் வான்மதியின் பார்வைக்குத் தனியாகத் தெரிந்தான்.
மொபைலை எடுத்தவள் அழைக்கலாம் என்கிற எண்ணத்தைக் கைவிட்டபடி வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தியொன்றைத் தட்டினாள். ‘‘கிளம்பட்டுமா..?”
யூனிட்டுக்குள் யாருமே மொபைலை வெளியே எடுத்திருப்பதாய்த் தெரியவில்லை. மைக்கிலும் வாக்கிடாக்கியிலுமே பேசிக்கொண்டிருந்தவர்கள், நேரம் செல்லச்செல்ல குரலில் கடினத்தன்மையை வரவழைத்துக்கொண்டிருந்தார்கள். காத்திருப்பதற்கும் கிளம்புவதற்கும் நடுவிலான மனநிலையுடன் வான்மதி உட்கார்ந்திருந்தாள்.‘‘... பயலுக...”ப்ளாஸ்டிக் ஸ்டூலொன்றில் அமர்ந்தபடி செல்போன் கடையின் முகப்புத் திட்டில் கையூன்றி தெருவின் அலங்காரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வான்மதிக்கு அந்தத் தடிமனான குரல் தூக்கிவாரிப்போட்டது. ஒருவேளை பிரமையோ என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டவள் பிறகு சந்தேகமாக கடையின் முன்னுக்கு லேசாக கவிழ்ந்து எட்டிப்பார்த்தாள்.
கடைவாசலின் பக்கவாட்டில் உட்கார்ந்திருந்தவனுக்கு, எங்கேயோ பார்த்த மாதிரியான முகத்தோற்றம். நெற்றியில் இடப்பட்டிருந்த திருநீற்றுக்கீற்றுடன் பூப்போட்ட வெள்ளை பனியனுக்கு வெளியே, பொத்தான்கள் போடப்படாத வெளிர் நீலச்சட்டையின் முழங்கையானது நாலுகால் பாய்ச்சலில் மடித்துவிடப்பட்டிருந்ததற்கும், பதுங்கிக்கொள்ளத் தேர்ந்தெடுத்த பேண்டின் அசௌகர்யத்திற்கும் நடுவில் பருத்திருந்த உடலையும் கொஞ்சம் வயதையும் மறைத்திருந்தான்.
வான்மதி தலையை உள்ளிழுத்துக்கொண்டு மறுபடியும் ஸ்டூலில் அமர்ந்துகொண்டாள். கூட்டம் தன் வேலைகளில் கவனமாயிருந்தது.‘‘ஏப்பா... கடைமுன்னாடி நிக்கிறவங்க தேமேனு நிக்காதீங்கனு எத்தனை தடவை சொல்றது? முன்னாடி நிக்கிற நாலு பேர் கையை ஒசத்தி எனக்குக் குடுங்க, எனக்குக் குடுங்கனு கேட்குறாப்ல ஆக்சன் பண்ணுங்க...’’ டைரக்டரின் குரல் தூரத்து சோடா கடையின் எதிர்ப்பக்கத்தில் காற்றில் மிதந்தபடியிருந்தது. கூட்டத்தின் நடுவில் கதாநாயகன் சோடா பாட்டிலொன்றைக் கையில் வைத்தபடி “ஆக்சன்...’’ கட்டளைக்கென தயாராய் நின்றிருந்தான்.
‘‘ராஜாங்கம் இல்லியா..?” சட்டென தன்னிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுவதை எதிர்பார்க்காத வான்மதி கவனம் கலைந்தாள். கடைவாசலில் அவன் நின்றிருந்தான்.‘‘வெளில போயிருக்கானா..?”ராஜாங்கம் என்பது கடைக்குள் இருக்கவேண்டிய ஆளின் பெயர் என்பது புரிந்தது.“தெரில...”சிறுவயது முதல் இது ஒரு கெட்டவார்த்தை என்று கூறி தனக்குப் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு சொல்லின் மூலம் அறிமுகமானதாலோ என்னவோ அவனை எடுத்த எடுப்பிலேயே வான்மதிக்குப் பிடிக்காமல் போய்விட்டது. மேற்கொண்டு பேசவோ சொல்லவோ எதுவுமில்லாதவள் போல தெருவின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
‘‘புதுசா சேந்திருக்கியா?”
