தொழில்நுட்பம் சார்ந்து படித்தால் வளமான எதிர்காலம் நிச்சயம்!



கடந்த வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொரோனா காலத்திற்குப் பிறகு சில மாதங்கள் பள்ளிக்குச்சென்று தேர்வெழுதிய மாணவ - மாணவிகள் இவர்கள். இருந்தும் நல்ல மதிப்பெண்களை பலரும் பெற்றுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.
பொதுவாக, பிளஸ் டூ தேர்வு முடிந்ததுமே பெரும்பாலான மாணவ - மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம்... என்கிற ஆலோசனைகளில் ஈடுபட்டு ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள். சிலர் ரிசல்ட் வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற ரீதியில் இருப்பார்கள்.
இன்றைய சூழ்நிலையில் என்ன கோர்ஸ் படித்தாலும் வேலை வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் கல்வியாளர்கள்.

ஆனால், எந்தக் கல்லூரியில் படிக்கிறோம் என்பதையும், அதனை தொழில்நுட்பம் சார்ந்து படிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றனர். அப்போதுதான் படித்து முடித்ததும் கைநிறைய சம்பளத்துடன் பணிகளில் பிரகாசிக்க முடியும் என்கின்றனர்.  ‘‘பொதுவாக, பிளஸ் டூவிற்குப் பிறகு தங்கள் கேரியரை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் ஒரு மாய உலகத்திற்குள் இருந்தே முடிவு செய்கிறார்கள். ஆனால், நிஜ உலகம் என்பது வேறு மாதிரியாக இருக்கிறது...’’ என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. அவரிடம், மாணவர்கள் அடுத்து என்ன படித்தால் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமெனக் கேட்டோம்.

‘‘எப்பவும் ஒரு கேரியரை எப்படி தேர்ந்தெடுக்கணும்னா, எதிர்காலத்துல என்ன மாதிரியான வாய்ப்புகள் வரப்போகுது... என்ன மாதிரியான தொழில்நுட்பத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சூழல் இருக்கு என்பதை எல்லாம் பார்த்தே தேர்ந்தெடுக்கணும். நான் எப்பவுமே மாணவர்களிடம் சொல்லும் ஒரு அறிவுரை, ‘நீ 2022ல் உள்ளே நுழையும்போது இருக்கிற சந்தர்ப்பமும், சூழ்நிலையும், தொழில்நுட்பமும், வேலைவாய்ப்பும்... நீ அந்த கோர்ஸை முடிச்சிட்டு 2026ல் வெளியே வரும்போது முழுவதும் மாறியிருக்கும்’ என்பதுதான்.

வருங்காலத்தில் அனைத்து வேலைவாய்ப்புகளும் தொழில்நுட்பம் சார்ந்தே இயங்கும். அதாவது, தொழில்நுட்பம் எல்லா கேரியர்களையும் ஆக்கிரமித்திருக்கும். அதனால் ஒரு மாணவன் ஆர்ட்ஸ், சயின்ஸ், மெடிக்கல், எஞ்சினியரிங், சட்டம், அக்ரினு எதைப் படிச்சாலும் அதைச் சார்ந்த தொழில்நுட்பத்தை அப்டேட் பண்ணி கத்துக்கிடணும். அப்போதுதான் அதிக சம்பளத்துடன் வேலை
கிடைக்கும்.

அதேநேரம், அது சார்ந்த தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியையும் கவனமா தேர்ந்தெடுக்கணும். ஏனெனில், நல்ல கல்லூரியில் படிக்கும்போதே நாம் எடுக்கிற துறை சார்ந்த எல்லா தொழில்நுட்ப வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கும். பொறியியல் துறை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிக்க யாருக்கும் விருப்பமில்ல. காரணம், வேலைவாய்ப்பு இல்லை என்பதுதான். அப்ப மெக்கானிக்கல், ஐடி எல்லாம் அவுட்டேட் ஆகிடுச்சுனு சொன்னாங்க. ஆனா, கடந்த ஓராண்டா பலரும் எஞ்சினியரிங் நோக்கி நகர்ந்திருக்காங்க. காரணம், ஐடி துறையில் அதிகரித்திருக்கும் வேலைவாய்ப்புகள்.

ஆனா, இங்க வெறும் புரோகிராமிங் நாலேஜ், ஐடி ஸ்கில்ஸ் மட்டும் பத்தாது. கூடவே டிஜிட்டல், எலக்ட்ரானிக் எல்லாமும் தேவை. எல்லா படிப்புகளும் சேர்ந்து Integrate பண்ணி படிச்சால்தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வெறுமனே கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சால் வாய்ப்பு, இ.சி.இ படிச்சால் வாய்ப்பு, இ.இ.இ படிச்சால் வாய்ப்பு என்பதைத் தாண்டி என்ன மாதிரியான தொழில்நுட்பத்தைக் கற்றிருக்கோம்; என்ன மாதிரி திறன்களை வளர்த்திருக்கோம்; என்ன மாதிரி சர்ட்டிபிகேஷன் இருக்கு என்பதைப் பொறுத்து தான் வேலை வாய்ப்பும் சம்பளமும் நிர்ணயமாகும்.

