மாற்றி யோசித்தவன்!



“எனக்கு பயமாயிருக்குடா..!”இடம், தேக்கடியில் ஒரு குடிசை ரிசார்ட்டில் அவன் மடியில்.காலம், அகாலம்.பயத்துடன் அவன் மடியில் அவள்.“அசட்டுப்பெண்ணே..! விருந்துன்னா ஊறுகா இருக்கணும்... லைஃப்னா சேலஞ்ஜ் இருக்கணும். ‘டாடி மம்மி வீட்டில் இல்லே... தடை போட யாரும் இல்லே... விளையாட வாடா நீயும்...
தில்லானா’ன்னு பாட்டுப்பாடி இங்க வந்துட்டு இப்ப பயந்தா எப்படி..?” சிரித்தான்.அவள் தலையில் இருந்த ஹேர் கிளிப்புகளைப் பிடுங்கி டிரஸ்ஸிங் டேபிளில் எறிந்தான்.“இப்ப பயம் வருதுடா... யூஎஸ்ல இருக்கிற என் அப்பா மனசுலர்ந்து முறைக்கிறார்டா...”“நோ சான்ஸ்... அங்க உன் அக்காவுக்கு பொறந்த சுஜிக்குட்டியைப் பார்க்கறதுக்கே நேரம் சரியா இருக்கும்... வா...’’இப்போது அவன் கையால் அவள் துப்பட்டா உருவப்பட்டு பந்தாகச் சுருட்டி மூலையில் எறியப்பட்டது.

“ஏண்டா அவசரம்... இன்றைக்குத்தானே வந்திருக்கோம்..?”“எப்பவுமே நல்ல விஷயங்கள தள்ளிப் போடக் கூடாது செல்லம்..! நியூஸ் பார்த்தியா..? மறுபடி லாக்டவுன், ஈபாஸ் கழுத குதிரைல்லாம் வருதாம்... வந்தமா பார்த்தமா வேலய முடிச்சமான்னு இருக்கணும். சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிடணும்... இதுவே ஃப்ரண்ட் ஃபாரஸ்டர் தயவுல கிடைச்சது... கொஞ்சம் திரும்பு... கொக்கி எங்க இருக்கு...”‘அடப்பாவி... திரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ் வேணும்னு இதுக்குத்தான் சொன்னியா?’ “சீ...” என்றாளே தவிர அவளால் பதில் பேச முடியவில்லை.
அவள் உயிர்த் தோழி ரமாவிடம் மிகமிக ரகசியமாக விஷயத்தைச் சொன்னபோது தைரியசாலியான அவளே அதிர்ந்து போனாள்.

“டி... உன் பேரண்ட்ஸ் பொறுத்துக்க சொல்லியிருக்காங்க. அதுக்குள்ளே என்னடி திரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ் வாழுது..? அதுவும் ஹால்ட்னு வேற தைரியமா சொல்றே? பார்த்துக்கோம்மா... நரேன் தங்கமானவன்தான்! ஆனா, என்றைக்குமே மூடிய கைகளுக்குத்தான் மதிப்பு...”ஏனோ ரமா சொன்ன அறிவுரை ‘குபுக்’ என்று குதித்து வந்தது. காலையில் தேக்கடி வந்து இறங்கி ரம்மியமான மலை அழகு, பசுமைக் காடுகள், காதைக் கடிக்கும் குளிர், கூட்டமாய் செல்லும் யானைகள் என்று அவன் கை கோர்த்து  நடக்கும் போது சிலிர்ப்பில் வேறு நினைப்பே வரவில்லை.
இப்போது ஏன் ஒரு பயம்?

“ஏய்... டியர்... வாட் ஹேப்பண்ட்... திடீர் யோசனை? ஸ்விட்ச் ஆஃப் லைட்ஸ்! ஸ்டார்ட் ஆக்‌ஷன். லெட்டஸ் செலப்ரேட்..!” அவன் வழக்கம்போல் தமாஷாகப் பேசிக்கொண்டு அவளை இறுக்கி அணைக்க, சில நிமிடங்களில் அவள் வேறு ஒரு இன்பலோகத்திற்குக் கடத்தப் பட்டாள்!எவ்வளவு நேரம் அப்படி ஒரு மயக்க நிலை என்று அவளுக்கே தெரியவில்லை! கண் முழித்தாள். ஏதோ ஒரு சத்தம் வாசல் கதவில் கேட்பது மாதிரி இருந்தது. கதவை ஒரு முறை தட்டியமாதிரி இருந்தது.

இந்த நேரம் யார் கதவைத்தட்டுவது? அதுவும் மலை உச்சி. நட்ட நடுக்காடு. நள்ளிரவு... கடும் குளிர்...அவளுக்கு பயம் வந்து உடல் லேசாக நடுங்கியது. அவசரம் அவசரமாக நைட்டியைப் போட்டுக்கொண்டாள்.அவனை மெல்ல எழுப்பினாள். அவன் சற்றே எரிச்சலுற்றான்!அது அவளுக்கு புதுமையாக இருந்தது. அவன் எரிச்சல் பட்டதை இதுவரை பார்த்தது இல்லை.
ஏன் இந்த மாற்றம்?மறுபடி எழுப்பியபோது கையை வெடுக்கென தள்ளிவிட்டான்.அதிர்ந்து போனாள் அவள்.

அடப்பாவி!செல்லமா தட்டி விடுடா...‘டிஸ்டர்ப் பண்ணாத செல்லம்...’ என்று முனகுடா...ஆனால் -மறுபடியும் தட்டிவிட்டான்..!‘ரோஜா ரோஜா என்று கொஞ்சினாயே..? முடிஞ்ச மறுநிமிடமே கருவேப்பிலை ஆகிவிட்டேனாடா?’அவளுக்கு மனது நெருடியது..‘தட்... தட்...’“யாரோ  விட்டு விட்டு கதவைத்தட்றாங்கடா!”அவன்  நிதானமாக சோம்பல் முறித்தான்.அவள் பூனைபோல்  நடந்து சுவரருகே கிடந்த அவன் கைலியை எடுத்து அவனை நோக்கி எறிய அதைக் கட்டிக் கொண்டான்.“என்ன அபூ..?” என்று லேசாகச் சிரித்தவன், “ யூ வாண்ட் ஒன் மோர் ரவுண்ட்?”

‘‘ஷ்... யாரோ கதவைத் தட்டினமாதிரி இருந்துச்சு... விட்டு விட்டு சத்தம் வருது...” என்றாள் பதட்டமாய் கிசுகிசு குரலில்.“இஸிட்..?” என்றவன் சட்டென்று முகம் மாறினான். உஷார் ஆனான். மணி நள்ளிரவு தாண்டி இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.‘‘ஓ மை காட்... பாருங்க... கதவே லேசாக ஆடுது...” அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

“பயப்படாதே...” என்றவன் மெல்ல எழுந்து ஜன்னலை மிக லேசாகத் திறந்து பார்த்தான். அதிர்ந்தான். ஒரு யானை வாசலில் நின்று கொண்டிருந்தது. ஒரு தட்டு தும்பிக்கையால் தட்டிவிட்டு கதவு திறக்கிறதா என்று பார்ப்பதும் மறுபடி தட்டுவதுமாக இருந்தது. அவன் சப்த நாடியும் ஒடுங்கிற்று. வேலி சிதைக்கப்பட்டிருந்தது! அவன் முதுகிற்குப் பின்னால் நின்று பார்த்த அபர்ணாவிற்கு கைகால்கள் வெடவெடவென்று நடுங்கின. அவன் ஜன்னல் கதவை மிக எச்சரிக்கையாக மூடிவிட்டு, “வசமா மாட்டிக்கிட்டோம்... நிற்கிறது ஒத்த யானை!” அவன் குரல் பிசிறடித்தது. அவள் அவனைக் கட்டிக்கொண்டாள்.

“பயப்படாமல் இரு... நான் சொன்னபடி செய்... கட்டிலுக்கடியில் போ... குப்புறப் படு...” அவள் படுத்தாள். பெட்ஷீட்டைப் போட்டு மூடினான். அதன் மீது ‘இஸ்க்... இஸ்க்...’ என்று பெர்ஃபியூம் அடித்தான்.அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஏதோ சத்தம் கேட்டது.தட்தட் என்று சத்தம். பிறகு அமைதி. ஏகாந்தம்.வினாடிகள் நிமிடங்களாக மாறி மணிகளாய் ஏற...
அபர்ணா சந்தேகம், பயத்துடன் வெளியே வந்தாள். அதிர்ச்சி.நரேனைக் காணோம். பின் கதவு திறந்து வெறுமே சாத்தி வைக்கப்பட்டிருந்தது. மணியைப் பார்த்தாள். நாலு மணி. விடியப் போகிறது.எங்கே போனான்? அவள் மனம் கலங்கியது. அழுகை வந்தது.

திடீரென சம்பந்தம் இல்லாமல் ரமா சொன்னது நினைவுக்கு வந்தது.‘மூடிய கைக்குத்தாண்டி மதிப்பு... பார்த்துக்கோ...’அவள் நினைவைத் தூக்கிஎறியும்போது... அவன் சொன்னதும் நினைவுக்கு வந்தது.‘அபூ... வந்தமா பார்த்தமா வேலய முடிச்சமான்னு இருக்கணும்...’அவன் சொன்னதற்கு என்ன அர்த்தம்?அவனை எழுப்பும்போது அவனுக்கு வந்த எரிச்சலும், அவள் கையைத் தள்ளிவிட்டதும் நினைவுக்கு வந்தன!‘விஷயம் முடிந்த மறு நிமிடமே சலித்துவிட்டேனா?’யானையை சாக்கு வைத்து... அவன்...‘ஓ நோ...’ என்றவள் சந்தேகம் வந்து வேகமாக வாட்ரோபை நோக்கி ஓடி திறந்து பார்த்தாள்.அவள் சப்த நாடியும் ஒடுங்கின.அவன் சூட்கேஸைக் காணோம்.

அவள் தலை தட்டாமாலை ஆடியது. உடம்பில் ஒவ்வொரு இடத்திலும் விண்விண் என்ற வலி இப்போது வெளிவந்தது.அவளுக்குப் புரிந்துபோயிற்று, அவனுக்குப் புரிந்துவிட்டபின் போய்விட்டான் என்று. முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதாள். என்ன செய்வதென்று தெரியவில்லை.‘பெண்ணை ஏமாற்றி அனுபவித்துவிட்டு ஏமாற்றிவிட்டு ஓடும் கேடுகெட்ட ஆண்களில் ஒருத்தன்தான்  நரேன். அதுவும் நான் சாகட்டும் என்று  நினைத்து தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டு ஓடிய கோழை. இவனைப் போய் காதலித்து உடலாலும் கெட்டு...’
பிழியப்பிழிய அழுதாள். அப்போது மேஜை மீதிருந்த ஒரு சீட்டு அவள் கண்களில் பட்டது. எடுத்து நடுக்கமாய் படித்தாள்.

தாமஸ் வர்கீஸ் 99464... செல்நம்பர் இருந்தது.அவசரம் அவசரமாய் போன் பண்ண மறு முனை தூக்க கலக்கத்தில் சம்சாரித்தது. இவள் அழுதுகொண்டே பேச, அவர் ஃபாரஸ்டர் என்று தெரிந்தது. ‘பயப்படாமல் இரு... வெளியே வராதே... காலையில் ஏழு மணிக்கு அப்புகுட்டன் சாயா கொண்டுவரும்... அதுக்கு மட்டும் வாயில தொறக்கு. ஞான் பின்ன வந்து பார்க்கும்...’ என்று போனை வைத்து விட்டார்.‘ஏட்டா சாயாவோட விஷத்தையும் அனுப்பு...’ கதறினாள்.ஆறு மணிக்கே கதவு தட்டப்பட்டது. ஜன்னலைத் திறந்து பார்த்தாள். கதவருகே அவன் சாயா ஃப்ளாஸ்க்குடன் நின்று கொண்டிருந்தான்.அவள் மெல்ல கதவைத் திறந்தாள். வந்தவன் ஒரே பாய்ச்சலாக உள்ளே வர அலறினாள்.

அவனிடமிருந்து துர்நாற்றம். முகமெல்லாம் பயங்கரமாக இருந்தது. சட்டென்று உள்ளே பாய்ந்தவன் கதவைப் படாரென்று சாத்தி ஃப்ளாஸ்க்கை மேஜைமீது வைத்துவிட்டு அவளைக் கட்டிப்பிடித்து வாயைப் பொத்தினான். அவள் திமிறினாள். பிதுங்கிய அவள் விழிகள் அருகே அவன் முகத்தைக் கொண்டு வந்து கிசுகிசுத்தான். “பயந்துட்டியா...”

அவள் கண்கள் நிலை குத்தின.“அடப்பாவி நீயா..?”“நானேதான்...” என்றான் நரேன்.“பாவி... பாவி..! எங்கேடா போய்த் தொலைஞ்சே என்ன தவிக்க விட்டு...” அவன் வயிற்றில் மாறி மாறி குத்தினாள்.“ஸாரிடா... உன்னால என்னுடன் ஓடிவர முடியாது. யானையிடமிருந்து உன்னைக் காப்பாற்ற எனக்கு வேறவழி தெரியல... என் சூட்கேசை காலி பண்ணி மேஜைக்கு அடில போட்டுட்டு வெறும் சூட்கேசுடன் யானைக்கு முன்னாடி போய் நின்று அதுக்கு போக்கு காட்டி ஓடி ஒரு இடத்தில் சூட்கேசை தூர எறிஞ்சேன்... அது சூட்கேசை பார்த்து ஓடி துவம்சம் செய்ய, நான் வேறு திசைக்கு தப்பி விட்டேன்...

இது யானயிடமிருந்து தப்பிக்க ஒரு வழி! கீழே கிடந்த யானை சாணத்தை மேல் முழுக்க பூசிக்கொண்டு மெல்ல பதுங்கி  நடந்து வந்து விட்டேன்... அப்புகுட்டன் சாயா கொண்டு வந்துகொண்டு இருந்தான்... அவனிடமிருந்து ஃப்ளாஸ்க்கை பிடுங்கி, ‘என் செல்லத்திற்கு நான்தான் சாயா கொடுப்பேன்’ என்று சொல்லி வாங்கி வந்துட்டேன்...”
அவள் அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு, “எனக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கியேடா...” என்றவள் நிதானித்து, ‘‘அதெல்லாம் சரி... ஏண்டா ஃபாரஸ்டர் செல் நம்பரை எழுதி வெச்சுட்டு போன..?”

“ஒருவேளை யானையிடமிருந்து தப்பிக்க முடியாமல் போனாலோ அல்லது ஏதாவது சிறுத்தை என்னை அடித்து இழுத்துப்போனாலோ ஃபாரஸ்டருக்கு தகவல் வந்துவிடும்...”அவன் சொன்னதைக்கேட்டு ஓவென்று கதறிவிட்டாள் அபர்ணா.“டேய்... மன்னிச்சிருடா... மன்னிச்சிருடா...” விம்மினாள்.“ஏய் லூசு... நீ என்ன தப்பு பண்ண, உன்னை நான் மன்னிக்கிறதுக்கு?”எதுவும் சொல்லாமல் அவன் மார்பில் ஒன்றினாள்.

கே.ஜி.ஜவஹர்