தலைக்கு அடிக்கப்பட்ட டையின் அட்டைக்கருப்பு நிறமும், லேசாகச் சுருங்கிய தோலும் அவனது வயோதிகத்தை கொஞ்சம் அதிகமாகவே காட்டிக் கொடுத்திருந்ததால் திட்டவேண்டுமென்கிற எண்ணத்தைக் கைவிட்டிருந்தாள்.“என் போனு பச்ச பட்டனை சரிபண்ணித்தரேன்னு வாங்கிருந்தான். சரிபண்ணிட்டானா?”தான், உட்கார்ந்திருந்த கடையின் வாசற்படியில் நின்றுகொண்டு அதிகாரமாகக் கேட்டுக் கொண்டிருந்தவனை என்ன சொல்லி அப்புறப்படுத்துவதென வான்மதிக்கு கொஞ்சம் குழப்பமாயிருந்தது.‘‘கடை என்னுதில்ல...”‘‘உன்னுதில்லையா? அப்புறம் எதுக்கு உக்காந்திருக்க?”
‘‘உக்கார சொன்னாங்க...”‘‘யாரு? ராஜாங்கமா?”குரலில் எரிச்சலை வரவழைக்க எப்போதுமே வான்மதி சிரமப்படுவாள். சுரேந்தர் மீது திடீரென கோபம் வந்தது. “கிளம்பட்டுமா...’’ என்பதற்கு பதிலாக “கிளம்புறேன்...’’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கலாமோ என்று தன்பக்கம் திரும்பிய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவள் கையிலிருந்த மொபைலை வேடிக்கை பார்ப் பதுபோல் பாவனை செய்தாள்.“நடிக்க சான்ஸ் கேட்டு வந்தியா?”சட்டென முகம் சுளித்தவள், கோபமாக ஏதோ சொல்ல வாய் திறந்ததற்கும், ராஜாங்கம் கடைக்கு வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.
“ஏ விசயகாந்து... இங்கென்னய்யா பண்ற?” நான்கு பெரிய சைஸ் வாணவேடிக்கைக் குழாய்களை ப்ளாஸ்டிக் கோணிப்பையினுள் அடைத்தவாறு நின்றிருந்த ராஜாங்கத்தின் பக்கம் இருவரும் ஒருசேர திரும்பினர். ‘‘ந்தா... என்னைய விசயகாந்துனு கூப்பிடாதனு சொல்லிருக்கேன்ல...”வான்மதி முதன்முதலில் அந்த நீலச்சட்டை ஆசாமியைப் பார்க்கும்போது “எங்கேயோ பார்த்தமாதிரியான முகத்தோற்றம்...” குறித்த குழப்பத்திற்கு விடை கிடைத்தது. அவன் நடிகர் விஜயகாந்தை அச்சு அசலாய் உரித்துவைத்திருந்தான்.
ராஜாங்கம் எதுவும் சொல்லாமல் சிரித்தபடி கடைக்குள் நுழைந்தான். வான்மதி அவனுக்கு வழிவிட்டவாறு, உட்கார்ந்திருந்த ஸ்டூலை கொஞ்சமாக நகர்த்திப்போட்டுக்கொண்டாள். ‘‘புதுப்புள்ள வந்ததும் ஆள் எஸ்ஸாகிட்ட போல...”‘புதுப்புள்ள’ என்று வான்மதியைக் கண்காட்டிச் சொன்னதும் ராஜாங்கம் அவசரமாக மறுத்தான். ‘‘ஏய் லூசாட்டம் பேசாதய்யா. அவங்க யாருக்கோ சொந்தக்காரங்களாம், பாக்குறதுக்கு வந்திருக்காங்களாம்...”மரியாதை நிமித்தமாக குரலைத் தாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தவன் வான்மதி பக்கம் திரும்பி ‘‘ஏதாச்சும் குடிக்கக் குடுத்தாங்களா?” என்றான். ‘‘கேட்டாங்க... வேணாம்னுட்டேன். பசியில்ல...”சொல்லிக் கொண்டிருக்கும்போதே யாரோ ஓடிவந்தார்கள். ‘‘ண்ணே... அந்த பட்டாசையெல்லாம் எடுத்துட்டு வரச்சொன்னாங்க...”‘‘உன்னையவா?”
