வாரிசு கதைஇதுதான்! Exclusive



லார்கோ வின்ச்!

இதுதான் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடபள்ளி எழுதி இயக்கி வரும் படத்தின் ஒன்லைன். இந்த கணிப்புக்கு வரக் காரணம், விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி வெளியான அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ். படத்தின் பெயர், ‘வாரிசு’ என்ற அறிவிப்புடன் ரிலீசான அந்த மூன்று போஸ்டர்களில் கோட் சூட் அணிந்து விஜய் அமர்ந்திருக்கும் விதம்... புல்லட்டின் மேல் அவர் உட்கார்ந்திருக்கும் போஸ்... காய்கறிகளை ஏற்றிவரும் குட்டியானையில் குழந்தைகள் சூழ அவர் படுத்திருக்கும் ஸ்டைல்... ஆகியவை சர்வநிச்சயமாக லார்கோ
வின்ச்சைத்தான் நினைவுபடுத்துகின்றன.

இதற்கு வலுசேர்ப்பதுபோல் அமைந்திருக்கிறது டைரக்டர் வம்சி பைடபள்ளியின் கிராஃப். இவர் எழுதி இயக்கி தமிழில் ‘தோழா’ என்றும் தெலுங்கில் ‘ஊப்பிரி’ என்றும் ரிலீசாகி பாக்ஸ் ஆஃபீசில் பட்டையைக் கிளப்பிய படத்தின் நதிமூலம் ‘The Intouchables’ என்ற ஃபிரெஞ்சு படம்தான்!ஆனால், வம்சி பைடபள்ளி ‘The Intouchables’ஐ திருடவில்லை; சுடவில்லை. மாறாக, முறைப்படி ரீமேக் ரைட்ஸ் வாங்கியே நம் மண்ணுக்கு ஏற்ப அந்த ஃபிரெஞ்சு படத்தை டிங்கரிங் செய்து ‘தோழா’ @ ‘ஊப்பிரி’ என உருவாக்கினார்.

ஸோ, ‘வாரிசு’ படமும் அப்படி ‘லார்கோ வின்ச்’ காவியத்தின் அதிகாரபூர்வமான ரீமேக்காக இருக்க வாய்ப்பு அதிகம். எனவே, ‘வாரிசு’ பாக்ஸ் ஆபீசில் அதிரிபுதிரியாக வெற்றி பெறும் என உறுதியாகச் சொல்லலாம். அந்தளவுக்கு சொல்லி அடிக்கும் கமர்ஷியல் சினிமாவின் ஒன்லைன் ஆக ‘லார்கோ வின்ச்’சின் கதைக்களம் திகழ்கிறது. அதனாலேயே ஹாலிவுட் முதல் உலகிலுள்ள சகல மொழி கமர்ஷியல் திரை உலகமும் ‘லார்கோ வின்ச்’சின் லைனை எல்லா வகையிலும், எல்லா காலத்திலும், அதிகாரபூர்வமாகவோ அதிகாரபூர்வமற்றோ... தழுவியோ சுட்டோ பயன்படுத்தியபடியே இருக்கிறது.

இந்தத் தழுவல் இனியும் தொடரும் என்பதுதான் ஹைலைட். காரணம், எல்லா மொழி மாஸ் ஹீரோக்களுக்கும் மெகா ஹிட்டை தரும் வல்லமை இந்த ஒன்லைனுக்கு உண்டு!
பெல்ஜியம் நாட்டில் காமிக்ஸ் வடிவமாக உருத் திரண்ட லார்கோ வின்ச், பிறகு ஃபிரெஞ்சு மொழி பேசி, ஆங்கிலத்தைத் தழுவி... இன்று தமிழ் உட்பட ஈரேழு உலகிலும் உள்ள பெரும்பாலான மொழிகளில் சித்திரக் கதைகளாக வலம் வருகிறது.  

ரைட். லார்கோ வின்ச்சின் கதை என்ன..?

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த லைன்தான். ஆனால், அதை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் விற்கப்படும் காஸ்ட்லி பழைய சோறாக மாற்றியதுதான் லார்கோ வின்ச் மீதான ஈர்ப்புக்குக் காரணம்.உலகின் மல்டி மில்லினியர்களில் ஒருவர். மிகப்பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியும்கூட. அவர் திடீரென ஒருநாள் மர்மமான முறையில் இறக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது. கொன்றவர்கள் யாரென்று தெரியவில்லை.

