அரண்மனை குடும்பம் - 25



கிறீச்சிட்டு நின்ற காரினை எஸ்ஐ சாமிக்கண்ணு பார்த்திட கணேசனும் டிரைவிங் சீட்டில் இருந்து கீழ் இறங்கினான். அவனைப்பார்க்கவும் சாமிக்கண்ணுவிடம் கூட ஒரு பரபரப்பு.“என்ன சார்... இன்வெஸ்டிகேஷனா..?”“எக்ஸாக்டலி... நானே உங்கள பாக்கணும்னு நினைச்சுகிட்டிருந்தேன்... நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க...”“ஐ ஆம் லீவிங்... எதுவா இருந்தாலும் இப்பவே கேட்டு முடிச்சிடுங்க.
ஆமா... அந்த ஓடிப் போன நபர் பிடிபட்டானா..?”“விடுவோமா... ஆனா, அவனைப் பிடிச்சும் பிரயோஜனமில்லாமப் போயிடிச்சு. அவன் ஒரு பாம்புப் பிடாரன்! அது மட்டுமில்ல... பவுடர் போட்ற சித்து வேலையெல்லாமும் தெரிஞ்சி வெச்சிருக்கான்...”சாமிக்கண்ணு விலாவரியாக சொல்லத் தொடங்கும்போது ரத்தியும், தியாவும் கூட காரில் இருந்து இறங்கினார்கள்.
தியா, கணேசன் அருகே வந்து சாமிக்கண்ணுவைப் பார்த்தபடியே அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“உங்க டாட்டரா சார்...”“ம்... அது என் மனைவி ரத்தி...”கணேசன் சொல்லவும் ரத்தி சற்று இணக்கமாய் சிரித்தாள். வணங்கவும் செய்தாள்.“சரி... ஏதோ பாக்கணும்னு சொன்னீங்களே... என்ன விஷயம்..?”“சொன்னா உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும். நம்பறதுக்கும் கஷ்டமா இருக்கும். ஆனா, அது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை...”“எது? சுத்தி வளைக்காம கொஞ்சம் நேரா விஷயத்துக்கு வரீங்களா? எனக்கு நிறைய வேலை இருக்கு...”“நேத்து பாம்பு கடிச்சு செத்துப்போன சதீஷும் சரி, அந்த பாம்பு பிடாரனும் சரி, ஏற்காட்ல யாரையோ கொல்றதுக்காகத்தான் வந்துருக்காங்க. ஆனா, விதி வேற விதமா விளையாடிடிச்சு...”எஸ்ஐ சாமிக்கண்ணுவின் ஆரம்பம் ரத்தியை கூர்மையாக்கிற்று.

அதைப் பார்த்த கணேசன் “ரத்தி... நீ தியாவோட கார்ல போய் உட்கார்... நான் சார் கிட்ட பேசிட்டு வரேன்...” என்று அவர் தொடர்ந்து பேசுவதை ரத்தி கேட்க வேண்டாம் என்கிற எண்ணத்தோடு காரை நோக்கி கையைக் காட்டினான்.அரை மனதாய் தியாவோடு ரத்தி காருக்குள் ஏறிக்கொண்டாள். இருந்தாலும் உள்ளிருந்தபடியே பார்வை அவர்கள் இருவர் மேல்தான் இருந்தது.எஸ்ஐ சாமிக்கண்ணுவும் நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தவராக, பிடாரன் போதிமுத்து பாம்புகளோடு வந்ததற்கு சாட்சியாக காபி தோட்டத்தில் கிடைத்த பிரம்புப் பெட்டிகளை எடுத்துக் காட்டினார்.

கணேசனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவனிடம் ஒருவகை நிசப்தம். “என்ன சார்... இப்படிக் கூட நடக்குமான்னு இருக்குதா..?”
“ஆமாம்... எங்க மாமாவோட கண்ட்ரோல்ல இருந்தவன்தான் அந்த சதீஷ். எனக்கு அவனைப்பத்தி எல்லாம் தெரியாது. இன்ஃபாக்ட் நான் பிணமாதான் அவனை நேத்து பார்த்தேன். பரிதாபமும் பட்டேன். ஆனா, அவன் ஒரு கொலைகாரன்னு நீங்க சொல்றத ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு...”“தப்பா எடுத்துக்காதீங்க சார்...

