ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக்தான் இந்தப் படம்!



கம்பீரமாக அறிவிக்கிறார் படத்தை தயாரித்து நடித்தபடியே இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கும் மாதவன்

மாதவன் @ மேடிக்கு அறிமுகம் தேவையில்லை. சினிமா பின்னணி இல்லாதவர். தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக வலம் வருபவர். ‘இறுதிச்
சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘மாறா’ என விதவிதமான படங்கள் பண்ணியவர் இப்போது ‘ராக்கெட்ரி’ படத்தை முதல் முறையாக இயக்கியிருக்கிறார். ‘‘ராக்கெட் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் பயோபிக் எடுப்பதை ஒரு கலைஞனின் கடமையாகப் பார்க்கிறேன். என் நண்பர் ஒருவர்தான் நம்பி நாராயணன் சார் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லி அதைப் படமாக்கினால் நல்ல பதிவாக இருக்கும் என்றார். அப்போது நான் ‘இறுதிச்சுற்று’ முடித்திருந்தேன். எனக்கும் இந்த மாதிரி பயோபிக் எடுத்தால் ஒரு லேண்ட்மார்க் படம்போல் அமையும் என்பதால் நம்பி சாரை மீட் பண்ணினேன்.

அவருடனான முதல் சந்திப்பிலேயே எனக்கு மிரட்சி காத்திருந்தது. பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் என்னைப் பற்றியும் என் படங்களைப் பற்றியும் அவர் பேசியது சிலிர்ப்பாக இருந்தது. வெளி உலகிற்குத் தெரியாத பல விஷயங்களைச் சொன்னார். இன்று இந்தியா விஞ்ஞான ரீதியாக பல உயரங்களைத் தொட்டுள்ளது. வான்வெளியில் பல நாடுகளின் சாட்டிலைட்களை இந்தியா நிறுவியுள்ளது. சாட்டிலைட்டை வான்வெளியில் நிறுத்தியுள்ள இந்திய ராக்கெட் என்ஜின் உருவாக்கத்தில் நம்பி சார் இருக்கிறார்.

நம்பி சார் யார் என்று தெரியாது என்று சொல்வது தேசத் தவறு என்றே சொல்லலாம். அவர் அவ்வளவு பெருமைக்குரியவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த எல்லாமே தேச பக்தியைச் சார்ந்ததாகவே இருக்கும். ராக்கெட்டில் உள்ள ‘விகாஸ்’ எந்திரத்தை கண்டுபிடித்ததற்காக ‘பத்மபூஷண்’ வாங்கியிருக்கிறார். இந்த விகாஸ் என்ஜின் இல்லையென்றால் இஸ்ரோ இல்லை என்றே சொல்லலாம். இதன்மூலம்தான் மங்கள்யான், சந்திராயன் போன்ற ராக்கெட்கள் அனுப்பப்படுகிறது. இந்த என்ஜின் இன்றைய தேதி வரை ஃபெயிலியர் ஆனதில்லை.

இன்று மருத்துவம் வியக்கத் தக்க வகையில் மக்கள் உயிரைப் பாதுகாத்து வருகிறது. அதுக்கு நம்பி நாராயணன் மாதிரியான விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விஷயங்கள்தான் ‘ராக்கெட்ரி’ பண்ணக் காரணம். நம்பி சாரின் அப்ரூவல் வாங்கிய பிறகே படப்பிடிப்புக்கு போனேன்...’’ புன்னகைக்கிறார் மாதவன்.

டைரக்‌ஷன் அனுபவம் எப்படி இருந்தது..?

