இது காயத்ரி மந்திரம்!



புடவை கட்டினால் தேவயானி, சுடிதார் அணிந்தால் நயன்தாரா என எந்த உடையிலும் அழகை அள்ளித் தெளிப்பவர் காயத்ரி.  ‘18 வயசு’ படத்தில் ஆரம்பித்த இவருடைய திரைப் பயணம் ‘விக்ரம்’ வெற்றி வரை தொடர்கிறது. ‘மாமனிதன்’ ரிலீஸாகியுள்ள நிலையில் மழைக்கு மத்தியில் நம்மிடம் பேசினார் காயத்ரி.
‘மாமனிதன்’ அனுபவம் எப்படி இருந்தது?முதல் முறையாக சீனு ராமசாமி மாதிரியான இயக்குநருடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது. சீனு சார் காதலை மிக அழகாகச் சொல்லும் படைப்பாளி. அவருடைய படங்கள் பார்த்தவர்களுக்கு அது தெரியும். இதிலும் காதலை அழகாகச் சொல்லியிருப்பார்.

படத்துல வர்ற மாதிரியான சிச்சுவேஷனை என்னுடைய குடும்பத்தில் பார்த்திருக்கிறேன். கதையில் வரும் நிகழ்வுகள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்திருக்குனு சீனு சார் சொன்னார். படம் பார்த்தவர்களும் கதையோட தங்களை கனெக்ட் பண்ண முடிஞ்சதுன்னு சொன்னார்கள். இந்த மாதிரியான எமோஷனலான கதையில் நான் நடிச்சதில்லை. ‘மாமனிதன்’ மூலம் நேஷனல் அவார்டு இயக்குநர் சீனு சார் என்னை மோல்ட் பண்ணியதை ரொம்ப லக்கியா ஃபீல் பண்ணுகிறேன்.

‘விக்ரம்’ வெற்றி என்ன மாதிரி சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது?
இன்னும் ஓடணும்னு பாசிடிவ் ஃபீல் கொடுத்த படம். படத்துக்கும் என்னுடைய கேரக்டருக்கும் கிடைச்ச வரவேற்பு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. கமல் சார், ஃபகத்துடன் நடிச்ச அந்த ஆச்சர்யம் இப்ப வரை என்னைவிட்டு விலகல. சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது... இந்தப் பயணம் எப்படி இருக்கிறது?இதுல நல்லதும் நடந்துள்ளது.

சில கெட்டதும் நடந்துள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் சினிமா மட்டுமல்ல, வேறு எந்த துறையில் இருந்திருந்தாலும் நடந்திருக்கும்னு தோணுது. ஆனா, இந்தத் தருணம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமதான் சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள வந்தேன். ஒரு தொழில்முறை நடிகையா சினிமாவுக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக்கொண்டு நடிக்க ஆரம்பிச்சேன். அந்த கற்றல் இன்னும் தொடர்கிறது.

நடிப்பைப் பொறுத்தவரை அதிக சந்தோஷம் தருவது எது?நடிகையாக இருப்பதால் பல்வேறு வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்ட பெண்ணாக வாழமுடிகிறது. நான் கிராமத்துல பிறக்கல. ஆனா, கிராமத்துப் பெண்ணாக என்னால் வாழ முடிகிறது.சிறந்த நடிப்பை வெளிப்படுத்த என்ன மாதிரி டெக்னிக் யூஸ் பண்றீங்க?நான் எப்போதும் செட்டுக்குபோகும்போது இயக்குநரின் நடிகையாகத்தான் போவேன்.

இயக்குநர் என்ன மாதிரியான இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தாலும் அதுக்கு நியாயம் செய்யப் பார்ப்பேன். சில இயக்குநர்கள் கதை சொல்லும்போதே அந்த கேரக்டராகவே மாறி முக பாவங்களாலும், உடல் மொழியாலும் நமக்கு நிறைய குறிப்புகளைக் கொடுப்பாங்க. அதை ரொம்ப குளோசா வாட்ச் பண்ணுவேன்.சினிமாவில் ஜெயிக்க திறமை அல்லது பயிற்சி மிகவும் முக்கியம் என்று நம்புகிறீர்களா?

சினிமா இண்டஸ்ட்ரியில் திறமையா, பயிற்சியா எது ஒர்க் அவுட்டாகுதுன்னு புரியல. ரொம்ப வருஷமா எல்லாரும் என்னை ‘நீங்க நல்ல நடிகை’ என்கிறார்கள். அவங்க சொல்ற மாதிரி அந்த பாசிடிவ் விமர்சனங்கள் எனக்கு புதிய படங்களா மாறியிருக்கணும். ஆனா, மாறலைன்னு தோணுது. என்னைப் பொறுத்தவரை கேரக்டர் என்ன மாதிரியான உழைப்பைக் கேட்டாலும் அதை கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ‘மாமனிதன்’ படத்துல சீனு சார் உடல் பருமனா இருக்கணும்னு சொன்னார். அதுக்காக வெயிட் போட்டேன். கண் புருவங்களை திருத்தக் கூடாதுன்னு சொன்னார்.அப்படியே செய்தேன்.

அந்த சமயத்துல கபடி விளையாட்டை மையமா வெச்சு ஒரு ஸ்போர்ட்ஸ் கதையை ஓகே பண்ணி வெச்சிருந்தேன். பிராக்டீஸெல்லாம் முடியும் வேளையில் சில காரணங்களால் அந்தப் படத்தை பண்ணமுடியல. ‘மாமனிதன்’ படத்துக்காக பண்ணிய எல்லா மெனக்கெடலையும் என்ஜாய் பண்ணி செய்தேன். எனக்கு நடந்தவைகளைத்தான் சொல்ல முடியும். அடுத்தவங்களைப் பற்றி தெரியல. உங்க நடிப்பு குறித்து வரும் நெகடிவ் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

எனக்கு சில நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் பார்த்துவிட்டு என் நடிப்பை விமர்சனம் செய்வார்கள். அதை நான் ஏற்பதோடு அவர்கள் சொல்லும் குறையை சரி பண்ணவும் முயற்சி பண்ணுவேன். மத்தபடி சோஷியல் மீடியாவில் வரும் விமர்சனங்களை பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளமாட்டேன்.
உங்களுடைய குறுகிய கால, நீண்ட கால லட்சியம் என்ன?நாம் நினைப்பது ஒண்ணா இருக்கும். நடப்பது வேறு ஒண்ணா இருக்கும்னு சினிமா எனக்கு ரொம்பவே கத்துக்
கொடுத்திருக்கு. அதனால் கோல் செட் பண்றதில்ல.

நீங்க நடிச்சதுல இதுவரை மனசுக்கு நெருக்கமான கேரக்டர் என்றால் எதைச் சொல்வீர்கள்?எனக்கு ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது என்றால் ‘சூப்பர் டீலக்ஸ்’. அந்த கேரக்டர்க்குனு ரெஃபரன்ஸ் எதுவுமில்லாமல் இருந்தது. நானே கற்பனை பண்ணி நடிச்சேன். அது எனக்கு பிடிச்சிருந்தது. ஒரு சில இடத்துல என்னுடைய யோசனையைச் சொல்லி ‘நான் அதை ட்ரை பண்ணவா’னு இயக்குநர் குமாரராஜாவிடம் கேட்டபோது அவர் ஃப்ரீடம் கொடுத்தார்.

இப்போ, ‘பி.செல்வி அண்ட் டாட்டர்ஸ்’ என்ற ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கிறேன். இன்னும் ரிலீஸ் ஆகல. அதுல வர்ற என்னுடைய கேரக்டரும் ரொம்ப பிடிக்கும்.
வேறு என்ன படம் செய்கிறீர்கள்?‘மாமனிதனு’க்குப் பிறகு மலையாளத்துல ‘என்னதான் கேஸ் கொடு’ ரிலீஸ் ஆகவுள்ளது. குஞ்சாக்கோபன் ஹீரோ. ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ ரத்தீஷ் இயக்கியுள்ள அந்தப் படத்துல வித்தியாசமான வேடம் பண்ணியிருக்கிறேன். அந்தப் படம் கதையாவே நல்லா இருக்கும்.

மறுபடியும் சீனு ராமசாமி இயக்கத்துல ‘இடிமுழுக்கம்’. இது சீனு சார் தன்னுடைய வழக்கமான ஃபார்முலாவை பிரேக் பண்ணி பண்ணிய படமா இருக்கும். போஸ்டர் பார்த்தாலே தெரியும். ஹீரோ ஜி.வி.பிரகாஷ் கத்தியுடன் இருப்பார். புதுசா ஒரு விஷயம் ட்ரை பண்ணியிருக்கிறார். சக்ஸஸ் ஆகும்னு நம்பிக்கையிருக்கு. பிரபுதேவா சாருடன் ‘பகீரா’. ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்‌ஷன். அந்தப் படத்தை குறிப்பிட்ட ஜானர்ல கொண்டு வரமுடியாது. த்ரில், காமெடி என கலவையான படமா இருக்கும்.  எனக்கு நானே சவாலா எடுத்துப் பண்ணிய படம்னு சொல்லலாம்.பயோபிக் பண்ணுவதாக இருந்தால் உங்கள் சாய்ஸ்?

பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. மத்தபடி என்ன மாதிரி வேடங்களில் நடிக்க ஆர்வமா இருக்கீங்கன்னு கேட்டா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ஊர்வசி மேடம் பண்ணும் வேடங்கள் பண்ணணும். காமெடி படங்களை மிஸ் பண்ணுவதாக நினைக்கிறேன். ஏன்னா, கொஞ்ச நாளாவே அழுத்தமான வேடங்கள் பண்ணுகிறேன். அந்த மாதிரிதான் வாய்ப்புகளும் வருகிறது. காதல், ரொமான்ஸ், காமெடினு வெரைட்டியா பண்ணணும்.

எஸ்.ராஜா