அவரது பிசினஸை விழுங்க எதிரிகள் மட்டுமல்ல... உறவினர்களும் முற்படுகிறார்கள்; சதி செய்கிறார்கள். இதனால் சாம்ராஜ்ஜியம் ஆட்டம் காண்கிறது... சரிகிறது.
பிசினஸை தூக்கி நிறுத்த மில்லினியரின் மகன்களாக அறியப்படுபவர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் திறம்பட பிசினஸை நடத்த முடியவில்லை. எதிரிகளால் ஏற்படுத்தப்படும் இடையூறுகளை சமாளிக்கும் வல்லமை அவர்களுக்கில்லை.

இறந்த மில்லினியரின் பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை நம்பி பல்லாயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் அனைவரது எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.இந்தச் சூழலில்தான் -அந்த மில்லினியருக்கு ‘அதிகாரபூர்வமாக’ ஒரு மகன் இருக்கும் ரகசியம் வெளிச்சத்துக்கு வருகிறது. ஆனால், அந்த மகன் யார்... எங்கு... எந்த நாட்டில்... எப்படி வசிக்கிறான்... என்ற க்ளூ யாருக்கும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் எங்கோ வசிக்கும் அந்த மகனுக்கேகூட தனது தந்தை உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் என்ற உண்மை தெரியாது.

இந்த ஒரிஜினல் மகனைத் தேடி எதிரிகள் புறப்படுகிறார்கள்... அதே ஒரிஜினல் மகனிடம் பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை ஒப்படைக்க குடும்பத்தில் இருக்கும் நல்லவர்கள் முற்படுகிறார்கள்...

இந்த இருதரப்பும் அதிகாரபூர்வமான ‘வாரிசை’க் கண்டு பிடித்தார்களா... அந்த ‘வாரிசு’ பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை சரிவிலிருந்து காப்பாற்றி பழையபடி திறம்பட நடத்தியதா என்பதே க்ளைமாக்ஸ்.குத்துமதிப்பாக இதுதான் ‘லார்கோ வின்ச்’சின் கதைக்களம். ஆனால், இது மட்டுமே கட்டடம் அல்ல.

ஆம். இந்த அடித்தளத்தை வைத்து எண்ணற்ற கட்டடங்கள், வித்தியாசமான வடிவில், கணக்கற்ற விதத்தில் எழுப்பப்பட்டிருக்கின்றன! காமிக்ஸ், திரைப்படங்கள், டிவி சீரீஸ்... என ஆதியும் அந்தமும் அற்ற ‘லார்கோ வின்ச்’(கள்) லைன், உலக கமர்ஷியல் படங்களை இணைக்கும் நரம்பு மண்டலமாகப் பரவியிருக்கிறது. எந்த வகையில், எந்தப் பெயரில், எந்த மொழியில் லார்கோ வின்ச் எடுக்கப்பட்டாலும் அதில் கண்டிப்பாக மூன்று ப்ளாக்குகள் இடம்பெறும்.

ஒன்று, அநாதையான லார்கோ வின்ச் யாராலும் ஊகிக்க முடியாத இக்கட்டில் சிக்கிக் கொள்வது... இரண்டு, அதிலிருந்து லா வி தப்பிப்பது... மூன்று, பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை லா வி சரிவிலிருந்து மீட்பது! ப்பூ... இந்த லைனுக்கா இவ்வளவு பில்டப் என உதட்டைப் பிதுக்காதீர்கள். உடலுக்கு கெடுதல் செய்யாத சர்வரோக நிவாரணியாக எப்பொழுதும் ஆவியில் வேகும் இட்லி இடம்பெறுகிறதல்லவா... அப்படியொரு சக்சஸ்ரோக நிவாரணி இந்த லார்கோ வின்ச்.

ஸ்டைலிஷ் மேக்கிங், ஆக்‌ஷன், சென்டிமென்ட், குறிப்பிட்ட இடைவெளியில் - ஏன்... க்ளைமாக்ஸ் வரை - டுவிஸ்ட்... என ஒரு வெற்றிப்படத்துக்கு உரிய அனைத்து சாமுத்ரிகா லட்சணங்களும் லார்கோ வின்ச் லைனுக்கு உண்டு.அதனால்தான் உலகெங்கும் உள்ள அனைத்து கமர்ஷியல் பட இயக்குநர்களையும், மாஸ் நடிகர்களையும் இந்தக் கதைக்களன் வசீகரித்தபடியே இருக்கிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக முன்பு அறிவிக்கப்பட்ட ‘யோஹான்: அத்தியாயம் ஒன்று’ படம்கூட லா வி சாயல் கொண்டதுதான் என அப்பொழுது கிசுகிசுக்கப்பட்டதை நினைவில் கொள்வது நல்லது.