உங்க மாமா கிட்டயும் ஏதோ தப்பு இருக்கற மாதிரியே என் போலீஸ் புத்தி சொல்லுது...”“என்ன சொல்றீங்க சார்... மாமாகிட்ட தப்புன்னா எந்த விதத்துல..?”“அவர் அந்த பிடாரனை விட்றச் சொல்லி காட்டின வேகம், என்கொயரிய தெரிஞ்சிக்கறதுக்காக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சதாசிவத்தை அனுப்பித்தந்த சாமர்த்தியம், இதெல்லாம் எனக்கு அவர்மேலயே சந்தேகத்தை உண்டாக்கியிருக்கு!”“சந்தேகம்தானே... அதான் உங்களுக்கு யார்மேல வேணா வருமே..?”

“நோ... நேத்து நான் இங்க வந்தபோது பாடிகிட்ட இருந்தது நீங்கதான்... ஆனா, உங்க மேல எனக்கு இந்த வினாடி வரை எந்த சந்தேகமும் இல்லை. நீங்க சொன்ன எதுவும் பொய்யுமில்ல. இன்ஃபாக்ட் அந்த பிடாரன் ஓடிப்போய் பஸ் பிடிச்சதை நீங்க சொல்லலேன்னா நாங்க அவனைப் பிடிச்சு இந்த கேஸ் இவ்வளவு தூரம் வந்திருக்கவும் முடியாது. அதுக்கு நான் உங்களுக்கு நன்றிதான் சொல்லணும். ஆனா, உங்க மாமா விஷயம் அப்படி இல்லை...”சாமிக்கண்ணு சொன்னவிதம் கணேசனையும் மிக யோசிக்க வைத்தது.

“என்ன யோசிக்கிறீங்க... நீங்க சொஸைட்டில பெரிய அந்தஸ்துல இருக்கறவங்க. உங்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தரையே நான் சந்தேகப்பட்றத உங்களால ஜீரணிக்க முடியலையா..?”

“ஆமா... எனக்கோ என் மாமாவுக்கோ இந்த ஏற்காட்ல எதிரிகள்னு யாருமே இல்லை. இங்க மட்டும் இல்லை... எங்கேயுமே கொலை செய்து அழிச்சிடற அளவுக்கு எதிரின்னு யாருமே இல்லை சார்... இருந்தாலும் இந்த மாதிரி குறுக்கு வழியெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்...”“ஆனா, என்கொயரில தெரிய வந்த தகவல்கள் அப்படி இல்லையே..?”“நீங்க முடிவா என்ன சொல்ல வர்றீங்க..?”“இப்போதைக்கு இவ்வளவு போதும். நான் எப்படியும் அந்த பிடாரனைப் பிடிச்சிடுவேன். அவன் மூலமா அவன் யாரைக் கொல்ல வந்தான்... யாருக்காக வந்தான்னு கண்டுபிடிக்காம விட மாட்டேன்...”

“உங்க கடமையை நீங்க செய்யுங்க. என்ன மட்டும் தொந்தரவு பண்ணாதீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு...” கணேசன் சொன்னபடியே தன் காரை நோக்கி நடந்து அதில் ஏறியும் கொண்டான்.அது கருத்த கார்ச்சாலை வளைவுகளில் வழுக்கத் தொடங்கிற்று.உள்ளே மிக இறுக்கமாயிருந்தாள் ரத்தி. ரியர் மிரர்ரில் அவள் முகம் நன்கு தெரிந்தது.
தியா வழக்கம்போல கதவு கண்ணாடி வழியே காபி தோட்டங்களின் மேல் பார்வையில் இருந்தாள்.“என்ன ரத்தி... இறுக்கமா இருக்கே? ஏற்காட்டை விட்டு பிரியறது உனக்கு பிடிக்கலையா..?”அவளிடம் பதிலில்லை.

‘‘நோ ப்ராப்ளம்... இன்னும் ஒரு மூணுமாதம் கழிச்சு இதேபோல வருவோம்... அப்ப பத்து பதினைஞ்சு நாள் கூட தங்குவோம்...”“வேண்டாம் ஜீ... இனி ஏற்காடே வேண்டாம்...” என்றாள் ரத்தி பட்டென்று.“வேண்டாமா... நீயா சொல்றே..?”“ஆமாம்... நாம இனி எங்கேயும் போகவேண்டாம்... நீங்க எங்களை பிரியாம எங்க கூடவே இருந்தா போதும் ஜீ...”கணேசன் மெல்ல காரை ஓட்டியபடியே திரும்பியும் பார்த்தான்.