‘‘ம்ம்... ஆமா, சீக்கிரம் வேணுமாம்...” ‘‘போன் பண்ணும்போதுதான கொண்டார சொன்னங்க!” ‘‘அதெல்லாம் தெரியாது, எடுத்துகிட்டு வரச்சொன்னாங்க...” ‘‘அப்புறம் யாரைக்கேட்டு குடுத்தனுவாங்க... இரு நானே கொண்டுவரேன்...”
சற்றுமுன் கீழே வைத்த கோணிப்பையை மீண்டும் எடுத்துக்கொண்டபடி வாசலில் இறங்கப்போன ராஜாங்கம், ஞாபகம் வந்தவனாக வான்மதி பக்கம் திரும்பினான்.‘‘என் பொறுப்புல வச்சிருக்க சொன்னாங்க. நான்பாட்டுக்கு குடுத்துவிட முடியாதில்லையா! உக்காந்துருங்க... குடுத்துட்டு வந்துடுறேன்...”அவள் தயங்கியவளாக அந்த நீலச்சட்டையைப் பார்க்க, ராஜாங்கம் புரிந்துகொண்டவனாக, ‘‘இவரை சொல்லாம விட்டுட்டேன் பாருங்க.இதான் எங்க தெரு விசயகாந்து, பூக்கடை வச்சிருக்கார்...” என்றான். பதிலுக்கு நீலச்சட்டை ஆசாமி முறைத்தபடி, ‘‘என் போன்ல பச்ச பட்டனை சரிபண்ணித் தரேன்னேல, ஒம்பாட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்க?” என்றான்.
‘‘அட சரிபண்ணித் தர்ரேன்பா... இரு வந்துடுறேன்...” அவசரமாகச் சொல்லிவிட்டு கடையிலிருந்து கீழிறங்கி படப்பிடிப்புக் கூட்டம் நோக்கி ஓடினான் ராஜாங்கம். மறுபடியும் அவனுடன் தனக்கு வாய்த்த தனிமை வான்மதிக்கு அசௌகரியத்தைக் கொடுக்க, வேறுவழியின்றி சுரேந்தருக்கு போன் செய்ய மொபைலை எடுத்தாள். ஆளில்லாத தெருவில் நிறுத்தப்பட்ட சைக்கிளாய் “கிளம்பட்டுமா’’ அநாமத்தாகக் கிடந்தது. “அவ்ளோ பிஸியா இருந்தா என்னை எதுக்கு வரச்சொல்லணும்!” “என்னைய விசயகாந்துனு சொன்னானே... ஏன் தெரியுமா?”
அலமாரியில் பக்கவாட்டாக சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகம்போல கடைவாசலையும் தெருவையும் ‘ட’ வடிவில் இணைப்பதுபோல் நின்றிருந்த ‘விசயகாந்த்’, வான்மதியிடம் சொல்வதற்கென எதையோ தயாராக எடுத்து வைத்துக்கொண்டான்.“இதிலென்ன ஆச்சர்யம்? விஜயகாந்த் மாதிரி இருக்குறதால...” மனதிற்குள் நினைத்துக் கொண்டதையெல்லாம் சட்டென முகத்திலடித்தாற்போல சொல்லிவிட முடியுமா என்ன!‘‘சினிமால விசயகாந்துக்கு டூப் போட்ருக்கேன் தெரியுமா? அவரோட டான்ஸ் க்ரூப்ல இருந்துருக்கேன். அவர மாதிரியே முடிவெட்டிகிட்டு சட்டை போட்டுகிட்டு திரிவேன், தூரமா நடந்துவந்தா அவராட்டமே இருக்கும்பானுக...”