ஆரம்பத்தில் நான் இந்தப் படம் பண்ணுவதாக் இல்ல. ஏன்னா, இந்த ஸ்கிரிப்ட் புரியவே எனக்கு நிறைய டைம் எடுத்தது. புதுசா ஓர் இயக்குநரிடம் சொல்வதாக இருந்தாலும் அவர்கள் இந்தக் கதைக்குள் அவ்வளவு எளிதா வரமுடியாது. விஞ்ஞானம் பற்றிய கதை என்பதால் இந்தப்படத்தை இயக்கும் இயக்குநர் ஒரு என்ஜினியராக இருக்கணும். லிஸ்ட் அவுட் பண்ணியதில் யாருமே கிடைக்கல. அப்போது நம்பி சார், ‘நீயே டைரக்‌ஷன் பண்ணு. இந்த சப்ஜெக்ட் உனக்கு மட்டும்தான் புரியும்’னு சொன்னார். ஒரு ஆர்வத்துல நானும் ஓ.கே. சொல்லிவிட்டேன்.

அடுத்து, இது பயோபிக் என்பதால் நானே நடிக்கணும்னு முடிவெடுத்தேன். ஏன்னா, எந்த நடிகருக்கும் சின்ன வயசுலேர்ந்து முதிர்வு வயது வரை உள்ள கேரக்டரில் நடிக்கும் ஆசை இருக்கும். கமல் சார் மாதிரி ‘சிப்பிக்குள் முத்து’, ‘நாயகன்’ போன்ற படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கும். அதுதான் இதில் நான் நடிக்கக் காரணம். இது ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகும் படம். இந்தியா, ஃபிரான்ஸ், கனடா, செர்பியா,  ஜார்ஜியா என 8 நாடுகளில்  படப்பிடிப்பு. லைவ் சவுண்ட். ஷாரூக்கான், சூர்யா, சிம்ரன் தவிர இன்டர்நேஷனல் நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.

என்னுடைய மனைவி, ‘உங்க மென்டாலிட்டிக்கு இந்த மாதிரி ஒர்க் பண்ணுவது ஒத்துவராது. பேசாம ஒதுங்கிடுங்க’னு சொன்னார். நானும் ‘வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கு அமெரிக்காவில் இயக்குநர் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் பாபு சுப்ரமணியம். அவர்தான் ‘மூன்று மொழி படம், பெரிய நடிகர்கள் என்று யோசிக்க வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு ஷாட் எடுத்தால் போதும் என்ற மனநிலையில் எடுங்க’ என்றார்.  

நானும், அப்படியே பண்ணிப் பார்ப்போம், ஒத்து வரலைன்னா நடிக்கப் போயிடுவோம் என்று ஷூட்டிங் ஃபிக்ஸ் பண்ணினேன். சொன்னா நம்பமாட்டீங்க.  தினமும் மாலை 4 மணிக்கெல்லாம் ஷூட் முடிஞ்சிடும்.

தயாரிப்பாளராக மாறியது ஏன்?

கதை எழுதி முடிச்சதும் சில தயாரிப்பாளர்களைச் சந்தித்தேன். அவர்கள், யார் ஹீரோ என்று கேட்டார்கள். இது ஹீரோ, ஹீரோயின் மாதிரியான கதை கிடையாது. ஃபைட், சாங்ஸ் இருக்காது. அதனால் யாரும் தயாரிக்க முன்வரல. அந்த நிலையில் சொந்தப் பணத்தைப் போடலாம்னு முடிவு பண்ணி நானே தயாரிக்க ஆரம்பிச்சேன். அப்போது இரண்டு நண்பர்கள் நம்பி நாராயணன் சார் மீதுள்ள மரியாதையால் இணைத் தயாரிப்பாளர்களாகச் சேர்ந்தார்கள்.

இந்தப் படம் பண்ணுவதற்கு இப்போது என்ன அவசியம்..? அரசியல் நோக்கம் இருப்பதாகச் சொல்கிறார்களே..?

