இந்தியா கொண்டாட மறந்த வீரர்!



சர்வதேச கால்பந்து போட்டி களில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருப்பவர் இவர்தான்!

சுனில் சேட்ரி யார் எனத் தெரியுமா..?

இந்தியாவைச் சேர்ந்த இவர் எந்த மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்..?
இவரை ஏன் கொண்டாடாமல் இருக்கிறோம்..?

இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதில் சென்ற மாத தொடக்கத்தில் நடந்த ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்று கால்பந்தாட்டப் போட்டிதான்.அப்போட்டி இந்தியாவுக்கும் ஹாங்காங் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் 4 - 0 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, இதன்மூலம் ஆசிய கோப்பைக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில்தான் மகத்தான ஒரு சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.யெஸ். சர்வதேச கால்பந்து போட்டிகளில் தனது 84வது கோலை அடித்துள்ளார் இந்தியாவின் சுனில் சேட்ரி. இதன்மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் 3வது இடத்தை அவர் பிடித்துள்ளாரே... அது மேட்டர்!

117 கோல்களை அடித்து இந்த வரிசையில் முதல்இடத்தில் இருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 86 கோல்களை அடித்து 2வது இடத்தில் இருக்கிறார் லயோனல் மெஸ்ஸி.
இதில் மெஸ்ஸியைவிட வெறும் 2 கோல்கள் மட்டுமே குறைவாக அடித்துள்ளார் சேட்ரி. இதில் முதல் இருவரும் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இந்தியாவில் பிறந்ததாலோ என்னவோ சேட்ரியை யாரும் கண்டுகொள்ளவில்லை.

சச்சினையும், தோனியையும், விராட் கோலியையும் பற்றி ‘டாப் டூ பாட்டம்’ தெரிந்து வைத்திருக்கும் இந்தியர்களுக்கு சேட்ரியைப் பற்றி எதுவுமே தெரியாது என்பது சோகம்தான். தலைகுனிவுதான். 1984ம் ஆண்டில் ஆந்திராவில் பிறந்த சுனில் சேட்ரி சிறுவயதில் வளர்ந்தது காங்டாக் நகரில். அவரது பெற்றோர் இருவரும் நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். சேட்ரியின் அம்மா சுசீலா சேட்ரி, நேபாள நாட்டுக்காக பெண்கள் கால்பந்து போட்டிகளில் ஆடியவர்.

அதனாலேயே தனது மகனையும் கால்பந்து வீரனாக்க வேண்டும் என்று பயிற்சி அளித்துள்ளார்.காங்டாக்கில் உள்ள பள்ளியில் ஆரம்பத்தில் படித்த சேட்ரி, அதன்பிறகு பெற்றோருக்கு இடமாற்றம் கிடைத்ததால் தில்லியில் செட்டிலானார். அங்குள்ள ராணுவப் பள்ளியில் படித்த காலத்திலேயே கால்பந்து போட்டிகளில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் சேட்ரி சிறப்பாக ஆடவே அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறியுள்ளார்.

2001ம் ஆண்டில் மலேசியாவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான ஆசிய போட்டியில் இவரது கால்கள் செய்த வித்தை பலரையும் கவர பல கிளப்களிலும் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதனால் பிளஸ் 2வுடன் படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு கால்பந்தில் முழு கவனம் செலுத்தத் தொடங்கினார் சேட்ரி.

2005ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டிதான் சேட்ரி பங்கேற்ற முதல் போட்டி. தனது அறிமுக போட்டியிலேயே கோல் அடித்து அசத்திய சேட்ரி, அன்று முதல் கால்பந்தில் இந்தியாவின் சச்சினாகத் திகழ்கிறார். தனிப்பட்ட அளவில் இவர் பல சாதனைகளைப் படைத்தாலும் இந்திய கால்பந்து அணி போட்டி
களில் ஜெயிக்காததால், இவரைப் பலரும் கவனிக்கவில்லை.

கிரிக்கெட் வீரர்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதித்துள்ள நிலையில் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்துள்ள வீரர்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ள சேட்ரி வெறும் 7 கோடி ரூபாயை மட்டுமே சம்பாதித்துள்ளார். அதுவும் கிளப் கால்பந்து போட்டிகளில் ஆடியதால்.

‘‘நான் சாதனைகளைப் பற்றியோ புகழைப்பற்றியோ கவலைப்படுவதில்லை. மைதானத்தில் எஞ்ஜாய் செய்து ஆடவேண்டும் என்பது மட்டுமே என் குறிக்கோள்...” என புன்னகைக்கிறார் சேட்ரி.

சேட்ரி வேண்டுமானால் புகழைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால், அவரைப் போன்றவர்களைக் கொண்டாடாததை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் நிச்சயம் வெட்கப்பட வேண்டும்.

ஜான்சி