விக்ரம் சக்சஸ் மீட்டுக்கு விருந்து படைத்த ஹீரோ!



சமீபத்தில், ‘விக்ரம்’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பலரும் வியந்து பாராட்டியது படவெற்றியை மட்டுமல்ல... விழாவிற்குப் பின் சாப்பிட்ட விருந்தினையும்தான்.  ஆம். அப்படியொரு விருந்து. நாட்டுக்கோழி சூப், கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, விருதுநகர் பன் பரோட்டா, பனீர் டிக்கா, வெஜ் சோயா பிரியாணி, பெர்ரிேரா ரோச்சர் ஐஸ்கிரீம் என சைவம், அசைவம் இரண்டிலும் தலா பதினைந்து வெரைட்டிகள் பரிமாறப்பட்டன.

யார்ப்பா சமையல்... சூப்பராயிருக்கே... என சாப்பிட்ட பலரும் புகழ்ந்து தள்ள, இந்தப் பாராட்டுக்குச் சொந்தக்காரர் யாரெனத் தேடினால், மாஸ்டர் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் எனக் கைகாட்டினர். அவர் யாரென பார்த்தால்... 2019ல் வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் ஹீேரா! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘பெண்குயின்’ படத்திலும் முகம் காட்டியவர்.
‘‘செஃப் டூ சினிமானு சொல்றதைவிட செஃப் அண்ட் சினிமானு சொல்றதுதான் நல்லாயிருக்கும். நான் இரண்டிலும் பேலன்ஸா பயணம் செய்திட்டு இருக்கேன்...’’ என அடக்கமாகக் குறிப்பிடுகிறார் ரங்கராஜ்.

‘‘அப்பா தங்கவேலு 39 ஆண்டுகளாக சமையல் துறையில் இருப்பவர். அவர்தான் என் குரு. எங்கள் வணிகத்தின் மாஸ்டர் செஃப். அவருக்கு பூர்வீகம் பாலக்காடு. இங்கிருந்து போய் அங்க செட்டிலான குடும்பம். தாத்தா அங்க மோர் வியாபாரம் செய்தார். அவர் இறக்கும்போது அப்பாவுக்கு 15 வயசு. அப்ப பாட்டிதான் அப்பாவை கோவை பாலத்துறையில் வீட்டு வேலைக்கு அனுப்பினாங்க. அங்கதான் அப்பா சமையலைக் கற்றார். பிறகு பெங்களூர் போய் வேலை செய்தார். சில பிரச்னைகளால் கோவை தீனம்பாளையம் வந்தவர் இங்க அம்மா பழனியம்மாளைக் காதலிச்சு கல்யாணம் செய்தார்.

அங்கிருந்து பக்கத்துல உள்ள மாதம்பட்டி ஏரியாவுல வந்து செட்டிலாகி 1983ல் ‘லட்சுமி கேட்டரிங் சர்வீஸ்’னு ஆரம்பிச்சு கடின உழைப்பால் ஒரே நாளில் ஐந்து திருமணங்கள்ல சமையல் செய்கிற அளவுக்கு வளர்ச்சியடைந்தாங்க. ‘மாதம்பட்டி தங்கவேலு’னு தனித்துவமா வளர்ந்தாங்க. இதுதான் அப்பாவின் ஜர்னி. நான் மாதம்பட்டி அரசுப் பள்ளியில் எட்டாவது வரை படிச்சிட்டு, கோபால்நாயுடு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு முடிச்சேன். நான் எஞ்சினியரிங் படிச்சிட்டு வொயிட் காலர் வேலைக்குப் போகணும்னு அப்பா ஆசைப்பட்டார்.

அதனால, நான் எஞ்சினியரிங் அப்ளைடு சயின்ஸ் கோர்ஸான கம்ப்யூட்டர் டெக்னாலஜி படிச்சேன். 2002ல் படிப்பு முடிச்ச நேரம் அப்பாவே சப்போர்ட் வேணும்னு குடும்பத் தொழிலுக்கு கூப்பிட்டார். உடனே அரசு பாலிடெக்னிக்ல ஓராண்டு கேட்டரிங் கோர்ஸ் படிச்சேன்.நான் சமையல் தொழிலுக்கு வந்ததும் அப்பாகிட்டயும், எங்க கேட்டரிங்ல உள்ள செஃப்கிட்டயும் சமையல் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அப்பா தங்கவேலு சைவம், அசைவம் ரெண்டிலும் கலக்குவார். அவரின் ருசியே தனிதான். அப்புறம் கல்யாண மண்டபத்துல சமையல் மாஸ்டர்கிட்ட உட்கார்ந்து ரெசிபிகளை ஒவ்வொண்ணா நோட் பண்ணினேன். வெஜிடபிள் கட்டிங்ல தொடங்கி அடிப்படை விஷயங்கள் எல்லாத்தையும் படிச்சேன்...’’ என விறுவிறுப்பாகச் சொன்னவர், தொடர்ந்தார்.