ரத்தி முகத்தை தன் துப்பட்டாவால் துடைத்தபடி இருந்தாள். கண்களிலும் கலக்கம்.“ஏன் ரத்தி ஒரு மாதிரி பேசறே... என்னாச்சு..?”“என்னாகணும்... அதான் அந்த போலீஸ்காரர் பிட்டு பிட்டு வெச்சாரே...”“ஓ... காருக்குள்ள இருந்தபடியே கேட்டுகிட்டு இருந்தியா..?”“சாரி ஜி... என்னால அதை தவிர்க்க முடியல. கண்ணாடியை இறக்கி விட்டுகிட்டு நீங்க பேசியதைக் கேட்டேன். அந்த எஸ்ஐ, உங்க மாமா மேல சந்தேகப்பட்டது ரொம்ப சரி. நான் சொன்னப்பதான் நீங்க நம்பலை... அவர் சொல்லும்போது கூடவா உங்களுக்கு சந்தேகம்
வரலை...”

“அப்ப என் மாமாதான் யாரையோ கொல்றதுக்கு சதீஷையும் பிடாரனையும் அனுப்பினார்னு நீ சந்தேகப்பட்றியா..?”“சந்தேகப்படலை... அதான் உண்மை! அவங்க வரும்போது நீங்க இருக்கக் கூடாதுன்னுதான் உங்கள எஸ்டேட்டைப் பார்க்க அனுப்பிட்டாரு...”“ஓ... அப்ப அவர் உன்னைக் கொல்லத்தான் சதீஷை ஏற்பாடு பண்ணார்னு சொல்றியா..?”
“ஆமாம்... வாழைப்பழ சாமியாரும் என் உயிருக்கு... உங்க உயிருக்கு ஆபத்துன்னு சொன்னார்னும் சொன்னேனே...”“ஓ... நீ அந்த சாமியாரை இன்னும் மறக்கலியா?”“எப்படி ஜீ அவரை மறக்க முடியும்... அதுவும் அவர் சொன்னபடியே நடக்கும்போது..?”

“சரி... நீ இதுக்கு மேல எதுவும் பேசாதே... நான் பாத்துக்கறேன்...” கணேசன் டிரைவ் செய்தபடியே அடுத்த நொடியே குலசேகர ராஜாவை கைபேசி ப்ளூடூத் இணைப்பின் வழியே பிடிக்கப் பார்த்தான். குலசேகர ராஜாவின் கைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை ஸ்பீக்கர் பாக்ஸ் சொன்னது.“இப்ப எதுக்கு அவரை கூப்ட்டீங்க...

இதெல்லாம் போன்ல பேசற விஷயமா ஜீ?”“நானும் நீ சொன்னதை வெச்சு அதுக்காகவெல்லாம் கூப்பிடல ரத்தி... நான் கூப்பிட்டது வேற விஷயமா..!”“எதுவும் இப்ப அவர்கிட்ட பேச வேண்டாம் ஜீ...”“சரி பேசலை... நீ தைரியமா இரு! எஸ்.ஐ.யும் அந்த பிடாரனைப் பிடிச்சு அது யார்னு கண்டுபிடிக்காம விடமாட்டேன்னு சொன்னதைத் கேட்டேல்ல..?”“ம்...”“அப்ப அவரப்பத்தின எல்லாமே வெட்ட வெளிச்சமாயிடும் இல்ல..?”“நிச்சயம் ஆகும்...”

“அவர் தப்பானவர்னு மட்டும் தெரியட்டும்... நான் அப்புறம் என்ன செய்யறேன்னு பாரு...”கணேசன் சொன்ன விதமே சற்று கடூரமாகத்தான் இருந்தது.அப்போது அவன் கை பேசிக்கு அழைப்பு.“யெஸ்... கணேஷ் ஸ்பீக்கிங்...”“ஹலோ சார்... நான் பரந்தாமன் பேசறேன்...”“ஓ... பரந்தாமன் சாரா... எப்படி இருக்கீங்க பரந்தாமன்..?”“நல்லாருக்கேன்... ஆமா இப்ப எங்க இருக்கீங்க கணேஷ்..?”

“ரெஸ்ட் எடுக்க ஏற்காடு போயிருந்தேன்... இப்ப திரும்பிக்கிட்டிருக்கேன் சார்... என்ன விஷயம்?”“நேர்ல பாத்து பேசணுமே... அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்குமா?”

