திகிலூட்டும் இளம் வயது மாரடைப்பு! தப்பிப்பது எப்படி



நான் 40 வருடங்களாகப் பொதுநல மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன். மதுரை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதும் சரி, மருத்துவப் பணியைத் தொடங்கியபோதும் சரி, 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கே மாரடைப்பு வந்தது. அந்த ‘ஆபத்தான’ வயது 50 ஆகக் குறைந்தது. பிறகு 40 என ஆனது. இப்போது 20லிருந்து 25 வயதுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் மாரடைப்பு வருகிறது.

வருடந்தோறும் இளம் வயதில் மாரடைப்பு வருவோரின் எண்ணிக்கை 2 சதவீதம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்கு என்ன காரணம்?

மேற்கத்திய உணவுமுறை

இன்றைய இளம் வயதினருக்கு உணவுமுறை வெகுவாக மாறிவிட்டது. இந்தியப் பாரம்பரிய உணவுகளை மறந்துவிட்டு, மேற்கத்திய உணவுமுறைக்கு அவர்கள் அடிமையாகிவிட்டனர். எண்ணெயும் கொழுப்பும் மிகுந்த உணவுகளையே அநேகரும் விரும்புகின்றனர். அவித்த உணவுகளை ஓரங்கட்டுகின்றனர். சுட்ட உணவு அல்லது பொரித்த உணவுதான் அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

முன்பெல்லாம் கடைகளுக்குச் சென்று உணவு சாப்பிட்டார்கள். இப்போதோ ஸ்மார்ட் போனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே உணவு வந்துவிடுகிறது.அப்படி ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுகளிலும், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகளிலும் கொழுப்பு கும்மியடிக்கிறது. அந்தக் கொழுப்பிலிருந்து கொலஸ்ட்ரால் பிறக்கிறது.

இது இதயத்தசைகளுக்கு ரத்தம் வழங்கும் இதயத் தமனிகளை (Coronary arteries) அடைத்துக்கொள்கிறது. அது மாரடைப்புக்குப் பாதை போடுகிறது.இதயத்தசைகளுக்கு ரத்தம் வருவது குறைந்து ஆக்ஸிஜன் மற்றும் உணவூட்டம் கிடைக்காமல் இதயம் சிரமப்படுவதுதான் மாரடைப்பு.

மாறிவிட்ட வாழ்க்கை முறைஇப்போதைய இளம் வயதினருக்கு உடலுழைப்பு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என எல்லாமே குறைந்துவிட்டன. பல வேலைகளை உட்கார்ந்த இடத்திலிருந்தே முடித்துக்கொள்கின்றனர். அடுத்த தெருவில் இருக்கிறவரைக்கூட நடந்து சென்று பார்க்கும் பழக்கம் குறைந்துவிட்டது. போனில் பேசி முடித்துக்கொள்கின்றனர். இது உடல் பருமனுக்குக் காரணமாகிறது. உடல் எடை கூடும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அது மாரடைப்பை வரவேற்கிறது.

அடுத்ததாக, இவர்களுக்கு அரிசி, கோதுமை, மைதா உணவுகளைத்தான் அதிகம் பிடிக்கிறது. சிறுதானிய உணவுகளை இவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. அதனால், பதின்பருவத்திலேயே சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தவறினால், ரத்தத்தில் கூடும் சர்க்கரை ரத்தக்குழாய்களைக் கறையான்போல் அரித்துவிடுகிறது. அப்போது அங்கே பல்லாங்குழிகள் மாதிரி பல குழிகள் உண்டாகின்றன. அவற்றில் கெட்ட கொலஸ்ட்ரால் கூடு கட்டுகிறது. அந்தக் கூடு இதயத் தமனிகளில் கட்டினால் மாரடைப்பு வருகிறது.