அடுக்கிக்கொண்டே போனவனை அப்போதுதான் கவனித்தாள். முதுகுகாட்டி திரும்பி நிற்கும்பட்சத்தில் பக்கவாட்டுக் கன்னப்பகுதியும் காதுமடலும் அந்த நடிகரைத்தான் ஞாபகப்
படுத்தின.‘‘ரெயில்வே காலனிக்கு அந்தாப்புல ராசி ஸ்டுடியோ தெரியுமா? போகவர பாத்துருப்ப...”வான்மதி கவனித்திருந்தாலும் பெரிதாக அதுபற்றி அலட்டிக்கொண்டதில்லை.
‘‘உன்னாட்டமே இருக்காருனு கூடஇருந்தவனெல்லாம் உசுப்பேத்திவிட்டா நாம என்ன செய்வோம் சொல்லு! அப்போலாம் ஒரு போட்டோ ரெண்டே கால் ரூவா, சினிமாக்குனு எடுக்கும்போது சும்மா தேமேனெல்லாம் நிக்க முடியாது, ரவுடியாட்டம் கெத்து காட்டணும்...”வான்மதி தன்னையுமறியாது காதுகொடுக்க ஆரம்பித்தாள்.
‘‘நமக்கு அவ்ளோ வசதியெல்லாம் கெடையாது, காசு சேரும்போதெல்லாம் அங்க போயிடுவேன். கைய இப்டி வை, மூஞ்சியை இப்டி வைனு போட்டோ எடுக்குறவரு சொல்லிக்குடுப்பாரு. அப்பலாம் கருப்பு வெள்ளைதான், போட்டோவா கழுவி நம்ம கையில குடுக்கும்போது ஜிவ்வுனு இருக்கும். எடுத்துகிட்டு நேரா ஏதாச்சும் ஸ்டுடியோ வாசல்லதான் நிப்பேன். நிறையபேர் கால்ல விழுந்துருக்கேன். ம்ஹூம்... ஒண்ணும் நடக்கல...”மறந்தும் வாய் திறக்காமல் உட்கார்ந்திருந்தவள், முன்முடிவொன்றிற்கு வரத்தொடங்கியிருந்தாள்.
‘‘கூத்து திருவிழானா கூப்பிட்டு விட்ருவாங்க, டீயும் பதினஞ்சு ரூபாயும் கிடைச்சா பெரிய விசயம் அப்போலாம்...”ஏதாவது கேட்பாளென சிறிது நேரம் மௌனமாயிருந்தான். வான்மதி வெற்று மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தவள், கூட்டத்தை நோக்கிய புலம்பல் அல்லது கடுமையான சாபம் வரக்கூடுமென காத்திருந்தாள்.“அதுக்காக புடிச்ச விசயம் இல்லனு ஆகிடுமா சொல்லு? சினிமானா அவ்ளோ உசுரு, இப்பக்கூட சோறு தண்ணியில்லாம நாள் முழுக்க கொட்டாய்லயே கிடக்கச்சொன்னாலும் கிடப்பேன்.
ந்தா... இந்தப்படம் வந்ததுமே சொல்லச் சொல்லிருக்கேன். சோறு தண்ணியில்லாமல் ஓடிகிட்டு கிடக்கானுக ...பயலுக...”“டொம்...’’ என்ற சத்தத்துடன் தூரத்து வீட்டின் மொட்டைமாடியிலிருந்து வாணவேடிக்கையொன்று மேல்நோக்கிக் கிளம்பிச் சிதறியது. அடுத்தடுத்து டைரக்டர், மைக்கில் ‘ஒன், டூ, த்ரீ’ சொல்லிக்கொண்டிருந்தார். வான்மதிக்கு முகம் மலர்ந்திருந்தது. அண்ணாந்து வெளிச்சத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வான்மதியின் பக்கம் திரும்பாமல் கேட்டுக்கொண்டிருந்தான், ‘‘‘பொன்மனச் செல்வன்’ படம் பாத்துருக்கியா? அதுல வர்ற ஒரு சீனை அப்டியே நடிச்சுக்காட்டுவேன் தெரியுமா?”மறுக்கத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தவளின் மொபைலுக்கு சுரேந்தரிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. “வெய்ட்...”
இந்திரா ராஜமாணிக்கம்
|