Bio Data-ஹர்மன்பிரீத் கவுர்



முழுப்பெயர் : ஹர்மன்பிரீத் கவுர் புல்லர்.

செல்லப்பெயர்: ஹர்மன்.

சமீபத்திய அடையாளம்: டி20 மற்றும் ஒரு நாளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன்.

பிறந்த தேதி: 08-03-1989.

பிறந்த இடம் : பஞ்சாப் மாநிலத்திலுள்ள மோகா நகரம்.

தொழில்: கிரிக்கெட் வீராங்கனை.

ரோல் : பேட்டிங் ஆல்ரவுண்டர்.

பேட்டிங் ஸ்டைல் : வலது கை ஆட்டக்காரர்.

பெற்றோர் : தந்தை ஹர்மந்தர் சிங் புல்லர். கைப்பந்து மற்றும் கால்பந்து விளையாடுவதில் கில்லாடி; கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவர். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. தந்தையிடமிருந்துதான் மகளுக்கு கிரிக்கெட் ஆர்வம் பிறந்தது. ஆம்; ஹர்மந்தர்தான் ஹர்மனுக்கு முதல் பயிற்சியாளர். இப்போது ஒரு நீதிமன்றத்தில் அலுவலராக இருக்கிறார் ஹர்மந்தர். அம்மாவின் பெயர் சத்விந்தர் கவுர்.

அணிகள் : இந்தியா பி வுமன், இந்தியா கிரீன் வுமன், இந்தியா வுமன், லங்காஷையர் தண்டர், மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் (வுமன்), மெல்போர்ன் ரெனெகடேஸ் வுமன், பஞ்சாப் வுமன்
(இந்தியா), சூப்பர் நோவாஸ், சிட்னி தண்டர்.

குழந்தைப்பருவம் மற்றும் படிப்பு : ஜலந்தரில் வீற்றிருந்த ஒரு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார் ஹர்மன். தந்தையின் மூலமாக படிப்பைத் தாண்டி கிரிக்கெட்டின் மீதான காதல் ஹர்மனுக்குள் வளர்ந்திருந்தது. அவரின் வீட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு அகாடமியில் கிரிக்கெட் பயிற்சிக்காகச் சேர்ந்தார். அவர் ஊரிலேயே இவ்வளவு தூரம் பயணம் செய்து கிரிக்கெட்டைக் கற்றுக்கொண்ட சிறுமி ஹர்மனாகத்தான் இருக்க வேண்டும்.

கமல்தீஷ் சிங் சோதி என்பவர் சிறுமி ஹர்மனுக்கு கிரிக்கெட் பயிற்சியளித்தார். வீட்டுக்கு அருகில் ஹர்மனுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சிறுமிகள் யாரும் இல்லை. அதனால்
ஆண்களுடன் சேர்ந்து விளையாடினார். சிறுமியாக இருந்தபோதே அதிரடியாகத்தான் விளையாடுவார். பின்னாட்களில், ‘பந்தை நன்றாக உற்றுப்பார்த்து, அடித்து நொறுக்கு’
என்பதே அவரது பேட்டிங் கொள்கையாகிவிட்டது.

பவுலிங் ஸ்டைல் : வலது கை சுழற்பந்து வீச்சாளர்.

கடைசி டெஸ்ட் : ஜூன் 16, 2021ம் வருடம் இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் மைதானத்தில், இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக விளையாடியதுதான் ஹர்மனின் கடைசி டெஸ்ட். இதன் முதல் இன்னிங்ஸில் 5 ஓவர்களை வீசி, 25 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்த இன்னிங்ஸில் 11 ரன்களைச் சந்தித்து, 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒருநாள் போட்டி: மார்ச் 7, 2009ம் வருடம் ஆஸ்திரேலியாவின் பவ்ரல் நகரிலுள்ள மைதானத்தில், பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராகக் களமிறங்கியதுதான் ஹர்மனின் முதல் ஒருநாள் போட்டி. இந்தப்போட்டியில் 4 ஓவர்களை வீசி, 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

விக்கெட் எடுக்கவில்லை. பேட்டிங் செய்யவில்லை. கடந்த ஜூன் 21ம் தேதி வரை 118 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்மன், 2,982 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும், 15 அரைச் சதங்களும் அடங்கும். ஆட்டமிழக்காமல் 171 ரன்களை அடித்துள்ளதே அவரது அதிகபட்ச ரன்கள். மட்டுமல்ல, 1556 பந்துகளை வீசியுள்ள அவர், 1379 ரன்களை விட்டுக்கொடுத்து, 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

டி20 : ஜூன் 11, 2009ம் வருடம் இங்கிலாந்தின் டாண்டன் நகரிலுள்ள கிரிக்கெட் மைதானத்தில், இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராகக் களமிறங்கியதுதான் ஹர்மனின் முதல் டி20 போட்டி.
இந்தப் போட்டியில் 7 பந்துகளைச் சந்தித்து, 8 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பந்து வீசவில்லை. கடந்த ஜூன் 21-ம் தேதி வரை 121 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்மன், 2,319 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 6 அரைச் சதங்களும் அடங்கும். அதிகபட்ச ரன்கள், 103. தவிர, 682 பந்துகளை வீசி, 702 ரன்களைக் கொடுத்து 30
விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.

முதல் டெஸ்ட் : ஆகஸ்ட் 13, 2014ம் வருடம் இங்கிலாந்திலுள்ள வார்ம்ஸ்லே கிரிக்கெட் மைதானத்தில், இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் ஹர்மன். முதல் இன்னிங்ஸில் 12 பந்துகளைச் சந்தித்த ஹர்மன், 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஹர்மன், 38 ரன்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்ச ரன்கள், 17. மொத்தமாக 296 பந்துகளை வீசி, 122 ரன்களை விட்டுக்கொடுத்து, 9 விக்கெட்டு
களைச் சாய்த்துள்ளார்.

உயரம் : 5 அடி, 3 அங்குலம்.

திருமணம் : இன்னும் ஆகவில்லை.

ஆதர்சம் : வீரேந்தர் சேவாக்.

சாதனைகள் : மகளிருக்கான சர்வதேச டி20 போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை, இந்தியாவுக்காக 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை, சர்வதேச டி20 போட்டிகளில் விரைவாக 2000 ரன்களைக் கடந்த வீராங்கனைகளில் ஒருவர், வெளிநாட்டு டி20 ஃபிரான்சைஸ் அணியில் இடம்பிடித்த முதல் இந்திய வீராங்கனை, மகளிருக்கான ஒரு நாள் போட்டிகளில் நான்காவதாகக் களம் இறங்கி அதிக ரன்களை அடித்தவர்களில் முதல் இடம், சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்தாவதாகக் களம் இறங்கி அதிக ரன்களைக் குவித்தவர்களில் முதல் இடம், ஓர் அணிக்காக தொடர்ந்து அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர்களின் பட்டியலில் மூன்றாம் இடம். தவிர, அர்ஜுனா விருது போன்ற உயரிய கௌரவங்களையும் தன்வசமாக்கியிருக்கிறார் ஹர்மன்.

த.சக்திவேல்