‘‘சின்ன வயசுல இருந்து அப்பாவை எல்லோரும் சமையல்காரன்னு சொல்கிறதைக் கேட்டிருக்கேன். சமையல்காரன்னு சொல்றதுல எனக்கு எப்பவும் பெருமைதான். ஆனா, மக்கள் அந்த வார்த்தையை தாழ்வா பார்க்கிற பார்வையை மாத்தணும்னு மனசு நினைச்சது. அதனால, இந்தத் தொழிலை ஒரு சிஸ்டமேட்டிக்கா, இண்டஸ்ட்ரியா வளர்த்தெடுக்கணும்னு ஆசைப்பட்டேன்.

நான் வந்த புதுசுல சில விஷயங்கள் சவாலா இருந்துச்சு. முதல்ல எதிர்பாராமல் அதிகப்படியான கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினேன். அப்ப அனுபவம் கிடையாது. அப்புறம், எங்க பணியாளர்களை சரிசெய்ய வேண்டியிருந்தது.

பொதுவா சமையல் கலைஞர்கள்னாலே இப்படித்தான் இருப்பாங்கனு ஒரு அடையாளம் இருக்கும்ல... அதுமாதிரி எப்பவும் வெத்தலை போடுறது, சிகரெட் பிடிக்கிறதுமா இருந்தாங்க. இதை மாற்றி ஒழுக்கமா, சுகாதாரமான உணவுகள் பரிமாறப்படணும்னு நினைச்சு அவங்ககிட்ட பேசி மாற்றங்களை ஏற்படுத்தினேன்.2009ல் கோவையில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல டாக்டர்கள் மாநாடு நடந்தது. அதுக்கு ஃபுட் கான்ட்ராக்ட், லோக்கல் கேட்டரிங் என்கிற முறையில் எங்களுக்குக் கிடைச்சது. அதுல 4 ஆயிரம் டாக்டர்களுக்கு வெஜ், நான்-வெஜ்னு நாங்க செய்து கொடுத்தோம்.

அங்கதான் எப்படி சிஸ்டமேட்டிக்கா பண்றாங்க என்கிற விஷயத்தை கவனிச்சு, டீம் வொர்க்கை கத்துக்கிட்டேன். அப்புறம், நாங்க செய்த உணவுகளுக்கு ஒரு பெயர் வச்சு நிறைய மெனுவாக்கி சிறப்பா பரிமாறினதையும் பார்த்தேன். இதை ஏன் கல்யாணத்திற்கும் அப்ளை செய்யக்கூடாதுனு யோசிச்சேன்.

ஒரு ஸ்வீட்டை  மூணு விதமா வைக்கிறது, நூடுல்ஸ் உள்ளிட்ட வகைகளை மெனுவில் சேர்க்கிறதுனு நிறைய வெரைட்டி காட்டினோம். இது பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி செய்த விஷயங்கள். அப்படியே இத்தாலியன், மெக்சிகன்னு பலதரப்பட்ட உணவு வகைகளை மெனுவில் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுத்தோம்.

பொதுவா, ஒரு கல்யாண கேட்டரிங் செய்றவங்க பிரசன்டேஷன்ல பலவீனமா இருப்பாங்க. அதை நாங்க மாத்தினதும் மக்கள்கிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. பிறகு 2012ல் பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியா மாத்தினோம். மாதம்பட்டி பிராண்டா மாறுச்சு.இதுக்கு முன்னாடி 2011ல் நடிகர் கார்த்தி அண்ணாவின் திருமணம் நடந்தது. கொடிசியாவில் பிரம்மாண்டமா நடந்த அந்தக் கல்யாணத்திற்கு சமையல் நாங்கதான். அதுல கலந்துகிட்ட சுமார் 45 ஆயிரம் பேர் கூட்டத்தை சமாளிச்சோம். இதன்பிறகு நிறைய அரசியல் மற்றும் சினிமா வி.ஐ.பிக்களின் கல்யாண விழாக்கள் செய்தோம்.

நடிகர் விக்ரம் சார் பொண்ணு, இயக்குநர் ராஜமவுலி சார் பையன், டாக்டர் ராமதாஸ் அய்யா வீட்டுக் கல்யாணம்னு நிறைய ஆர்டர்ஸ் பண்ணியிருக்கோம். பெரிய கூட்டத்தை சமாளிக்கிற அளவுக்கு எங்க டீமும் பலமாச்சு. கரூர்ல 75 ஆயிரம் பேர் கொண்ட ஒரு கல்யாண நிகழ்வை நடத்தினதுதான் அதிகபட்சமா நாங்க சமாளிச்சது. அதுல 1,300 பணியாளர்களை ஈடுபடுத்தினோம்...’’ என்கிறவர் நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘இதைத்தாண்டி பிசினஸ்ல என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப இண்டஸ்ட்ரி கேட்டரிங்குக்குள் போனோம். இதுக்கு ‘மாதம்பட்டி  ஃபுட் சர்வீஸஸ்’னு பெயர் வச்சோம். அதாவது கோவையைச்சுற்றியுள்ள ஐடி கம்பெனிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தினமும் உணவு தயாரிச்சுக் கொடுக்கிறது இதன் பணி. இப்ப கோவையில் உள்ள எங்க சென்டர் கிச்சன் வழியா 20 ஆயிரம் மதிய உணவுகள் தயாரிச்சு வழங்குறோம்.

இதை பெங்களூர்லயும் தொடங்க இருக்கோம். இன்னும் ரெண்டு மாசத்துல அங்க ஒரு கிச்சன் ரெடியாகிடும். இந்த மாதம்பட்டி ஃபுட் சர்வீஸஸை பேன் இந்தியாவா கொண்டுபோற நோக்கத்துடன் இயங்கிட்டு இருக்கோம். இதுதவிர, ஒரு வெட்டிங் கேட்டரரா நாங்க தென்னிந்தியாவுடன் மட்டும் நிற்காமல் சர்வதேச நிகழ்வுகள்ல பண்ற அளவுக்கு இந்தியாவுல பெஸ்ட் வெட்டிங் கேட்டரரா வரணும்னு பயணிக்கிறோம்.

தரத்தை பராமரிக்க ஒரு தேதியில் நான்கு கல்யாணம் மட்டுமே செய்றோம். இப்ப எங்க வெட்டிங் கேட்டரிங் நிறுவனத்துல 250 நிரந்தரப் பணியாளர்களும், 1000 தற்காலிக பணியாளர்களும் இருக்காங்க. மாதம்பட்டி ஃபுட் சர்வீஸஸ்ல 750 நிரந்தரப் பணியாளர்கள் இருக்காங்க.

இதுபோக ‘மாதம்பட்டி ஃபுட் பேக்டரி’னு கோவையில் மட்டும் அவுட்டோர் கேட்டரிங் பண்றோம். அதாவது, பிறந்தநாள் விழாக்கள், கெட்டுகெதர் பார்ட்டினு நூறு முதல் ஆயிரம் உணவுகள் உள்ளதை இதுல கையாள்றோம்...’’ என்ற ரங்கராஜ், ‘விக்ரம்’ சக்சஸ் மீட் குறித்து விவரித்தார்.‘‘சென்னையில் ‘விக்ரம்’ பட சக்சஸ் மீட்டிற்கு மூணு நாட்களுக்கு முன்னாடி ஒரு கல்யாண வரவேற்புக்கு கேட்டரிங் செய்தோம். அந்த வாடிக்கையாளர் ராஜ்கமல் நிறுவனத்துடன் தொடர்புடையவருக்கு நண்பர். அப்படியாக எங்ககிட்ட இந்த மாதிரி ஒரு ஃபங்ஷன் நடக்குது, பண்ணமுடியுமானு கேட்டாங்க.

அப்ப என் சித்தப்பா பையன் தம்பி விமல் அங்கிருந்தார். கோவை ஸ்டைல்ல ஒரு மெனு கொடுத்தோம். குறிப்பா இலை போட்டு பரிமாறலாம்னு சொன்னது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே ஓகே சொன்னாங்க. எங்க டீம்ல 120 பேர் சென்னையில் இருந்ததால, அந்த டீமை வச்சே ரேஸ் கோர்ஸ் கிளப்ல ஒரு தற்காலிக கிச்சனை ரெடி பண்ணினோம். சைவம், அசைவம்னு ரெண்டிலும் ஒண்ணுபோல வெரைட்டி தந்தோம். ஒரே டைம்ல 500 பேர் சாப்பிடற மாதிரி செய்தோம். 700 பேர் வரை சாப்பிட்டாங்க. கமல் சார் தொடங்கி வந்திருந்த எல்லோருமே பாராட்டினது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...’’ என நெகிழும் ரங்கராஜ் ஹீரோவான கதைக்குள் வந்தார்.

‘‘ஒரு நடிகனா வருவேன்னு நினைக்கல. அதுக்காக நான் திட்டமிடல. ஒரு வாய்ப்பு வந்தது. அதை பயன்படுத்திக்கிட்டேன். அதுதான் ‘மெஹந்தி சர்க்கஸ்’ படம். புதுமுக ஹீரோ வேணும்னு தேடிட்டு இருந்தப்ப என்னை ஒரு ஃபங்ஷன்ல டைரக்டர் டீம் பார்த்தாங்க. அதேநேரம், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா சாரின் அப்பா ஈஸ்வரன் சார் எனக்கு ரொம்ப நெருக்கம். அவர் மூலம் ராஜுமுருகன் சாரை சந்திச்சேன். அவர்தான் அந்தப் படத்திற்கான கதாசிரியர். அவர் அண்ணன் சரவணன் சார் படத்தை இயக்கினார். அப்படியாக ஹீரோவானேன்.

அதன்பிறகு ‘பெண்குயின்’ படம் செய்தேன். இப்ப, ‘கேசினோ’, ‘ஹண்டர்’னு ரெண்டு படங்கள் முடிச்சிருக்கேன். தவிர, செல்வராகவன் சார்கிட்ட உதவியாளரா இருந்த லதா மேடம் படத்துல ஹீரோவா நடிச்சிட்டு இருக்கேன். இதுல யோகிபாபு, ஆத்மிகா எல்லாம் நடிக்கிறாங்க. ஐம்பது சதவீதம் ஷூட் முடிஞ்சது. அடுத்து, சீனு ராமசாமி சார் படம் பண்றேன்.
ஆரம்பத்துல என் நலவிரும்பிகள் சினிமாவுக்குப் போறாரேனு ரொம்பக் கவலைப்பட்டாங்க.

நிறைய அறிவுரைகள் சொன்னாங்க. ஆனா, நான் சினிமா மூலமா என் பிசினஸை எப்படி அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போறதுனும், என்னையும் ஒரு பிராண்டா எப்படி மாத்திக்கிறதுனும் யோசிச்சேன். எல்லாத்தையும் சரியா செய்யமுடியும்னு எனக்கு முழு நம்பிக்கை வந்தபிறகே சினிமாவுக்குள் வந்தேன்.எனக்கு அடுத்த மூணு மாசத்திற்கான அலுவல் அட்டவணை என்னனு தெரியும். ஏன்னா, ஒரு திருமணம் நடத்துறவங்க மூணு மாசத்திற்கு முன்னாடியே என்னை புக் செய்திடுவாங்க. அதை அடிப்படையா வச்சிட்டு என் சினிமா கால்ஷீட்டை நான் பேலன்ஸ் செய்றேன். அதனால, எந்தப் பக்கமும் பாதிப்பு வராதபடி பார்த்துக்கிறேன்.

வீட்டுல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் மேல் நிறைய நம்பிக்கை உண்டு. நான் கேட்டரிங் ஃபீல்டுக்கு வந்ததும் ‘மாதம்பட்டி ரங்கராஜ்’னு பெயர் போட்டுக்க ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கிட்டேன். அப்பாவின் குவாலிட்டியை கொடுத்தபிறகே மாதம்பட்டி பெயரை என்னுடன் சேர்த்துக்கிட்டேன். இப்ப இந்த நிறுவனத்தை நானும், தம்பி கிருஷ்ணகுமாரும், தம்பி விமலும், சித்தப்பா ரவியும் சேர்ந்து பார்த்துக்கிறோம். என் மனைவி சுருதிப்ரியாவும் எனக்கு சப்போர்ட்டா இருக்காங்க. பசங்க ராஜேஷ் ஸ்ரீவாரி, ராணா ஸ்ரீவாரி ரெண்டு பேரும் பள்ளியில் படிக்கிறாங்க...’’ என்கிறவர், ‘‘என் கனவுனு பார்த்தால், சினிமாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ரெண்டு படங்கள் நல்ல கதைகளா தேர்ந்தெடுத்து நடிக்கணும்.

கேட்டரிங் பிசினஸைப் பொறுத்தவரை இந்த நிறுவனத்துல 2 ஆயிரம் பேர் இன்னைக்கு வேலை செய்றாங்கனா அடுத்த பத்து ஆண்டுகள் கழிச்சு 20 ஆயிரம் பேர் வேலை செய்ற நிறுவனமா மாத்தணும். உணவு சார்ந்து ரெஸ்டாரண்ட், கிளவுட் கிச்சன், இண்டஸ்ட்ரியல் கிச்சன்னு வளர்ச்சியைப் பெருக்கணும். அதை இந்தியா முழுவதும் கொண்டுட்டு போகணும்...’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

பேராச்சி கண்ணன்