“எனிதிங்க் சீரியஸ்..?”
“கொஞ்சம் சீரியஸான விஷயம்தான்...”
“எதைப்பத்தின்னு  தெரிஞ்சிக்கலாமா..?”
“நம்ம எம்.பி. அருணாசலத்த பத்திதான்...”
“என்ன... அருணாசலம் உங்ககிட்ட கமிஷன் எதாவது கேட்டாரா?”

“நோ... நோ... இது ரொம்பவே பர்சனல். போன்ல வேண்டாம் ப்ளீஸ்...”
“சரி... நீங்க ஒரு 11 மணிக்கு ஃபேர்லாண்ட்ஸ்ல இருக்கற என் ஆபீசுக்கு வந்துடுங்க...”
“ஷ்யூர்... நான் உங்கள சந்திக்கப்போறத பத்தியும் நீங்க யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்...”
“அதுல என்ன பெரிய ரகசியம் இருக்கு..?”

“இருக்கு... அதனாலதான் சொன்னேன். நாம நேர்ல பேசுவோம், பை...”அந்த பரந்தாமன் முடித்துக் கொண்டார். அது ஏதோ விபரீதம் என்பது மட்டும் கணேசனுக்குப் புரிந்தது.

(தொடரும்)

குருக்கள் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டபடியே கனபாடிகள் எதுவும் பேசாமல் தன் உறவினர் வீடு நோக்கி புறப்படத் தொடங்கினார். முன்னதாக அசோகமித்திரனை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தார். அது முதல் நாள் நாடி ஜோதிடர் கற்பகவிநாயகம் சொன்னபடியே குருக்கள் உயிர் பிரிந்து விட்டதை சொல்லாமல் சொல்வது அசோகமித்திரனுக்கும் புரிந்தது. ஆனாலும் அவரிடம் பெரிய ஆச்சரியமெல்லாம் எழவில்லை. டாக்டர்களே இப்போது குத்துமதிப்பாக உயிர்பிரியும் நேரத்தை சொல்லிவிடுவதும் அப்படியே நடப்பதையும் பார்த்திருந்ததால் அதை ஓர் ஆச்சரிய அதிசயமாய் அசோகமித்திரன் நினைக்கவில்லை.

“என்ன சார்... எங்க ஜோசியர் சொன்னபடி நடந்தது உங்களுக்கு ஆச்சரியமா இல்லையா?” என்று கேட்கவும் செய்தார்.“இல்ல சாமி... சாகக்கிடக்கறவங்க நோயை வெச்சு இதை ஓரளவு யூகிச்சு சொல்லிடலாம். இருந்தாலும் ஜோதிடர் சரியா சொன்னதை நான் ஒப்புக்கறேன். ஆனா, அதை அதிசயமாகவோ, ஒரு பெரிய விஷயமாகவோ நான் நினைக்கத் தயாரில்லை...”
“என் வரைல கற்பகவிநாயகம் ஓர் அதிசயமான மனிதர்தான். சித்த புருஷர்கள் அவர் மூலமா எவ்வளவோ விஷயங்கள் சொல்லி, அவ்வளவும் நடந்துருக்கு.

போகட்டும்... கிரகணம் இன்னும் அரை மணில பிடிக்கத் தொடங்கிடும். இந்த சந்தர்ப்பத்துல வெளியே நடமாட்றது நல்லதில்ல. நீங்க என்கூட வர்றதுதான் சரி. கிரகணம் முடிஞ்சு குளிச்சதுக்குப் பிறகு நீங்க ஊரைச் சுற்றிப் பார்க்கலாம்...” “மன்னிக்கணும்... இந்த கிரகண நேரத்தில்தானே பாம்பு வந்து பூஜை செய்யும்னு சொன்னீங்க?”
“ஆமா... இதுக்கு முந்தி அப்படிதான் நடந்திருக்கு...”

“இன்னிக்கு அப்படி நடக்காதுன்னுதான் அந்த நாடி ஜோசியர் சொல்லிட்டாரே... அதனால நான் அதைப்பற்றி யோசிக்காம ஊரை ஒரு சுற்று சுற்றி வரேன். கிரகண நேரத்துல நடமாடக் கூடாதுங்கற கருத்தை நான் எப்பவுமே ஏற்றதில்லை. அது வான்வெளில நடக்கற ஓர் இயற்கை நிகழ்வு! அதுக்குமேல அதனால ஒரு பாதிப்பு ஏற்படும்கற கருத்தை எல்லாம் நான் நம்பத் தயாரில்லை. என்னை நீங்க தப்பா நினைக்க வேண்டாம்...”

