காபி டேபிள்



இயக்குநராக மாறிய யுவன் மேனேஜர்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் பல ஆண்டுகளாக மேனேஜராக வேலை செய்தவர் கலசா செல்வம். இவர் ‘கொத்தங்கோடு பங்களா’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதன் ஹீரோ புதுமுகம் விது. ஹாரர் மூவியாக உருவாகும் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
சரி, படத்துக்கு மியூசிக்? அது சஸ்பென்ஸ்!

இசையமைப்பாளராகும் மிஷ்கின்

மிஷ்கின் இயக்கியுள்ள ‘பிசாசு - 2’ எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையில் ஒரு படத்துக்கு மியூசிக் பண்ணியிருக்கிறார் மிஷ்கின். படத்தின் பேர் ‘டெவில்’. இதில் அவருடைய கம்பெனி ஆர்ட்டிஸ்ட் பூர்ணா நாயகியாக நடிக்கிறார். டிராவலை அடிப்படையாகக் கொண்ட இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இந்தப் படத்தை மிஷ்கின் தம்பியும்  ‘சவரக்கத்தி’ இயக்குநருமான ஆதித்யா இயக்கி வருகிறார். ஏ ஃபிலிம் பை பிரதர்ஸ்!

திருக்குறள் தமிழன்

அமெரிக்காவில் வசிக்கும் 21 வயது இளைஞர் ஆதிகோபால் தமிழ் மீது உள்ள பற்று காரணமாக அங்கிருந்து தமிழகம் வந்து 1330 திருக்குறளையும் சான்றோர் முன்னிலையில் பாடி அசத்தியுள்ளார். இந்நிகழ்வில் நீதியரசர் ஆர்.மகாதேவன், வி.ஜி.சந்தோஷம், நடிகர் பாண்டியராஜன் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆதி தமிழன்!

புதினுக்கு என்ன ஆச்சு?

இதுதான் இன்று உலகம் முழுக்க வலம் வரும் வேள்வி.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் நான்கு மாதங்களாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. முடிவடையாத போரால் இரண்டு நாடுகளும் கடுமையான இழப்பைச் சந்தித்துவருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவின் இப்போதைய அதிபர் புதின் உடல்நிலை பலவீனமடைந்து வருவதாகப் பல்வேறு தகவல்கள் உலாவந்தன. அதை மறுத்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் கருத்துகளில் உண்மை இல்லை எனக் கூறி திட்டவட்டமாக மறுத்தார்.

ஆனால், சமீபத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கிரெம்ளினில் நடைபெற்ற ரஷ்ய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற புதின் உரை நிகழ்த்தும்போது அவரது கால்கள் நடுங்குவது போன்றும், நிற்கவே முடியாமல் சிரமப்படுவது போன்றும் உள்ள வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதினின் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டும், சர்வதேச ஊடகங்களிலும் பரப்பரப்பாக விவாதிக்கப்பட்டும் வருகிறது.

தொகுப்பு: குங்குமம் டீம்