இனிமேல் ஒரு திறனை வச்சிக்கிட்டு பெரிய வேலைவாய்ப்பை எதிர்பார்க்க முடியாது என்கிறதாலேயே புதிய தேசிய கல்விக் கொள்கையில் இன்னொரு வாய்ப்பு நாங்க கொடுக்குறோம்னு சொல்லப்படுது. அதாவது ஒரு மாணவன் அவன் படிக்கிற டிகிரியைத் தாண்டி இன்னொரு டிகிரியைப் படிக்கலாம். அதை ஆன்லைன் மூலமாகக்கூட கற்கலாம்னு சொல்லுது.

அதனால, எஞ்சினியரிங் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் உங்கள் கோர்ஸைச் சார்ந்து ஒரு தொழில்நுட்ப கோர்ஸ் படிப்பது எதிர்காலத்தை வளமாக்கும்.

அடுத்து எஞ்சினியரிங் எடுத்து படிக்க விரும்பும் மாணவர்கள், படிக்கும்போதே ஒரு வெளிநாட்டு மொழியையும் கற்றுக் கொள்வது நல்லது. அது ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிஸ்னு எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனா, கட்டாயம் ஆங்கிலம் தவிர்த்து கூடுதலா ஒரு அந்நிய மொழி கத்துக்கிடணும். ஏனெனில், இன்று ஐடி நிறுவனங்களாகட்டும் அல்லது உற்பத்தி நிறுவனங்களாகட்டும் அவங்களுக்கு பல நாடுகள்ல இருந்து ஆர்டர்ஸ் வருது. குறிப்பிட்ட நாட்டின் மொழி தெரியும்பட்சத்தில் அந்த நபருக்கு அதைச் சார்ந்த நிறுவனங்கள் அதீத
முக்கியத்துவம் கொடுக்கும்.  

அதைப்போலவே, படிக்கும்போதே நிறுவனங்கள் நடத்துகிற போட்டிகளுக்கும் தயார் பண்ணி அதுல பங்கெடுக்கணும். எதிர்காலத்தில் போட்டிகள், திறமைகள் மூலமே நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்கவுள்ளன. இப்பவே சில நிறுவனங்கள் இப்படி வழங்கத் தொடங்கிவிட்டன.  

மீன்வளத்துறை, நேச்சுரோபதி  

மீன்வளத்துறை படிப்புகளுக்கு இப்ப நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஆனா, இதைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியறதில்ல. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பதினோரு கோர்ஸ் கொடுக்குறாங்க. இந்த பதினோரு கோர்ஸ்ல ரெண்டு கோர்ஸ் மீன்வள எஞ்சினியரிங், அக்குவா கல்ச்சர் கோர்ஸ்னு இருக்கு. இது எதிர்காலத்துல நிறைய வாய்ப்புகளை வழங்கக்கூடிய படிப்புகள். இதுக்கு நீட் தேவையில்ல.

இதுதவிர, பிஎன்ஒய்எஸ்னு சொல்லப்படுற நேச்சுரோபதி அண்ட் யோகா சயின்ஸ் கோர்ஸுக்கும் இப்ப நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கு. காரணம், கோவிட் நோய்க்கு அப்புறம் மக்களிடையே நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தணும், ஆரோக்கிய உணவு உண்ணணும், உடலை ஃபிட்டா வச்சிக்கணும்கிற விழிப்புணர்வு வளர்ந்திருக்கு. அதனால,
இந்தக் கோர்ஸுக்கு  எதிர்காலத்துல வாய்ப்புகள் நிறைய உள்ளன.

ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், காமர்ஸ்...

ஆசிரியர் பணி, அரசுப் பணிகளுக்கு ஆசையிருப்பவர்கள் பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம், பி.ஏ ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட ஆர்ட்ஸ் படிப்புகளை எடுத்துப் படிக்கலாம்.
வணிகவியல் மாணவர்களைப் பொறுத்தவரைக்கும் பி.காம் நோக்கி நிறைய பேர் போயிருக்காங்க. இன்னைக்கு வணிகவியல் கோர்ஸுக்கு நல்ல டிமாண்ட் இருக்கு.

ஆனா, இதனுடன் தொழில்நுட்பம் சார்ந்த படிப்பும் ஏதாவது படிக்கணும். உதாரணத்திற்கு, பிளாக் செயின் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகள் இருக்கு.  அதை சான்றிதழ் கோர்ஸா படிக்கும்போது வாய்ப்புகள் பிரகாசமாகும். இனிவரும் காலம் தொழில்நுட்பம் சார்ந்தே இருப்பதால் அதை சார்ந்த படிப்புகளை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும்...’’ என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

பி.கே.