“சரி உங்க இஷ்டம்... நான் போய் ஜபத்துல உட்கார்றேன். எனக்கு இப்பவே ஒண்ணரை மணி நேரம் தாமதமாயிடுத்து. கிரகணம் விடவும் குருக்கள் வீட்டுக்கு போய் துக்கமும் விசாரிக்கணும்.

நீங்க பார்த்து ஜாக்ரதையா போய்ட்டு வாங்கோ. சர்ப்பங்கள் எங்கயானா கண்ணுல பட்டா அமைதியா நின்னுடுங்கோ. நீங்க அதை துன்புறுத்த மாட்டேள்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்க நல்லதுக்காக சொன்னேன்... நான் வரேன்...” என்று கனபாடிகள் விலகிக்கொள்ள தனி மனிதனாய் அசோகமித்திரன் டிவி காரர்களின் வேன் வந்து நின்றிருக்கும் இடத்திற்குச் சென்றார். அவர்களில் ஒருவருக்கு அசோகமித்திரனைத் தெரிந்திருந்தது.

“சார் நீங்களா..?”“யெஸ் நானேதான்... உடனேயே என்ன பக்திமானா நினைச்சு பாம்பு பூஜை பண்றத பார்க்க வந்திருக்கறதா நினைச்சுடாதீங்க... உங்களுக்கு டிஆர்பி நோக்கம்... எனக்கு இது எந்த அளவுக்கு உண்மைங்கறது நோக்கம்...”“ஆனா, இன்னிக்கு பாம்பு பூஜை செய்ய வராதாமே..?”“ஆமா... குருக்கள் சாவுங்கற ஒரு விஷயம் அவங்களுக்கு கிடைச்சிடுச்சி.

ஆனா, எப்பவுமே அப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லைங்கறதுதான் என் கருத்து...”“சார்... அப்படியே உங்களோட இந்த கருத்தை நாங்க ஷூட் பண்ணிக்கவா. ஏன்னா நீங்க ஒரு ஆதன்டிக் பர்சன். பெரிய சிந்தனையாளர்...”“தாராளமா...” அசோகமித்திரன் சம்மதிக்கவும் அடுத்த சில நிமிடங்களில் கேமரா அவர் முன் ஓடத் தயாராகிட ஆங்க்கரும் கையில் மைக்குடன் பேசத் தொடங்கினார்.“வணக்கம் நேயர்களே!

நாம இப்ப தமிழ்நாட்டின் பிரபல சிந்தனையாளர், ஆராய்ச்சியாளர் அசோகமித்திரன் முன்னால இருக்கோம். நாகேந்திர நல்லூர் நாகேஸ்வர லிங்கத்தை கிரகண சமயத்துல ஒரு பாம்பு வந்து வில்வம் பறிச்சுப் போட்டு பூஜை செய்யுதுங்கற நிகழ்வே ஒரு நம்பமுடியாத விஷயம்னு சொல்றார் திரு அசோகமித்திரன்.

அவர் கருத்துக்கு ஏற்ப இதுவரை எந்த பாம்பும் வரவும் இல்லை. ஆனா, அது வரும்கற நம்பிக்கைல பல நூறு பக்தர்கள் இன்னிக்கு கோயிலுக்கு வந்துருக்காங்க. அவர்கள் கருத்தையெல்லாமும் கேட்டோம். திரு அசோகமித்திரன் என்ன சொல்றார்னும் கேட்போமே!” என்று ஒரு முன்னோட்டம் கொடுத்தபடியே மைக்கை முன்னால் நீட்டினார் அந்த செய்தி சேகரிப்பாளர்! அசோகமித்திரனும் பேசத் தொடங்கினார்.

அப்போது கூட்டமும் அவரைச் சுற்றிக் கூடி விட்ட நிலையில், காவி கட்டிய சன்யாசியைப் போன்ற ஒருவர் அசோகமித்திரனை ஒருவித மர்மப் புன்னகையோடு பார்த்தார்.
அசோகமித்திரனும் அவரைப் பார்த்தார். அவர் கண்களில் ஒரு அசாத்திய தீர்க்கம்! அது அசோகமித்திரனையும் என்னவோ செய்யத் தொடங்கியது.

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி