அயர்லாந்து யூடியூபர்ஸ்



வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் வீற்றிருக்கும் ஒரு தீவு நாடு, அயர்லாந்து. ஐரோப்பாவிலேயே மூன்றாவது பெரிய தீவு இது. இதனுடைய கலாசாரம் ஐரோப்பா முழுவதும் தாக்கத்தைச் செலுத்தியது. குறிப்பாக இதன் இலக்கியம் உலகளவில் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. ஐரிஷ் இசையும், ஐரிஷ் நடனமும் வெகு பிரபலமானவை. அயர்லாந்து இளைஞர்கள் யூடியூப் சேனல்களிலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டிவருகின்றனர். இதில் முதன்மையான சில சேனல்களின் விவரங்கள் இதோ...

ஜாக்செப்டிக்ஐ (Jacksepticeye)

அயர்லாந்திலேயே அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட யூடியூப் சேனல் இது. அதிக பார்வைகளை அள்ளியிருக்கும் அயர்லாந்து யூடியூப் சேனலும் இதுவே. சீன் வில்லியம் மெக்லாப்லின் என்பவர் இந்தச் சேனலை நிர்வகித்து வருகிறார். ஏழு வயதிலிருந்து வீடியோ கேம்ஸை ஆடிவரும் சீன், அதையே தனது தொழிலாக மாற்றிவிட்டார். ஆம்; வீடியோ கேம்ஸ்தான் இந்தச் சேனலை அலங்கரிக்கின்றன. வீடியோ கேம்ஸிற்கு சீன் கொடுக்கும் வர்ணனைகள்தான் இந்தச் சேனலை நோக்கி பார்வையாளர்களை வரவைக்கின்றன. சத்தமாக, வேகமாக, நகைச்சுவையுடன் இவர் தரும் வர்ணனைகளுக்காகவே வீடியோக்களைப் பார்ப்பவர்களும் உண்டு.

‘ஸ்பைடர் மேன்’, ‘காட் ஆஃப் வார்’, ‘எல்டன் ரிங்’, ‘பிளட்போர்ன்’... போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானவை. சேனல் ஆரம்பித்த புதிதில் தினமும் 2 வீடியோக்களைப் பதிவிட்டார் சீன். இது ஐந்து வருடங்கள் தொடர்ந்தது. பிறகு தினமும் ஒரு வீடியோவை மட்டும் வெளியிட்டார். இப்போது வாரத்துக்கு குறைந்தபட்சம் ஐந்து வீடியோக்களைப் பகிர்கிறார்.
பிப்ரவரி 24, 2007ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 2.85 கோடிப்பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் 1534 கோடிக்கும் மேலான பார்வைகளைக் குவித்துள்ளன.

பவர்கிட்ஸ்  (PowerKids)

குழந்தைகளுக்கான பிரத்யேகமான சேனல் இது. ஒரு மேஜிக்கல் உலகத்துக்குள் சென்றதைப் போன்ற உணர்வைத் தருகிறது இந்தச் சேனல். அயர்லாந்தைச் சேர்ந்த டிகியூ என்ற நிறுவனம் இதை நடத்தி வருகிறது. அனிமேஷன்கள், கார்ட்டூன்கள், விளையாட்டுகள், போட்டிகள்... என குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் ஏராளமான வீடியோக்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான அனிமேஷன்கள் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் ஈர்க்கின்றன. தவிர, ஜங்கிள் புக், ராபின் ஹுட், பீட்டர் பேன் போன்ற உலகப்புகழ்பெற்ற கதைகளையும் கார்ட்டூன்களாக இங்கே பார்க்க முடியும்.

இந்தச் சேனலில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய சில வீடியோக்களை சப்ஸ்கிரைபர் கட்டணம் செலுத்தினால் மட்டும்தான் பார்க்க முடியும். ஆகஸ்ட் 6, 2014ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 2.71 கோடிப்பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவாகியுள்ள வீடியோக்கள் 1364 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியுள்ளன.

இன்வென்டர் 101 (Inventor 101)

புதிதாக ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க நினைப்பவர்களுக்கும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் உகந்த சேனல் இது. வெளியில் பெரிதாக முகம் காட்டாத, பெயரை வெளியிடாத அயர்லாந்து நாட்டுக்காரர் ஒருவர் இந்தச் சேனலை நிர்வகித்து வருகிறார். அவரை ‘இன்வென்டர்’ என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். காலியான கூல்டிரிங் கேன்(டின்), பிளேடு, செயலிழந்துபோன டார்ச்லைட் பேட்டரி... என தேவையற்ற பொருட்களைக் கொண்டு புதிதான ஒரு பொருளை உருவாக்குவது, 6 புதிய கண்டுபிடிப்புகள், இதை நீங்களே செய்யலாம்... என பல தலைப்புகளில் கண்டுபிடிப்பு வீடியோக்கள் தெறிக்கின்றன.

