கம் ஆன் பேபி... லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு..!



சினிமா உலகின் லேட்டஸ்ட் டிரெண்டிங் சாங் சிம்பு பாடிய ‘புல்லட்...’ பாடல். லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘த வாரியர்’ படத்தில்தான் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த இதழ் வெளியாகும்போது இந்தப் பாடல் 70 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியிருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ‘ஹார்ட் பீட், ப்ளட் ஹீட்’ என ரணகளமான வரிகளைக் கொண்ட இந்தப் பாடலுக்கு இசை டி.எஸ்.பி என்கிற தேவி ஸ்ரீபிரசாத். தென்னிந்திய சினிமா கொண்டாடும் இந்த ‘புல்லட்...’ பாடலுக்கு ஸ்டைலீஷ்ஷாக டான்ஸ் மூவ் அமைத்தவர் சேகர் மாஸ்டர்.

டோலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட் டான்ஸ் மாஸ்டரான இவர் கோரியோ பண்ணிய இன்னொரு சூப்பர் ஹிட் பாடல் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘சாமி...’ பாடல்.  
தெலுங்கு சினிமாவில் நிரந்தரமாகக் கடை பரப்பியிருந்தாலும் தமிழிலும் அவ்வப்போது படங்கள் பண்ணுகிறார். ‘சூரரைப்போற்று’வில் சூர்யாவை ஆட வைத்த பெருமையும் இவருக்கு உண்டு. இந்தளவுக்கு பில்டப் தேவையா எனக்கேட்கலாம். ஆனால், சேகரின் சாதனை அப்படி...

டான்ஸ் மாஸ்டராக உங்கள் பயணம் எப்படி ஆரம்பித்தது?

எல்லோருக்கும் வருகிற மாதிரி சின்ன வயசுலேயே எனக்கும் டான்ஸ் மீது ஆர்வம் இருந்துச்சு. பிறகு டான்ஸ் மாஸ்டர் மஸ்தானிடம் முறைப்படி டான்ஸ் கற்றுக்கொண்டேன். சினிமாவில் டான்ஸர் வாய்ப்பு தேடி ஐதராபாத் போனேன். இயக்குநர் விநய் டான்ஸ் மாஸ்டராக ‘போஸ்ட் பாக்ஸ்’ என்ற படத்தில் அறிமுகம் செய்தார்.

ஆனால், அந்தப் படம் வெளிவரவில்லை. பிறகு, சார்மி நடிச்ச ‘மந்த்ரா’ வெளியானது. தொடர்ந்து கோலிவுட் முன்னணி நடிகர்கள் அனைவருடைய படங்களிலும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது.  

கடின உழைப்பு + சேகர் மாஸ்டர் = வெற்றி... என்கிறார்களே?

இன்றைய தேதி வரை நான் ஜெயிச்சுட்டேன் என்று பெருமிதம் அடைந்ததில்லை. மென்மேலும் என்னுடைய திறமையை வெளிப்படுத்த பல சவால்களை எதிர்நோக்கி வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், கடின உழைப்பு கண்டிப்பா வெற்றியில் போய் முடியும் என்பதை மறக்கக்கூடாது. ‘புல்லட்...’ பாடல் இப்படி ஹிட்டாகும் என்று நினைத்தீர்களா?

2012ம் ஆண்டில் எனக்கு முதன் முறையாக ‘சைமா’ அவார்டு கிடைச்சது. அந்த விருது விழாவுக்கு இயக்குநர் லிங்குசாமி சாரும் வந்திருந்தார். அப்போது மேடையிலேயே இயக்குநர் லிங்குசாமியிடம், ‘நீங்கள் இயக்கும் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்’ என்று அப்ளிகேஷன் போட்டேன். அதை ஞாபகம் வைத்து ‘த வாரியர்’ல ‘புல்லட்...’ சாங் கொடுத்தார். ஹீரோ ராம் பொத்தினேனி சாரின் பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்திருக்கிறேன். சூப்பர் ஹிட் அடிச்ச ‘ஐஸ்மார்ட் சங்கர்’ படத்திலும் வேலை செய்திருக்கிறேன்.

‘புல்லட்...’ பாடலை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பாடி அசத்திவிட்டார் சிம்பு. ‘புல்லட்...’ பாடலுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கல. ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்றேன். இதே படத்தில் இன்னொரு பாடலுக்கும் டான்ஸ் மாஸ்டராக வேலை செய்திருக்கிறேன்.

‘ஆச்சார்யா’வில் சிரஞ்சீவி - ராம்சரண் என அப்பா - மகன் இருவருடன் வேலை செய்தீர்களே..?

சிரஞ்சீவி, ராம்சரண் ஆகிய இரு லெஜண்டுடன் ‘கைதி எண் 150’ படத்தில் ‘அம்மாடு லெட்ஸ் டூ கும்மாடு...’ பாடலுக்கு டான்ஸ் பண்ணியிருக்கிறேன். அந்தப் பாடலில் ராம்சரண் சின்ன பிட்டுக்கு டான்ஸ் பண்ணியிருப்பார். ‘ஆச்சார்யா’ படத்துல ‘பலே பலே பஞ்சாரா...’ பாடலுக்கு சிரஞ்சீவி, ராம்சரண் இருவருடன் வேலை செய்யும் வாய்ப்பு மீண்டும் அமைந்தது. அப்பா, மகன் இருவரும் டான்ஸ்ல ஸ்பெஷலிஸ்ட்ஸ். ஒரு நடன இயக்குநரா அந்தப் பாடலுக்கு டான்ஸ் பண்ணியிருந்தாலும் தியேட்டரில் அந்தப் பாடல் ரசிகர்களுக்கும் சரி, எனக்கும் சரி  மிகப் பெரிய விருந்தாக இருந்தது. இரண்டு மாபெரும் நடிகர்களுடன் வேலை செய்த அந்த அனுபவம் மறக்க முடியாதது.

என்ன மாயம் செய்தீர்கள்.. அல்லு அர்ஜுன் உங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தருகிறார்..?

அல்லு அர்ஜுன் சாருடன் வேலை செய்வது எப்போதுமே சந்தோஷமான தருணமாக இருக்கும். பன்னி சார் டான்ஸுக்கு கடினமான உழைப்பு தருவார். ‘சாமி...’ பாடலுக்கு ராஷ்மிகா உடல்மொழி, அங்க அசைவுகளுக்காகவே 3 நாள் தனியா ப்ராக்டீஸ் பண்ணினார். பன்னி சாருடன் ஒர்க் பண்ணிய ‘ஜூலாயி’ படத்துக்கு ‘சைமா’ அவார்டு கிடைச்சது.
2013 ல  அல்லு அர்ஜுன், அமலா பால் நடிச்ச ‘இதாரம் மயிலாதோ’ படத்துக்கு முதன் முறையா ஃபிலிம்ஃபேர் அவார்டு கிடைச்சது. அதன்பிறகு பன்னி சாருடன் வேலை செய்த 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் ஃபிலிம்ஃபேரிடமிருந்து ஹாட்ரிக் அவார்டு வாங்கினேன்.

ஒரு பாடலுக்கு ஸ்டெப்ஸ் இப்படித்தான் இருக்கணும் என்று எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

இசையைப் பொறுத்து ஸ்டெப்ஸை தீர்மானிக்கிறேன். அதுமட்டுமல்ல, ரிப்பீட் ஸ்டெப்ஸ் வராதபடிக்கு ஏற்கனவே நான் டான்ஸ் அமைச்ச பாடல்களை ரீவைண்ட் பண்ணி பார்ப்பதோடு புதுசா யூனிக் ஸ்டைலில் டான்ஸ் அமைப்பேன்.

டோலிவுட் சினிமாவில் நீங்க விட்டுவைத்துள்ள ஹீரோக்கள் யாராவது இருக்கிறார்களா?

