சென்னையில் ஒட்டோமான் சாம்ராஜ்ஜிய இனிப்பு!



துருக்கி நாட்டின் பாரம்பரியமான இனிப்பு, பக்லவா. 1453ம் ஆண்டு. துருக்கியை ஒட்டோமான் சாம்ராஜ்ஜியம் ஆண்டு வந்த காலம். அந்த சாம்ராஜ்யத்தின் முதல் சுல்தான், இஸ்தான்புல்லில் உள்ள டாப்காபி என்ற அரண்மனையில் வசித்து வந்தார்.
அந்த அரண்மனையின் முதன்மை சமையல் கலைஞர், மன்னருக்கு இந்த இனிப்பை முதல் முறையாக சமைத்துக் கொடுத்தார். இதன் அலாதி சுவையில் மயங்கிய மன்னர், இந்த இனிப்பு இனிமேல் ராஜ்ஜியத்தின் முக்கியமான உணவாகக் கருதப்படும் என்று அறிவித்தார். அத்துடன் அதற்கு ‘பக்லவா’ என்றும் பெயர் சூட்டியவர், ரம்ஜான் மாதத்தின் 15வது நாளன்று ‘பக்லவா அலாயி’ (பக்லவா விருந்து) படைப்பதையும் வழக்கமாக்கினார்.  

அன்று முதல் துருக்கியின் பாரம்பரிய இனிப்பு உணவாக பக்லவா கொண்டாடப்படுகிறது. இப்படி ஒரு சாம்ராஜ்ஜியமே மிகவும் விரும்பக்கூடிய இனிப்பாக இருந்த பக்லவாவை சென்னை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் துருக்கி நாட்டைச் சேர்ந்த சேவ்கி. இவர் சென்னை காதர் நவாஸ் கான் சாலையில் ‘ஒட்டோமான் பக்லவா’ என்ற பெயரில் இந்த உணவகத்தை பாரம்பரிய சுவையுடன் நடத்தி வருகிறார். ‘‘நான் துருக்கி நாட்டைச் சேர்ந்தவன். சென்னைக்கு வந்து ஐந்து வருடங்களாகிறது. ஆனா, பக்லவா கடை ஆரம்பிச்சு ஒரு வருடம்தான் இருக்கும். இதுக்கு முன்னாடி இதை ஆன்லைன்ல விற்பனை செய்து வந்தோம்...’’ என்றவர் குறிப்பாக பக்லவா உணவகம் ஆரம்பித்ததற்கான காரணத்தை விவரித்தார்.

‘‘சென்னையில் நானும் என் மாமாவும் இணைந்து ஹைட்ராலிக் சிலிண்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறோம். அவர் இங்கு வந்து 12 வருடமாகிறது. முன்பே சொன்னபடி நான் ஐந்தாண்டுகளுக்கு முன்புதான் வந்தேன். சென்னை எனக்கு புதுசு என்றாலும், இங்கு துருக்கி மக்கள் நிறைய பேர் இருக்காங்க. வார இறுதி நாட்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடுவது வழக்கம். அந்த சமயத்தில்தான் எங்களின் பாரம்பரிய இனிப்பான பக்லவா குறித்த கடை சென்னையில் உள்ளதா என்று தேடினோம்.

காரணம், துருக்கி நாட்டைப் பொறுத்தவரை உணவு சமைக்கும் முறை கொஞ்சம் ரிச்சாக இருக்கும். அங்கு நெய், பால், பிஸ்தா, முந்திரி போன்றவை எல்லா உணவுகளிலும் பிரதானமாக இருக்கும். எல்லாவற்றையும் விட துருக்கி மக்கள் இனிப்புப் பிரியர்கள். அவர்களுக்கு ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் கண்டிப்பாக ஏதாவது ஒரு ஸ்வீட்டை சாப்பிட்டாக வேண்டும். இதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன..?

ஆனால், இங்கு தென்னிந்திய இனிப்பு வகைகள்தான் இருந்தன. அதனால் ஊரில் இருந்து, யாராவது வரும்போது பக்லவாவை வாங்கிக் கொண்டு வரச்சொல்வேன்.இந்தச் சூழலில்தான் நாமே இதற்கான சிறப்பு கடை ஒன்றை ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது.

உடனே துருக்கிக்கு பறந்தேன். அங்குள்ள சிறப்பு பக்லவா சமையல் கலைஞரிடம் பேசி அவரை இங்கு அழைத்து வந்தேன். அவர் தயாரித்த பக்லவாக்களை முதலில் ஆன்லைனில் அறிமுகப்படுத்தினேன். கோவிட் காலமாக இருந்தாலும், ஆறே மாசத்தில் மக்களுக்கு பிடித்த டெசர்ட்டாக பக்லவா மாறியது.

அதன்பிறகுதான் இதையே ஓர் உணவகமாக அமைக்க திட்டமிட்டேன். இப்போது ஒட்டோமான் பக்லவா சென்னை சிட்டி மக்கள் அனைவரும் மிகவும் விரும்பக்கூடிய இனிப்பாக மாறியுள்ளது...’’ என்ற சேவ்கி, பக்லவா செய்முறை மற்றும் அதன் ஃபிளேவர்கள் பற்றி விளக்கினார்.

‘‘பக்லவா முழுக்க முழுக்க மைதா மாவினால் செய்யப்படும் ஓர் இனிப்பு வகை. கிட்டத்தட்ட நம்ஊர் இனிப்பு பஃப் என்று சொல்லலாம். ஆனால், செய்வதற்கான முறை, சேர்க்கப்படும் பொருட்கள் மற்றும் சமைக்கும் முறை மாறுபடும். மைதா மாவை மெல்லிய இழைபோல் திரட்டவேண்டும். அதற்கு ஃபைலோ ஷீட் என்று பெயர். இது சாதாரண வெள்ளை காகிதத்தை விட மெல்லியதாக இருக்கும். இந்த ஷீட்டை ஒரு டிரேயில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும்.

ஒவ்வொரு ஷீட்டுக்கும் இடையே நெய் தடவ வேண்டும். டிரேயில் பாதியளவு ஷீட்டை அடுக்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கப்பட்ட பிஸ்தா பருப்புகளை ஒரு லேயராக தூவ வேண்டும். அதன்பிறகு மறுபடியும் ஃபைலோ ஷீட்டை ஒன்றின் மேல் ஒன்றாக நெய் தடவி அடுக்க வேண்டும். பிறகு சின்னச் சின்ன சதுரமாக இதனை ஸ்லைஸ் செய்து, அவனில் பேக் செய்ய வேண்டும். கடைசியாக நன்கு ஆறியதும் அதன் மேல் சர்க்கரை தண்ணீரை ஊற்ற வேண்டும்.

பிஸ்தா மட்டுமில்லாமல், பாதாம், முந்திரி, சாக்லெட், வால்நட் மற்றும் ஹாசில்நட் என ஆறு வித்தியாச ஃபிளேவர்களில் இது கிடைக்கும். எல்லா பக்லவாவும் சதுர வடிவில்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ஒன்று ரோல் போல் சுருட்டப்பட்டிருக்கும். மற்றொன்று சதுரமாகவும், முக்கோண வடிவிலும் கூட வரும். எத்தனை ஃபிளேவர்களை நாம் அறிமுகம் செய்தாலும் பிஸ்தா ஃபிளேவர்தான் பாரம்பரியமானது. பார்க்க பஃப் போல இருந்தாலும் பக்லவா 40 ஃபைலோ ஷீட் லேயர்களாக இருக்கும். இவை மிகவும் மெல்லியது என்பதாலும் நெய் கொண்டு சமைக்கப்பட்டதாலும் வாயில் போட்டவுடன் கரைந்துவிடும் தன்மை கொண்டது...’’ என்றவர் பக்லவா மட்டுமில்லாமல் துருக்கி நாட்டின் பிரபல கேக் வகைகளையும் இங்கு விற்பனைக்காக வைத்துள்ளார்.

‘‘ஏற்கனவே சொன்னது போல் துருக்கி மக்கள் இனிப்புப் பிரியர்கள் என்பதால் பக்லவா மட்டுமில்லாமல் அவர்களின் பாரம்பரிய ஸ்லைசான கேக் வகைகளையும் இங்கு அறிமுகம் செய்திருக்கிறோம். கிப்ரிஸ் டாட்லிசி - தேங்காய், வால்நட் மற்றும் சர்க்கரை சிரப் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகையான புட்டிங் கேக். டிரைலைஸ் - இது சாதாரண ஸ்பாஞ்ஜ் கேக் என்றாலும், பால் சர்பத் மற்றும் கேரமல் சாஸ் இரண்டும் இதன் மேல் ஊற்றப்படும். அதன்மேல் ஃப்ரெஷ் கிரீம் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

சரய் சமாசி - பிஸ்கெட்டை தூளாக்கி அதன் மேல் சாக்லெட் சாஸ் மற்றும் பழங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். மங்நோலியா - புட்டிங், கிரீம், பிஸ்கெட் துகள்கள் மற்றும் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் கேக். இப்போது, துருக்கி கபாப் கவுன்டரும் தொடங்க இருக்கிறோம். இஸ்கந்தர் என்ற கபாப் உடன் மேலும் சில ஃபிளேவர் கபாப்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

இது ஷவர்மா வகை என்றாலும் சிக்கனை வைத்து ரோல் போல் இருக்காது. இதில் பிரட், அதன்மேல் சிக்கன் ஷவர்மா,பிறகு மறுபடியும் பிரட், துருக்கி ஸ்பெஷல் சாஸ் மற்றும் தயிர் சேர்த்துத் தருவோம்...’’ என்ற சேவ்கி முழுக்க முழுக்க துருக்கி உணவுகள் கொண்ட உணவகம் ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்