இதயத்துக்கு எதிரி புகைப்பழக்கம்

‘புகைப்பழக்கம் இதயத்துக்கு எதிரி’ என்பதை எத்தனை முறை திரையில் காட்டினாலும் இன்றைய இளைஞர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை. பிரபல திரைப்பட நட்சத்திரங்களின் ‘மேனரிச வழிகாட்டுதலில்’ புகைபிடிக்கும் பழக்கம் இளம் வயதிலேயே அவர்களுக்குத் தொற்றிவிடுகிறது.புகையில் புதைந்திருக்கிற நிகோட்டின் விஷம் இதயத் தமனிகளைச் சுருங்கச் செய்கிறது. வேகமாகச் செல்லும் வாகனம் பேரிகாடு போட்ட சாலையில் வேகத்தைக் குறைப்பதைப்போல சுருங்கிவிட்ட இதயத் தமனியில் ரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.

அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய பணிச் சூழலில், பத்திரிகைத்துறை ஆனாலும் சரி, ‘ஐடி’ துறையானாலும் சரி, எல்லாத் துறைகளிலும் பணி அழுத்தம் அதிகரிக்கிறது. அது மன அழுத்தம் உண்டாகக் காரணமாகிறது. மன அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க ரத்தத்தில் கார்ட்டிசால் ஹார்மோன் குற்றால அருவிபோல் கொட்டுகிறது. அது ரத்த அழுத்தத்தை எகிற வைக்கிறது; ரத்தச் சர்க்கரை அளவைக் கூட்டிவிடுகிறது. சந்தடி சாக்கில் இதயத் தமனியில் கெட்ட கொலஸ்ட்ரால் ஒட்டிக்கொள்கிறது. இ்வை எல்லாம் கூட்டணி அமைத்து மாரடைப்பை ‘ஜெயிக்க’ வைக்கிறது.

எதிரியாகும் ‘ஜிம்’ பயிற்சிகள்

இன்றைய இளைஞர்கள் பலரும் உடல் அழகைக் கூட்டுவதற்காக ‘ஜிம்’ பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், அந்தப் பயிற்சிகளுக்குத் தங்கள் உடல் தகுதியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கத் தவறிவிடுகிறார்கள்.அதீத ஜிம் பயிற்சிகளால் இதயத்தசைகள் வீங்கிவிடும் ஆபத்து உள்ளது.

அதை அறியாமல் அவர்கள் தொடர்ந்து பயற்சிகளில் ஈடுபடுவதால் மாரடைப்பு திடீரென்று வந்துவிடுகிறது. வம்சாவளியில் மாரடைப்பு வந்திருக்கிறவர்கள், இதயத் துடிப்பில் பிரச்னை உள்ளவர்கள், இதய வால்வுகளில் குறைபாடு உள்ளவர்கள் ஆகியோர் இந்த மாதிரியான மாரடைப்புக்குப் பலியாகிறார்கள்.

கொரோனாவுக்குப் பிறகு...

பொதுவாகவே, ஆசிய நாடுகளில் இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு மரபு ரீதியான காரணமும் இருக்கிறது. அதோடு, கொரோனா சுனாமிக்குப் பிறகு அநேகரின் இதயத்தில் ‘மயோ
பதி’ எனும் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. இவையும் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படக் காரணமாகின்றன.

மாரடைப்பைத் தடுக்க என்ன செய்யலாம்?

உடலுழைப்பில்லாத சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையிலிருந்து முதலில் நாம் விடுபட வேண்டும். தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அரிசி உணவைக் குறைத்து, உடல் பருமன் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் மிதக்கும் கொழுப்பு உணவை அளவோடு சாப்பிட வேண்டும்,
புகைப்பழக்கத்துக்கு ‘டாட்டா’ காண்பிக்க வேண்டும். மதுவுக்கு ‘நோ’ சொல்ல வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் உப்பைக் குறைக்க வேண்டும். சர்க்கரை நோய் இருந்தால் இனிப்புப் பக்கம் தலை வைக்கக் கூடாது. கொலஸ்ட்ரால் கூடுதல் என்றால் கொழுப்புணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். இந்த மூன்று ‘வில்லன்’களுக்கும் சரியான சிகிச்சை எடுக்க வேண்டும்.