பவன் கல்யாண் சாருடன் வேலை செய்யும் வாய்ப்பு இரண்டு முறை வந்தது. கால்ஷீட் பிரச்னையால் என்னால் அந்தப் படங்களை பண்ணமுடியாமல் போய்விட்டது. பிரபாஸ் சாருடன் மாஸ்டராக இன்னும் ஒர்க் பண்ணவில்லை. என்னுடைய ஆரம்ப நாட்களில் டான்ஸராக அவருடைய படங்களில் ஒர்க் பண்ணியிருக்கிறேன்.

டான்ஸ் மாஸ்டர் - கோரியோகிராபர்...என்ன வித்தியாசம்?

ஆமாம், வித்தியாசம் இருக்கு. டான்ஸ் மாஸ்டர் என்பவர் சில குறிப்பிட்ட நடன அசைவுகளால் டான்ஸ் ஸ்டெப்ஸை வடிவமைத்துவிடுவார். கோரியோகிராபர் என்பவர் கதையைச் சார்ந்து அல்லது சிச்சுவேஷனுக்கு ஏற்ப டான்ஸ் அமைத்துக் கொடுப்பார்.

நடன இயக்குநராக என்ன மாதிரி சிச்சுவேஷன் கடினமாகத் தோன்றும்?

சினிமா எனக்கு பேஷன் என்பதால் எதுவும் கடினமா தெரியல. குரூப் டான்ஸ் பாடலாக இருந்தாலும் சரி, சோலோ டான்ஸ் பாடலாக இருந்தாலும் சரி, எல்லா பாடல்களுக்கும் மகிழ்ச்சியோடும் புதுப் புது யுக்தியோடும் ஒர்க் பண்ணுகிறேன்.டான்ஸ் பண்ணுவதற்கு எந்த நடிகர் அதிக உற்சாகமாக இருப்பார்?

சமீபத்திய நாட்களில் எல்லா நடிகர்களும் டான்ஸ் பண்ணுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். நான் வேலை செய்த பல படங்களில் நடிகர்களின் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் பார்க்க முடிந்தது.

யூ டியூப் உலகில் யார் வேண்டுமானாலும் டான்ஸ் ஆட முடியுமா?

முடியும். எல்லோருக்குள்ளும் ஒரு தனித்துவம் இருக்கும். அதன்படி தாளத்துக்கு ஏற்ப ஆடமுடியும்.

நடன இயக்கு நருக்குத் தெரிந் திருக்கவேண்டிய முக்கியமான பண்புகள் என்ன?

முதலாவது, என்ன மாதிரியான பாடலுக்கு நடனம் அமைக்கப்போகிறோம் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். நடனம் என்பது எப்படி வேண்டுமானாலும் ஆடலாம் என்று கிடையாது. பாடலை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமாக ஸ்டெப்ஸ் அமைக்க வேண்டும். கோரியோ பண்ணும்போது பாடலில் கலந்திருக்கும் இசை, சூழ்நிலை, பாடலின் அர்த்தம் புரிந்து வேலை செய்ய வேண்டும்.

உங்களுக்குப் பிடிச்ச டான்ஸ் மாஸ்டர்?

பிரபுதேவா மாஸ்டர் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்.

தமிழில் வாய்ப்புகள் வருகிறதா?

தெலுங்குப் படங்களில் பிஸியாக இருப்பதால் தமிழில் கவனம் செலுத்த முடிவதில்லை. இப்போது சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ரவிதேஜா என முன்னணி நடிகர்களின் படங்களில் ஒர்க் பண்ணுகிறேன். இந்த லிஸ்ட்டில் தனுஷ் சார் படமும் இருக்கிறது.

தமிழ் சினிமா...?

டான்ஸ் மாஸ்டர் கனவோடு ஐதராபாத் வந்தபோது ஏராளமான தமிழ்ப் படங்கள் எனக்கு உதவியாக இருந்தது. ‘சூரரைப்போற்று’ படத்தில் ‘காட்டுப்பயலே...’ பாடலுக்கு நான்தான் டான்ஸ் அமைத்தேன்.

எஸ்.ராஜா