போலவே, வெற்றி பெற்ற அனைத்து மாஸ் நடிகர்களின் படங்களையும் ஆராய்ந்தால் அதில் ஏதோ ஒரு புள்ளி லார்கோ வின்ச்சுடன் கனெக்ட் ஆவதைக் காணலாம். உதாரணத்துக்கு விஜய்யின் சக்சஸ் படங்களின் பட்டியலையே எடுத்துக் கொள்வோம். ‘பூவே உனக்காக...’, ‘போக்கிரி’ என நீளும் பட்டியல்களில் லார்கோ வின்ச் கண்சிமிட்டத்தானே செய்கிறது!
எல்லாம் சரி... ஒருவேளை ‘வாரிசு’, லார்கோ வின்ச் கதைக்களமாக இல்லாவிட்டால்..?

வாய்ப்பில்லை. நேரடியாக லார்கோ வின்ச் லைன் இல்லாவிட்டாலும் அதன் சாயல் அல்லது ப்ளாக்குகள் சர்வநிச்சயமாக ‘வாரிசு’ படத்தில் உண்டு என்கிறார்கள் அப்படத்தைச் சேர்ந்தவர்கள்.
எனவே, ‘வாரிசு’ம் சொல்லி அடிக்கும் கில்லியாக விஜய்யின் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமையும் என்பதை இப்பொழுதே அறிவித்துவிடலாம். உறுதியாக இப்படிச் சொல்லக் காரணம் ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜுவும், ‘வாரிசு’ டைரக்டர் வம்சி பைடபள்ளியும்தான்.

வெகு சாதாரண விநியோகஸ்தராக இருந்த தில் ராஜு, தெலுங்கு சினிமாவின் முக்கிய விநியோகஸ்தர்களில் ஒருவராக உருவெடுத்ததற்குக் காரணம் நம்ம மணிரத்னம்தான்.
யெஸ். ‘அலைபாயுதே’ படத்தின் தெலுங்கு டப்பிங்கை ஆந்திரா முழுக்க வெளியிட்டவர் தில் ராஜுதான். அப்படத்தின் கலெக்‌ஷனே அவரை மோஸ்ட் வான்டட் டிஸ்ட்ரிபியூட்டராகவும், தெலுங்கு சினிமாவின் சக்சஸ்ஃபுல் தயாரிப்பாளராகவும் உயர்த்தியது.

நம்ம சின்னப்ப தேவர் ஃபார்முலாவைத்தான் இப்பொழுது வரை தில் ராஜு கடைப்பிடிக்கிறார். கதை இலாகா! தன்னிடம் கதை சொல்லும் இயக்குநரின் ஒன்லைன் பிடித்துவிட்டால் உடனே தன் அலுவலகத்தில் டிஸ்கஷனுக்கு ஏற்பாடு செய்வார். அந்த இயக்குநரின் தலைமையில் கூடும் டிஸ்கஷன் டீமில் தமிழ், தெலுங்கு... என அனைத்து மொழியைச் சேர்ந்த வளரும் இயக்குநர்களும்... கதாசிரியர்களும் இடம்பெறுவார்கள். சீன் தானம் செய்பவர்களுக்கு ஆன் த ஸ்பாட் கணிசமான தொகை உண்டு.

ஹீரோ உட்பட எல்லோருக்கும் திருப்தி அளிக்கும் வரை டிஸ்கஷன் நடக்கும். இறுதி வடிவமே இயக்குநரால் பவுண்டட் ஸ்கிரிப்ட் ஆகும். அதன் பிறகே ஷூட்டிங் தொடங்கும்.
இதனால்தான் தில் ராஜு தயாரிக்கும் படங்கள் பாக்ஸ் ஆபீசில் கலெக்‌ஷனை அள்ளுகின்றன.தில் ராஜுவின் இந்தப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரம்தான் இயக்குநர் வம்சி பைடபள்ளி.எனவே, ‘வாரிசு’ ஹிட் குறித்த சந்தேகம் ஒருவருக்குமில்லை. என்ன... அது மெகா ஹிட் ஆகவேண்டும் என்பதுதான் விஜய் ரசிகர்களின் பிரார்த்தனை.அந்த வேண்டுதலை நிறைவேற்ற லார்கோ வின்ச் அருள்புரிவார்!

கே.என்.சிவராமன்