மன அழுத்தம் இருந்தால் தியானம், யோகா போன்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் தரலாம். நாள் முழுவதும் வேலை வேலை என்று இருக்காமல் குடும்பத்துக்கும் உறவுகளுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது வெளியில் சென்று நட்பு பாராட்ட வேண்டும். அதற்காக, ‘மதுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வார
இறுதி பார்ட்டி’ கூடாது.

முக்கியமாக, உறக்கம் தொலைந்த வாழ்க்கைக்கு மூடுவிழா நடத்த வேண்டும்.முன்பெல்லாம் நடுத்தர வயதினருக்குத்தான் வருடத்துக்கு ஒருமுறை இதயப் பரிசோதனைகள் (Cardiac Check-up) தேவைப்பட்டன. இப்போதோ 20 வயதிலிருந்தே இது மாதிரியான இதயப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக, குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு வந்திருந்தால் அவர்களின் வாரிசுகள் வருடத்துக்கு ஒருமுறை ‘PET MPS’ உள்ளிட்ட இதயப் பரிசோதனைகளைச் செய்துகொண்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால், இளம் வயது மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
      
மாரடைப்பைப் புரிந்துகொள்ளுங்கள்!

நெஞ்சுவலி வந்தால்தான் மாரடைப்பு என்பதில்லை. மாரடைப்பின் ஆரம்பகட்டத்தில் இதயத்தசைகளுக்கு ரத்தம் அல்லது ஆக்ஸிஜன் கிடைப்பது குறையும். அப்போது உடல் அசதி, குமட்டல், வாந்தி, மூச்சுமுட்டுவது, வியர்ப்பது இப்படி ஏதாவது ஒரு சாதாரண தொல்லையுடன் கூட அது தொடங்கலாம். இதற்கு ‘இதயவலி’ (Angina) என்று பெயர். அதைப் பலரும் கவனிக்கமாட்டார்கள்.

பாதிப்பின் அடுத்த கட்டத்தில் நெஞ்சுவலி கடுமையாக வரும்போதுதான் பதற்றமடைவார்கள்.இன்னும் பலருக்கு படியில் ஏறினாலோ, பளு தூக்கினாலோ, வேகமாக நடந்தாலோ, உணர்ச்சிவசப்பட்டாலோ, நிம்மதி தொலைந்தாலோ, நடுங்க வைக்கும் குளிர் காற்று பட்டாலோ நெஞ்சு கனமாக இருக்கும். சிலருக்கு வெறும் வயிற்றில் நடக்கும்போது வராத நெஞ்சுவலி வயிறுமுட்டச் சாப்பிட்டுவிட்டு நடக்கும்போது வரும். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

அதிலும் இளம் வயதினருக்கு நெஞ்சு கனமாக இருப்பது, படபடப்பு உண்டாவது, உடல் அசதியாக இருப்பது, கடுமையாக வியர்ப்பது போன்ற சாதுவான அறிகுறிகள் தெரிந்தால், அவற்றை ‘வாய்வு வலி’/‘அல்சர் வலி’/‘செரிமானம் சரியில்லை’/‘பணிக் களைப்பு’ என்று அவர்களாகவே ‘பொய்க் காரணம் கண்டுபிடித்து’க்கொள்கின்றனர்.

‘இந்த வயதில் மாரடைப்பு வராது’ என்று அலட்சியமாக இருக்கின்றனர், அதனால் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் அவர்கள் வருவதில்லை.அவற்றின் விளைவாக, அவர்களுக்கு வந்திருக்கும் மாரடைப்பை ஆரம்பத்தில் உணரத் தவறிவிடுகின்றனர். அதுதான் அவர்களை ஆபத்தான மாரடைப்பில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது.

டாக்டர் கு. கணேசன்