ஒவ்வொரு கண்டுபிடிப்பும் வித்தியாசமாக, விநோதமாக இருக்கின்றது. ‘இதை நீங்கள் செய்து பார்க்காதீர்கள்’ என்று ஆபத்தான சில கண்டுபிடிப்புகளைச் செய்துகாட்டி சுவாரஸ்யத்தை அள்ளுகிறார் சேனலின் நிர்வாகி. ஆகஸ்ட் 27, 2018ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 42.6 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் வெளியாகியிருக்கும் வீடியோக்கள் 102 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.

அல்லை ஷெர்லாக்   (Allie Sherlock)

பாடகி, கிதார் வாசிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகங்களைக் கொண்ட அல்லை ஷெர்லாக்கின் சேனல் இது. பள்ளியில் சக மாணவிகளுடனான பிரச்னையால் ஹோம் ஸ்கூலிங் முறையில் பாடம் பயின்றார் ஷெர்லாக். இசையின் மீது தீராத காதல் கொண்டவர். அயர்லாந்தின் டப்ளின் நகரில் வீற்றிருக்கும் கிராப்டன் தெருவில் இசை நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கியபோது ஷெர்லாக்கின் வயது 11. ஆனால், அதற்கு முன்பே யூடியூப் சேனலை ஆரம்பித்து, தான் பாடிய பாடல்களைப் பதிவிட்டு வந்தார்.

ஆரம்ப நாட்களில் அவரது சேனலை நோக்கி பார்வையாளர்கள் வரவில்லை. வாரம்தோறும் கிராப்டன் தெரு உட்பட, டப்ளின் நகரின் பல்வேறு தெருக்களில் இசை நிகழ்ச்சி நடத்தியதால், ஷெர்லாக்கின் புகழ் டப்ளின் முழுவதும் பரவியது. அவரது சேனலை நோக்கி பார்வையாளர்களும் படையெடுத்தனர். ஷெர்லாக்கின் இசை நிகழ்ச்சிகளைப் படம்பிடித்து, யூடியூப்பில் வெளியிடுவதோடு அவரது மேனேஜராகவும் செயல்படுகிறார் அவரது தந்தை மார்க் ஷெர்லாக்.

இப்போது 17 வயதை எட்டியிருக்கும் ஷெர்லாக் அயர்லாந்தின் முக்கிய யூடியூபராகவும், இசைக்கலைஞராகவும் திகழ்கிறார். இசைப்பிரியர்கள் தவறவிடக்கூடாத சேனல் இது.
டிசம்பர் 26, 2014ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 54.4 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதுவரை இதில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்கள் 94 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளன.

நோக்லா  (Nogla)

உலகின் முக்கியமான கேமிங் யூடியூப் சேனல் இது. அயர்லாந்தின் முக்கியமான கேமராக வலம் வரும் டேவிட்தான் இந்தச் சேனலின் நிர்வாகி. வேறு எங்கேயும் காணக்கிடைக்காத, விதவிதமான கேமிங் வீடியோக்களால் நிறைந்து கிடக்கிறது ‘நோக்லா’. புதிய கேமை அறிமுகம் செய்து விளையாடிக் காட்டுவது, ஆன்லைன் நண்பர்களுடன் வீடியோ கேம் விளையாடுவது, நண்பர்கள் விளையாடும்போது வர்ணனை செய்வது, பிரபலமான கேமிங் யூடியூபருடன் போட்டி போடுவது... என கேமிங் சம்பந்தமான அனைத்தையும் வீடியோவாக்கி பகிர்கிறார் டேவிட்.

இதுபோக டிக்டாக் வீடியோக்களைக் கலாய்த்து ஜாலியாக விமர்சனம் செய்வது, நண்பர்களையே அனிமேஷன் கதாபாத்திரங்களாக மாற்றி வீடியோ வெளியிடுவது... என கேமிங் அல்லாத வீடியோக்களையும் வெளியிடுகிறார் டேவிட். ஜனவரி 17, 2012ல் தொடங்கப்பட்ட இந்தச் சேனலை 73.5 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். இதில் பகிரப்பட்டுள்ள வீடியோக்கள் 1338 கோடிக்கும் மேலான பார்வைகளைப் பெற்றுள்ளன.

த.சக்திவேல்