நம்பி நாராயணன் மாதிரி இந்த நாட்ல பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய படங்கள் வரணும். நம் நாட்டில் திறமைசாலிகள் பலருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கல. அதுல நம்பி சாரும் ஒருவர். இங்கு, நம் நாட்டின் பெருமையைப் பறைசாற்றும் வரலாற்றுப் படங்கள், சுதந்திரப் போராட்டம் பற்றிய படங்கள் என்று  அதிக செலவு செய்து எடுக்கிறோம். அதேமாதிரி நம்முடைய சயின்ஸ்,டெக்னாலஜி, ஐ.டி, மெடிக்கல் வளர்ச்சி பற்றிய படங்களை அதிக செலவு செய்து எடுப்பதில்லை.

அமெரிக்காவில் ‘அப்பொல்லோ 13’, ‘ஃபர்ஸ்ட் மேன்’, ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ போன்ற படங்கள் பண்ணுகிறார்கள். அதை நாம் மிரட்சியாகப் பார்க்கிறோம். அந்தமாதிரி சாதனைகளை நம்மூரில் பலர் பண்ணுகிறார்கள். ஆர்யபட்டா, ராஜ ராஜ சோழன், சுந்தர் பிச்சை போன்றவர்கள் அப்படிப்பட்டவர்கள். உலகளவில் உள்ள 20 முன்னணி கம்பெனிகளில் முதன்மை அதிகாரிகளாக இந்தியர்கள் இருக்கிறார்கள்.

ராஜராஜசோழனுக்கு இருந்த கடற் படை (navy fleet) அந்தக் காலத்தில் யாரிடமும் இருந்ததில்லை. இங்கிருந்து Anchor countries என்று சொல்லக்கூடிய ஆசியாவில் உள்ள பல தேசங்களுக்கு கடல் வழியாகப் பயணித்து நம் பெருமையைப் பறைசாற்றியுள்ளார். இந்தப் படத்தோட நோக்கம் லாபம் அல்ல. பணம் சம்பாதிக்க ‘விக்ரம் வேதா’ மாதிரியும் பேர் சம்பாதிக்க ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ மாதிரியும் படங்கள்பண்ணியிருப்பேன். இது நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் சாதனைகளைச் சொல்லும் படம்.

ஒருவேளை இதுல அரசியல் நோக்கம் இருப்பதாகச் சொல்வார்கள் என்றால் நம்பி சாரின் சாதனைகளைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கும்.நம்பி நாராயணன் கேரக்டருக்காக உங்களை எப்படி தயார் செய்தீர்கள்?

29 முதல் 79 வயது வரை உள்ள நம்பி சாரைக் காட்டியுள்ளோம். படத்துல் 9 வித கெட்டப் இருக்கும். முடி, பல், வயிறு என உருவ ஒற்றுமை எல்லாமே அவர் மாதிரியே இருக்கும். உருவ ஒற்றுமைக்காக என்னுடைய பல் ‘ஜா’ பகுதியை உடைச்சேன். கேக் சாப்பிட்டு உடல் பருமனானேன். கெட்டப்புக்காக நோ டயட், நோ சர்ஜரி. படத்துல நம்பி சாருடைய மேனரிசம்தான் இருக்கும். மாதவனைப் பார்க்க முடியாது. இதுக்காகவே அவருடன் 5 வருடங்கள் டிராவல் பண்ணினேன்.

ஷாரூக்கான் இருக்கிறாரே?

அது எனக்கே ஆச்சர்யம். அவருடன் ‘ஜீரோ’ பண்ணினேன். அப்போதே ‘ராக்கெட்ரி’ பற்றிச் சொல்லியிருந்தேன். ஆரம்பிக்கும்போது கால்ஷீட் தருவதாகச் சொன்னார். நானும் ஃபார்மாலிட்டிக்காக சொல்வதாக எடுத்துக்கொண்டேன். ஒரு பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து சொன்னபோது மறுபடியும் படம் பற்றிக் கேட்டார். நானும் விளையாட்டாக் கேட்கிறார்னு நெனச்சேன். ஆனா, ஒரு நாள் அவருடைய மேனேஜர் ஃபோன் பண்ணி டேட் ஃபைனல் பண்ணினார்.

சூர்யாவுடன் நட்பு தொடர்கிறதா?

நடிக்கிறீங்களான்னு கேட்டதும் உற்சாகமாக வந்தார். பணம் இல்லாம நடிச்சார். ஷாரூக்கும் அப்படியே. சினிமாவுல நல்லவங்க இருக்காங்களானு கேட்டா நான் இவங்களைச் சொல்லுவேன். எனக்காக, நம்பி சாருக்காக வந்தாங்க. சூர்யாவுடைய உழைப்பு ‘சூரரைப்போற்று’ வரை மிரட்டுகிறது. நாங்கள் 25 வருட நண்பர்கள். எங்களுக்குள் ஒளிவு மறைவுன்னு எதுவும் பெருசா இருக்காது.

சிம்ரனை எப்படி தேர்வு செய்தீர்கள்?

நம்பி நாராயணனின் மனைவி வேடத்துல வர்றார். இதுல நடிக்கிறவங்களுக்கு மூணு மொழி தெரிஞ்சிருக்கணும். அது மாதிரி உள்ள நடிகர்கள் இதுல இருக்கிறார்கள்.

நம்பி நாராயணனிடம் படத்தைக் காட்டினீர்களா?

மும்பையில் படம் பார்த்தார். எதாவது சொல்வாரானு காத்திருந்தோம். அவரோ, ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சுனு கிளம்பிட்டார். சார் எதாவது சொல்லுங்கனு கேட்டேன். கட்டிப்பிடிச்சவாறு, திருவனந்தபுரம் போனதும் சொல்றேன்னு கிளம்பிட்டார். சொன்னபடியே ஃபோன் பண்ணினார். ‘நான் வாழ்க்கையில் எல்லாவிதமான ஏற்றத் தாழ்வுகளையும் பார்த்துவிட்டதாக நெனச்சேன். ஆனா, படம் பார்த்ததும் இந்தப் படம் பலருக்கு வியப்பைத் தரும். அதைப் பார்க்க நான் வாழணும்னு நெனச்சேன். அந்த எண்ணத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி’ என்றார்.

நீங்கள் தமிழ்ப் படங்களில் நடிக்க மறுப்பதாகச்  சொல்கிறார்களே?

‘மாறா’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா,’ ‘ப்ரீத்’, ‘டீ கப்புள்’ போன்ற படங்கள் கடந்த 8 வருடங்களில்  பண்ணியது. எதுவும் ஃபெயிலியர் இல்லை. நல்ல பிசினஸ் பண்ணியது. உங்களுடைய கேள்வி நெருடலா இருக்கு. ஏன்னா என்னால் சாதாரண படம் பண்ண முடிவதில்லை. ‘விக்ரம் வேதா’ பண்ணிய பிறகு மறுபடியும் ரெகுலர் ஸ்கிரிப்ட் பண்ண முடியாது.

தொடந்து டைரக்‌ஷன் பண்ணுவீங்களா?

கண்டிப்பா பண்ணமாட்டேன்.சமூக வலைத்தளத்துல வரும் விமர்சனைங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எதிர்மறை விமர்சனங்களை இக்னோர் பண்ணிவிடுவேன். யாரையும் திட்டுவதில்லை. அதுதான் என் கொள்கை.

ஒரு ஸ்டைல் ஹீரோவா இன்றைய இளைஞர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

இன்று பலர் சமூக வலைத்தளத்தில் மூழ்கி உள்ளார்கள். என்ன ஃபோட்டோ போடலாம், எவ்வளவு லைக் வரும், எவ்வளவு  கமெண்ட்ஸ் வரும்னு யோசிக்கிறார்கள். அது எனக்கு சரியா படல. ஸ்டைல், ஸ்டேட்டஸ் என்பது நம்முடைய பின்னணி, நம்முடைய வேலைனு சொல்லலாம். நாம் நாமாக இருப்பதுதான் ஸ்டைல்.
காந்திக்கு அந்த கதர்தான் ஸ்டைல்.

எஸ்.ராஜா