தொடர்ந்து 104 நாட்கள்... 104 முறை மாரத்தான்!



தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த துணிச்சலான பெண், ஜாக்கி ஹன்ட். அவரது 26 வயதில் எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக இடது காலை வெட்டியெடுக்க வேண்டிய நிலை. ஒரு காலை இழந்த பிறகு செயற்கைக் காலுடன் வலம் வந்தார் ஜாக்கி. சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் ஜாக்கி முடங்கிவிட்டார் என்று ஏளனம் செய்தனர். இதற்கெல்லாம் துவண்டு விடவில்லை ஜாக்கி.
செயற்கை காலுடன் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். அதுவும் 20 வருடங்களாக இடைவிடாமல் பயிற்சி மேற்கொண்டார்.சமீபத்தில் செயற்கை காலுடன் மாரத்தான் ஓடி அசத்தியிருக்கிறார். அதாவது 42 கிலோ மீட்டர் தூரம் செயற்கை காலுடன் ஓடியிருக்கிறார் ஜாக்கி.

விஷயம் இதுவல்ல. இந்த மாதிரி தொடர்ந்து 104 நாட்களில், 104 முறை மாரத்தான் ஓடி சாதனை புரிந்திருக்கிறார் ஜாக்கி. இதற்கு முன் அல்யசா கிளார்க் என்பவர் தொடந்து 95 நாட்களில், 95 முறை மாரத்தான் ஓடியதே சாதனையாக இருந்தது. அல்யசா ஆரோக்கியமான கால்களை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

த.சக்திவேல்